என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறையில் மதுபான கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் தொடர் போராட்டம்
    X

    செந்துறையில் மதுபான கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் தொடர் போராட்டம்

    செந்துறையில் மதுபான கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அங்கேயே சமைத்தும் சாப்பிட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய அலுவலகம் அருகே மதுபான கடை ஒன்று இயங்கி வந்தது. கோர்ட்டு உத்தரவுப்படி இந்த கடை கடந்த மார்ச் மாதம் அகற்றப்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் ராயல்சிட்டி குடியிருப்பு பகுதியில் தனியார் இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு அங்கு அந்த மதுபானக்கடை மாற்றப்பட்டு திறக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜிடம், ராயல்சிட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்று மனு அளித்தனர். கடந்த மே 1–ந்தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் ராயல்சிட்டி பகுதியில் வைக்கப்பட்ட மதுபானக் கடையை அகற்றுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று பகல் 12 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ராயல்சிட்டி பகுதியில் உள்ள மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையில் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது அங்கிருந்த பெண்கள், இந்த கடையில் உள்ள மதுபானங்களை வெளியே எடுத்து அப்புறப்படுத்தினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறினர். அதனை தொடர்ந்து செந்துறை தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து கிராமமக்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×