என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒருதலைக்காதலால் 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை: இறுதித்தேர்வை எழுத வேண்டியவர் இறுதி ஊர்வலம்
- சிறுமி, மாணவரின் பொறுப்பற்ற காதலை ஏற்கவில்லை.
- பெற்றோருக்கு மகனின் தற்கொலை பேரிடியாக விழுந்துள்ளது.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்த தெய்வதானம் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாண வர். இவர் சத்திரக்குடி அருகேயுள்ள வளநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவரது பெற்றோர் கூலி வேலைக்குச் சென்று வருகிறார்கள்.
தாங்கள் படிக்காவிட்டா லும், மகனை படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசையுடன் பெற்றோர் இருந்தனர். அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கு மகனை நல்லமுறையில் தயார் செய்து வரும் வகையில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்திற்கு வரவேண்டும் என்று கூறி அவ்வப்போது ஊக்கப்படுத்தி வந்தனர்.
இதற்காக அந்த மாணவர் கடுமையாக படித்து வந்தார். பெற்றோர் பகலில் வேலைக்கு சென்றாலும் மாலையில் வீடு திரும்பியதும் மகனுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்தனர்.
அந்த வகையில் இன்று இறுதியாக சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. இதற்கிடையே அந்த மாணவரின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக பெற்றோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.
அவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் இருப்பதையும் பெற்றோர் உணர்ந்தனர். காரணம் கேட்டபோது, எதுவும் இல்லை என்று மாணவர் மறுத்துவந்துள்ளார்.
இருந்தபோதிலும் மகனை அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது அவர் ஒரு சிறுமியுடன் பழகி வந்ததை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அக்கம்பக்கத்தினரும் இதனை ஏற்கனவே அறிந்து மாணவரின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். முதலில் அதனை நம்ப மறுத்த பெற்றோர், நேரடியாக பார்த்துவிட்டதால் மகனின் செயலை எண்ணி வருந்தினர்.
தற்போது அரசு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் கடுமையாக கண்டித்தால் மகனின் படிப்பை பாதித்துவிடும் என்று எண்ணி, பக்குவமாக அறிவுரை கூறினர். இது விளையாட்டுத்தனமாக வயது, தற்போதே காதல், திருமணம், வாழ்க்கை என்பதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
ஆனாலும் மாணவர் அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதற்கிடையே அந்த சிறுமி, இந்த மாணவரின் பொறுப்பற்ற காதலை ஏற்கவில்லை. மாறாக மாணவர் மட்டும் அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
மகனின் செயல்பாடுகள் எல்லை மீறி போனதால் நேற்று பெற்றோர் அவரை கடுமையாக கண்டித்தனர். ஒழுங்காக படித்து இன்று நடைபெறும் இறுதித் தேர்வை எழுதவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று இரவு பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட மாணவர், இன்று நடக்கும் சமூக அறிவியல் தேர்வுக்கு படிக்க இருப்பதாக கூறி, வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
மகன் படிக்கத்தான் செய்கிறார் என்ற எண்ணத்துடன் பெற்றோர் அயர்ந்து தூங்கிவிட்டனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் மாணவர் இருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.
நீண்ட நேரம் படித்த களைப்பில் தூங்கியிருப்பான் என்று நினைத்து, பெற்றோர் கதவை தட்டினர். பலத்த சத்தம்போட்டும் எழுப்பினர். ஆனாலும் கதவை திறக்காததால் பதட்டம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாணவர் தாயின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் தொங்கினார். மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.
உடனடியாக அவரை மீட்டு சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மகனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறித்துடித்தனர்.
பின்னர் இதுபற்றி அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சத்திரக்குடி போலீசார் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வளர்ந்து ஆளாகி தன்னை காப்பாற்றுவார் என்ற கனவில் இருந்த பெற்றோருக்கு மகனின் தற்கொலை பேரிடியாக விழுந்துள்ளது. இறுதித் தேர்வை எழுத வேண்டியவர் இறுதி ஊர்வலமாக புறப்பட்டுள்ளார். 10-ம் வகுப்பு படிக்கும் வயதில் ஒருதலைக்காதலில் விழுந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






