என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
- நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக, தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் MRK பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக, தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதலமைச்சர்? என வினவியுள்ளார்.
- சம்மனை சில நொடிகளில் நாம் தமிழர் கட்சியினர் கிழித்தனர்.
- காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் வேலைபார்க்கும் காவலாளி தாக்கினார்.
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகார் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை 11 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.
விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது உள்ளிட்ட 10 நிபந்தனைகளை தெரிவித்து ஒட்டிய சம்மனை சில நொடிகளில் நாம் தமிழர் கட்சியினர் கிழித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் வேலைபார்க்கும் காவலாளி தாக்கினார். இதனை அடுத்து அந்த காவலாளியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
அப்போது, காவலாளியிடம் இருந்த கைத்துப்பாக்கியை தருமாறு போலீசார் கூறியும் காவலாளி அமல்ராஜ் கொடுக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக சீமான் வீட்டு உதவியாளரான சுதாகரனையும் போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து, போலீசாரை காவலாளி தாக்கியதற்கு சீமானின் மனைவி கயல்விழி மன்னிப்பு கேட்டார்.
அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.
- மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.20 சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்.
- அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான ஆதரவை அளிக்கும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் 2026-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படும் போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் அனைவர் மத்தியிலும் நிலவுகிறது. இந்த அச்சத்தைப் போக்க வேண்டிய மத்திய அரசு, மக்களிடம் மேலும், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை வெளியிடக்கூடாது.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் 7.20 சதவீதம் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த எண்ணிக்கை ஒரு போதும் குறையாது என்று தமிழக மக்களுக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
அதேநேரத்தில் மக்களவைத் தொகுதிகளின் மறுவரையறையை எந்த அடிப்படையில் செய்வது என்பது குறித்து எந்த முடிவையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை. அது தெரியாமல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இந்த விவகாரத்தில் தெளிவான முடிவை எடுக்க முடியாது. மத்திய அரசின் முடிவை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் உத்திகளை வகுப்பது தான் சரியானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
அதேநேரத்தில் மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாமல் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையான ஆதரவை அளிக்கும். தமிழக அரசின் சார்பில் மார்ச் 5-ம் தேதி நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பங்கேற்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சுப்ரீம் கோர்ட்டும் முழுமையான விசாரணை மேற் கொள்ள உத்தரவு பிறப்பித்திருந்தது.
- செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்த செந்தில் பாலாஜி, இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு நியமனம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மேல்விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டும் முழுமையான விசாரணை மேற் கொள்ள உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், போக்குவரத்துத் துறையில் ஒவ்வொரு பதவிக்கும் பணம் பெற்றது தொடர்பாக தனித்தனியாக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை காவல்துறையினர் தாக்கல் செய்த நிலையில் அவற்றை தனிவழக்காக தான் விசாரித்து இருக்க வேண்டுமே தவிர ஒன்றாக இணைத்து இருக்கக் கூடாது என்றும் இந்த வழக்கை ஒன்றாக இணைத்ததால் விசாரணைக்கு பல ஆண்டுகள் எடுக்கும் என்பதால் வழக்கை இணைத்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி இளந்திரையன், மனுவுக்கு மார்ச் 13-ந் தேதிக்குள் பதில் அளிக்கும் படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளி வைத்தார்.
- கேங்மேன் உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
- பல இடங்களில் மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க பயிற்சி இல்லாத தனியார்கள் அனுப்பப்படுவதாகவும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின் கம்பியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன் உள்ளிட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில், கிட்டத்தட்ட முப்பதாயிரம் கேங்மேன் பணியிடங்கள் அடக்கம். இதன் காரணமாக, பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், பல இடங்களில் மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க பயிற்சி இல்லாத தனியார்கள் அனுப்பப்படுவதாகவும், அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுவதாகவும், அவர்கள் மின் பழுதை நீக்கிவிட்டு அதற்கான பணத்தை மின் நுகர்வோர்களிடம் கேட்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள 30 ஆயிரம் கேங்மேன் காலிப் பணியிடங்களையும், இதரப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கடிதம் அளித்து இருந்தார் சீமான்.
- எனக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் அளிக்கிறேன் என்று கூறிவிட்டேன் என்றார்.
சென்னை:
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வழக்கில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இருப்பினும் சீமான், இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. ஆனால் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கடிதம் அளித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் பேட்டியளித்த சீமான், சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்கு சம்மந்தமாக என்னை ஆஜராக கூறினார்கள். அதற்கான விளக்கத்தினை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். மேலும் அவர்கள் இந்த விளையாட்டை நீடித்து கொண்டே இருக்கிறார்கள். எனவே எனக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் அளிக்கிறேன் என்று கூறிவிட்டேன் என்றார்.
