என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்.
- அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.
சென்னை:
அரசு ஊழியர்கள் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு போன்றவற்றிற்கு பெரும் தொகையைச் செலவழிப்பதைத் தவிர்த்து காப்பீடுகளை கட்டணமின்றிப் பெறும் வகையில் செய்திட அரசு உத்தேசித்ததன் அடிப்படையில் முன்னோடி வங்கிகளிடம் இதுகுறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக பல சலுகைகளை வங்கிகள் தர முன்வந்துள்ளன.
மேலும், இதுகுறித்து நிதி அமைச்சர் தற்போது நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினை வழங்க வேண்டும்.
விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம், இரண்டு மகள்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும், விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக்கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர் கல்வி பயின்றிடும் மகளின் உயர்கல்விக்கான உதவித் தொகையாக 10 லட்சம் ரூபாய் வரையும், அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்.
இச்சலுகைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் அரசு ஊழியர்கள் தங்களது ஊதியக்கணக்கினைப் பராமரித்து வரும் பட்சத்தில் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கிட முன்வந்துள்ளன. மேலும், இச்சலுகைகள் மட்டுமின்றி தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.
இந்த சலுகைகளை வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், அரசு சார்பில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடப்பட்டன.
இந்நிகழ்வில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளர் (செலவுகள்) எஸ்.நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் தி.சாருஸ்ரீ, வங்கிகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
தமிழகத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.82 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விடகுறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை விரைவில் 109 அடியை எட்டும் தருவாயில் உள்ளது.
- மீட்கப்பட்ட 5 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளையை சேர்ந்தவர் மோசஸ் (வயது 50).இவர் கோவை துடியலூரில் மளிகை கடை நடத்தி வந்தார். இதனால் அங்கு அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் சொந்த ஊரில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக காரில் தனது குடும்பத்தினருடன் வந்தார்.
நேற்று முன்தினம் குற்றாலத்திற்கு சென்று விட்டு நெல்லை மூலைக் கரைப்பட்டி வழியாக வெள்ளாளன் விளைக்கு சென்றனர். காரை மோசஸ் ஓட்டி சென்றார்.
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தரைமட்ட கிணற்றுக்குள் கார் பாய்ந்தது.
அப்போது கிணற்றில் தத்தளித்த மோசஸ் மகன் ஜெர்சோம், ரவி கோவில்பிச்சை மகள் ஜெனிபர் எஸ்தர், செர்சோம் மனைவி சைனி கிருபாகரன் (26) ஆகிய 3 பேரும் மீட்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு படையினர் சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கு சென்று மீட்பு பணிகளை துரிதப் படுத்தினார்.
சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது. காரில் இருந்த மோசஸ், அவரது மனைவி வசந்தா(49), ரவி கோவில்பிச்சை, அவரது மனைவி கெத்சியாள் கிருபா, ஜெர்சோமின் பெண் குழந்தையான ஷாலின் (1½) ஆகிய5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மீட்கப்பட்ட 5 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
உயிரிழந்த 5 பேரின் உடல்கள் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இறந்தவர்களின் உடல்களுக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர்களது உடல் சொந்த ஊரான வெள்ளாளன் விளைக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு ஊர் மக்கள் முன்னிலையில் அங்குள்ள சி.எஸ்.ஐ. கல்லறை தோட்டத்தில் 5 பேர் உடல்களும் அருகருகே கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்தனை செய்யப்பட்டு அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்போது ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி இன்ஸ்பெக்டர் இன்னோசி குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது.
- அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை :
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கடந்த ஒன்றாம் தேதி அன்று, தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக, சிவகிரியில் தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே, கொங்கு பகுதியில் தனியாக வசித்து வந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக காவல்துறை, அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
- படகு போக்குவரத்து கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி பாலம் திறக்கப்பட்டதை தொடர்ந்து கோடை விடுமுறை சீசன் காரணமாக தற்போது வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது. இதைத்தொடர்ந்து படகு போக்குவரத்து கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிகாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுதுறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு செல்கிறார்கள்.
