என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடுமையான போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பது தமிழக அரசின் கைககளில் தான் உள்ளது.
- எப்போதும் போல் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
திண்டிவனம்:
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்காவிடில் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். கடுமையான போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பது தமிழக அரசின் கைககளில் தான் உள்ளது என்று வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இதையடுத்து, தைலாபுரம் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பா.ம.க. தொடர்பாக வதந்தி பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், வதந்தி வேண்டாம். எப்போதும் போல் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்றார்.
- மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
- இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
சென்னை:
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
முதலமைச்சர் தலைமையில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் வருவாய்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நீலகிரி, கோவை, தேனி, குமரி மாவட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
கடலோர மாவட்டங்களில் அதீத கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பருவமழையால் நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
- தொடர் மழையினால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 395 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
நேற்று வழக்கம்போல் பகலில் வெயில் அடித்தது. பின்னர் மாலை இடி மின்னலுடன் கூடிய மழை தொடங்கியது.
தொடர்ந்து இரவு 8 மணி அளவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அதன் பின்னர் அதிகாலை 3 மணி வரை சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.
இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
இதேபோன்று புறநகர் பகுதிகளான லால்குடி சமயபுரம் மணப்பாறை மருங்காபுரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக இரவு வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. தொடர் மழையினால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1060.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பகுதி வாரியாக மழை அளவு விபரம் வருமாறு;-
கல்லக்குடி 107.4, லால்குடி 30.4, நந்தியாறு அணைக்கட்டு 67.4, புள்ளம்பாடி 116, தேவி மங்கலம் 20.2 சமயபுரம் 36.4, சிறுகுடி 40, வாத்தலை அணைக்கட்டு 11.8, மணப்பாறை 24.4, பொன்னணியாறு அணை 4, கோவில்பட்டி 52.4, மருங்காபுரி 43.4 முசிறி 15, புலிவலம் 8, தாப்பேட்டை 20, நவலூர் கொட்டப்பட்டு 31, துவாக்குடி 14, கொப்பம்பட்டி 27, தென்பர நாடு 40, துறையூர் 52, பொன்மலை 77.2, திருச்சி ஏர்போர்ட் 96.6, திருச்சி ஜங்ஷன் 66, திருச்சி டவுன் 60.
- நெருப்பு இல்லாமல் புகையாது. அதுபோல் தான் டாஸ்மாக்கில் புகார்கள் இருப்பதால் தான் சோதனை நடைபெறுகிறது.
- ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர்.
மதுரை:
மதுரை தனியார் மருத்து வக்கல்லூரி விடுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தபின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் பாதுகாப்புக்காக போராடிய ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும் பிரதமரை பாராட்டும் விதமாகவும் மூவர்ணக்கொடி யாத்திரை தமிழக முழுவதும் நடை பெற்று வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து டாஸ்மாக் அலுவலர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. அது ஒரு தனிப்பட்ட அமைப்பு.
அமலாக்கத்துறை சோதனைக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அது ஒரு சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. நெருப்பு இல்லாமல் புகையாது. அதுபோல் தான் டாஸ்மாக்கில் புகார்கள் இருப்பதால் தான் சோதனை நடைபெறுகிறது. தமிழக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை குறித்து எனக்கு முழுமையாக தெரியாது.
த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க. கூட்டணியில் பங்கு பெற விருப்பமில்லை எனக்கூறியது அவருடைய சொந்த விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஓரணியாக இணைந்தால் எளிதாக இருக்கும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அப்போது பா.ஜ.க. கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
2026-ல் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் கூறி உள்ளார். அவர் கருத்து சொல்வதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் அதை தீர்மானிக்கக்கூடிய சக்தி மக்களிடம் தான் உள்ளது.
நம் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை பற்றி யாரும் குறை சொல்லி பேசக்கூடாது. ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார். அதில் எதுவும் சந்தேகமில்லை. அவர் கூட்டணியில் இருப்பதால் அமித்ஷா சென்னைக்கு வந்தபோது சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர். அதில் எதுவும் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தன்னைப் போன்றே "20 வயதுள்ள 20 பெண்கள்" தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
- நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்!
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக "சார்"களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த வழக்கில் FIR பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சு. இரவி அவர்களிடம் மாணவி முறையிட்ட பிறகே FIR பதிந்துள்ளது.
மேலும், தன்னைப் போன்றே "20 வயதுள்ள 20 பெண்கள்" தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
"பொள்ளாச்சி பொள்ளாச்சி" என்று மேடைதோறும் கூவிய மு.க.ஸ்டாலின் அவர்களே- "உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தானே?
பொள்ளாச்சி வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக CBI-க்கு மாற்றினேன்; நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்!
