என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அண்ணாமலைக்கு மத்திய மந்திரி பதவி?
- தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் புதிய மாற்றங்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.
- வருகிற 11-ந்தேதி சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த மாத இறுதியில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இந்த 2 சந்திப்புகளும் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாக போவதாக பரபரப்பாக பேசப்பட்டது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டால் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் என்று ஏற்கனவே அண்ணாமலை கூறி இருந்தார். இதை அமித்ஷாவை சந்தித்த போது சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி விரைவில் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்றினால்தான் கூட்டணி பற்றி அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விலக செய்து விட்டு வேறு ஒருவரை நியமிப்பது தொடர்பாக டெல்லியில் அமித்ஷா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் அண்ணாமலை நேற்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, "தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை" என்று கூறினார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, "போட்டியில்லாத ஒரு போட்டியில் நான் போட்டியிடவில்லை" என்று குறிப்பிட்டு இருந்தார். இது தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலை பதவி தொடர்பாக கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்ணாமலை பதவியில் நீடிப்பதை மனதில் வைத்து சூசகமாக இப்படி பேசியிருக்கலாம் என்று தமிழக பா.ஜ.க.வினரிடம் தகவல் பரவி உள்ளது. தமிழக பா.ஜ.க. நிலவரம் பற்றி சமீபத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, சந்தோஷ் ஆகிய மூவரும் தீவிர ஆய்வு செய்தனர். அப்போது கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய செல்வாக்கை அண்ணாமலை ஏற்படுத்தி தருவார் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடனும் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விலக்கும் பட்சத்தில் அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று ஒருசாரார் வலியுறுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் புதிய மாற்றங்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வருகிற 11-ந்தேதி சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய மந்திரி கிஷண்ரெட்டி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வர உள்ளார்.
அந்த கூட்டத்தில் புதிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களிடம் புதிய மாநில தலைவராக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி கலந்துரையாடல் நடத்தப்படும்.
இதன் அடிப்படையில் 11-ந்தேதி அல்லது 12-ந் தேதி தமிழக பா.ஜ.க. தலைவர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
அண்ணாமலைக்கு பதில் வேறு ஒருவர்தான் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி உள்ளது.