இந்த நிலையில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீமான் வீட்டில் ஒட்டிய சம்மனை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கிழித்தனர்.
- தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்புப் பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்கு வரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வார இறுதி நாள்களான வருகிற சனிக்கிழமை (1-ந்தேதி), ஞாயிற்றுக்கிழமை (2-ந் தேதி) ஆகியவற்றை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 245 பஸ்களும், சனிக்கிழமை 240 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கோய்மபேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு (வெள்ளிக்கிழமை) 51 பஸ்களும், சனிக்கிழமை 51 பஸ்களும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடா்ந்து, மாதவரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை 20 பஸ்களும், சனிக்கிழமை 20 பஸ்களும் என மொத்தம் 627 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுபோல, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்புப் பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மத்திய அரசு தேவையில்லாத வேலைகளை செய்து வருகிறது.
- நாட்டில் ஒற்றுமை வந்துவிடும் நாடு வளர்ந்து விடும் என்பதெல்லாம் வேடிக்கையான விஷயம்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று ஓசூர் வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் வஞ்சிப்பது, மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு போன்றவற்றுக்கு எதிராக நாங்கள் தனியாக போராடுவோம்.
மறு சீரமைப்பு குறித்து பேசுபவர்களை நம்ப முடியாது. இப்போது பேசுவார்கள், பிறகு இதனை விட்டுவிடுவார்கள்.
இந்தி எதிர்ப்பு என்பது கொள்கை நிலைப்பாடு அல்ல அவ்வப்போது பேசுவார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.
தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் வஞ்சிப்பது மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு, தொகுதி மறு சீரமைப்பு போன்றவற்றுக்கு எதிராக நாங்கள் தனியாக போராடுவோம்.
மத்திய அரசு தேவையில்லாத வேலைகளை செய்து வருகிறது. ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே கல்விக்கொள்கை. இந்த மாதிரி வேலைகளை எல்லாம் செய்கிறார்கள்.
இதனால் நாட்டில் ஒற்றுமை வந்துவிடும் நாடு வளர்ந்து விடும் என்பதெல்லாம் வேடிக்கையான விஷயம்.
அதேபோலத்தான் தொகுதி மறு சீரமைப்பு என்பது, தேர்தலில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். அதில் நிறைய வேலை இருக்கிறது. இந்தியாவும் நைஜீரியாவும் மட்டும்தான் இந்த வாக்கு எந்திரத்தை வைத்துள்ளது. இந்த இரண்டு நாடுகளும் ஊழலில் மோசமான நாடாக உள்ளது. மற்ற உலக நாடுகள் அனைத்தும் வாக்குச்சீட்டை பயன்படுத்தி வருகின்றனர். மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஜப்பான் தயாரித்து வருகிறது. அந்த நாடே வாக்கு எந்திரத்தை வைத்துக் கொள்வதில்லை.
அமெரிக்காவில் மனித கழிவுகளை எந்திரத்தில் அள்ளுகிறார்கள், வாக்கை வாக்கு சீட்டில் போடுகிறார்கள்.
ஆனால் இந்தியாவில் மனித கழிவுகளை மனிதனை அல்ல வைக்கிறார்கள், எந்திரத்தில் வாக்களிக்கிறார்கள்.
டிஜிட்டல் என்று கூறிவிட்டு 42 நாட்கள் பாராளுமன்ற தேர்தலில் வாக்கு பெட்டிகள் முடங்கி கிடந்தது. ஒரே நாளில் தேர்தலை நடத்த முடியுமா. அதுபோன்ற மாறுதல்கள் செய்ய வேண்டும். ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு பதவியில் இருக்கும் போது இன்னொரு பதவிக்கு போட்டியிடுவதை தடுக்க வேண்டும். இடைத்தேர்தல்களை நீக்க வேண்டும். அது தேவையில்லாதது.
மாறாக இரண்டாவது இடம் பிடித்தவரை வெற்றியாளர் என அறிவிக்க வேண்டும். மீதியுள்ள காலத்தில் மக்கள் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு, தமிழ்நாடு என்றாலே வெறுப்பாக உள்ளது. காமராஜர், அண்ணா, இவர்களுக்கு பிறகு அரசியல் நேர்மை, தூய்மை இறந்து விட்டது. கருணாநிதி முதல்வரான பிறகு, தமிழகத்தில் தீய அரசியல் ஆட்சி தொடங்கி விட்டது.
சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்கு சம்மந்தமாக என்னை ஆஜராக கூறினார்கள். அதற்கான விளக்கத்தினை நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். மேலும் அவர்கள் இந்த விளையாட்டை நீடித்து கொண்டே இருக்கிறார்கள். எனவே எனக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் அளிக்கிறேன் என்று கூறிவிட்டேன்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
- சாலைப்பணிக்காக இந்த நிறுவனத்தின் ரோடு ரோலர் கொண்டுவரப்பட்டு இருந்தது.
- கேமராவில் ஆய்வு செய்தபோது ரோடு ரோலரை மர்ம நபர்கள் நூதன முறையில் ஏற்றி கடத்தி செல்வது பதிவாகி இருந்தது.
பொன்னேரி:
சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் தினகரன். சாலை ஒப்பந்த பணிகளை செய்யும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மீஞ்சூர் பகுதியில் நடைபெற்ற சாலைப்பணிக்காக இந்த நிறுவனத்தின் ரோடு ரோலர் கொண்டுவரப்பட்டு இருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் பணிகள் முடிந்த நிலையில் அந்த ரோடு ரோலரை சென்னைக்கு கொண்டு வருவதற்காக ஓட்டிவந்தனர். சோழவரம் சுங்கச்சாவடி அருகே செல்லும், ரோடு ரோலர் பழுதானது. தொடர்ந்து இயக்க முடியாததால் அந்த ரோடு ரோலரை டிரைவர் அங்கேயே விட்டுவிட்டு சென்றார்.
இந்த நிலையில் கடந்த, 24-ந்தேதி ரோடுரோலரை சரிசெய்து எடுத்து செல்வதற்காக என்ஜினீயர் தினகரன் ஊழியர்களுடன் வந்தார். அப்போது அங்கிருந்த ரோடு ரோலரை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து சோழவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது லாரி ஒன்றில், ரோடு ரோலரை மர்ம நபர்கள் நூதன முறையில் ஏற்றி கடத்தி செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து லாரியின் பதிவு எண்ணை வைத்து ரோடு ரோலரையே திருடி சென்ற திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்த அலெக்ஸ், கோபிநாத், வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
சாலையோரம் நீண்ட நாட்களாக ரோடு ரோலர் கேட்பாரற்று நின்றதால் கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றி திருடி சென்றதாக தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரோடு ரோலர், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஆக்கப்பூர்வமாக அரசாட்சி செய்து மக்களைக் காக்கும் எண்ணம் துளியும் இல்லை.
- அதிமுக-வைக் கண்டாலே ஸ்டாலின் மாடல் அரசுக்கு அச்சம் ஏற்பட்டு நடுங்குவது என்பது நாடறிந்த உண்மை
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமார் தாக்கபட்டதைக் கண்டித்து எனது அறிவுறுத்தலின்படி, இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில், போராட்டத்திற்கு தலைமை தாங்கவிருந்த கழக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆறுமுகம், கழக மகளிர் அணி இணைச் செயலாளர், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
மரகதம் குமரவேல், பல்வேறு கழக நிர்வாகிகளையும் மற்றும் தொண்டர்களையும் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்துறையால் கைது செய்திருப்பதற்கு எனது கடும் கண்டனம்.
தமிழ்நாட்டைப் பிடித்துள்ள பாசிச ஸ்டாலின் மாடல் அரசு, தன் ஆட்சியின் அவலங்கள் மக்களுக்கு தெரியவே கூடாது என்று பிரதான எதிர்க்கட்சியின் குரலுக்கு பயந்து அதனை ஒடுக்குவதில் மட்டும் தான் தெளிவாக இருக்கிறதே தவிர, ஆக்கப்பூர்வமாக அரசாட்சி செய்து மக்களைக் காக்கும் எண்ணம் துளியும் இல்லை.
அஇஅதிமுக-வைக் கண்டாலே இந்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு அச்சம் ஏற்பட்டு நடுங்குவது என்பது நாடறிந்த உண்மை என்றாலும், ஆர்ப்பாட்டத்திற்கு முன் கழக அமைப்புச் செயலாளரையும், மாவட்டக் கழகச் செயலாளரையும் , சட்டமன்ற உறுப்பினரையும் கைது செய்வது கோழைத்தனத்தின் உச்சம்.
பேரூராட்சி கழக செயலாளர் தினேஷ் குமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார், ஆறுமுகம் , மரகதம் குமரவேல், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
தருமபுரி:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 ஆயிரம் கனஅடி தண்ணீர் நீடித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
- மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்பார்.
சென்னை:
புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது எனக் கூறியிருந்தார் மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு என்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது எனவும் விமர்சித்து இருந்தார். இதனால் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் கல்வித்துறைக்கு நிதி வழங்காதது, மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்பார் என கூறப்பட்டுள்ளது.






