என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, மதுபாட்டில்களை வெளியே எடுத்து வைத்து பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய அலுவலகம் அருகே இருந்த டாஸ்மாக் கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த மார்ச் மாதம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் ராயல் சிட்டி குடியிருப்பு பகுதியில் தனியார் இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த மக்கள் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜிடம் மனுவும் கொடுத்தனர்.

    கடந்த 5-ந்தேதி அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    நேற்று முன்தினம் அப்பகுதி பெண்கள் ஏராளமானோர் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் துணை மேலாளர் சித்ரா சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்றினால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.

    அதைத்தொடர்ந்து கிராம மக்கள் கடை முன்பு துடைப்பம் மற்றும் செருப்புகளை கட்டி தொங்க விட்டு விட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக இதில் பெண்கள் அதிகம் பேர் கலந்து கொண்டனர்.


    நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சுத்தியல் மற்றும் கடப்பாரை மூலம் கடையின் ‌ஷட்டர் பூட்டை உடைத்தனர். பின்னர் கடையின் உள்ளே இருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை எவ்வித சேதாரமும் இன்றி அப்புறப்படுத்தி, சாலையில் கொண்டு வந்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை லாரியில் ஏற்றி ஆர்.எஸ்.மாத்தூரில் உள்ள டாஸ்மாக்கடைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த போராட்டம் குறித்து பெண்கள் கூறுகையில், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை எவ்வித சேதாரமும் இல்லாமல் அப்புறப்படுத்தி கடையை காலி செய்துள்ளோம். மீண்டும் அதிகாரிகள் இந்த இடத்தில் கடை திறக்க முயன்றால் கட்டிடத்தையே இடித்து தரைமட்டமாக்குவோம் என்று ஆவேசத்துடன் கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நிதி நிறுவன நெருக்கடியால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் இருந்த ஜப்தி செய்யப்பட்ட டிராக்டரை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரியலூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியை அடுத்த ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அழகர் (வயது 33), விவசாயி. இவர் விவசாயம் செய்வதற்காக 2013-ல் பெரம்பலூரில் உள்ள தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் ஒன்றை தவணை முறையில் எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் ரூ.5 லட்சத்துக்கு மேல் கடன் தொகை செலுத்திவிட்டார். மீதமுள்ள பாக்கி தவணைத் தொகை கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டு 2016 மார்ச் 10-ந்தேதி தனியார் நிதி நிறுவனம் விவசாயி அழகரிடமிருந்த டிராக்டரை குண்டர்களைக் அழைத்து வந்து ஜப்தி செய்து எடுத்து சென்றனர்.

    இதில் மனமுடைந்த அழகர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தனியார் நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஜப்தி செய்த டிராக்டரை வழங்கக் கோரியும் அழகரின் தந்தை ஆறுமுகம் அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கு தொடர்பாக கயர்லாபாத் போலீஸார், நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந் தது. வழக்கை விசாரித்த நீதிபதி 15 மாதமாக தனியார் நிதி நிறுவனம் ஜப்தி செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் எந்த ஒரு உபயோக மில்லாமல் உள்ளது.

    எனவே அந்த டிராக்டரை அழகர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும், மேலும், இவ்வழக்கு நிலுவையில் இருந்து வருவதால், விசாரணையின் போது டிராக்டரை தொடர்புடைய விவசாயி ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து அழகர் தந்தை ஆறுமுகம் டிராக்டரை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார்.

    செந்துறையில் மதுபான கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அங்கேயே சமைத்தும் சாப்பிட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய அலுவலகம் அருகே மதுபான கடை ஒன்று இயங்கி வந்தது. கோர்ட்டு உத்தரவுப்படி இந்த கடை கடந்த மார்ச் மாதம் அகற்றப்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் ராயல்சிட்டி குடியிருப்பு பகுதியில் தனியார் இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு அங்கு அந்த மதுபானக்கடை மாற்றப்பட்டு திறக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜிடம், ராயல்சிட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்று மனு அளித்தனர். கடந்த மே 1–ந்தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் ராயல்சிட்டி பகுதியில் வைக்கப்பட்ட மதுபானக் கடையை அகற்றுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று பகல் 12 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ராயல்சிட்டி பகுதியில் உள்ள மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையில் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது அங்கிருந்த பெண்கள், இந்த கடையில் உள்ள மதுபானங்களை வெளியே எடுத்து அப்புறப்படுத்தினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறினர். அதனை தொடர்ந்து செந்துறை தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து கிராமமக்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    செந்துறையில் கிணற்றில் குளித்த மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செந்துறை:

