என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 13½ மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
- வீட்டின் நுழைவு வாயில் யாரும் உள்ளே நுழையாதபடி மூடப்பட்டிருந்தது.
கோவை:
கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்மன் அர்ச்சுனன். இவர் கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை செல்வபுரம்-சுண்டக்காமுத்தூர் ரோட்டில் திருநகர் பகுதியில் உள்ள அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, லதா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் 2 கார்களில் வந்தனர்.
அவர்கள் வீட்டிற்குள் சென்று, அங்குள்ள அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி, அதனை சரிபார்த்தனர்.
மேலும் வங்கி கணக்கில் உள்ள பணம், வீட்டில் இருந்த நகைகளையும் ஆய்வு செய்த அதிகாரிகள் அது தொடர்பாகவும், எம்.எல்.ஏ.விடம் கேட்டனர். அவர் அதற்கான தகுந்த ஆதாரங்களை அதிகாரிகளிடம் வழங்கி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்.
சோதனையொட்டி அவரது வீட்டின் முன்பு போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். அவரது வீட்டின் நுழைவு வாயில் யாரும் உள்ளே நுழையாதபடி மூடப்பட்டிருந்தது.
சோதனை நடப்பதை அறிந்ததும், அவரது வீட்டின் முன்பு, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், தாமோதரன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம் மற்றும் அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இேதபோன்று, பெரியநாயக்கன் பாளையத்தில் அம்மன் அர்ச்சுனன் நடத்தி வரும் நிறுவனம் மற்றும் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அங்குள்ள கம்ப்யூ ட்டர்கள், ஆவணங்களை சரிபார்த்தனர்.
அம்மன் அர்ச்சுனன் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது இரவாகியும் நீடித்தது. இரவு 7.40 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. இதேபோல் நிறுவனங்களில் நடந்த சோதனையும் நிறைவடைந்தது.
13½ மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
சோதனையின் போது, பல்வேறு ஆவணங்களை சரிபார்த்த போலீசார் அதனை எடுத்து சென்றதாக தெரிகிறது.
இதற்கிடையே லஞ்ச ஒழிப்புசோதனையில் தனது வீட்டில் எந்த பொருளையும் அதிகாரிகள் எடுத்து செல்ல வில்லை என அம்மன் அர்ச்சுனன் பேட்டி கொடுத்துள்ளார்.
எனது வீட்டில் நடந்த சோதனையானது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்டது. ரூ.2 கோடியே 6 லட்சம் எனது வங்கி கணக்கில் உள்ளது. 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இதற்கான அபிடவிட் தாக்கல் செய்துள்ளேன்
எனது வீட்டில் 2 மணி நேரம் தான் சோதனை நடந்தது. 7 மணிக்கு தான் செல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் வீட்டிற்குள் இருந்தார்கள். அனைத்தும் சட்டப்படியாக சரியாக இருந்தது. வருமானவரித்துறையில் பதிவு செய்தது அனைத்தும் சரியாக தான் இருக்கிறது.
எனது வீட்டில் இருந்து அதிகாரிகள் பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றின் ஜெராக்ஸ் காப்பிகளை மட்டுமே எடுத்துச் சென்றனர்.
அ.தி.முக தொண்டர்கள் எத்தனை சோதனைகள் வந்தாலும் அஞ்சமாட்டோம். என்னிடம் அதிகாரிகள் எந்த கேள்வியும் கேட்கவில்லை.
எனக்கு நடந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.
இந்த வழக்கை நான் சட்டப்படி கோர்ட்டில் சந்திப்பேன். இந்த சோதனையை வைத்து அ.தி.மு.க. தொண்டனை அசைத்து பார்க்க முடியாது. உங்களுக்கு அச்சம் வந்ததால் சோதனை செய்கிறீர்கள். அ.தி.மு.க தொண்டர்கள் ஆலமர வேர் போன்று வலிமையாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர்.
- விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கியது. சுமார் 300 தொண்டர்கள் அரங்கிற்குள் அமர்ந்திருக்க த.வெ.க. தலைவர் விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்தார்.
விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது.
முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து விழா மேடையில் இருந்து விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கீழே இறங்கினர்.
அதன்பின் அங்கு வைக்கப்பட்டு இருந்த பலகையில், 'Get Out' கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை விஜய் கண்டு களித்தார்.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிய தொடங்கினர்.
- கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க காலையில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிய தொடங்கினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழாவில் பங்கேற்பதற்காக சுமார் 3000 பேர் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு காலை ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டதுடன் மதிய உணவில் 20 வகையான உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 8.45 மணியளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட த.வெ.க. தலைவர் விஜய் 9.30 மணியளில் விழா நடைபெறும் ஓட்டலுக்கு வருகை தந்தார். அங்கு விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து விழா நடைபெறும் அரங்கத்திற்குள் விஜய் சென்றார்.
- கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான நாட்கள் ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 20-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி புதிய உச்சத்தை தொட்டது.
