என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அ.தி.மு.க. ஒருநாளும் கொள்கையையும், கட்சியின் கோட்பாடுகளையும் விட்டுக் கொடுக்காது.
- முருகன் பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சென்னை:
முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு விடுக்கப்பட்ட அன்பான அழைப்பினை ஏற்று கலந்து கொண்டோம். முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே தான் கலந்து கொண்டோம். அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடு தான் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோம்.
பெரியார், அண்ணா குறித்த அவதூறான வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
அ.தி.மு.க. ஒருநாளும் கொள்கையையும், கட்சியின் கோட்பாடுகளையும் விட்டுக் கொடுக்காது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். ஏன் தி.மு.க.வுக்கும் நன்றாக தெரியும். ஆனால் அ.தி.மு.க. மீது அவதூறு பரப்புவதற்கு ஏதாவது சாக்குபோக்கு கிடைக்காதா என்ற வகையில் தான் அவர்கள் அவதூறு பரப்புகிறார்கள்.
முருகன் பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
- வருகிற ஜூலை 7-ந்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குட முழுக்கு நடைபெற உள்ளது
- திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளன.
மதுரை:
தூத்துக்குடியை சேர்ந்த வியனரசு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
வருகிற ஜூலை 7-ந்தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குட முழுக்கு நடைபெற உள்ளது. தமிழ்க் கடவுளான முருகன் கோவிலின் குடமுழுக்கை தமிழ் மொழியில் நடத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. எனவே திருச்செந்தூர் முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, கோவில் குட முழுக்கு நிகழ்வுகள் தமிழில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
கோவில் தரப்பில், யாக சாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டது.
அதனை தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து, இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
- கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
- விஜயன் கோவில் உண்டியலில் பத்திரத்தை போட்ட தகவலறிந்த அவரது மனைவி மற்றும் மகள்கள் கோவிலுக்கு வந்தனர்.
சந்தவாசல்:
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 65), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி கஸ்தூரி.
இவர் கண்ணமங்கலம் அருகே உள்ள மங்களாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு விஜயன் ஆளானார்.
இந்த நிலையில் மே 2-ந் தேதி படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய விஜயன் வந்தார். தரிசனம் முடிந்து கையில் வைத்திருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள நில பத்திரத்தை உண்டியலில் போட்டார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.
இன்று காலை ரேணுகாம்பாள் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற இருந்தது. இதனை அறிந்த விஜயன் கோவிலுக்கு வந்தார். கோவில் ஊழியர்களிடம் உண்டியலில் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரம் உள்ளது.
அதனை முறையாக கோவிலுக்கு மாற்றி எழுதி தருவதாகவும் கூறினார். இதனை கேட்டு கோவில் ஊழியர்கள், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் விஜயன் கோவில் உண்டியலில் பத்திரத்தை போட்ட தகவலறிந்த அவரது மனைவி மற்றும் மகள்கள் கோவிலுக்கு வந்தனர். கோவில் ஊழியர்களிடம் சொத்து பத்திரம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதனை எங்களது அனுமதி இல்லாமல் எப்படி எழுதி தர முடியும் என்றும் கேட்டு கதறி அழுதனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
- தனது மகனை கவனித்துக்கொள்வதற்காக தனக்கு ஜாமின் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்று நடிகர் ஸ்ரீகாந்த் கைதானார். இச்சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என கூறிய ஸ்ரீகாந்த் பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 8 கொக்கைன் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் தவறு செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் உருக்கமாக பேசியுள்ளார். மேலும் தனது மகனை கவனித்துக்கொள்வதற்காக தனக்கு ஜாமின் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, சிறையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்தது ஏன்? என்ன பலரும் கேள்வி எழுப்பினர். வருமான வரி முறையாக செலுத்திவரும் நபர் என்பதால் சிறையில் முதல் வகுப்பு சலுகை ஸ்ரீகாந்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதிவரவில்லை என கூறி மாணவன் முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
- மாணவனின் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 15). இவர் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதிவரவில்லை என கூறி மாணவன் முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் முத்துகிருஷ்ணன் நேற்று இரவு வீட்டில் பின்புறம் உள்ள ஆஸ்பெடாஸ் சீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவனின் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், எனது சாவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என 4 ஆசிரியர்களின் பெயர்களை எழுதி வைத்திருந்தார்.
கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது.
- தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக சமஸ்கிருத மொழியை மேம்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்தது அம்பலமாகி உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.2,533.59 கோடி செலவு செய்தது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது. தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.
போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆண்டுக்குச் சராசரியாகச் சமஸ்கிருதத்திற்கு ரூ.230.24 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
- தமிழ் என்று பேசியது வெறும் பசப்பு வார்த்தைகள் மட்டுமே என்பதை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
சென்னை:
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து ஆண்டுகளில் மத்திய அரசு சமஸ்கிருத மொழியைப் பரப்ப ரூ.2532.59 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்குச் சேர்த்து ஒதுக்கப்பட்ட ரூ.147.56 கோடியை விட 17 மடங்கு அதிகமாகும் என்று தகவல் அறியும் உரிமை (RTI) மூலம் பெற்ற தகவலை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
ஆண்டுக்குச் சராசரியாகச் சமஸ்கிருதத்திற்கு ரூ.230.24 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற ஐந்து செம்மொழிகளுக்குச் சராசரி ஆண்டு நிதி ரூ.13.41 கோடி மட்டுமே மத்திய பாஜக அரசு ஒதுக்கி தனது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது. இந்த பாரபட்சமான போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
2004ல் முதன் முதலாகச் செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழுக்கு, மொத்தம் ரூ.113.48 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. – இது சமஸ்கிருதம் பெற்ற தொகையை விட 22 மடங்கு குறைவு.
இந்தியாவின் மக்கட்தொகையில் 22% மக்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா மொழி பேசுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதம் பேசுபவர்கள் மிகவும் சொற்பமானவர்களே.
சமீபத்தில் மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் தலைசிறந்த மொழி தமிழ் என்று பேசியது வெறும் பசப்பு வார்த்தைகள் மட்டுமே என்பதை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
தமிழ் மற்றும் பிற செம்மொழிகளுக்கு மொழிகளுக்கான உரிய அங்கீகாரம், நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
- நோக்கியா துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- வளத்தான்சேரி, கடுவஞ்செரி, கண்ணந்தாங்கள் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ஸ்ரீபெரும்புதூர் கோட்டம், நோக்கியா துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை (25-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சரோஜினி நகர், ராஜீவ் காந்தி நகர், ஜெமி நகர், சரளா நகர், தாம்பரம் ரோடு, பாலாஜி நகர், பி.வி.எல்.நகர், காமராஜர் நகர், கச்சிப்பட்டு, பட்டுநூல் சத்திரம்,
ஆதிகேசவ பெருமாள் நகர், செக்கடி, டி.எம்.ஏ.ரோடு, தாலுக்கா ஆபீஸ் சாலை, பஸ் நிலையம், மேட்டுப்பாளையம், காசா கிராண்ட், வி.ஆர்.பி. சத்திரம், போந்தூர் தேரேசாபுரம், பிள்ளைப் பாக்கம் கிராமம், குண்டுபேரம்பேடு, தத்தனூர், வளத்தான்சேரி, கடுவஞ்செரி, கண்ணந்தாங்கள் மற்றும் இதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை ஸ்ரீபெரும்புதூர் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
- உயர்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
- திருநங்கைகள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தாங்கள் பயிலும் கல்லூரியில் சான்றாக சமர்ப்பித்தால் போதுமானது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்த மாணவிகள் கல்லூரியில் சேர்ந்தால் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் திருநங்கைகளும் பயன் பெறலாம்.
இதுவரை திருநங்கைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே கல்லூரி படிப்பில் ரூ.1000 உதவித்தொகை பெற முடியும் என்று இருந்தது.
இப்போது இந்த விதிமுறையை தமிழ்நாடு அரசு தளர்த்தியுள்ளது. தமிழ், ஆங்கிலம் என எந்த வழியில் பயின்றிருந்தாலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருநங்கைகள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தாங்கள் பயிலும் கல்லூரியில் சான்றாக சமர்ப்பித்தால் போதுமானது.
திருநங்கை, திருநம்பி, இடைபாலினத்தவர்கள் UMIS இணையதளத்தில் விண்ணப்பித்து உயர்கல்வி பயில உதவித்தொகை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
- முருக பக்த மாநாட்டுத் தீர்மானங்கள் அரசியலையே பேசுகின்றன.
- திருப்பரங்குன்றத்தை முன் வைத்து மத வெறியைத் தூண்டுகின்றன.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க. தனது அரசியல் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளதை அங்கு நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் மற்றும் பேசப்பட்ட கருத்துகள் மூலம் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து பாஜக, அரசியலை முன்னெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பா.ஜ.க 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. அந்த ஆண்டு ஜூலையில் முருகனைப் போற்றிப் பாடும் கந்த சஷ்டிக் கவசத்தை அவமதித்ததாக இந்து அமைப்புகளும் பாஜகவும் போராட்டம் நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக வேல் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக பா.ஜ.கவின் அப்போதைய மாநிலத்தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.
திருத்தணியில் இருந்து தனது வேல் யாத்திரையைத் தொடங்கிய முருகனை காவல்துறை கைது செய்தது. இதுபோல, தினமும் வேல் யாத்திரை செய்ய முருகன் முயல்வதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்தது. முடிவில் 2020 டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு மாநாட்டை நடத்தினர். இதில் அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜுன் 10 ஆம் தேதி மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தி.மு.க. அழைப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.
இது பாஜகவின் அரசியல் அழைப்பு என்பதை மக்கள் அறிவார்கள்.