பாதிக்கப்பட்ட பெண் தெளிவாக "உங்கள் நண்பர் பெற்றெடுத்த பிள்ளை" அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட திமுக-வினர் பெயரைச் சொல்லி, தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார். குறிப்பாக, அமைச்சர் அன்பில் மகேஷின் உதவியாளர் உமா மகேஸ்வரன் என்பவருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி கூறுகிறார். பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன்.
தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!
20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது இந்த "டம்மி அப்பா" அரசு நடவடிக்கை எடுக்குமா?
எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் அ.தி.மு.க. மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்!
#யார்_அந்த_தம்பி
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- மதுரையில் கடந்த 2 நாட்களாக சாரல் மற்றும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கடந்த 14-ந்தேதி அகோர முகத்துடன் தொடங்கியது. வடமாநிலங்களை மிஞ்சும் வகையில் கோடையின் தாக்கம் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு தகித்தது. வழக்கமாக வேலூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பதிவாகும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மதுரையில் பதிவானது.
குறிப்பாக மதுரை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 106 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியது. பகல் நேரங்களில் சாலைகளில் தோன்று கானல் நீரானது மக்களை அச்சப்பட வைத்தது. முதியோர்கள், குழந்தைகளை பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று கூறுமளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
கொளுத்தும் வெயிலுடன் அனல் காற்றும் வீசியதால் தேசிய நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. அக்னி நட்சத்திர வெயில் காலத்தை கடந்து செல்ல வசதி படைத்த பொதுமக்கள் கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்தனர். நடுத்தர வர்க்கத்தினர் அருகிலுள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று ஆறுதல் படுத்திக்கொண்டனர். இளநீர், தர்பூசணி, பதநீர் உள்ளிட்டவைகளின் விற்பனையும் கணிசமாக உயர்ந்தது.
இந்தநிலையில் எதிர்பாராத வகையில் தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டில் முன்கூட்டியே தொடங்கி அக்னி நட்சத்திர வெயிலை விரட்டியடித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் இன்று வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மற்றும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை முதலே மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதுடன் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
நேற்று மாலை முதல் மதுரை மாநகர் பகுதியான கோரிப்பாளையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், தத்தனேரி, அண்ணா பேருந்து நிலையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான மேலூர், வாடிப்பட்டி, சோழவந்தான், நாகமலை புதுக்கோட்டை, சிலைமான், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த கனமழையால் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் மழை நீர் சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையே மாநகரின் பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக மூடப்படாததால் அங்கு மழை நீர் நிரம்பி குளம்போல் காணப்படுகிறது. வாகன ஒட்டிகள் சாலைகளை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும் சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது. புதிதாக அந்த சாலைகளை கடந்து செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துகளில் சிக்கி காயங்களுடன் எழுந்து செல்கிறார்கள்.
மதுரை யானைக்கல் பாலத்தின் கீழ் வைகையாற்றின் கரையோர பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. சாலையில் நடுவில் செல்வதை தவிர்த்த வாகன ஓட்டிகள் சாலையோரமாக தடுமாற்றத்துடன் சென்றனர்.
- சில இடங்களில் கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசியது.
- வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.
கோவை:
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
நேற்று காலை கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகலில் வானிலை அப்படியே மாறியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது.
காந்திபுரம், உக்கடம், ரெயில் நிலையம், பீளமேடு, சரவணம்பட்டி, கணபதி, ராமநாதபுரம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. சில இடங்களில் கனமழையுடன் சூறாவளி காற்றும் வீசியது.
அரை மணி நேரத்திற்கும் மேலாக விடாது பெய்த பலத்த மழையால் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளான அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனி, முருகன் நகர், ஆர்.கே.எம்.சி. காலனி, பட்டாளம்மன் கோவில் வீதி, எல்லைத் தோட்டம் 4-வது வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதேபோல் ஆர்.எஸ்.புரம் 73-வது வார்டு பி.எம்.சாமி காலனி 2-வது வீதியில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.
இதேபோல் குட்ஷெட் சாலை உள்பட நகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.
மழை காரணமாக கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதிலும், இறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
ஐதராபாத், மும்பையில் இருந்து கோவைக்கு வந்த 2 விமானங்கள் தரையிறங்க முடியாமல் 20 நிமிடம் வானிலேயே வட்டமடித்தது. மழை ஓய்ந்த பின்னரே 2 விமானங்களும் தரையிறங்கின. இதேபோல் கோவையில் இருந்து மும்பைக்கு பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இந்த மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக விமான நிலைய பகுதியில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-
விமான நிலையம்-74, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-47, சின்னக்கல்லார்-42, கோவை தெற்கு தாலுகா-36, வால்பாறை பி.ஏ.பி.-31, வால்பாறை தாலுகா-29, சோலையார் மற்றும் தொண்டாமுத்தூர் பி டபிள்யூ அலுவலகம்-16 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
- மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 10 மணியளவில் தொடங்கிய மழை அதிகாலை 3 மணி வரை சுமார் 5 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இடைவிடாது பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் சிற்றோடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏரிகளுக்கும் தண்ணீர் வர தொடங்கி உள்ளது.
இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஆத்தூர், தம்மம்பட்டி, கரியகோவில், எடப்பாடி, ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவில் கன மழையாக கொட்டியது. தொடர்ந்து இன்று காலை வரை சாரல் மழையாக பெய்து வருகிறது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் அங்கு தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 1 மணி வரை சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் மாநகரில் நெத்திமேடு, அன்னதானப்பட்டி, லைன்மேடு, அம்மாப்பேட்டை ஜோதி தியேட்டர், கிச்சிப்பாளையம் நாராயண நகர், சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
சேலம் மாநகர் மற்றும் புறநகரில் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 100.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 39.4, ஏற்காடு 30, வாழப்பாடி 16.6, ஆனைமடுவு 58, ஆத்தூர் 46, கெங்கவல்லி 29, தம்மம்பட்டி 55, ஏத்தாப்பூர் 20, கரியகோவில் 40, வீரகனூர் 29, நத்தக்கரை 27, சங்ககிரி 4.3, எடப்பாடி 30.6, ஓமலூர் 18, டேனீஸ்பேட்டை 23 மி.மீ. மழையும் மாவட்டம் முழுவதும் 566.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சந்திரசேகரபுரம், குருசாமிபாளையம், புதுப்பட்டி, வடுகம், காக்காவேரி, முத்துக்காளிப்பட்டி, ஆண்டகளூர் கேட், மங்களபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து கன மழையாக கொட்டியது. இந்த தொடர் மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. மழையை தொடர்ந்து அந்த பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை நிலவி வருகிறது.
கனமழை காரணமாக வயல்களிலும் பள்ளமான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராசிபுரம் நகரில் உள்ள சாக்கடை கால்வாய்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகள் உள்பட எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
நாமக்கல் நகர பகுதியில் நேற்று மாலை தொடங்கிய மழை அதிகாலை வரை கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சேலம் சாலை, பரமத்தி சாலை, திருச்செங்கோடு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் தவித்தனர்.
எருமப்பட்டியில் 60 மி.மீ., குமாரபாளையம் 34.2, மங்களபுரம் 18.4, மோகனூர் 29, நாமக்கல் 118, பரமத்தி 7, புதுச்சத்திரம் 82, சேந்தமங்கலம் 51, திருச்செங்கோடு 10, கலெக்டர் அலுவலகம் 39.2, கொல்லி மலை 56 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 624.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த வார இறுதியில் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,720-க்கும் ஒரு சவரன் ரூ.69,760-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
17-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
16-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
15-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,880
14-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
18-05-2025- ஒரு கிராம் ரூ.108
17-05-2025- ஒரு கிராம் ரூ.108
16-05-2025- ஒரு கிராம் ரூ.108
15-05-2025- ஒரு கிராம் ரூ.108
14-05-2025- ஒரு கிராம் ரூ.109
- கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி கடந்த 1-ந்தேதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சிறப்பு குழுக்கள் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் தொடர்பு பதிவுகள், தோட்டங்களில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கூலி ஆட்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களின் நடமாட்டங்கள், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டு சிறை சென்று சமீபத்தில் வெளியில் வந்த நபர்கள், மாநிலம் முழுவதும் இது போன்று ஆதாய கொலைகளில் சம்மந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரித்தனர்.
கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வந்தது. சிவகிரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடைய அரச்சலூரை சேர்ந்த பழங்குற்றவாளி ஆச்சியப்பன் (வயது 48) என்பவர் கொலை நடந்த அன்று அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து ஆச்சியப்பனை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரை தனியாக விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சிவகிரி தம்பதி கொலையில் ஆச்சியப்பன் உள்பட 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆச்சியப்பன் கொடுத்த தகவலின் பெயரில் அரச்சலூரை சேர்ந்த மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
பின்னர் போலீசார் 3 பேரையும் கடத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஐ.ஜி. செந்தில்குமார், டி.ஐ.ஜி. சசிமோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, தனிப்படை போலீசார் நேற்று ஒரு நாள் முழுவதும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
தென்னை மரம் ஏறும் தொழிலாளிகளான இவர்கள் மூவர் மீதும் சென்னிமலை, வெள்ளோடு, அரச்சலூர், கொடுமுடி உட்பட போலீஸ் நிலையங்களில் 19-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் தோட்டத்து வீட்டில் தனியாக இருக்கும் வயதான தம்பதிகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று முதலில் தேங்காய் பறிப்பது போல் நோட்டமிட்டு அவர்களிடம் பேசி வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு தங்களது திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இதேபோன்று தான் சம்பவத்தன்று தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த ராமசாமி-பாக்கியம்மாள் ஆகியோரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
மேலும் சிறு கத்திகளை கொண்டு காது, கைகளை வெட்டி நகைகளை திருடி சென்றுள்ளனர். மேகரையான் தோட்டத்தில் மண்வெட்டி கத்திகளை வீசி சென்றதாக அவர்கள் தெரிவித்த தகவலின் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த கொலை வழக்கில் 4-வது நபராக நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோர் கொள்ளையடிக்கும் நகைகளை ஞானசேகரன் கடையில் விற்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதனை அடுத்து நகைக்கடை உரிமையாளரான ஞானசேகரனையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 4 பேர் இன்று காலை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக வந்த நிலையில் இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- இந்தியாவில் எல்லா இடைத்தேர்தலிலும் புறக்கணிக்காமல் போட்டியிட்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.
- எந்த கட்சியோடும் சேராமல் தனித்து நின்று மாநில அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.
கோவை:
நாம் தமிழர் கட்சியினர் ஆண்டு தோறும் மே 18-ந் தேதி தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் கோவை கொடிசியாவில் நேற்று நடைபெற்றது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மனோரஞ்சன் பியாபாரி எம்.எல்.ஏ., எழுத்தாளர் ஜக்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சீமான் பேசும்போது கூறியதாவது:-
மே 18 துயரம் தோய்ந்த இனப்படுகொலை நாள். தமிழர் என்ற உணர்வை இழந்ததால் சொந்த மண்ணிலேயே தாய் நிலத்திலேயே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க, ஒழிக என்று கோஷம் போடாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.
எந்த மொழியின் துணையுமின்றியும் தனித்து இயங்கும் ஒரே மொழி தமிழ் தான். அந்த மொழி இன்று அழிந்து வருகிறது. மொழி சிதைந்து அழிந்தால், இனம் அழியும். தமிழுக்கும், தமிழனுக்கும் இறுதி வரை உறுதியாக நின்று போராடுபவனே தமிழன்.
தமிழ்நாட்டில் இருந்து கடைசியாக பிரபாகரனை சந்தித்தது நான் தான். எங்கள் இருவருக்கும் இடையே என்ன நடந்தது? என்ன பேசினோம் என்பது எங்கள் இருவருக்கும் தான் தெரியும்.
தமிழ்நாட்டிற்குள் 1½ கோடி வட இந்தியர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் இங்கு வந்து குடும்ப அட்டை, வாக்குரிமை பெறுகிறார்கள். இது பேராபத்தை உருவாக்கும்.
கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த வாக்கு வட இந்தியர்களின் வாக்கு தான். இப்படியே விட்டால், அவர்கள் நமது அரசியலை தீர்மானிப்பார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு நாம் 1.1 சதவீதம் ஓட்டுகளை பெற்றோம். படிப்படியாக வளர்ந்து 2024-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 36 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளோம். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும். எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். கூட்டணி அமைக்காததால் எங்கள் கட்சி தொண்டர்கள் சோர்வு அடைந்து விட மாட்டார்கள்.
இந்தியாவில் எல்லா இடைத்தேர்தலிலும் புறக்கணிக்காமல் போட்டியிட்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. தோல்வி என்பது தோல்வியல்ல, பயிற்சி. எந்த கட்சியோடும் சேராமல் தனித்து நின்று மாநில அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.
ஆள் மாற்றம், ஆட்சி மாற்றத்திற்காக வந்த அரசியல்வாதிகள் அல்ல நாங்கள். அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக வந்த புரட்சியாளர்கள். தீய ஆட்சி முறையை ஒழித்து, தூய ஆட்சி முறையை உருவாக்கும் லட்சிய கோட்பாடு கொண்டது நாம் தமிழர் கட்சி.
2026-ம் ஆண்டு தேர்தலுக்கு விவசாயி சின்னம் மீண்டும் கிடைத்துள்ளது. எனது எண்ணம் மட்டும் இந்த சின்னம் அல்ல. சின்னமே நான் தான். 2026-ம் ஆண்டு தேர்தலில் 117 இடங்கள் பெண்களுக்கும், 117 இடங்கள் ஆண்களுக்கும் ஒதுக்கப்படும். இதில் 134 இடங்கள் இளைஞர்களுக்கு கொடுக்கப்படும். இலங்கை இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக்கூட்ட மேடையில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், காமராஜர், கக்கன் உள்ளிட்ட பல தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.






