என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்று பஸ் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை கிராம பஸ் நிறுத்தத்தில் சிதம்பரத்திலிருந்து குறிஞ்சிப்பாடி மகளிர் இலவச பேருந்து சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென பின்பக்க படிக்கட்டின் கீழ் உள்ள டயரில் இருந்து அதிக அளவில் புகையும் துர்நாற்றமும் ஏற்பட்டதால் உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

    பஸ் டயர் தேய்மானம் ஆகி உள்ளே உள்ள டியூப் ஆகியவை சூடு ஏறி புகை வந்துள்ளது என தெரிகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில் பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்று பஸ் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கு பயணிகள் பழுது இல்லா பஸ்சை இயக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இன்றும், நாளையும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
    • 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் மற்றும் கட்சி பணிகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

    சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், மதுரை உள்ளிட்ட 22 மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்றும், நாளையும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் மற்றும் கட்சி பணிகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் கிருஷ்ணாவிற்கு சம்மன் அளிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • நடிகர் கிருஷ்ணா படப்பிடிப்பிற்காக கேரளாவிற்கு சென்றுள்ளதால் அவருக்கு சம்மன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன்படி சென்னையில் போதைப்பொருளை கடத்தி வந்து மொத்தமாக விற்பனை செய்பவர்களையும், அவர்களிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி சில்லறை விற்பனையில் ஈடுபடுவோரையும் போலீசார் தினமும் கைது செய்து வருகிறார்கள். போதைப்பொருளை பயன்படுத்துவோரையும் பிடித்து சிறையில் தள்ளிவருகிறார்கள்.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் போலீசாரிடம் சிக்குகிறார்கள்.

    இந்த நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ஸ்ரீகாந்த் வேறு யாருக்காவது போதைப்பொருளை வழங்கியுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஸ்ரீகாந்த் ஆன்-லைன் மூலமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் போதைப்பொருளை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

    இதனை தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் வேறு நடிகர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகர் ஸ்ரீகாந்த் யார் மூலம் போதைப்பொருளை வாங்கியள்ளார்? திரையுலகை சேர்ந்த எத்தனை பேர் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் கிருஷ்ணாவிற்கு சம்மன் அளிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். நடிகர் கிருஷ்ணா படப்பிடிப்பிற்காக கேரளாவிற்கு சென்றுள்ளதால் அவருக்கு சம்மன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக மேலும் பலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • சில வியாபாரிகள் சாலையோரம் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
    • சாலையோரம் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி-சத்தி மெயின் ரோட்டில் பெரியார் திடலில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிகாலையிலேயே வந்து தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    சில வியாபாரிகள் சாலையோரம் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து போலீசாருக்கும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையம், போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைந்து சாலையோரம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரமாக தேங்காய் வியாபாரி ஒருவர் கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் கடையில் இருந்த பொருட்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வியாபாரி கோபி ஈரோடு-சத்தி ரோட்டில் தேங்காயை போட்டு உடைத்து போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் சமாதானம் அடைந்த வியாபாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிறுவியது. தொடர்ந்து சாலையோரம் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.

    • ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    • மீனாட்சிபுரம், சிலமலை, சில்ல மரத்துப்பட்டி, ராசிங்கபுரம், கரட்டுப்பட்டி, சூலபுரம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் மின்சார விநியோகம் முறையாக இல்லாமல் ½ மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் இரவு சுமார் 11 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    தேனி துணை மின் நிலையத்தில் போடி விநியோகப் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 3 ½ மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் போடி சுற்றுப்பகுதி மக்கள் மட்டுமின்றி அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், சிலமலை, சில்ல மரத்துப்பட்டி, ராசிங்கபுரம், கரட்டுப்பட்டி, சூலபுரம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    மேலும் போடியை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான போடி மெட்டு, கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல், பிச்சாங்கரை போன்ற பகுதிகளிலும் சுமார் 3 ½ மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

    நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் வீட்டிற்குள் ஏற்பட்ட புழுக்கம் காரணமாக சாலையில் படுக்கை விரித்து படுத்து உறங்கினர்.

    மேலும் வீட்டு வாசலில் பொது மக்கள் கொசுக்கடி காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    தேனி பகுதியில் மில் வேலைக்கு சென்று இரவு பணி முடித்து திரும்பி வரும் பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக அவர்களுடைய தாய்மார்கள் இருளில் காத்திருந்தனர்.

    போடி அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் விநியோகம் நடைபெற்றது. ஆனால் நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டதால் ஜெனரேட்டரில் டீசல் தீர்ந்து நின்று விட்டது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

    மேலும் ஏற்பட்ட மின்தடை காரணமாக வேலைக்கு செல்பவர்கள் குழந்தைகள் தூக்கம் பாதிக்கப்பட்டதால் காலையில் வேலைக்கு செல்வதிலும் பள்ளிக்கு செல்வதிலும் மிகுந்த சிரமம் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    இரவு 11 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நள்ளிரவு 2½ மணியளவில் சரி செய்யப்பட்டது.