தொடர்ந்து இன்று வரை கடந்த 11 நாட்களில் 1¼ லட்சம் சுற்றுலா பயணிகள் படகுமூலம் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டுள்ளனர்.
இன்றும் காலை 7 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் படகில் பயணம் செய்து கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- சிந்து நகர், டிஆர்ஆர் நகர், தனலட்சுமி நகர், நாசர் மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 5 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் நாளை (20.05.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அதன்படி, திருமுல்லைவாயல் பகுதியில் ஆர்ச் ஆண்டனி நகர், பொதூர் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை. அதேபோல ஆவடி பகுதியில் சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், டிஆர்ஆர் நகர், தனலட்சுமி நகர், நாசர் மெயின் ரோடு, மோசஸ் தெரு ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும்.
- இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என ப.சிதம்பரம், எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை.
- வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான, தொல். திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சியில் 31-ந் தேதி நடைபெற இருந்த மத சார்பின் காப்போம் பேரணி ஜூன் மாதம் 14-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மட்டுமின்றி, சட்டத்தின் மீதும், மதசார்பின்மை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக விவாகரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசு தலைவரை கொண்டு பா.ஜ.க. அரசு 14 கேள்விகளை கேட்க வைத்துள்ளது.
இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என ப.சிதம்பரம், எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியா கூட்டணி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சந்தித்து ஒரு வருடம் ஆகிறது. தேவைப்படும் போது ஒன்றிணைந்து செயல்படும்.
தி.மு.க. இந்திய கூட்டணியில் முக்கியமாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. வேறு எந்த கூட்டணியும் கூட்டணி என்கிற வடிவத்தோடு இல்லை.
அ.தி.மு.க., பா.ஜ.க. இணைந்து தேர்தலை சந்திப்போம் என கூறியுள்ளார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை.
அவர்கள் கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்டவர்கள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.
தற்போது எதிர்க்கட்சிகள் ஐக்கியமாக போதிய முகாந்திரங்கள் இல்லை.
தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சோதனை நடந்த 2 நாட்களும் விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
- விசாரணையின்போது அவரது செல்போன், லேப்டாப்பில் இருந்து பல்வேறு ஆதாரங்களை அமலாக்கத்துறையினர் திரட்டி உள்ளனர்.
சென்னை:
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கனவே அறிக்கை வெளியிட்டது.
இதுதொடர்பாக, கடந்த மார்ச் மாதம் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக கடந்த 16-ம் தேதி சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, சூளைமேடு ராஜகீழ் வீதியில் உள்ள தனியார் மதுபான நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் மேகநாதன் வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள தொழில் அதிபர் தேவக்குமார் வீடு.
சாஸ்திரி நகர் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ் குமார் வீடு, சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் முதல் தெருவில் உள்ள பாபு வீடு, தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள கேசவன் வீடு, எம்.ஆர்.சி. நகரில் உள்ள தொழில் அதிபர் ரித்தீஷ் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று முன்தினம் நடைபெற்ற சோதனை நள்ளிரவு 2 மணி அளவில் முடிவடைந்தது. அனைத்து இடங்களிலும் நடைபெற்ற சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது காரில் எடுத்துச் சென்றனர்.
சோதனை நடந்த 2 நாட்களும் விசாகனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவரது செல்போன், லேப்டாப்பில் இருந்து பல்வேறு ஆதாரங்களை அமலாக்கத்துறையினர் திரட்டி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதை ஏற்று ஜோதி சங்கர் அமலாக்கத்துறையில் இன்று ஆஜரானார். இவரிடம் ஏற்கனவே 7 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். இதில் இன்னும் பல தொழில் அதிபர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.
- முக்கிய நகரங்கள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பது பற்றியும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குண்டு வைப்பதற்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளான சிராஜ், அமீர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேலும் பலர் இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்த வகையில் தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றில் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பது பற்றியும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் உயர் அதிகாரிகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தி உள்ளனர்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் அது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர்.
சென்னை:
வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் பயிற்சி முகாம் டெல்லியில் வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி முதல் நிலை முகவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் செய்யப்படவுள்ள முன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., சி.பி.ஐ., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர்.
- கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
- ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது.