தமிழ் கடவுள் என்று தமிழர்கள் கொண்டாடும் குன்றுதோறாடும் குமரனுக்கு ஆண்டு முழுவதும் தைபூசம், விசாகம், சூரசம்ஹாரம், கந்த சஷ்டி திருவிழா, மற்றும் பங்குனி உத்திர விழா என பல விழாக்கள் தமிழ்நாட்டில் காலம் காலமாக நடக்கின்றன.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி மற்றும் பாஜகவும் முருகனுக்கு ஆபத்து என்ற பிம்பத்தைக் கட்டமைக்க விழைவதை தமிழ் மக்கள் புறந்தள்ளுவார்கள்.
முருக பக்த மாநாட்டுத் தீர்மானங்கள் அரசியலையே பேசுகின்றன.
திருப்பரங்குன்றத்தை முன் வைத்து மத வெறியைத் தூண்டுகின்றன.
அறநிலையத் துறையை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றத் தீர்மானம் பாஜகவின் அரசியல் கோரிக்கையாகும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்கு கேட்டு நிறைவேற்றப்பட்ட இன்னொரு தீர்மானம் மாநாட்டின் நோக்கத்தைப் புலப்படுத்துகிறது.
முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை இழிவு படுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெற்றிருந்தது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த மாநாட்டில் அறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்ததை நியாயப்படுத்தவே முடியாது.
மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. மதம் சார்ந்த செயல்பாடுகள் எப்போதும் தேர்தலில் எதிரொலித்தது இல்லை.
2021ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பா.ஜ.க. முருகனை முன்னிறுத்தி வேல் யாத்திரையை நடத்தியும்கூட, 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அ.தி.மு.க கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சியால் நான்கு இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதே நிலை தான் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நடக்கும் என்றார்.
- இலகுரக வாகனங்களை சோதனைக்காக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியிலிருந்து நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணி தொடங்கப்படும்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் அருகே பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது.
இந்த மேம்பாலத்தின் இணைப்பு பகுதி கடந்த 21-ந் தேதி விரிசல் ஏற்பட்டதால், பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வாகனங்கள் மாற்று பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் மேம்பாலத்தில் இணைப்பு பகுதி மேலும் விலகாமல் தடுக்க பாலத்தின் தூணின் மேல் பகுதியில் மரக்கட்டைகளை அடுக்கி முட்டு கொடுத்தனர்.
பின்னர் பாலத்தில் சோதனைக்காக இலகு ரக வாகனங்களை இயக்க அனுமதித்து, தொடர்ந்து 2-வது நாளாக பொறியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் கூறியதாவது:-
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாலம் கட்டப்பட்டது. தொடக்கத்தில் பாலத்தில் வாகனங்கள் குறைந்த எண்ணிக்கையில் சென்று வந்தன.

தற்போது வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளன. மேலும், ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பாலத்தின் மீது செல்வதால் பாலத்தில், பால்பேரிங்கி சேதமாகி உள்ளது.
இதுபோல வாகனங்கள் அதிகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் பேரிங் சேதம் இருக்கிறதா என்பது தொடர்பாக விரைவில் ஆய்வு செய்யப்படும்.
ஓசூர் பாலத்தில் இணைப்பு விலகியபகுதி மேலும் விலகாமல் இருக்க மரக்கட்டைகளை அடுக்கி வைத்து, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இலகுரக வாகனங்களை சோதனைக்காக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மவுன சாட்சியாக அமர்ந்திருந்தார்.
- கீழடி விவகாரத்தில் தமிழரின் தொன்மையை, பெருமையை நிலைநாட்டக் கூடாது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறையில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் பா.ஜ.க., இந்து முன்னணி நடத்திய முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா போன்ற திராவிட இயக்கத் தலைவர்களை விமர்சிக்கும்போது, முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள் மேடையில் அமர்ந்திருந்தது அவமானகரமாக உள்ளது.
அண்ணா பெயரை கொண்ட அ.தி.மு.க. என்பது அமித்ஷாவுக்கு கட்டுப்பட்ட அ.தி.மு.க.வாக மாறிவிட்டது. திராவிட இயக்கத்தினர் என்று சொல்லிக் கொள்பவர்கள்,
இதுகுறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட ஒரு மேடையில் அவரை பேச விடாது, அமித்ஷா மட்டும் பேசி கூட்டணியை அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் மவுன சாட்சியாக அமர்ந்திருந்தார். இது மெல்ல மெல்ல அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறி வருவதை காட்டுகிறது.
கீழடி விவகாரத்தில் தமிழரின் தொன்மையை, பெருமையை நிலைநாட்டக் கூடாது.
அப்படி ஒப்புக்கொண்டால் இந்தியை திணிக்க முடியாது என பா.ஜ.க. எண்ணுகிறது. அதே சமயத்தில் மக்களை பிளவுபடுத்தி மத ரீதியாக பிரித்து வட இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது போல, இங்கேயும் செயல்பட அவர்கள் எண்ணுகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் அப்படி கிடையாது. அவர்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள். பெரியார், அண்ணா திராவிட இயக்க தலைவர்கள் வழியில் வந்த கொள்கைகளை பார்ப்பவர்கள். அவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






