என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோபியில் இன்று காலை ரோட்டில் தேங்காயை உடைத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரியால் பரபரப்பு
- சில வியாபாரிகள் சாலையோரம் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
- சாலையோரம் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி-சத்தி மெயின் ரோட்டில் பெரியார் திடலில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிகாலையிலேயே வந்து தாங்கள் விளைவித்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
சில வியாபாரிகள் சாலையோரம் காய்கறி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து போலீசாருக்கும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையம், போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைந்து சாலையோரம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரமாக தேங்காய் வியாபாரி ஒருவர் கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் கடையில் இருந்த பொருட்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வியாபாரி கோபி ஈரோடு-சத்தி ரோட்டில் தேங்காயை போட்டு உடைத்து போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் சமாதானம் அடைந்த வியாபாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிறுவியது. தொடர்ந்து சாலையோரம் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை போலீசார் அகற்றி வருகின்றனர்.






