என் மலர்
உள்ளூர் செய்திகள்

திசையன்விளை அருகே ஊருக்குள் சுற்றித்திரிந்த கரடியால் பொதுமக்கள் பீதி
- புலிமான்குளம் செல்லும் அணுகு சாலையில் இன்று அதிகாலை கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.
- வனத்துறையினர் கரடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி பகுதியில் புலிமான்குளம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் இருக்கிறது.
இங்குள்ள ராமன்குடியில் இருந்து ஆத்தாங்கரை பள்ளிவாசல் செல்லும் மெயின் சாலையில் இருந்து புலிமான்குளம் செல்லும் அணுகு சாலையில் இன்று அதிகாலை கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அச்சம் அடைந்தனர். மேலும் இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியதால் மக்கள் அந்த பகுதியில் குவிந்து கரடி நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.
தகவல் அறிந்து உவரி போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் கரடி மாயமாகிவிட்டது. தற்போது வனத்துறையினர் கரடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உணவு தட்டுப்பாடு, வாழ்விட அழிப்பு அல்லது மனிதர்களின் அத்துமீறல் போன்ற காரணங்களால் வனவிலங்குகள் இது போன்று குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகிறது.
தற்போது இந்த கரடியால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பாக, அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கரடியை கண்டால் அதற்கு அருகில் செல்லாமல் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






