என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது.
- அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம்.
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் இருந்து வருகிறார். கௌரவ தலைவராக ஜி.கே. மணி இருந்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கட்சி நிறுவனர் ஆவார்.
கட்சியில் உறவினருக்கு பதவி வழங்கியது தொடர்பாக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அன்புமணி ராமதாஸ்க்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மேடையிலேயே, கட்சியில் இருந்தால் இரு... இல்லையென்றால் வெளியேறு... என டாக்டர் ராமதாஸ் கோபமாக தெரிவித்தார்.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்குவதாக தெரிவித்தார். இதனால் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே கட்சிக் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி கூறுகையில் "மாமல்லபுரத்தில் மே 11ஆம் தேதி நடக்க உள்ள பாமக மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவருமே கலந்து கொள்வார்கள். இரண்டு தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது. அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம்" எனத் தெரிவித்தார்.
- சைவம், வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து பேசியது சர்ச்சையாகியிருந்தது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொன்முடியை துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தோ, அமைச்சர் பதவியில் இருந்தோ நீக்கவில்லை.
பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளுநரை சந்திக்கிறார். அப்போது பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது என்றார்.
- பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தாங்கள் பேசியது தவறு.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.யுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்க உள்ளது. இதனை கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்த போது உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது. இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்றார்.
மேலும், கூட்டத்தில் திருப்பூர் மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் கூறுகையில், நிர்பந்தம் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும் என்று அவர் நாதழுதழுக்க பேசினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகளின் பேச்சுக்கு பா.ஜ.க.வின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
வணக்கம், குணசேகரன் அண்ணா உங்களுக்குத்தான் இந்த பதிவு. எதுவுமே கவலைப்படவேண்டியதில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததில் பிரச்சனை என்று சொல்கிறீர்கள். பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தாங்கள் பேசியது தவறு. குணசேகரன் அண்ணா உங்களை ஒன்றே ஒன்று கேட்கிறேன்.
நீங்கள் 3 முறை வெற்றி பெற்ற வார்டுக்குள் இன்றைக்கு நீங்க எத்தனை வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். 64 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். 484 வாக்கு பா.ஜ.க. வாங்குகிறது. இதுக்கு என்ன சொல்றீங்க? நீங்கள் தோற்றதுக்கும், பேசுறதுக்கும் எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சிக்கிறீர்கள். இது நல்லது இல்லைங்க அண்ணா... நீங்க தோற்றதுக்கு காரணம் பா.ஜ.க.வா? 3 முறை வெற்றி பெற்ற இடத்தில் ஏன் தோற்றீர்கள்? என்ன காரணம்? பா.ஜ.க. இல்லாததால் என்றார்.
- காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
- பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தடுக்க வந்த ஆசிரியரையும் அம்மாணவன் தாக்கியுள்ளதும் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
காயமடைந்த மாணவனும், ஆசிரியரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
தினமொரு கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் சாதிய ரீதியான தாக்குதல் ஆகியவை வரிசை கட்டிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் அலங்கோல ஆட்சியில், பள்ளிச் சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பது பெரும் ஆபத்தானது.
அதுவும், "பென்சில் கேட்ட தகராறில் தாக்குதல் நடந்துள்ளது" எனக் கூறுகிறார் நெல்லை உதவி காவல் ஆணையர். ஆனால், பென்சிலுக்காக பள்ளிக்குள் அரிவாளை மறைத்து எடுத்துச் சென்று உடன் படிக்கும் மாணவனைத் தாக்குமளவிற்கு நமது பிள்ளைகளின் மனதில் வன்முறை வேர் படர்ந்துள்ளதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் வலுக்கிறது.
எனவே, இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய்ந்து அதற்கு தக்க நடவடிக்கைகள் எடுப்பதோடு, இனியும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமலிருக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
- விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
- காவல்துறைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.
விருதுநகர்:
கோவை செல்வபுரம் பகுதியில் கட்டப்பஞ்சாயத்து ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தலைமையில் அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டதுடன், அவரை சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் பரவியது.
