என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கேரளா மற்றும் தமிழகத்தில் ஆதார் அட்டைகள் வாங்கி உள்ளார்.
    • வேலூரில் 3 ஆண்டுகள் பல இடங்களில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர்.

    வேலூர்:

    தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த, மாவோயிஸ்டு பண்ணைபுரம் கார்த்திக் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில், 'கியூ' பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    மேலும் ஓசூரில் நடந்த அதிரடி வேட்டையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திக்கின் கூட்டாளி சந்தோஷ்குமார் என்பவர் பிடிபட்டார். இவரிடம் விசாரித்ததில் வேலூரைச் சேர்ந்த மாவோயிஸ்டு ராகவேந்திரா (வயது 36) என்பவர் தலைவராக செயல்பட்டது தெரியவந்தது.

    கேரளாவில் கைதான ராகவேந்திராவை காவலில் எடுத்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    ராகவேந்திராவின் சொந்த ஊர் வேலுார் சத்துவாச்சாரி. இவரின் தந்தை வணிக வரித்துறையில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    ராகவேந்திரா, பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார். மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்தார். தன் பெயரை வினோத்குமார், ரவிமுகேஷ் என மாற்றி, கேரளா மற்றும் தமிழகத்தில் ஆதார் அட்டைகள் வாங்கி உள்ளார்.

    கேரள மாநிலம், எடக்கரை வனப்பகுதியில், 20 மாவோயிஸ்டுகள் ஆயுதப் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு, ராகவேந்திரா தான் தலைமை தாங்கினார்.

    இவர்கள், மேற்கு தொடர்ச்சி மலையின், தமிழகம், கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளை, சிறப்பு மண்டலமாக அறிவித்து செயல்பட்டனர்.

    கடந்த, 2015-ல், மாவோயிஸ்டு ரூபேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின், மாவோயிஸ்டுகளை வழிநடத்தும் பொறுப்பை, ராகவேந்திரா ஏற்றார்.

    அதே ஆண்டு, கேரள மாநிலம், நிலம்பூர் வனப்பகுதியில், மாவோயிஸ்டுகள் ஆயுதப்பயிற்சி பெற்றனர். இதில், குப்பு தேவராஜ் என்பவர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    பாலக்காடு மாவட்டம், மஞ்சக்கண்டியில், மாவோயிஸ்டு மணிவாசகம், ரேமா, பெரிய கார்த்திக், அரவிந்த் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

    கடந்த, 2019-ல், வயநாடு பகுதியில் மாவோயிஸ்டு, 'கேடர் லீடர்' ஜலீல், 2020-ல் மற்றொரு கேடர் லீடர் வேல்முருகன், 'என்கவுண்டர்' செய்யப்பட்டனர்.

    இதனால், ராகவேந்திரா தலைமையிலான மாவோயிஸ்டுகள், நிலை குலைந்தனர்.

    அமைப்பை பலப்படுத்த, ராகவேந்திரா தலைமையில்பண்ணைபுரம் கார்த்திக், சந்தோஷ்குமார் மற்றும் ஷர்மிளா ஆகியோர், தமிழகத்தில் வேலுாரிலும், கேரளாவில் கண்ணாரிலும் ரகசிய கூட்டங்கள் நடத்தினர். வேலூரில் 3 ஆண்டுகள் பல இடங்களில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர்.

    கடந்த 2021-ல் நிலம்பூரில் மீண்டும் ஆயுதப் பயிற்சி பெற முயன்றனர். அப்போது ராகவேந்திரா சிக்கினார். மேலும் சமீபத்தில் ஆற்காட்டை சேர்ந்த மாவோயிஸ்டு ஒருவர் பெங்களூரில் சரணடைந்தார்.

    இதுகுறித்து தொடர்ந்து ராகவேந்திராவிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழ்ப் பாடத்திற்கு சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட வாரியங்கள் தேர்வு நடத்தத் தேவையில்லை.
    • தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையே நடத்தி அதற்கான சான்றிதழை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தெலுங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களை பின் பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப் பட்டுள்ளது.

    ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும் இன்று வரை அந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    2015-16-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ உள்ளிட்ட பிற கல்வி வாரியங்களுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்கி, கடந்த 18.09.2014 அன்று அப்போதைய தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

    அதன்படி நடப்பு 2024-25-ம் ஆண்டில் பிற பாடத் திட்டங்களை பின்பற்றும் தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்க் கட்டாயப் படமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாத திமுக அரசு, அந்தக் கடமையில் இருந்து தனியார் பள்ளிகளைக் காப்பாற்றும் நோக்குடன் 2023-ம் ஆண்டு மே மாதம் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

    அதன்படி, சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் தமிழைக் கட்டாயப் பாடமாக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக தமிழைக் கூடுதல் கட்டாயப் பாடமாக்கினால் போதுமானது. தமிழ்ப் பாடத்திற்கு சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட வாரியங்கள் தேர்வு நடத்தத் தேவையில்லை.

    தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையே நடத்தி அதற்கான சான்றிதழை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது மோசடியானது. தனியார் பள்ளிகள் எந்தப் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றனவோ, அந்தப் பாடத்திட்டத்தின்படி தமிழ்ப் பாடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டால் தான் மாணவர்கள் தமிழைப் படிப்பார்கள்.

    தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரளம், தெலுங்கானா, கர்நாடகம், ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இனியும் அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்வதை விடுத்து, தமிழகத்தில் தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல் படுத்த தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
    • தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியிலிருந்து 13-நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இரவு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

    இன்று காலை மூலஸ்தானத்தில் உள்ளஅம்மனுக்கும், சிவபெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவ அம்மனுக்கு ஆங்கார அங்காளி அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்பு மயானத்தை நோக்கி அம்மன் புறப்பட்டு மயானத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை , காய்கறி, பழங்கள் ஆகியவற்றை வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை விழா ஆகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலக்குழு தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது. இன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன.
    • ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    பொன்னேரி:

    சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.600 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொடங்கப்பட்டது. இங்கிருந்து மணலி, மாதவரம், புழல் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன. இதில் மொத்தம் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வந்தது. இதில் 3 அலகுகள் பழுதான நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக 2 அலகுகள் மட்டுமே செயல்பட்டு குடிநீரை உற்பத்தி செய்து வந்தது. இதனால் வடசென்னை பகுதிக்கு ஆலையில் இருந்து குறைவான அளவே கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் செயல்பட்டு வந்த மற்ற 2 அலகுகளிலும் எந்திரம் பழுதால் தண்ணீர் சுத்திகரிப்பு முழுவதும் நின்று போனது. கடந்த 4 மாதங்களாக அங்கு எந்த பணியும் நடைபெற வில்லை என்று தெரிகிறது. மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

     

    பழுதான எந்திரத்தில் மின் மோட்டார் பழுது, கார்பன் பில்டர் மைக்ரோ பில்டர், குழாய் உடைப்பு உளிட்ட பழுதுகளை சரி செய்ய போதிய பொருட்கள் இல்லாமலும் அதனை மாற்ற உடியாக நடவடிக்கை எடுக்காததே தண்ணீர் உற்பத்தி முழுமையாக நின்றதற்கு காரணம் என்று அங்குள்ள ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    காட்டுப்பள்ளி கடல்நீராக்கும் ஆலை பழுதால் கடந்த 4 மாதங்களாக வடசென்னை பகுதிக்கு முற்றிலும் அங்கிருந்த குடிநீர் அனுப்பப்படாமல் உள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் தற்போது புழல் ஏரியிலிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தண்ணீர் தேவை அதிகரிக்கும் போது வடசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் காட்டுப்பள்ளியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் உள்ள எந்திர பழுதுகளை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தடுத்து நிறுத்தினர்.
    • சாலை மறியலில் ஈடுபட்ட ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை போலீசார்கைது செய்தனர்.

    அ.தி.மு.க. நிர்வாகி மீதான தாக்குதலை கண்டித்து அக்கட்சியினர் திருக்கழுக்குன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள வந்த அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த அ.தி.மு.க.வினரை கைது செய்த காவல்துறையை கண்டித்து ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை போலீசார்கைது செய்தனர். 

    • உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.
    • சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே,

    இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்திஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.

    ஒற்றைக்கல் (monolithic) இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. உ.பி. மற்றும் பீகார் ஒருபோதும் வெறும் "இந்தி இதயப்பகுதிகள்" அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.

    இது எங்கே முடிகிறது என்பது நமக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன! என்று கூறியுள்ளார்.



    • நாம் தமிழர் கட்சி உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
    • அ.தி.மு.க.வை பொறுத்த வரை தமிழகத்தின் எந்த உரிமையையும் விட்டுக் கொடுக்காது.

    சென்னை:

    பாராளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்கும் பணிகளை மத்திய அரசு 2026-ல் மேற்கொள்ள இருப்பதாகவும் அப்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்கும் போது தமிழ்நாட்டிற்கு 8 தொகுதிகள் வரை குறைந்து விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

    இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை மார்ச் 5 அன்று தலைமைச் செயலகத்தில் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டுகள், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசிய போது, தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தென் மாநிலங்களில் இடங்கள் அதிகரிக்கும் என்றும் தமிழ் நாட்டில் தொகுதிகள் குறையாது என்றும் உறுதி அளித்துள்ளார்.

    இந்த சூழலில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.