    செந்துறை ராமசாமி தெருவை சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி குமரவள்ளி. இவர்களுக்கு தர்மதுரை(வயது19), பிரபு(16), சக்தி (14) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தர்மதுரை, பிரபு இருவரும் நக்கம்பாடியில் உள்ள தனியார் தோட்ட கிணற்றுக்கு குளிக்க சென்றனர்.

    அங்கு இருவரும் குளிக்கும் போது படியில் அமர்ந்து குளித்த பிரபு தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதையடுத்து தர்மதுரை பிரபுவை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் பிரபு தண்ணீரில் மூழ்கி இறந்தார்.இது குறித்த தகவல் அறிந்ததும் செந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபுவின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பலியான பிரபு தற்போது 10-ம்வகுப்பு தேர்வு எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அரியலூர் அருகே தொழில் அதிபர் வீட்டில் 4 லட்சம் பணம், 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் ராஜீவ் நகரில் கலையரசன் (வயது 38). டிராக்டர் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் அரியலூர் கே.கே. நகரில் உள்ள ஒரு அபார்ட் மெண்டில் வசித்து  வருகிறார். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தாருடன் தனது சொந்த ஊரான வேப்பூரில் தங்கிக் கொண்டு தினமும் கடைக்கு வந்து சென்றுள்ளார்.

    இந்நிலையில் கே.கே.நகரில் உள்ள அபார்ட் மென்டில் இருந்த கலையரசனின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அக்கம் பக்கத்தினர் இது குறித்து கலையரசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வீட்டுற்கு வந்த கலையரசன் வீட்டினுள் உள்ள  பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 4  லட்சம் பணம், 5 பவுன் நகை மற்றும்  வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து அரியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து  வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு அரிய லூர் டி.எஸ்.பி. மோகன் தாஸ் திருட்டு நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டார். 

    இதனையடுத்து கொள்ளையர்களின் அடையாளங்கள் சேகரிக்கப்படும் வகையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் எடுக்கவும் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அதே தெருவில் புனிதவதி, மணிமாறன் ஆகிய இருவரின்  வீட்டு பூட்டுகளும் உடைக்கப்பட்டுள்ளது. அந்த இரு வீடுகளிலும் எதுவும் கிடைக்காமல் கடைசியாக கலையரசன் வீட்டில் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக் கலாம் எனக் கூறப்படுகிறது.
    சின்னநாகலூரில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே சின்னநாகலூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அதன்மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் ஆழ்குழாய் கிணற்றில் நீர் குறைவாக உள்ளதால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து பெரியநாகலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் சின்னநாகலூர் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி நேற்று காலிக்குடங்களுடன் அப்பகுதியில் வி.கைகாட்டி-அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, கமலஹாசன், குமரன், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகள் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாமரைக்குளம்:

    முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகிய படிப்புகளுக்கு அனைத்து அரசு டாக்டர்களுக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மருத்துவ பட்டப்படிப்பிற்கான தேர்வை தமிழக அரசே நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் கிராமப்புற அரசு டாக்டர்கள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனை டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரியலூர் பஸ் நிலையம் முன்பு பந்தல் அமைத்து அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு டாக்டர் கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார். அருண் பிரசன்னா விளக்க உரையாற்றினார்.

