என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில் ரசிகர்களிடம் ஏற்பட்ட அளவு கடந்த உற்சாகத்தை நேற்று இரவே அறிய முடிந்தது.
    • கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பெங்களூர் வெற்றிப் பேரணியில் உயிரிழந்த 13 பேருக்கு ஆழ்ந்த இரங்கல்.

    ஐ.பி.எல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றதைக் கொண்டாடும் வகையில், கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இன்று நடைபெற்ற வெற்றிப் பேரணியில் 13 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

    பெங்களூர் அணி 18 ஆண்டுகளில் முதன் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில் ரசிகர்களிடம் ஏற்பட்ட அளவு கடந்த உற்சாகத்தை நேற்று இரவே அறிய முடிந்தது. அதன்பின் 12 மணி நேர அவகாசத்தில் வெற்றிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அளவு கடந்த கூட்டம் வரும் என்பதை கணித்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும். இவற்றைச் செய்யத் தவறிய கர்நாடக அரசும், ஆர்சிபி அணி நிர்வாகமும் தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

    கூட்ட நெரிசலில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வரும் நிலையில் அவர்களின் உயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • மழை பெய்ததால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்திருந்தது. சென்னையிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    சென்னை சென்டிரல், எழும்பூர், ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம், மைலாப்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு,கே.கே.நகர் விருகம்பாக்கம், தி.நகர் கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    காலையில் வெயில் வாட்டி வதைத்தநிலையில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் மழை பெய்ததால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாடு அரசுடன் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.

    ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் எஸ்.இ. நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறை தானியங்கு தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஆகும்.

    இந்நிறுவனம், தற்போது, அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை, காஞ்சீபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது.

    இத்திட்டத்தில், 300 கோடி ரூபாய் முதலீட்டில் 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    எஸ்.ஒ.எல். இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இத்தாலி நாட்டைச் சேர்ந்த எஸ்.ஒ.எல். எஸ்.பி.எ. மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும். ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இந்நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது.

    2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, 100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 200 கோடி ரூபாய் முதலீடு என்ற வகையில், இந்நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.

    இந்நிறுவனத்தின் காற்று பிரித்தெடுப்பு ஆலை அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 19.7.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது பணி நிறை வடைந்து, 175 கோடி ரூபாய் முதலீட்டில், காற்று பிரித்தெடுக்கும் ஆலை நிறுவப்பட்டுள்ளது.

    மேற்குறிப்பிட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது உறுதியளித்த முதலீடுகள் இதில் அடங்கும். 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    இவ்விரு ஆலைகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    மேலும் பல்வேறு கல்லுரிகளை சேர்ந்த 6 மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி அளிப்பதற்கான கடிதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    • அவதூறு வழக்கை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
    • வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    திருச்சி:

    திருச்சி சரக டிஐஜி வருண்குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவுசெய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அதோடு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாக வருண்குமார் தரப்பு குற்றம்சாட்டி வந்தது.

    இதையடுத்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரிக்க தகுந்தது அல்ல எனக்கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கை விசாரிக்க அனுமதி அளித்தது.

    அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனக்கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அத்துடன், அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
    • போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது.

    ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து, மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    கல்வியில் பெரும் புரட்சி செய்துவிட்டதாக திமுக அரசு போலி பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    ஜே.இ.இ. - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் மேற்கு வங்கம் 35.3 விழுக்காட்டுடன் முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 34.70%, ராஜஸ்தான் 34.50%, மராட்டியம் 32.40%, ஹரியானா 32.30% என அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு 23.90% தேர்ச்சி விகிதத்துடன் கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தேர்வை எழுதிய 7,787 பேரில் 1,859 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கேரளம், பிகார் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டைவிட பின் தங்கியுள்ளன.

    ஐஐடி நுழைவுத்தேர்வுகளில் தமிழ்நாடு மிகவும் பின் தங்கியிருப்பதற்கு காரணம், அத்தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மாநிலப் பாடத்திட்டம் வலிமையாக இல்லாதது தான்.

    கடந்த பல ஆண்டுகளாகவே ஐஐடி நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாநிலப் பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும் அதற்கான நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அரசுகள் எடுக்கத்தவறிவிட்டன. அதனால் தான் ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் தமிழகத்தின் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது.

    போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், அதற்கான பயன்கள் எதுவும் களத்தில் தெரிவதில்லை. இந்த நிலையை மாற்றும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மாநிலப் பாடத்த்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க உதவ முடியும்.
    • சுய தொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர்களுக்கான நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 8-வது தளத்தில் வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    இம்முகாமில் கலந்து கொள்ள பயனாளிகள் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், அலைபேசி ஆகியவற்றை எடுத்து வந்து www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க உதவ முடியும். இத்திறன் பயிற்சி மேற்கொள்ளுதல் வாயிலாக சுய தொழில் புரிய மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TADHCO)ன் கீழ் செயல்படுத்தப்படும் சுய தொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது.
    • கிழக்கு ரத வீதயில் தேர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    சிவகாசி:

    சிவகாசியில் பழமை வாய்ந்த விஸ்வநாத ஸ்வாமி கோவில் உள்ளது இந்த கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விசுவநாத ஸ்வாமி, விசாலாட்சி அம்மன் ரிஷப வாகனம், குதிரை வாகனம், காமதேனு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. தேர் எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அறநிலையத்துறை சார்பில் கோவில் தேரை வடக்கு ரத வீதியில் நிறுத்த வேண்டும் என கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் கோவில் மண்டகப்படிதாரர்கள் கோவில் முன்புதான் தேரை நிறுத்த வேண்டும் என்று காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் கிழக்கு ரத வீதயில் தேர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக கோவில் முன்பு தேரை நிறுத்துவதற்கு அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். அதன் பின்னர் தேர் நிலையை வந்து அடைந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • சோதனை செய்தபோது ஹைட்ரோபோனிக் என்ற போதை பொருள் கடத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பப்பட்டது.
    • பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் போதைப்பொருட்கள், தங்கம், அரிய வகை உயிரினங்களை கடத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

    திருச்சி விமான நிலையத்திற்கு பேங்காங்கில் இருந்து நேரடி விமான சேவை இயக்கப்பட்டபோது அதிக அளவிலான போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    தற்போது பேங்காங்கில் இருந்து நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போதை பொருள் கடத்தல் குறைந்து இருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

    அப்போது அந்த விமானத்தில் பேங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கு பயணம் செய்த பயணி ஒருவரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பொருட்கள் இருந்ததை கண்டறிந்து அதனை சோதனை செய்தபோது ஹைட்ரோபோனிக் என்ற போதை பொருள் கடத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 9.82 கோடி இருக்கும் என தெரிகிறது. இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியை கைது செய்து அவரிடம் தொடர்பு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடமைகளை மீண்டும் சோதனை செய்தபோது அவர் தனது உடமையில் மறைத்து அரிய வகை உடும்புகளை மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சோதனைக்கு பின்பு அந்த உடும்பானது மீண்டும் கோலாலம்பூருக்கு அனுப்புவதா என்பது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பா.ம.க., தே.மு.தி.க.வை குறிவைத்து கூட்டணி காய்களை த.வெ.க. நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • பா.ம.க.வும் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை உறுதி செய்யவில்லை.

    பா.ம.க.வுடன் விஜயின் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி தரப்புடன் த.வெ.க. தரப்பில் கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜான் ஆரோக்கியசாமி, 2016-ல் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என பா.ம.க.விற்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து பணியாற்றி உள்ளார்.

    தற்போது த.வெ.க. கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி பா.ம.க., தே.மு.தி.க.வை குறிவைத்து கூட்டணி காய்களை நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விரித்த வலை வேலை செய்யாததால் பா.ம.க. பக்கம் த.வெ.க. தாவி உள்ளதாக கூறப்படுகிறது.

    அக்.27-ந்தேதி த.வெ.க. தலைமையில் கூட்டணி என அக்கட்சியின் தலைவர் விஜய் குறிப்பிட்டார். 7 மாதங்களாகியும் எந்த கட்சியும் த.வெ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்யவில்லை.

    ஒரு சதவீதம் வாக்கு வங்கி உள்ள கட்சிகள் கூட த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை. எனவே தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளுக்கு மாற்றாக பா.ம.க.வை இணைத்து கூட்டணி அமைக்க த.வெ.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    பா.ம.க.வும் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை உறுதி செய்யாத நிலையில், த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
    • கமலுக்கோ அவரது கட்சிக்கோ பா.ஜ.க. ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.

    புதுக்கோட்டையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. யார் அந்த சார்? என்று ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. ஆனால் காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை.

    குற்றப்பத்திரிகை தெளிவில்லாமல் இருக்கிறது. தெளிவுபடுத்த வேண்டியது தமிழ்நாடு முதலமைச்சரின் பொறுப்பு.

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோசமாக உள்ளது. நவீன வகையான போதை மருந்து நடமாட்டம் தமிழகத்தில் தான் இருக்கிறது.

