என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கோவில் திருவிழாவின் போது போதையில் நடனம் ஆடியவர்களை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 12-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவில் திருவிழாவின் போது போதையில் நடனம் ஆடியவர்களை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. அதில் ஷியாம் சுந்தர் என்ற 17வயதான 12-ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    தடுக்க சென்ற அஜய், வசந்தகுமார் ஆகியோரும் கத்தியால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பஹல்காம் தாக்குதல் உலக நாடுகளை உலுக்கியுள்ளது.
    • இதைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற மக்களை மதத்தின் பெயரால் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் படுகொலை செய்த கொடூரம் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது.

    இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான், வங்கசேத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைத் தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் வதந்திகளைக் கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பா.ஜ.க. சார்பில் திங்கட்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அத்தனை அதிகாரங்களையும் திமுக பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே?
    • இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்!

    நீட் தேர்வு ரத்து என்ற பொய்யால் 21 மாணவர்கள் உயிர் பறிபோய் இருக்கிறது, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா ? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வௌயிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என அத்தனை அதிகாரங்களையும் திமுக பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே?

    "ரகசியம் இருக்கிறது, ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள்" என்று வாய் சவடால் பேசியதெல்லாம் எங்கே போனது? வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் எங்கே போனது?

    உங்களுடைய தேர்தல் அரசியலுக்கான ஒற்றைப் பொய்யால் மட்டுமே 21 மாணவ மாணவியரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் எத்தனை பிள்ளைகள் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே? உங்களுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா?

    "நீட் ஒழிய வேண்டும் என்றால் '2.ஓ' வர வேண்டும்" என்று கூச்சமின்றி திமுக-வினர் 2026ல் வாக்கு கேட்கும் போது, "உரிய மரியாதையுடன்" மக்கள் பதில் அளிப்பார்கள்! இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்!

    ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொதுக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
    • பொதுக்கூட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த ஹாலோஜன் விளக்கு கம்பம் பலத்த காற்றால் சரிந்து விழுந்தது.

    மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார்.

    அக்கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.

    இந்நிலையில், பொதுக் கூட்டத்திற்கான மேடையில் அமைக்கப்பட்டிருந்த மைக் மேஜை அருகே ஆ.ராசா பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் மேடையின் எதிரே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்தது.

    பொதுக்கூட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த ஹாலோஜன் விளக்கு கம்பம் பலத்த காற்றால் சரிந்து விழுந்தது.

    விளக்குத்தூண் விழுவதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஆ.ராசா அங்கிருந்த உடனடியாக விலகி ஓடி உயிர் தப்பினார்.

    மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    • பெங்களூரில் நடைபெற்ற முதல் தென்னிந்திய அளவிலான டென்பின் பவுலிங் போட்டி.
    • முதல் நிலை வீரரான விவேக் சிங் ஆகியோரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள அமோபாவில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை முதல் தென்னிந்திய டென்பின் பவுலிங் போட்டி தொடர் (1st South Zone Tenpin Bowling Tournament) நடைபெற்றது.

    இப்போட்டியில் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் 2வது நிலை வீரரான கர்நாடாகை சேர்ந்த கிஷான்.ஆர், டாப் வீரர் தெலுங்கானாவை சேர்ந்த விவேக் சிங்குடன் மோதினார்.

    இரண்டு கேம்களில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய கிஷான்.ஆர், (கேம் ஒன் 179) பின்களோடு, 159 பின்கள் எடுத்த விவேக்கை விட 20-பின்கள் முன்னிலை பெற்றார்.

    மேலும், 2வது கேமில், விவேக் 189 பின்களும், கிஷான் 174 பின்களும் ஸ்கோர் செய்த நிலையில், ஒட்டுமொத்தமாக 353-348 என்ற பின்களோடு, 5 பின்கள் வித்தியாசத்தில் விவேக்கை வீழ்த்தி கிஷான்.ஆர் சாம்பியன் பட்டம் வென்றார்.

    முன்னதாக ஆண்கள் பிரிவில் நடைபெற்ற ஸ்டெப்லேடர் முதலாவது சுற்றில், 5வது நிலை வீரரான கர்நாடகாவை சேர்ந்த பர்வேஸ் அகமது, (364), 3வது நிலை வீரரான தெலுங்கானாவை சேர்ந்த லலித்குமார் (327) மற்றும் கர்நாடாகவை சேர்ந்த ஈஸ்வர்ராவ் (324) ஆகியோரை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    2வது நிலை வீரரான தெலுங்கானாவை சேர்ந்த நவீன் சித்தம் ((395) 6 வது நிலை வீரரான கர்நாடாகாவின் விஜய் பஞ்சாபி (303) மற்றும் 8 வது நிலை வீரரான ஆந்திரப் பிரதேசின் அப்துல் முசீப் (365) ஆகியோரை வீழ்த்தி அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறினார்.