    இப்பிரச்சனை குறித்து கடந்த 2003-ம் ஆண்டே பேசி எதிர்ப்பு தெரிவித்து விட்டதாகவும் தேர்தல் முறையில் நிறைய சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது என்றும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தனியாக போராடுவதால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்றும் கூறி உள்ளார்.

    தி.மு.க. கூட்டணி கட்சிகளும், அதன் ஆதரவு கட்சிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் உறுதியாக உள்ள நிலையில் பா.ம.க.வும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என அறிவித்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ளுமா? புறக்கணிக்குமா? என்பது பற்றி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகி கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை பொறுத்த வரை தமிழகத்தின் எந்த உரிமையையும் விட்டுக் கொடுக்காது. அதற்காக தொடர்ந்து குரல் கொடுக் கும். அது காவிரிப் பிரச்சனையாக இருந்தாலும், நீட் விஷயமாக இருந்தாலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சட்டப் போராட்டம் நடத்தி அதில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும்.

    ஆனால் தி.மு.க. இப்போது திடீரென தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை கையில் எடுத்து பேசுகிறது. பாராளுமன்றம் நடந்த போது தி.மு.க. எம்.பி.க்கள் அங்கு இதை பேசியிருக்க வேண்டும். அங்கு பேசாமல் இப்போது இது பற்றி பேசுகிறார்கள்.

     

    தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் நிலவுகிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பாலியல் வன்முறை சம்பவங்கள் தினமும் நடக்கின்றன. போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது.

    இந்த நிலையில் இப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். அரசு அலுவலகங்கள் அன்றைய தினம் வெறிச் சோடி கிடந்தது. நிர்வாகமே ஸ்தம்பித்து விட்டது.

    இந்த விஷயத்தில் தி.மு.க. அரசின் தோல்வியை மறைக்கவும், மடைமாற்றம் செய்யவும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

    எனவே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதால் பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்பது எவ்வாறு நடைபெறும் என்பதை முழுமையாக அறிந்து ஓரிரு நாளில் இதில் முடிவெடுப்பார்.

    எனவே, அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து இரு தினங்களில் முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க.வும் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் என்று கூறப்படுகிறது. தொகுதிகள் மறுசீரமைப்பை பொறுத்த வரை தென் மாநிலங்களில் தற்போது இருக்கும் எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது என்று பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

    அப்படி இருக்கும் போது இந்த பிரச்சனையை காரணம் காட்டி இப்போது அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது ஏன்? தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்றோ அல்லது இப்போது தொகுதி மறு சீரமைப்பு நடக்கப்போகுது என்றோ யார் சொன்னது? என்பதை தெரிவித்தால் பா.ஜ.க.வும் பங்கேற்கும் என்று அண்ணாமலை ஏற்கனவே அறிவித்தார்.

    இந்த நிலையில் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா தமிழகத்தில் எம்.பி. தொகுதிகள் குறைய போவதில்லை என்று உறுதி மொழி அளித்தார்.

    எனவே, பா.ஜ.க. கலந்து கொள்ளாது என்று கூறப்படுகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதே போல் தே.மு.தி.க., தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • விஜயலட்சுமி நேற்று வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சீமானுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளார்.
    • ஆவணங்களை சீமானுக்கு எதிராக முக்கிய சாட்சியங்களாக சேர்ப்பதற்கு போலீசார் முடிவு செய்து குற்றப்பத்திரிகையை தயாரித்து வருகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் சீமான் மீது சினிமா நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் அவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டதாக விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில், சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக விஜயலட்சுமி 2012-ம் ஆண்டு தெரிவித்தார். இருப்பினும் வழக்கு விசாரணையிலேயே இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தன் மீதான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடித்து 12 வாரத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

    பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பெண் 7 முறை கருக்கலைப்பு செய்து இருப்பதாக குற்றம் சாட்டியிருப்பதாலும் பாலியல் வழக்கு என்பதாலும் இதனை போலீசார் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் சீமான் மீதான விசாரணையை விரைந்து முடித்து 12 வாரத்துக்குள் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்காக நடிகை விஜயலட்சுமி நேற்று வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சீமானுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் மருத்துவ ஆதாரங்களையும் அவர் போலீஸ் நிலையத்தில் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த ஆவணங்களை சீமானுக்கு எதிராக முக்கிய சாட்சியங்களாக சேர்ப்பதற்கு போலீசார் முடிவு செய்து குற்றப்பத்திரிகையை தயாரித்து வருகிறார்கள். ஐகோர்ட் அறிவுறுத்தியபடி விரைவில் கோர்ட்டில் அதனை தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தன் மீதான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு மீது அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணையின் போது சீமான் மீதான கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுமா? இல்லை ஐகோர்ட் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த சொல்லுமா? என்பது தெரியவில்லை.

    திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொள்வது கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படும் என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது. இது போன்ற சூழலில் தான் சீமானின் மனு மீது சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனால் சீமான் மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட் எந்த மாதிரியான உத்தரவை பிறப்பிக்க போகிறது என்பது நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் அரங்கிலும் இந்த விவகாரம் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

    • அறையில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொருட்களை பறிமுதலும் செய்தனர்.
    • அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சோதனையால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த கல்வி நிறுவனங்கள் கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இதில் சில மாணவர்கள் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியிலும், இன்னும் சிலர் வெளியில் அறை எடுத்து தங்கியும் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவையில் படித்து வரும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    இதனை தடுக்க, மாணவர்கள் மத்தியில் போதை பொருட்கள் புழங்குவதை தடுக்கவும், கல்லூரி மாணவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்கும் விதமாக, கோவை மாநகர் மற்றும் புறநகர் போலீசார் அவ்வப்போது, மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன வேடம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி இருக்கும் விடுதிகள், வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் உதவி போலீஸ் கமிஷனர் வேல்முருகன் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அதிகாலை 6 மணிக்கு கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்த போலீசார் கதவை தட்டினர்.

    அவர்கள் கதவை திறந்ததும், உள்ளே சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாணவர்கள் வைத்திருந்த பேக்குகள், சூட்கேஸ்கள், அலமாரிகள், கட்டில்கள், குப்பைத்தொட்டிகள், என அனைத்திலும் சோதனை நடத்தினர்.

    அறையில் ஏதாவது தடை செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் கஞ்சா ஏதாவது மறைத்து வைத்துள்ளனரா? எனவும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் அறையில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொருட்களை பறிமுதலும் செய்தனர்.

    தொடர்ந்து மாணவர்களிடம், அவர்களின் பெயர், சொந்த ஊர், அவர்கள் படிக்கும் கல்லூரியின் பெயர், பாடப்பிரிவு மற்றும் மோட்டார் சைக்கிள்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்றும் விசாரித்தனர்.

    அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சோதனையால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • வருகிற 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்.

    சென்னை:

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதே சமயம், இன்று முதல் வருகிற 1-ந்தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது

    இந்த நிலையில், வருகிற 1-ந்தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை தொடர்பாக 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

    கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • கடல் உள்பகுதியில் சீற்றமாக காணப்படுகிறது.
    • மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்களில் கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.

    மேலும் கடல் உள்பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் இன்று 3-வது நாளாகமீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வார காலமாக வாவல் காலா, ஷீலா, திருக்கை, நண்டு, இறால் உள்ளிட்டஅனைத்து வகையான மீன்களும் கிடைத்து வந்தன. மீனவர்களுக்கு நல்ல விலையும் கிடைத்து வந்தது.

    இதனால் அதிகப்படியான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்தனர். இந்நிலையில் 3 நாட்களாக கடற்கரைப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வில்லை.

    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • வெயில் கொளுத்திய நிலையில் திடீர் மழையால் குளிர்ச்சி நிலவியது.
    • பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பகலில் வெயில் அடித்த நிலையில், பிற்பகலில் வானில் கருமேகங்கள் திரண்டன. மதியம் 1 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையாகவும், திடீரென சாரல் மழையாகவும் பெய்தது. வெயில் கொளுத்திய நிலையில் திடீர் மழையால் குளிர்ச்சி நிலவியது.

    மாநகரில் டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பெருமாள்புரம், பாளை, புதிய பஸ் நிலையம், மார்க்கெட், கே.டி.சி. நகர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவலாக பெய்த சாரல் மழையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. சந்திப்பு பஸ் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையில் ஷேர் ஆட்டோக்கள் நிற்கும் இடத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியது. பாளையில் 12 மில்லிமீட்டரும், நெல்லையில் 11 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே பழைமையான கட்டிடத்தின் சுவர் ஒரு பகுதி இடித்து விழுந்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை திருப்பி விட்டனர்.

    மாவட்டத்திலும் நாங்குநேரி, அம்பை, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவி 27.40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாங்குநேரியில் 13 மில்லிமீட்டரும், அம்பையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்தது. களக்காட்டில் 5 மில்லிமீட்டரும், கன்னடியனில் 10 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. வீரவநல்லூர் பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பெய்த பரவலான மழையால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து ஏற்பட்டது. பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு வினாடிக்கு 270 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 11 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 14 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள ராமநதி, கருப்பாநதி அணைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. ராமநதியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கயத்தாறு சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் சிறிது நேரம் கனமழை பெய்தது. கோவில்பட்டியில்யில் பெய்த மழையில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 11.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. சூரங்குடி, கீழ அரசடியில் விட்டு விட்டு லேசான சாரல் அடித்தது.

    ×