என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • மயிலாடுதுறை , ராமநாதபுரம் , புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (25.02.2025) மற்றும் நாளை (26.02.2025) தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை , ராமநாதபுரம் , புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
    • மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

    கோவை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று கோவை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு வந்த அவர் இரவு 9 மணிக்கு கோவை விமான நிலையம் வந்து இறங்கினார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அங்கிருந்து கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் செல்கிறார். அங்கு கொங்கு மண்டல முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில்அதிபர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

    கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாநகர், மாவட்ட அலுவலகத்தை நாளை திறந்து வைக்கிறார். அதன்பின், ராமநாதபுரம், நெல்லை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகங்களை காணொலி மூலம் திறந்துவைக்கிறார்.

    மாலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்குச் செல்கிறார்.

    அங்கு தியான லிங்கம், லிங்க பைரவியை வழிபட்டு விட்டு ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் கோவை வரும் அமித்ஷா இரவில் ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் காலை 9 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி திரும்புகிறார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவை விமான நிலையம், அவர் ஓய்வெடுக்கும் நட்சத்திர ஓட்டல், புதிய பா.ஜ.க. அலுவலகம், ஈஷா யோகா மையம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை
    • இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம் என்று சிறுமி ஜாக்லின் ரோஸ் பேசியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீர்வரிசை கொண்டு வந்து வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கக் கூடிய 2 ஆயிரம் கோடி வழங்கப்படும். இதன் மூலம் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலையில், தமிழக அரசு நிதி மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

    இதனையடுத்து, கடலூரை சேர்ந்த எல்.கே.ஜி படித்து வரும் நன்முகை என்ற சிறுமி தான் சேர்த்து வைத்திருந்த பணத்திலிருந்து ரூபாய் 10 ஆயிரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்திற்காக நிதி வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது

    இந்நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவி ஜாக்லின் ரோஸ் ரூ.5 ஆயிரத்தை தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    "எனது சிறுசேமிப்பில் இருந்து ரூ.5 ஆயிரத்தை மகிழ்வோடு அனுப்புகிறேன்" என்று சிறுமி பேசியுள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் பேசிய சிறுமி, "வணக்கம் என் பெயர் ஜாக்லின் ரோஸ், நான் 5 ஆம் வகுப்பு படிக்கிறேன். குமாரி மாவட்டத்தை சேர்ந்தவள். அநாதை மொழியான இந்தி மொழி எம் ஆதி மொழியான தமிழை ஆழ்ந்து நிற்கலாமா? இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம். தமிழுக்கும் அமுதென்று பெயர். அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழே ஆறாம் தமிழே உயர். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை என்றால் என்ன? இதோ என்னுடைய சிறு சேமிப்பு நிதியில் இருந்து ரூ. 5 ஆயிரத்தை தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு மகிழ்வோடு வழங்குகிறேன்" என்று பேசியுள்ளார்.

    • நான் 2007 இல் வரைந்த கடைசி பிரமாதமான ஓவியம் பெரியார் ஓவியம் தான் என சிவகுமார் தெரிவித்தார்.
    • பெரியாரின் ஓவியத்தை திரையிட்டு மாணவர்கள் மத்தியில் நடிகர் சிவகுமார் பேசினார்.

    திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் வரைந்த பெரியாரின் ஓவியத்தை திரையிட்டு மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் சிவகுமார், "இன்றைக்கும் ஒரு சாதிய கட்டமைப்பு உள்ளது. இவன் மேல்சாதிக்காரன், இவன் கீழ் சாதிக்காரன்.. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என 4 வகைகளாக பிரித்து.. இதில் சூத்திரன் கடைசி ஆளு.

    இப்படி கீழ் சாதிக்காரன் என மக்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கும்போது.. ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து IAS, IPS வருவதற்கு போராடிய ஒரே போராளி பெரியார். நான் 2007 இல் வரைந்த கடைசி பிரமாதமான ஓவியம் பெரியார் ஓவியம் தான்" என்று தெரிவித்தார். 

    • மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சென்னையில் இருந்து புறப்பட்டோர் 63 நாயன்மார் திருமேனியுடன் கூடிய தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    கோவை:

    ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் நேற்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு ஆலாந்துறை முதல் ஈஷா யோக மையம் வரை வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

    மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு சிவயாத்திரை எனும் பாத யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை, மைசூர், நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.


    இதில் சென்னையில் இருந்து வந்த சிவயாத்திரை குழு அறுபத்து மூவர் திருமேனிகளைத் தாங்கிய ஒரு பிரத்யேக தேரினையும் இழுத்து வந்தனர். ஆதியோகி தேர்கள் அனைத்தும் கலைநயம் மிக்க சிற்பங்களுடன் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு மரத்தினால் உருவாக்கப்பட்டவை.

    அனைத்து சிவயாத்திரை குழுக்களும் ஆலாந்துறை பகுதிக்கு நேற்று வந்துசேர்ந்தனர். அங்கிருந்து அவர்கள் 63 நாயன்மார்களை பல்லக்குகளில் ஏந்தி ஆதியோகி தேர்களுடன் ஈஷாவுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த யாத்திரையில் பங்கேற்ற அனைவரும் மகா சிவராத்திரிக்காக 40 நாள் விரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று வந்த பிறகு தியானலிங்கத்தில் தங்கள் விரதத்தை நிறைவுசெய்து கொள்வார்கள்.

    • விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்துள்ளனர்
    • அப்பெண்ணின் கணவர் சக்திவேல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்த வழக்கில், அப்போதைய எஸ்.ஐ உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    2001 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பெண்ணை, அவரின் கணவரின் கண்முன்னே ஆடைகளைக் களைந்து போலீசார் மானபங்கம் செய்யப்பட்டார். இதனால் மனம் உடைந்த அப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றால். ஆனால் ஊர் மக்கள் அவரை மீட்டனர்.