வண்டலூர்:
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் கிளாம்பாக்கத்திற்குசென்று வருவதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த சிரமத்தை போக்கும் வகையில் வண்டலூர்- ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிதாக ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த புதிய ரெயில் நிலையப்பணிக்கு தமிழக அரசு ரூ.20 கோடி ஒதுக்கி உள்ளது. கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் ரெயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் கவுண்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மற்றும் பாதுகாப்பு வசதிகள் திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
தற்போது கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், தண்டவாளங்களில் கற்கள் கொட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மின்கம்பங்களும் நட்டு மின்வயர்கள் இணைப்புக்கு தயாராக உள்ளது. ரெயில் நிலையத்தில் மேற்கூரை மற்றும் மின்கம்பி இணைப்பு உள்ளிட்ட சில பணிகள் மட்டுமே இன்னும் முடிக்கப்பட வேண்டி உள்ளது.
எனவே புதிய ரெயில் நிலைய பணிகள் முழுவதும் வருகிற ஜூன் மாதத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தை ஜூலை மாதத்தில் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். மேலும் மாநகர பஸ்சில் பயணம் செய்வதை விட மின்சார ரெயிலில் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும். இதனால் பயணிகளின் போக்குவரத்து பிரச்சனை முழுமையாக தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து புதிதாக கட்டப்படும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு பயணிகள் எளிதில் சென்று வரும் வகையில் ஜி.எஸ்.டி.சாலையை கடந்து உயர் மட்ட நடைமேம்பாலம் ரூ. 74.50 கோடி செலவில் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது.
தற்போது இது தீர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த பணியும் விரைந்து முடிந்து பயன்பாட்டுக்கு வரும் போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்திற்கு பயணிகள் எந்த சிரமமும் இன்றி சென்று வரமுடியும்.
- 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.
- மாநாடு நடைபெறும் தேதியை கட்சி தலைவர் விஜய் அதிகார பூர்வமாக விரைவில் வெளியிட இருக்கிறார்.
சென்னை:
வருகிற சட்டமன்ற தேர்தலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பு பணிகளை கட்சி தலைவர் விஜய் வலுப்படுத்தி வருகிறார்.
234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு அதில் சுமார் 69 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பூத் கமிட்டி உறுப்பினர்கள் முதல்கட்ட மாநாடு கோயம்புத்தூரில் 2 நாட்கள் நடந்தது. 13 மாவட்டங்களை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்ற மாநாட்டில் விஜய் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்த விஜய்யை வழிநெடுகிலும் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து வரவேற்றனர். திறந்த வேனில் பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி வந்த விஜய் பொதுமக்களின் வரவேற்பை கண்டு திக்கு முக்காடினார்.
மாநாட்டில் பேசிய விஜய் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இது ஓட்டுக்காக மட்டுமே நடக்கும் மாநாடு இல்லை. நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பதே மக்களுக்காகத்தான் மக்களோடு மக்களாக எப்படி ஒன்றிணைய போகிறோம் என்பதற்காகதான் இந்த பயிற்சி பட்டறை என அதிரடியாகவும், ஆக்ரோஷமாகவும் பேசி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினார்.
விஜய் பேச்சு மற்றும் அவரை காண திரண்ட கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து த.வெ.க. பூத் கமிட்டி 2-ம் கட்ட மாநாட்டை உடனே நடத்துவது பற்றி கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்துடன் ஆலோசனை நடத்தி வந்தார். மாநாட்டுக்காக மதுரை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் வேலூரில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இடங்கள் தேர்வு செய்யும் பணி சில தினங்களாக நடந்தது. இதற்காக வேலூர், கிருஷ்ணகிரியில் மாநாடு நடத்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் வேலூரில் மாநாடு நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வேலூரில் நடைபெறும் மாநாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி உள்பட 20 மாவட்டங்களை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரை ஆற்ற இருக்கிறார். 'ரோடு-ஷோ' நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மாநாடு நடைபெறும் தேதியை கட்சி தலைவர் விஜய் அதிகார பூர்வமாக விரைவில் வெளியிட இருக்கிறார். மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளில் கட்சி தலைவர் விஜய் உத்தரவுப்படி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