    3வது நிலை வீரரான கிஷன் ஆர் (394) 4வது நிலை வீரரான நவீன் சித்தம் (340) மற்றும் 5 வது நிலை வீரரான பர்வேஸ் அகமது (366) ஆகியோரை வீழ்த்தி, முதல் நிலை வீரரான விவேக் சிங் ஆகியோரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில், தமிழக வீராங்கனை சனா சலீம் ( கேம் ஒன் 172) 5 பின்கள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பிடித்தார். அவர் கர்நாடக வீராங்கனை ஹிட்டாஷா சிசோடியா (167) மற்றும் மற்றொரு தமிழக வீராங்கனை சபீனா அதிகா (167) ஆகியோரை வீழ்த்தினார்.

    ஹிட்டாஷா தொடர்ச்சியாக நான்கு ஸ்ட்ரைக்குகளை பெற்றார். பின்னர் 199 ஸ்கோர் செய்தார். சபீனா மிகுந்து போராடியும் 185 மட்டுமே ஸ்கோர் செய்தார். சனா சலீம் 147 பின்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து 14 பின்கள் வித்தியாசத்தில் ஹிட்டாஷா (366-352-319) முதல் இடத்தை பிடித்தார்.

    • நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம்.
    • சசிகுமார், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் உடன் என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்.

    சசிகுமார் அடுத்த படமாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1 அன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இலங்கையில் இருந்து வந்த ஒரு குடும்பம் சென்னையில் வசித்து வருகிறது. அவர்களின் குடும்பம் பற்றியும், இவர்களின் குடும்பத்தால் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து இக்கதைக்களம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் இந்த படம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family) என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது.

    அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம்.

    படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும், இரக்கமும், உதவும் குணமும் உள்ளவராய் நடித்துள்ளார்… இல்லை..இல்லை வாழ்ந்தே காட்டியுள்ளார்.

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம்.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்தேன்.

    படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர் சசிகுமார் அவர்களிடமும், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் அவர்களிடமும் அலைபேசியின் வாயிலாக என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றபோது அதில் முழு தேறை இறந்து கிடைந்து இருந்துள்ளது.
    • ஓட்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் கோரிக்கை வைத்தனர்.

    சென்னை பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது நாவலடி என்கிற பிரபல தனியார் ஓட்டல்.

    இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் சாப்பிட்ட உணவில் முழு தேரை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றபோது அதில் முழு தேறை இறந்து கிடைந்து இருந்துள்ளது.

    இதையடுத்து, உணவு சாப்பிட்டவர்கள் நாவலடி ஓட்டல் நிர்வாகத்திடம் தேரை குறித்து கேட்டனர். அப்போது, வாடிக்கையாளருக்கும், ஓட்டலர் நிர்வாகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நாவலடி ஓட்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னையில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்த நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள சந்தோஷ் திரையரங்கின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்துள்ளது.

    இதனால், சினிமா பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு சந்தோஷ் திரையரங்கிற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈவிபி பிலிம் சிட்டி அருகே ஈவிபி திரையரங்கம் அண்மையில் சந்தேஷ் திரையரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்களால் எளிதில் அணுகக்கூடிய - எல்லோருடைய குறைகளையும் காது கொடுத்துக் கேட்டுத் தீர்வு.
    • பொதுமக்கள் இந்தத் திட்டத்தினைச் சிறப்புறப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மக்களின் குறைகளைக் களைந்து ஏற்றத்துக்கு முதற்படியாய் முதல்வரின் முகவரித்துறை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மக்களால் எளிதில் அணுகக்கூடிய - எல்லோருடைய குறைகளையும் காது கொடுத்துக் கேட்டுத் தீர்வுகாணக் கூடிய நமது திராவிட மாடல் அரசில், எனது நேரடிக் கட்டுப்பாட்டில், திருமிகு. அமுதா இ.ஆ.ப., அவர்களது தலைமையில் மக்களின் குறைகளைக் களைந்து - ஏற்றத்துக்கு முதற்படியாய் விளங்குகிறது முதல்வரின் முகவரி துறை!

    பொதுமக்கள் இந்தத் திட்டத்தினைச் சிறப்புறப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி.
    • பாஜகவின் காலடியில் வீழ்ந்து அடிமை சேவகம் செய்யும் பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 தேர்தலோடு முடியப் போவது உறுதி.

    பாஜக கூட்டணியில் இருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    "திமுகதான் காங்கிரஸ் மிரட்டலுக்குப் பணிந்தது. அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது'' எனப் பேசியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

    2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பாஜக-வுக்கு சேவை செய்யவே நேரம் இல்லாத பழனிசாமிக்கு, திமுக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி நினைவுக்கு வரும்?

