என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்: கூட்டணி உறுதியாகிறது?
- பிரதமர் மோடி 6-ந்தேதி பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.
- அ.தி.மு.க. இடையேயான கூட்டணியை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன்-ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட ரெயில்வே பாலம் பழுதானதையடுத்து ரூ.550 கோடியில் பாம்பன் புதிய ரெயில் பாலம் மற்றும் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதமர் மோடி வருகிற 6-ந்தேதி திறந்து வைக்கிறார். முன்னதாக இன்று 3 நாள் பயணமாக இலங்கை செல்லும் அவர் எரிசக்தி துறை உள்ளிட்ட இருநாடுகளுக்கு இடையேயான பல்வேறு ஒப்பந்தங்கள் செய்வதுடன், தொழில், வர்த்தகம், மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.
இதையடுத்து நாளை மறுநாள் (6-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் இலங்கையில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு நேரடியாக வருகிறார். இதற்காக அங்கு ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டு அதில் ஹெலிகாப்டரை இறக்கி ஒத்திகையும் பார்க்கப்பட்டுள்ளது.
பின்னர் பாம்பன் சாலை பாலத்தில் இருந்தவாறு புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு அங்கு நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
ராமேஸ்வரம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் அங்கிருந்து புறப்படும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் வந்து பின்னர் டெல்லி செல்கிறார்.
மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியை தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித் தனியே சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவைச் சந்தித்தார். அப்போது அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்மு கம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இதில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதைதொடர்ந்து அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் தமிழகம் வரும் பிரதமர் மோடியைச் மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பில் பிரதமர் மோடியிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாநில அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்களும் சந்தித்துப் பேச பிரதமர் அலுவலகம் சார்பில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு பா.ஜ.க., அ.தி.மு.க. இடையேயான கூட்டணியை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






