என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓசூரில் இணைப்பு பகுதி விலகிய மேம்பாலத்தில் தற்காலிகமாக மரக்கட்டைகளை முட்டு வைத்து சோதனை
    X

    ஓசூரில் இணைப்பு பகுதி விலகிய மேம்பாலத்தில் தற்காலிகமாக மரக்கட்டைகளை முட்டு வைத்து சோதனை

    • இலகுரக வாகனங்களை சோதனைக்காக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • டெல்லியிலிருந்து நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணி தொடங்கப்படும்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் அருகே பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது.

    இந்த மேம்பாலத்தின் இணைப்பு பகுதி கடந்த 21-ந் தேதி விரிசல் ஏற்பட்டதால், பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், வாகனங்கள் மாற்று பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், நேற்று காலை தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் மேம்பாலத்தில் இணைப்பு பகுதி மேலும் விலகாமல் தடுக்க பாலத்தின் தூணின் மேல் பகுதியில் மரக்கட்டைகளை அடுக்கி முட்டு கொடுத்தனர்.

    பின்னர் பாலத்தில் சோதனைக்காக இலகு ரக வாகனங்களை இயக்க அனுமதித்து, தொடர்ந்து 2-வது நாளாக பொறியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் கூறியதாவது:-

    கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாலம் கட்டப்பட்டது. தொடக்கத்தில் பாலத்தில் வாகனங்கள் குறைந்த எண்ணிக்கையில் சென்று வந்தன.

    தற்போது வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளன. மேலும், ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பாலத்தின் மீது செல்வதால் பாலத்தில், பால்பேரிங்கி சேதமாகி உள்ளது.

    இதுபோல வாகனங்கள் அதிகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் பேரிங் சேதம் இருக்கிறதா என்பது தொடர்பாக விரைவில் ஆய்வு செய்யப்படும்.

    ஓசூர் பாலத்தில் இணைப்பு விலகியபகுதி மேலும் விலகாமல் இருக்க மரக்கட்டைகளை அடுக்கி வைத்து, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இலகுரக வாகனங்களை சோதனைக்காக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியிலிருந்து நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×