இந்தநிலையில் அதே நாளில் வரிச்சியூர் செல்வம் மதுரையில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களை அழைத்து பேட்டி அளித்தார். அப்போது அவர் தான் திருந்தி வாழ்ந்து வருவதாகவும், எந்த பிரச்சனைக்கும் செல்வதில்லை என்றும், கோவைக்கு சென்று 13 வருடங்கள் ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் விருதுநகர் கோர்ட்டில் இன்று வழக்கு தொடர்பாக அவர் ஆஜரானார்.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 32). இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்து வந்தார். பின்னர் அவரிடம் இருந்து விலகினார். கடந்த 2021-ம் ஆண்டு திடீரென செந்தில் குமார் காணாமல் போனார். இதுகுறித்து அவரது மனைவி விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், செந்தில் குமார் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ரவுடி வரிச்சியூர் செல்வம் மீது விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, விருதுநகர் கோர்ட்டில் வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். அதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இம்மாதம் 30-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அய்யப்பன் உத்தரவிட்டார்.
இதன்பின்னர், ரவுடி வரிச்சியூர் செல்வம் அளித்த பேட்டியில், விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான முதல் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் இன்று ஆஜரானேன். இதுவரை அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் நீதிமன்றத்தில் நான் தவறாமல் ஆஜராகி வருகிறேன். என் மீது உள்ள வழக்குகள் அனைத்தையும் முடித்து விட்டு நிம்மதியாக வாழ நான் ஆசைப்படுகிறேன்.
என்னை சுட்டு பிடிக்க போலீசார் உத்தரவிட்டதாக வெளியான தகவல் வீண் வதந்தி. காவல்துறை இது போன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக நானும் எதுவும் செய்யவில்லை. நான் எனது அன்றாட பணிகளை செய்து வருகிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. எனக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் கிடையாது. காவல்துறைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். வழக்குகளை முடித்து விட்டால் நான் எனது பணிகளை தொடர்ந்து பார்ப்பேன் என்று கூறினார்.
- தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
- மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ் மேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல.
இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, கடந்து போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்கான அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரின் மனநிலை வெறுப்படைந்திருக்கிறது என்றால், அது மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அதிகரித்து வரும் சீரழிவையே காட்டுகிறது. இந்தப் போக்கு சரி செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது.
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுவது தான் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகும். இதை மனதில் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்; விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மாநில சுயாட்சி தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது கருத்து சொல்லாமல் சென்றது வருத்தம்.
- நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மாநில சுயாட்சி தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது கருத்து சொல்லாமல் சென்றது வருத்தம்.
* அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆர், அவ்வியக்கத்தை வழிநடத்திய ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி என்னதான் தி.மு.க.விற்கும், அவர்களுக்கும் மாற்று கருத்து, மாறுபாடு, வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டு தரமுடியாது என்கிற நிலைமையில் இருந்து பல கோரிக்கைகளை ஆதரித்து இருக்கிறார்கள்.
* ஆனால் இன்றைக்கு என்ன சூழ்நிலை என்று புரியலை. ஆனா அது நமக்கு புரியும். பேசும்போது சொல்வார்கள் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்வார்கள். அதைத்தான் சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்.
* இதுதான் கொள்கையா? அந்த கேள்வியைத்தான் கேட்க வேண்டி இருக்கிறது.
* எனவே தமிழ்நாட்டினுடைய நன்மையை கருதி, அதன் உரிமையை கருதி, நமக்கு இருக்கக்கூடிய சுயாட்சியை கருதி நான் அவர்களுக்கு வைக்கக்கூடிய கோரிக்கை, தமிழ்நாட்டு உரிமைகள் என்று வருகிறதோ அந்த நிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் அந்த பணியை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அனைவருக்கும் நன்றி கூறி அமர்கிறேன். நன்றி. வணக்கம்.
- தனி நாடு கோருவது போல தி.மு.க. பிரிவினைவாதம் பேசி கொண்டிருக்கிறது.
- தேர்தலுக்காக இது போன்று மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள்.
சென்னை:
சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மாநிலங்களுக்கான அதிகாரம் பற்றிய 110-வது விதி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது. பா.ஜ.க. சட்டசபை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் வெளிநடப்பு செய்தார்கள்.