    தமிழ் செம்மொழி பிரகடனம், மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள், சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம், தாம்பரத்தில் தேசியச் சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு, திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம், கடல்சார் தேசியப் பல்கலைக் கழகம், இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடுகளுக்கு இணையான 3 ஜி தகவல் தொழில் நுட்பத் திட்டம், 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைப்பேசியில் பேசும் வசதி, நெசவாளர் சமுதாயத்தினர் நலனுக்காக சென்வாட் வரி நீக்கம், பொடா சட்டம் ரத்து, எனப் பத்தாண்டுக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பல திட்டங்களை திமுக கொண்டு வந்தது.

    2,427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்பட்டுப் பாதிப் பணிகள் முடிந்த நிலையில் மோடி அரசு கிடப்பில் போட்டது. 1,650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் முடக்கப்பட்ட அந்தத் திட்டத்தை மு.க.ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு புதுவடிவத்தை உருவாக்கி நிறைவேற்ற முயற்சிகள் எடுத்து பணிகள் நடந்து வருகின்றன.

    மன்மோகன் சிங் ஆட்சிக்கு முன்பு வி.பி.சிங் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது கலைஞர் வலியுறுத்தியதால் மண்டல் பரிந்துரை ஏற்கப்பட்டு, மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. காவிரி நதி நீர்ப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரும் உள்நாட்டு முனையத்திற்குக் காமராஜர் பெயரும் சூட்டப்பட்டது.

    பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியில் இருந்து என்ன செய்தார்? எத்தனை திட்டங்களைக் கொண்டு வந்தார்? எனப் பட்டியல் போட முடியுமா? மாறாகத் தமிழ்நாட்டுக்கு துரோகங்களைத்தான் பழனிசாமி செய்தார்.

    ராஜ்பவனில் அடிமைப்பட்டுக் கிடந்தது பழனிசாமி அரசு. ஆளுநர்கள் வித்யாசாகர் ராவ், பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்குச் சேவகம் செய்து, மாநில உரிமையைப் பறிகொடுத்தார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம், நீட் ஆகியவற்றை ஜெயலலிதா தீரத்தோடு எதிர்த்தார். அதனையெல்லாம் பழனிசாமியோ பயத்தோடு ஆதரித்தார். பிரதமர் மோடி ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுகே வந்தார். பழனிசாமி அமித்ஷா வீட்டிலேயே தவம் கிடந்தார்.

    ஒன்றிய அரசின் சென்னை-சேலம் இடையே எட்டு வழிச் சாலைக்காக, வனங்களையும், வயல்களையும் பலி கொடுக்கத் தயாரானார். காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த போதெல்லாம் ஜெயலலிதாவிடம் இருந்து கடுமையாக அறிக்கை வரும். போராட்டம் நடத்துவார். ஆனால், பாஜகவின் பாதம் தாங்கியான பழனிசாமியிடம் இருந்து ஓர் அறிக்கையாவது வந்ததா? அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார்.

    தமிழர்களுக்குத் துணைவேந்தர் ஆகும் தகுதி கிடையாது என்று அவமானப்படுத்தப்படுத்தி, தமிழர்களின் தன்மானம் சீண்டப்பட்ட போது பழனிசாமி எதிர்த்து குரல் கொடுத்தாரா? துணை வேந்தர் நியமனம் தொடர்பாகச் சட்டப் போராட்டம் நடத்தி, இந்தியா முழுமைக்கும் அதிகாரம் பெற்றுத் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போல சூரப்பா விவகாரத்தில் சூரத்தனம் காட்டினாரா பழனிசாமி?

    ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனி ராஜ்ஜியம் நடத்திய போது அன்றை எதிர்க் கட்சியான திமுக போராட்டங்களை நடத்தியது. ஆனால், முதலமைச்சர் பழனிசாமி எதிர்ப்பு காட்டாமல் பல்லிளித்துக் கொண்டிருந்தார். இப்படி எத்தனை எத்தனை துரோகங்கள். தலைவிக்குத் துரோகம் செய்துவிட்டு டெல்லி தலைமைக்குக் கட்டுப்படும் கோழை பழனிசாமி, மிரட்டல் பற்றியெல்லாம் பேச அருகதை இல்லை!

    நீட் தேர்வை அனுமதித்து அப்பாவி ஏழை நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகளின் மருத்துவக் கனவை நாசமாக்கியது, தமிழ்நாட்டிற்குப் பாரபட்சமான நிதிப் பகிர்வு அளிக்கும் GST யை எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டது, குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து முஸ்லிம்களின் முதுகில் குத்தியது, உழவர்களைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்குத் துரோகம் செய்தது, மாநில உரிமைகளைப் பறித்து ஒற்றை ஆட்சியைக் கொண்டு வரத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு, கனிம வளச் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து மதுரை அரிட்டாபட்டியில் சுரங்க ஏலம் விடக் காரணமாக இருந்தது என மோடி அரசுக்குத் துணையாக நின்ற விஷயங்கள் எல்லாம் அதிமுக வரலாற்றின் கருப்பு பக்கங்கள்.