    கடந்த சில வாரங்களாகவே இதுபோன்று மின்தடை ஏற்பட்டுவரும் நிலையில் உரிய பராமரிப்பு மேற்கொண்டு மின்விநியோகத்தை சீராக வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து கொண்டிருந்தபோது சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது.
    • உணவை தயாரித்து கொண்டிருந்த பெண் சமையலர் துரிதமாக செயல்பட்டு வெளியேறியதால் அவர் உயிர் தப்பினார்.

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த அயன்ராசாபட்டி தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து கொண்டிருந்தபோது சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது.

    உணவை தயாரித்து கொண்டிருந்த பெண் சமையலர் துரிதமாக செயல்பட்டு வெளியேறியதால் அவர் உயிர் தப்பினார்.

    தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டதையடுத்து அவர்கள் தீயை அணைத்தனர். இதனால் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

    • தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில், கால் டாக்சி மீது எதிர்திசையில் வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
    • மதுபோதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டனை சிட்லபாக்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    சென்னை அனகாபுத்தூர் அருகே பைபாஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் கர்ப்பிணி, அவரது தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில், கால் டாக்சி மீது எதிர்திசையில் வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டாக்சியில் இருந்த தந்தை, கர்ப்பிணி மகள் உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்த பத்மநாபனின் மனைவி, ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த கார் விபத்தில் உயிரிழந்தவர்கள் வேங்கைவாசல் மகராஜபுரத்தை சேர்ந்த பத்மநாபன் (58), கர்ப்பிணியாக இருந்த அவரது மகள் தீபிகா (21) என்பது தெரிய வந்துள்ளது.

    மதுபோதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மணிகண்டனை சிட்லபாக்கம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    கார் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகவும், எதிர்திசையில் காரை ஓட்டி வந்ததும் விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அ.ம.மு.க. தயாராகி வருகிறது.
    • தமிழகத்தின் தற்போதைய தி.மு.க. ஆட்சியை அகற்ற பாடுபடுவோம்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து அ.ம.மு.க. துணை பொது செயலாளர் ரெங்கசாமி பேட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் மட்டுமே மாற்று கட்சியில் இணைந்துள்ளார்.

    மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய செயலாளர் நகர செயலாளர்கள் தற்போது வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அ.ம.மு.க. தயாராகி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். தமிழகத்தின் தற்போதைய தி.மு.க. ஆட்சியை அகற்ற பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புலிமான்குளம் செல்லும் அணுகு சாலையில் இன்று அதிகாலை கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.
    • வனத்துறையினர் கரடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி பகுதியில் புலிமான்குளம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் இருக்கிறது.

    இங்குள்ள ராமன்குடியில் இருந்து ஆத்தாங்கரை பள்ளிவாசல் செல்லும் மெயின் சாலையில் இருந்து புலிமான்குளம் செல்லும் அணுகு சாலையில் இன்று அதிகாலை கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அச்சம் அடைந்தனர். மேலும் இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியதால் மக்கள் அந்த பகுதியில் குவிந்து கரடி நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

    தகவல் அறிந்து உவரி போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் கரடி மாயமாகிவிட்டது. தற்போது வனத்துறையினர் கரடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உணவு தட்டுப்பாடு, வாழ்விட அழிப்பு அல்லது மனிதர்களின் அத்துமீறல் போன்ற காரணங்களால் வனவிலங்குகள் இது போன்று குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகிறது.

    தற்போது இந்த கரடியால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பாக, அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதனிடையே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கரடியை கண்டால் அதற்கு அருகில் செல்லாமல் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • கடந்த 4 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,840-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,155-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த 4 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840

    22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

    20-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

    19-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    23-06-2025- ஒரு கிராம் ரூ.120

    22-06-2025- ஒரு கிராம் ரூ.120

    21-06-2025- ஒரு கிராம் ரூ.120

    20-06-2025- ஒரு கிராம் ரூ.120

    19-06-2025- ஒரு கிராம் ரூ.122

    • வெளிநாடு செல்லமாட்டேன். வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் உறுதி அளித்தார்.
    • கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டபோது, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜாமின் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

    மேலும் வெளிநாடு செல்லமாட்டேன். வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் உறுதி அளித்தார். இருப்பினும் ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுரை வழங்கினார்.

    இந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

    • கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
    • பாதுகாப்பு கருதி அருவி, கரையோரங்களில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணை களின் பாதுகாப்பு கருதி தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடி வந்தது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 12 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ், உள்பட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி, கரையோரங்களில் குளிக்க 5-வது நாளாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் பரிசல் சவாரிக்கு தடை ஏதும் இல்லை. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடைவிதிப்பால் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    ×