பின்னர் பேட்டி அளித்த நயினார் நாகேந்திரன் கூறும்போது, "தனி நாடு கோருவது போல தி.மு.க. பிரிவினைவாதம் பேசி கொண்டிருக்கிறது. தேர்தலுக்காக இது போன்று மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இனியும் அது போன்று தான் செய்வார்கள். இதனால் தி.மு.க. இனி ஆட்சிக்கு வர முடியாது" என்றார்.
பின்னர் அவரிடம், நீங்கள் மாநில தலைவராகி இருப்பதால் பா.ஜ.க. சட்டசபை தலைவராக வேறு ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், ஒருவரிடம் பதவிகள் இல்லாமல் பிரித்து கொடுக்கப்பட்டால் நல்லது தானே" என்றார்.
- வருகிற 20-ந்தேதி வைகோ தலைமையில் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
- வைகோவிடம் இருந்து என்னை பிரிக்கும் ஆற்றல் மரணத்துக்கு மட்டுமே உண்டு என்று தனது அரசியல் பயணத்தை பற்றி நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார்.
சென்னை:
ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோ எம்.பி.க்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தொகுதியில் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வருகிற 20-ந்தேதி வைகோ தலைமையில் நடைபெறும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையில் மேலும் சில மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். கழக கட்டுப்பாட்டுக்கு எதிராக மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்று எச்சரித்து உள்ளார். இந்த விவகாரத்துக்கு நிர்வாகக் குழுவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.
அதேநேரம் மல்லை சத்யா தனது முகநூல் பக்கத்தில் எனது பாரம்பரியம் என்பது வைகோ பாரம்பரியம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன். நம்பி கெட்டான் சத்யா என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தான் மல்லை சத்யா என்று ஒருபோதும் வரக்கூடாது என்ற உறுதியோடு ம.தி.மு.க.வில் பயணிக்கிறேன்.
வைகோவிடம் இருந்து என்னை பிரிக்கும் ஆற்றல் மரணத்துக்கு மட்டுமே உண்டு என்று தனது அரசியல் பயணத்தை பற்றி நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார். இந்த சிக்கலுக்கு 20-ந்தேதி வைகோ எப்படி தீர்வு காணப்போகிறார் என்பதே ம.தி.மு.க.வினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- கிணற்றில் நீச்சல் பழகி குளிக்கச் செல்வதாக கூறிச் சென்றான்.
- நீண்ட போராட்டத்துக்கு பிறகு நவீன்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமக்காபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68). இவருக்கு நதீஸ்வரி, வைத்தீஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நதீஸ்வரிக்கும், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் நெல்லூரைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்து கொடுத்து அவர்களுக்கு நவீன்குமார் (14), நவீனா (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
நதீஸ்வரியின் கணவர் இறந்து விட்டதால் அவர் தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று நவீன்குமார் அருகில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கிணற்றில் நீச்சல் பழகி குளிக்கச் செல்வதாக கூறிச் சென்றான்.
அய்யாத்துரை என்பவரது தோட்டத்து கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரென நீரில் நவீன்குமார் மூழ்கினார். உடன் சென்ற ஜோதி சிவா மற்றும் கவியரசன் ஆகியோர் அவனை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோரிடம் சிறுவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு புகார் தெரிவித்து கிணற்றில் நவீன்குமாரை தேடினர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு நவீன்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமி, மாணவரின் பொறுப்பற்ற காதலை ஏற்கவில்லை.
- பெற்றோருக்கு மகனின் தற்கொலை பேரிடியாக விழுந்துள்ளது.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்த தெய்வதானம் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாண வர். இவர் சத்திரக்குடி அருகேயுள்ள வளநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவரது பெற்றோர் கூலி வேலைக்குச் சென்று வருகிறார்கள்.
தாங்கள் படிக்காவிட்டா லும், மகனை படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசையுடன் பெற்றோர் இருந்தனர். அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கு மகனை நல்லமுறையில் தயார் செய்து வரும் வகையில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்திற்கு வரவேண்டும் என்று கூறி அவ்வப்போது ஊக்கப்படுத்தி வந்தனர்.
இதற்காக அந்த மாணவர் கடுமையாக படித்து வந்தார். பெற்றோர் பகலில் வேலைக்கு சென்றாலும் மாலையில் வீடு திரும்பியதும் மகனுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்தனர்.