    2019 – 2024 மோடி ஆட்சியில் திமுக கூட்டணி எம்.பி-கள் 9,695 கேள்விகளை ஐந்தாண்டில் மக்களவையில் எழுப்பினார்கள். 1,949 விவாதங்களில் பங்கெடுத்தார்கள். 59 தனிநபர் மசோதாக்களைக் கொண்டு வந்தார்கள். மாநில வாரியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டில் தமிழ்நாட்டு எம்.பி-கள் 5-ஆவது இடத்தில் இருந்தனர். கட்சிகள் வாரியாக கேள்விகள் எழுப்பியதில் திமுக 5வது இடத்தில் இடம் பெற்றது. நாடாளுமன்றத்தில் அதிமுக சாதித்தது என்ன? என பழனிசாமி புள்ளிவிவரம் சொல்லுவாரா?

    நீட் தேர்வைத் திரும்பப் பெறத் தொடர் போராட்டம், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல், காவிரி, மேக தாட்டு பிரச்சினைகளில் தமிழ்நாட்டு உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடியது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் குரல், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்துக்கு எதிர்ப்பு, மூன்று வேளாண்மை சட்டங்களை எதிர்த்தது, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எனத் தமிழ்நாட்டு உரிமைக்காக திமுக தொடர்ந்து போராடி வருகிறது.

    இப்படி எதற்கும் குரல் கொடுக்காத பழனிசாமி, தமிழகத்தின் உரிமைகளுக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் அயராது போராடி வரும் திமுகவை பற்றிப் பேச என்ன திராணி இருக்கிறது? தனது குடும்பத்தைக் காப்பாற்ற மோடி அரசின் அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி.

    ''அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது' என்கிறார் பழனிசாமி. கூட்டணி அறிவிப்பை அமித்ஷா வெளியிட்ட போது பக்கத்தில் பொம்மையாக அமர்ந்திருந்த பழனிசாமி மகிழ்ச்சி பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கை.

    கூட்டணி மகிழ்ச்சி என்றால் பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டியதுதானே! ஏன் செய்யவில்லை? 'பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை' எனப் பேசிய பச்சைப்பொய் பழனிசாமி எந்த வெட்கமும் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பேசும் வீர வசனங்களைக் கோமாளியின் உளரல்களாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்.

    ஒன்றிய பாஜகவின் காலடியில் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து தமிழ்நாட்டைச் சீர்கெடுத்த ஆட்சிதான் அதிமுக பாஜக ஆட்சிகள். இந்தத் துரோகக் கூட்டணிக்குக் கடந்த தேர்தல்களிலேயே தமிழ்நாட்டு மக்கள் தோற்கடித்துத் தக்கப் பதிலடி கொடுத்தனர்.

    வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்த அடிமை அமலாக்க துறை கூட்டணியை மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். சுயநலப் பச்சோந்திகளுக்குத் தமிழ்நாட்டில் என்றுமே இடமில்லை. பாஜகவின் காலடியில் வீழ்ந்து அடிமை சேவகம் செய்யும் பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலோடு முடியப் போவது உறுதி!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
    • 3 கி.மீ தொலைவுக்கு அவர் திறந்த வாகனத்தில் சென்றபடி ரோடு ஷோ நடத்த இருக்கிறார்.

    ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8ம் தேதி திருச்சி வருகிறார். 8,9ம் தேதிகளில் அவர் திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இந்த சுற்றுப்பயணத்தின்போது திருச்சியில் 2 நாட்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி 8ம் தேதி மாலை திருச்சி தில்லைநகர்- தென்னூர் சந்திப்பு சாலையில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை சுமார் 2 கி.மீ தொலைவுக்கு பொதுமக்களை சந்தித்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே செல்கிறார்.

    மறுநாள் 9ம் தேதி காலை, கிராப்பட்டி போலீஸ் பட்டாலியன் மைதானம் அருகில் இருந்து கிராப்பட்டி, எடமலைப் பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் பசுமைப் பூங்கா வரை சுமார் 3 கி.மீ தொலைவுக்கு அவர் திறந்த வாகனத்தில் சென்றபடி ரோடு ஷோ நடத்த இருக்கிறார்.

    இதையொட்டி இந்த பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. பலத்த, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

    • சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியது.
    • காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதுடன் வானம் இருட்டியது.

    இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    மேலும், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்து. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×