    பின்னர் சில நாட்கள் கழித்து அப்பெண்ணின் கணவர் சக்திவேல் விஷம் அருந்தி தற்கொலை செய்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி (77), காவலர்கள் வீர தேவர் (68), சின்ன தேவர் (69) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இது தொடர்பான வழக்கில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். 24 ஆண்டுகளாக நடந்த வழக்கில் திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

    ரங்கசாமி, வீரத்தேவர், சின்னத்தேவர் ஆகிய மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.36,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

    • இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமி பள்ளி சிறுமியை 18 வயது இளைஞர் திருமணம் செய்தார்.
    • 16 வயது சிறுமி இன்ஸ்டாகிராமில் இளைஞரிடம் பேசியது தெரியவந்துள்ளது

    இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 16 வயது பள்ளி சிறுமியை திருமணம் செய்த கார்த்திக்குமார் (18) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 16 வயது பள்ளி சிறுமியை காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் செல்போன் எண்னை ஆய்வு செய்தனர்.

    அதில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தபோது ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 வயதான கார்த்திக் குமார் என்பவரை காதலித்து வந்துள்ளதை கண்டறிந்தனர்.

    இதனையடுத்து கார்த்திக் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அப்போது தான் அந்த சிறுமியை இளைஞர் திருமணம் செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. பின்னர் பள்ளி மாணவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமண விழா நடைபெறுகிறது.
    • இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் சேதுநாயக்கின் திருமணம் நாளை மெய்யனூர் சூரமங்கலத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.


    மேலும், இந்த விழாவில் திரைப்பிரபலங்கள் விஜய் சேதுபதி மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ஜி.கே.மணியின் மகனான தமிழ் குமரன் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து காத்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி சாலை மற்றும் இ.சி.ஆர். சாலையை இணைக்கும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பை கடக்க குறைந்தபட்சம் சாதாரண நேரங்களில் 10 நிமிடங்கள் வரை ஆகும். அதே நேரத்தில் பீக் ஹவர்சில் 15 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து காத்திருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ராஜீவ்காந்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்திரா நகர் ரெயில் நிலையம் அருகே யு டர்ன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்தாண்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டைடல் பார்க் அருகில் 2-வது யு டர்ன் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

    தற்போது பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ள டைடல் பார்க் மேம்பாலம் 510 மீட்டர் நீளமும், 8.50 மீட்டர் அகலமும் கொண்டது. மேம்பாலத்தின் மையத்தூண் 18 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


    இந்த மேம்பாலம் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் யு டர்ன் எடுக்க பயன்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் இடது புறம் திரும்பி மேம்பாலத்தில் ஏறி, உயரமான மட்டத்தில் யு டர்ன் எடுத்து, டைடல் பூங்காவிற்கு செல்லும் சாலையில் இறங்கிச் செல்ல முடியும்.

    இந்நிலையில், டைடல் பார்க் யு வடிவ மேம்பாலத்தை இன்று மாலை 4 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்துவைத்தனர்.


    • பாராளுமன்ற இடங்கள் எல்லை நிர்ணயம் தென் மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என மோடி தெளிவாக கூறியுள்ளார்.
    • கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளைப் போல தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் எங்கள் குழந்தைகளுக்கும், மும்மொழிக் கல்வி கிடைப்பதைத் தடுக்கும் தனது வாதத்தை பெயிண்ட் டப்பாவைத் தூக்கித் திரியும் சிலரைத் தவிர, ஒட்டு மொத்த தமிழகமுமே நிராகரித்துவிட்டதை அறிந்தவுடன் பாராளுமன்ற இடங்கள் குறைப்பு என்ற தனது கற்பனையின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    தனது நிலைப்பாட்டில் அவமானகரமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது திமுக.

    பாராளுமன்ற இடங்கள் எல்லை நிர்ணயம் எப்போது நடக்கும், அது நடக்கும்போது எப்படி அது தென் மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்று, பிரதமர் மோடி தெளிவாகக் கூறியிருந்தும், ஏன் இந்த பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    கற்பனையான பயங்களும், முட்டாள்தனமான வாதங்களுமே தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டன.

    இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் "தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.

    மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?

    ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை!

    கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

    இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.

    நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • டெலிவரி ஊழியர் சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
    • சதீஸ் குமாரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னையில் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு டெலிவரி செய்வதற்காக சதீஷ் குமார் வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் உள்ள பெண் குளிப்பதை அவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

    இதை பார்த்ததும் அப்பெண் கூச்சலிட, சதீஸ்குமார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசாரிடம் பெண் புகாரளித்ததை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும், சதீஸ் குமாரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 2020 நவம்பருக்குப் பிறகு தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு.
    • தற்காலிக பணி நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு.

    அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி அடிப்படையில் கடந்த 1997-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த சத்யா என்பவர், பணி வரன்முறை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் முடிவு எடுக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையின்போது, தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படமாட்டாது என தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்ததது.

    இந்த நிலையில் இந்த வழக்கு ஆர். சுப்பிரமணியன், பி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை செயலாளர் சார்பில், "2020-ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி தற்காலிக பணி நியமனம் செய்வது கைவிடுவது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது" என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், 2020 நவம்பர் 28-ந்தேதிக்குப் பிறகு தற்காலிக பணியில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களையும் பணியில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டனர். அத்துடன் தற்காலிக பணி நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவுகள் தொடர்பாக மார்ச் 17-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    ×