அதன் பின்னர், விலை குறைந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 55-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,050-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,600
24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440
23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-02-2025- ஒரு கிராம் ரூ.108
24-02-2025- ஒரு கிராம் ரூ.108
23-02-2025- ஒரு கிராம் ரூ.108
22-02-2025- ஒரு கிராம் ரூ.108
21-02-2025- ஒரு கிராம் ரூ.109
- த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
- 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பங்கேற்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளதை அடுத்து, விஜய் வீட்டில் மர்ம பொருள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
விஜய் வீட்டில் செருப்புடன் மர்ம பொருளை வீசிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி செருப்பு வீசியவர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த விஜய் ரசிகர் என்று தகவல் வெளியாகி உள்ளது. போதையில் விஜய் வீட்டிற்குள் செருப்பை வீசியதாக தகவல். கைதானவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- வருகிற 5-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை :
தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எதிர்த்து வருகிற 5-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மார்ச் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1.திராவிட முன்னேற்றக் கழகம்
2.இந்திய தேசிய காங்கிரஸ்
3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
4.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
5.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
6.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
7.விடுதலை சிறுத்தைகள் கட்சி
8.மனிதநேய மக்கள் கட்சி
9.அகில இந்திய பார்வர்டு பிளாக்
10.தமிழக வாழ்வுரிமை கட்சி
11.மக்கள் நீதி மய்யம்
12.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
13.ஆதி தமிழர் பேரவை
14.முக்குலத்தோர் புலிப்படை
15.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
16.மக்கள் விடுதலை கட்சி
17.அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
18.பாட்டாளி மக்கள் கட்சி
19.தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)
20.தேசிய முற்போக்கு திராவிட கழகம்
21.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
22.பாரதிய ஜனதா கட்சி
23.தமிழக வெற்றிக் கழகம்
24.நாம் தமிழர் கட்சி
25.புதிய தமிழகம்
26.புரட்சி பாரதம் கட்சி
27.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
28.புதிய நீதிக் கட்சி
29.இந்திய ஜனநாயகக் கட்சி
30.மனிதநேய ஜனநாயகக் கட்சி
31.இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி
32.இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
33.பெருந்தலைவர் மக்கள் கட்சி
34.அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
35.பசும்பொன் தேசிய கழகம்
36.அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்
37.தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
38.கலப்பை மக்கள் இயக்கம்
39.பகுஜன் சமாஜ் கட்சி
40.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை
41.ஆம் ஆத்மி கட்சி
42.சமதா கட்சி
43.தமிழ்ப்புலிகள் கட்சி
44.கொங்கு இளைஞர் பேரவை
45.இந்திய குடியரசு கட்சி
- சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- மார்ச் மாதம் 2-ந்தேதி இரவு 10 மணி வரை சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் மூலம் தினந்தோறும் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் 2 நாட்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, வரும் 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் மார்ச் மாதம் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி வரை சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை :
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன்படி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார்.
- மாற்றுக்கட்சியினர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை 10 மணிஅளவில் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர். தொடக்க விழாவிற்கு வரும் நிர்வாகிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டுள்ளது. QR Code-ஐ பயன்படுத்தி அனுமதிக்கப்படும் தொண்டர்களுக்கு ஸ்நாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் மாமல்லபுரத்திற்கு வருவதன் காரணமாக அப்பகுதியில் காலையில் இருந்தே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார். தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக விஜய் உரையாற்றலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே, பா.ஜ.க. வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- ஒரத்தநாடு கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோவிலுக்கு சென்ற போது விபத்து நேரிட்டது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரமாக போராடி காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 5 பேர் உடல்களை மீட்டனர்.
காரில் வந்தவர்கள் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் செல்வராஜ், மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோரும் காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
செல்வராஜ் குடும்பத்தினர் ஒரத்தநாடு கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோவிலுக்கு சென்ற போது விபத்து நேரிட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் பா.ஜ.க. வஞ்சகம் தொடர்கிறது.
- வஞ்சகத்தை எதிர்ப்போம்; வளமான தமிழ்நாட்டை காப்போம்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு, அதை சீண்டி பார்க்க நினைக்காதீர்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் பா.ஜ.க. வஞ்சகம் தொடர்கிறது.
திராவிட இயக்கத்திற்கு எந்த மொழி மீதும் பகை கிடையாது; தமிழ், வேறு எந்த மொழியையும் எதிரியாக கருதி அழித்ததில்லை, பிறமொழிகள் தன் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அதனை ஒருபோதும் அனுமதித்ததில்லை.
இந்தியை நீங்கள் திணிப்பதால் எதிர்க்கிறோம். வஞ்சகத்தை எதிர்ப்போம்; வளமான தமிழ்நாட்டை காப்போம் என கூறியுள்ளார்.
- த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெறுகிறது.
- மர்ம நபர் செல்போனில் பேசிய படி காணப்பட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளதை அடுத்து, விஜய் வீட்டில் மர்ம பொருள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. செருப்புடன் மர்ம பொருளை வீசிய நபர், செல்போனில் பேசிய படி அங்கிருந்து புறப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.