    அப்போது டாக்டர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். 3-ந் தேதி (நாளை) முதல் அரசு மருத்துவமனைகளில் திட்டமிட்ட அறுவைசிகிச்சைகள் நிறுத்தப்படும். அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல செயல்படும். 8-ந் தேதி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். அதன்பிறகும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் 10-ந் தேதி முதல் அனைத்து அரசு டாக்டர்களும் விடுப்பில் செல்ல உள்ளோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். முடிவில் ராஜ் பரத் நன்றி கூறினார். 
    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் ஏ.டி.எம். கார்டை மாற்றி பண மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி அம்புசம்(44). இவர் அதே ஊரில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 8-ந்தேதி செந்துறை எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் தனது கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என பார்த்துள்ளார்.இவர் பார்க்க நேரம் ஆனதால் பின்னால் இருந்த பிலாக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சுந்தராஜன் (30) தான் பார்த்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கி வங்கி இருப்பு 57000 இருப்பதாக கூறி கார்டை மாற்றி கொடுத்து விட்டு உடனே வெளியேறி விட்டார்.

    சற்று நேரத்தில் தனது வங்கி கணக்கில் பணம் எடுத்த தகவல் அம்புசம் மொபைலுக்கு வந்தது. என்ன நடந்தது என யூகிப்பதற்குள் அவர் கணக்கிலிருந்து தனியார் ஏடிஎம்.மில் ரூபாய் 40000 எடுத்ததாக தகவல் வந்தது.

    பின்னர் தான் அவர் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டு அவருடையது அல்ல என்பது தெரியவந்தது.இது குறித்து செந்துறை காவல் நிலையத்தில் அம்புசம் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுந்தராஜனை கைது செய்தனர். மேலும் அவர் பலரிடம் ஏ.டி.எம்.கார்டை மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் அருகேயுள்ள முனியங்குறிச்சி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்துக்கு கடந்த ஒருமாத காலமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக்கூறி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று கிராம மக்கள் முனியங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் கிரா நிர்வாக அலுவலர் பிரசன்னா மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    ஜெயங்கொண்டம் அருகே மதம் மாறி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதிகள் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்.
    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நின்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் ராஜதுரை(23). இவர், திருச்சியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வந்த நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த சுல்தானுல் ஆரிபின் மகள் சர்மிளா ராஹில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களுடைய காதல் சர்மிளாராஹில் வீட்டாருக்கு தெரியவந்ததையடுத்து இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளனர். இதையடுத்து சர்மிளா ராஹில் கல்லூரிக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 24-ம் தேதி திருச்சி தென்னூரில் உள்ள முஸ்லீம் டெவலப்மெண்ட் பவுண்டே‌ஷன் டிரஸ்ட் மூலம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், நின்னியூர் சென்று குடும்பம் நடத்தி வருகின்றனர். இது குறித்த தகவல் அறிந்த சர்மிளாராஹில் பெற்றோர் தொலைபேசி மூலம் இருவரையும் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

    மேலும் திருச்சியில் திருமணம் செய்துகொண்டதால் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். இதனையறிந்த காதல் தம்பதிகள் பாதுகாப்பு கேட்டு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    அரியலூர் அருகே கிணற்றில் விவசாயி பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் (வயது37) விவசாயி. இவர் கடந்த 19-ம் தேதி வயலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை.

    இதனையடுத்து, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் செந்த மிழ்செல்வன் கிடைக்கவில்லை. இந் நிலையில், வயல் பகுதிக்கு செந் தமிழ்செல்வன் உறவினர்கள் சென்றபோது கிணத்திலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து கிணற்றில் பார்த்துள்ளனர். கிணற்றில் செந்தமிழ்செல்வன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதையடுத்து விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் செந்தமிழ்செல்வன் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து, ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து செந்தமிழ் செல்வன் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்து போன செந்தமிழ்செல்வனுக்கு ஜமுனா(25) என்ற மனைவியும் 8 மாத பெண் குழந்தையும் உள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் நான்காம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் நாளை வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் நான்காம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் நாளை(28.04.2017) வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பின்வருமாறு நடைபெற உள்ளது.

    உடையார்பாளையம் வட்டத்தில் முத்து சேர்வா மடம், பிளிச்சுகுழி, ஓலையூர் கிராமங்களிலும், அரியலூர் வட்டத்தில் புங்கங்குழி, பளிங்காநத்தம் கிராமங்களிலும் நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    ×