என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் வெறும் ரூ.500 நோட்டு மட்டும் தான் எடுக்க முடிகிறது.
- வங்கி கணக்கில் இருக்கும் சிறிய தொகையை எடுக்க முடியவில்லை.
சென்னை:
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் வெறும் ரூ.500 நோட்டு மட்டும் தான் எடுக்க முடிகிறது. அதற்கு கீழ் உள்ள தொகையினை கேட்டால் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லை என்று தான் வருகிறது. அதனால் ஏழை-எளியோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏனென்றால் அவர்களது கணக்கில் இருக்கும் சிறிய தொகையை எடுக்க முடியவில்லை. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு அதிகளவில் புகார்கள் சென்றன.
இந்த நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்கள் தங்களது ஏ.டி.எம்.கள் வழியாக ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வைத்து இருக்க வேண்டும். அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயம் வினியோகிக்க வேண்டும். அடுத்தாண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களில் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வினியோகிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் நமது ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என நான்கு வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு 4 கேசெட்கள் உள்ளன. அதில் 2 ஆயிரம் ரூபாய் புழக்கத்தில் இல்லை. அதேபோல் ரூ.100, ரூ.200 கேசெட்டில், அந்த ரூபாய் நோட்டுகளை வைப்பதில்லை. முழுவதுமாக ரூ.500 நோட்டுகள் மட்டுமே வைக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ வங்கி உத்தரவிட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- ஜீவன் பீமா நகர், சிவன் கோவில், படவட்டம்மன் கோவில் தெரு, வள்ளலார் தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (06.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ரெட்ஹில்ஸ்: சோழவரம், சோத்துப்பெரும்பேடு பகுதி, காரனோடை பகுதி, ஒரக்காடு சாலை, கோட்டைமேடு பெரிய காலனி, செம்புலிவரம்
முகப்பேர்: பாடி டிவிஎஸ் காலணி, டிவிஎஸ் நகர், டிவிஎஸ் அவென்யூ, ரேடியல் ஹவுஸ், ஜீவன் பீமா நகர், சிவன் கோவில், படவட்டம்மன் கோவில் தெரு, வள்ளலார் தெரு ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் வருகிற 7-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
- சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, 3.10, இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை- கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் வருகிற 7-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மற்றும் வருகிற 7-ந் தேதி காலை 10.30, 11.35 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.5 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, 3.10, இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40, மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- இந்த நாளில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.
சென்னை:
உலகம் முழுக்க சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்! என்று பதிவிட்டுள்ளார்.
- தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது.
- டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027, மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதை இரு கட்டமாக நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், "மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில் ரசிகர்களிடம் ஏற்பட்ட அளவு கடந்த உற்சாகத்தை நேற்று இரவே அறிய முடிந்தது.
- கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பெங்களூர் வெற்றிப் பேரணியில் உயிரிழந்த 13 பேருக்கு ஆழ்ந்த இரங்கல்.
ஐ.பி.எல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றதைக் கொண்டாடும் வகையில், கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இன்று நடைபெற்ற வெற்றிப் பேரணியில் 13 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
பெங்களூர் அணி 18 ஆண்டுகளில் முதன் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில் ரசிகர்களிடம் ஏற்பட்ட அளவு கடந்த உற்சாகத்தை நேற்று இரவே அறிய முடிந்தது. அதன்பின் 12 மணி நேர அவகாசத்தில் வெற்றிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அளவு கடந்த கூட்டம் வரும் என்பதை கணித்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க வேண்டும். இவற்றைச் செய்யத் தவறிய கர்நாடக அரசும், ஆர்சிபி அணி நிர்வாகமும் தான் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வரும் நிலையில் அவர்களின் உயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- மழை பெய்ததால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் கணித்திருந்தது. சென்னையிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை சென்டிரல், எழும்பூர், ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம், மைலாப்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு,கே.கே.நகர் விருகம்பாக்கம், தி.நகர் கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
காலையில் வெயில் வாட்டி வதைத்தநிலையில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் மழை பெய்ததால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசுடன் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் எஸ்.இ. நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறை தானியங்கு தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம், தற்போது, அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை, காஞ்சீபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது.
