என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வடசென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
    X

    வடசென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

    • கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன.
    • ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    பொன்னேரி:

    சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.600 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொடங்கப்பட்டது. இங்கிருந்து மணலி, மாதவரம், புழல் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன. இதில் மொத்தம் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வந்தது. இதில் 3 அலகுகள் பழுதான நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக 2 அலகுகள் மட்டுமே செயல்பட்டு குடிநீரை உற்பத்தி செய்து வந்தது. இதனால் வடசென்னை பகுதிக்கு ஆலையில் இருந்து குறைவான அளவே கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் செயல்பட்டு வந்த மற்ற 2 அலகுகளிலும் எந்திரம் பழுதால் தண்ணீர் சுத்திகரிப்பு முழுவதும் நின்று போனது. கடந்த 4 மாதங்களாக அங்கு எந்த பணியும் நடைபெற வில்லை என்று தெரிகிறது. மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    பழுதான எந்திரத்தில் மின் மோட்டார் பழுது, கார்பன் பில்டர் மைக்ரோ பில்டர், குழாய் உடைப்பு உளிட்ட பழுதுகளை சரி செய்ய போதிய பொருட்கள் இல்லாமலும் அதனை மாற்ற உடியாக நடவடிக்கை எடுக்காததே தண்ணீர் உற்பத்தி முழுமையாக நின்றதற்கு காரணம் என்று அங்குள்ள ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    காட்டுப்பள்ளி கடல்நீராக்கும் ஆலை பழுதால் கடந்த 4 மாதங்களாக வடசென்னை பகுதிக்கு முற்றிலும் அங்கிருந்த குடிநீர் அனுப்பப்படாமல் உள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் தற்போது புழல் ஏரியிலிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தண்ணீர் தேவை அதிகரிக்கும் போது வடசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் காட்டுப்பள்ளியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் உள்ள எந்திர பழுதுகளை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×