என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
    X

    குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

    சின்னநாகலூரில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே சின்னநாகலூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அதன்மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் ஆழ்குழாய் கிணற்றில் நீர் குறைவாக உள்ளதால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து பெரியநாகலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் சின்னநாகலூர் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி நேற்று காலிக்குடங்களுடன் அப்பகுதியில் வி.கைகாட்டி-அரியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, கமலஹாசன், குமரன், அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அதிகாரிகள் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    Next Story
    ×