அந்த வகையில் இன்று இறுதியாக சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. இதற்கிடையே அந்த மாணவரின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக பெற்றோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.
அவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் இருப்பதையும் பெற்றோர் உணர்ந்தனர். காரணம் கேட்டபோது, எதுவும் இல்லை என்று மாணவர் மறுத்துவந்துள்ளார்.
இருந்தபோதிலும் மகனை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது அவர் ஒரு சிறுமியுடன் பழகி வந்ததை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அக்கம்பக்கத்தினரும் இதனை ஏற்கனவே அறிந்து மாணவரின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். முதலில் அதனை நம்ப மறுத்த பெற்றோர், நேரடியாக பார்த்துவிட்டதால் மகனின் செயலை எண்ணி வருந்தினர்.
தற்போது அரசு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கடுமையாக கண்டித்தால் மகனின் படிப்பை பாதித்துவிடும் என்று எண்ணி, பக்குவமாக அறிவுரை கூறினர். இது விளையாட்டுத்தனமாக வயது, தற்போதே காதல், திருமணம், வாழ்க்கை என்பதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
ஆனாலும் மாணவர் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதற்கிடையே அந்த சிறுமி, இந்த மாணவரின் பொறுப்பற்ற காதலை ஏற்கவில்லை. மாறாக மாணவர் மட்டும் அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
மகனின் செயல்பாடுகள் எல்லை மீறி போனதால் நேற்று பெற்றோர் அவரை கடுமையாக கண்டித்தனர். ஒழுங்காக படித்து இன்று நடைபெறும் இறுதித் தேர்வை எழுதவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று இரவு பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட மாணவர், இன்று நடக்கும் சமூக அறிவியல் தேர்வுக்கு படிக்க இருப்பதாக கூறி, வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
மகன் படிக்கத்தான் செய்கிறார் என்ற எண்ணத்துடன் பெற்றோர் அயர்ந்து தூங்கிவிட்டனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் மாணவர் இருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.
நீண்ட நேரம் படித்த களைப்பில் தூங்கியிருப்பான் என்று நினைத்து, பெற்றோர் கதவை தட்டினர். பலத்த சத்தம்போட்டும் எழுப்பினர். ஆனாலும் கதவை திறக்காததால் பதட்டம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாணவர் தாயின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தொங்கினார். மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.
உடனடியாக அவரை மீட்டு சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறித்துடித்தனர்.
பின்னர் இதுபற்றி அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சத்திரக்குடி போலீசார் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வளர்ந்து ஆளாகி தன்னை காப்பாற்றுவார் என்ற கனவில் இருந்த பெற்றோருக்கு மகனின் தற்கொலை பேரிடியாக விழுந்துள்ளது. இறுதித் தேர்வை எழுத வேண்டியவர் இறுதி ஊர்வலமாக புறப்பட்டுள்ளார். 10-ம் வகுப்பு படிக்கும் வயதில் ஒருதலைக்காதலில் விழுந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.
- சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
திருச்சி:
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51). உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனா தா.பேட்டையில் செயல்படும் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு நிரஞ்சனாவின் தந்தை முரளி மாரடைப்பு காரணமாக இறந்து போனார். இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி நிரஞ்சனா தனது தந்தையின் இழப்பை மனதளவில் ஏற்று கொண்டு தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வந்தார்.
சமூகஅறிவியல் தேர்வு எழுதுவதற்காக மாணவி தனது உறவினருடன் விழி நிறைய கண்ணீருடன் மனதில் சோகத்தை சுமந்து கொண்டு வந்த மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.
மாணவி நிரஞ்சனாவிற்கு பள்ளி ஆசிரியர்களும், தேர்வு மைய மேற்பார்வையாளர் சிவானந்தம் ஆகியோரும் ஆறுதல் கூறி தேர்வை நல்ல முறையில் எழுதுமாறு ஆலோசனை வழங்கினர்.
தந்தையின் உடலுக்கு உறவினர்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மாணவி தந்தையை இழந்த துயரத்துடன் தேர்வு எழுதியது ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.