    தி.மு.க. தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனால் தான் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் உறுதியாக இருந்தால் எங்கள் கூட்டணியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

    தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர். வரக்கூடிய தேர்தலை அனைவரும் சேர்ந்து சந்திக்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களிடம் பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழை உயர்த்தி பேசினால் நாங்கள் வரவேற்போம் . ஆனால் ஒரு மொழியை சிறுமைப்படுத்தி, ஒரு மொழியை உயர்த்திப் பேசினால் தேவையில்லாத விவகாரங்கள் வரும் அதை தான் கமல்ஹாசன் செய்துள்ளார்

    தமிழ் 5000 வருடத்திற்கு முன்பானது என்பதை யாரும் மறுப்பதற்கு கிடையாது. ஆனால் அதற்காக மற்றொரு மொழி சிறுமை என்று கூற முடியாது. அனைத்து மொழியுமே உயர்ந்தது. கமலுக்கோ அவரது கட்சிக்கோ பா.ஜ.க. ஆதரவு கிடையாது. ஆனால் தமிழுக்கு எப்போதும் ஆதரவு உண்டு.

    மத்திய மந்திரி அமித்ஷா வருகின்ற 8-ந் தேதி மதுரைக்கு வருகை தர உள்ளார். ஒவ்வொரு நிர்வாகிகளையும் சந்தித்து பேச உள்ளார். அண்ணா மலை குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்று திரும்பி உள்ளார். தொடர்ந்து இனி வரக்கூடிய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.

    அனைத்து எதிர்கட்சிகளும் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும். தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளை செல்வப் பெருந்தகை அழைத்து உள்ளார். இது குறித்து அந்தந்த கட்சிகள்தான் முடிவு எடுக்க வேண்டும்.

    இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை. வரக்கூடிய காலங்களில் அது சாத்தியமா என்று பார்க்கலாம். ஆனால் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை மாநில தலைவராக இருந்தபோது தமிழ்நாடு அரசியல் களம் அதிரடியாக இருந்தது. தற்போது அமைதியாக உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை உண்டு அவர் அதிரடியான அணுகுமுறை கையாண்டார். நான் அமைதியான அரசியல் செய்ய விரும்புகிறேன். அதிரடி அரசியல் வேண்டாம் என்றார்.

    • திருச்சி அரசு மருத்துவமனையிலும் அதற்காக சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.
    • தமிழக அரசை வேறு குறை கூற முடியாது என்பதால் இந்த குறையை அண்ணாமலை கூறுகிறார்.

    திருச்சி:

    அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா பரவி வருகின்ற காரணத்தால் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    அனைத்து துறை செயலாளர்களையும் அழைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையிலும் அதற்காக சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு ஏற்ற வகையில் தூர்வாரச் சொல்லி அதற்கான பணி நடைபெற்று வருகிறது.

    மொழி விவகாரத்தில் யாரும் கமல் மன்னிப்பு கேட்பதை விரும்பவில்லை. அவர் சொன்னதில் என்ன தவறு உள்ளது. தமிழ் மொழியில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம் எல்லாம் வந்தது. அவர் சொன்னதில் எதுவும் தப்பில்லை.

    மாணவி பாலியல் வழக்கில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், சேகர் பாபு அதற்குரிய பதிலை அளித்துள்ளனர் .

    தமிழக அரசை வேறு குறை கூற முடியாது என்பதால் இந்த குறையை அண்ணாமலை கூறுகிறார்.

    பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை வருகின்ற 17-ந்தேதி பராமரிப்பு டெண்டர் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. அது முடிந்தவுடன் பேருந்து நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வேலைகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    • நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ / பொட்டலமிடவோ கூடாது.
    • உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்.

    சென்னை:

    உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * அனைத்து உணவு வணிகர்களும் http://foscos.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    * அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி மருத்துவ தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.

    * உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும்.

    * உணவுப் பொருட்களில் ஈக்கள், பூச்சிகள் மெய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும்.

    * உணவு எண்ணெயை ஒரு முறை சமைக்க பயன்படுத்த வேண்டும். மீதமான பயன்படுத்திய உணவு எண்ணெயை FSSAI அங்கீகரித்த கொள்முதலாளருக்கு மட்டும் விற்க வேண்டும்.

    * விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்திடல் வேண்டும்.

    * நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ / பொட்டலமிடவோ கூடாது.

    * அனுமதிக்கப்படாத நெகிழியில் (பிளாஸ்டிக்) உணவுப்பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக்கூடாது.

    * உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர் அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    * எவ்வகை உணவு எண்ணெய்களையும் லேபிள் விபரங்களின்றியும், பொட்டலமிடாமல் சில்லறை அடிப்படையிலும் நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது.

    * உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்.

    * பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் விற்பனை செய்யும்போது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. உரிமை எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விவரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    * உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகங்கள் / பேக்கரி / இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக்கூடாது.

    * சிக்கன்-65, பஜ்ஜி, கோபி-65 போன்ற உணவு வகைகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது.

    என்பது உள்பட 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

    உணவு கடைகளில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ? அல்லது தயாரித்தாலோ? உணவு கடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×