இத்திட்டத்தில், 300 கோடி ரூபாய் முதலீட்டில் 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஒ.எல். இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இத்தாலி நாட்டைச் சேர்ந்த எஸ்.ஒ.எல். எஸ்.பி.எ. மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும். ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இந்நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது.
2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, 100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 200 கோடி ரூபாய் முதலீடு என்ற வகையில், இந்நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் காற்று பிரித்தெடுப்பு ஆலை அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 19.7.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது பணி நிறை வடைந்து, 175 கோடி ரூபாய் முதலீட்டில், காற்று பிரித்தெடுக்கும் ஆலை நிறுவப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது உறுதியளித்த முதலீடுகள் இதில் அடங்கும். 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்விரு ஆலைகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும் பல்வேறு கல்லுரிகளை சேர்ந்த 6 மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி அளிப்பதற்கான கடிதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- அவதூறு வழக்கை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
- வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
திருச்சி:
திருச்சி சரக டிஐஜி வருண்குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவுசெய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதோடு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாக வருண்குமார் தரப்பு குற்றம்சாட்டி வந்தது.
இதையடுத்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே, தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரிக்க தகுந்தது அல்ல எனக்கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கை விசாரிக்க அனுமதி அளித்தது.
அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனக்கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அத்துடன், அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
- போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது.
ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து, மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கல்வியில் பெரும் புரட்சி செய்துவிட்டதாக திமுக அரசு போலி பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஜே.இ.இ. - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் மேற்கு வங்கம் 35.3 விழுக்காட்டுடன் முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 34.70%, ராஜஸ்தான் 34.50%, மராட்டியம் 32.40%, ஹரியானா 32.30% என அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு 23.90% தேர்ச்சி விகிதத்துடன் கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தேர்வை எழுதிய 7,787 பேரில் 1,859 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கேரளம், பிகார் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டைவிட பின் தங்கியுள்ளன.
ஐஐடி நுழைவுத்தேர்வுகளில் தமிழ்நாடு மிகவும் பின் தங்கியிருப்பதற்கு காரணம், அத்தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மாநிலப் பாடத்திட்டம் வலிமையாக இல்லாதது தான்.
கடந்த பல ஆண்டுகளாகவே ஐஐடி நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாநிலப் பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும் அதற்கான நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அரசுகள் எடுக்கத்தவறிவிட்டன. அதனால் தான் ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் தமிழகத்தின் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது.
போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், அதற்கான பயன்கள் எதுவும் களத்தில் தெரிவதில்லை. இந்த நிலையை மாற்றும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மாநிலப் பாடத்த்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க உதவ முடியும்.
- சுய தொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர்களுக்கான நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 8-வது தளத்தில் வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இம்முகாமில் கலந்து கொள்ள பயனாளிகள் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், அலைபேசி ஆகியவற்றை எடுத்து வந்து www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க உதவ முடியும். இத்திறன் பயிற்சி மேற்கொள்ளுதல் வாயிலாக சுய தொழில் புரிய மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TADHCO)ன் கீழ் செயல்படுத்தப்படும் சுய தொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது.
- கிழக்கு ரத வீதயில் தேர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.
சிவகாசி:
சிவகாசியில் பழமை வாய்ந்த விஸ்வநாத ஸ்வாமி கோவில் உள்ளது இந்த கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விசுவநாத ஸ்வாமி, விசாலாட்சி அம்மன் ரிஷப வாகனம், குதிரை வாகனம், காமதேனு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. தேர் எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அறநிலையத்துறை சார்பில் கோவில் தேரை வடக்கு ரத வீதியில் நிறுத்த வேண்டும் என கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் கோவில் மண்டகப்படிதாரர்கள் கோவில் முன்புதான் தேரை நிறுத்த வேண்டும் என்று காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கிழக்கு ரத வீதயில் தேர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக கோவில் முன்பு தேரை நிறுத்துவதற்கு அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். அதன் பின்னர் தேர் நிலையை வந்து அடைந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.






