என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழக தலைவர்கள் கூடி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
    • பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களானால் அரசியல் மாற்றம் ஏற்படும்.

    வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

    இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்,

    * வடமாநில வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்காளர்கள் ஆவதை தடுக்க வேண்டும்.

    * தமிழக தலைவர்கள் கூடி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

    * பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களானால் அரசியல் மாற்றம் ஏற்படும்.

    * திருமாவளவனின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. ஆட்சியின்போது தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கப்பணிக்காக 250 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • பனைத்தொழிலாளர்களுக்கு அரசு உதவி, உப்பளத்தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்.

    தூத்துக்குடி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலையொட்டி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் தூத்துக்குடியில் இன்று உப்பு உற்பத்தியாளர்கள், நிறுவனத்தார், கப்பல் தொழிலளார்கள், மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

    அ.தி.மு.க. ஆட்சியின்போது தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கப்பணிக்காக 250 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தி.மு.க. அரசும், நிலம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு முழு காரணம் அ.தி.மு.க. தான்.

    தொழில் நகரமான தூத்துக்குடியில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தததும் அதற்கான பணியை செய்வோம்.

    தூத்துக்குடியில் போக்குவரத்து அதிகளவு உள்ளதால் வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக அது நிலுவையில் உள்ளது. ஆனால் இதற்கு தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு பெற்று வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும்.

    பனைத்தொழிலாளர்களுக்கு அரசு உதவி, உப்பளத்தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நான்தான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தேன். அப்போது கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் தரமான சாலை அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தியாவிலேயே தார்சாலைகள் அதிக நீளமுடையது தமிழ்நாட்டில் தான் என்ற நிலையை கொண்டு வந்தோம். எங்களது ஆட்சி காலத்தில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துறை மந்திரியாக இருந்த நிதின்கட்கரியிடம் பேசி தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படியே தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டது.

    அதேபோல் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காகவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் பல்வேறு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் 12 சாலைகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைபோல பல்வேறு சாலைகள் வர அ.தி.மு.க. ஆட்சி தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழு கட்சி விதிகளுக்கு எதிரானது.
    • அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு செல்லாது.

    சென்னை:

    பா.ம.க. பொதுக்குழுவுக்கு அதன் நிறுவனர் ராமதாசுக்கு அன்புமணி அழைப்பு விடுத்து இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறுகையில்,

    அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழு கட்சி விதிகளுக்கு எதிரானது. அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு செல்லாது. 15 நாட்களுக்கு முன்னர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவிப்புக் கொடுக்க வேண்டும்.

    தந்தையை உளவு பார்த்த ஒரே மகன் அன்புமணி தான். தனது இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணி தான் என்று குற்றம்சாட்டினார். 

    • சிலர் தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
    • அனுமதி பெறாத கட்டிடத்தில் பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் சுமார் 20 பேர் வரை பணியாற்றியது தெரியவந்துள்ளது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி களை கட்டி உள்ளது. அதிக தேவை இருப்பதால் அந்த ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது.

    இதனை சிலர் தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து இனிமேல் நடைபெறுவதை தடுக்கவும், சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இருப்பினும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வெம்பக்கோட்டை பகுதியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து பட்டாசுகள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தாயில்பட்டி பசும்பொன்நகர் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து வெம்பக்கோட்டை போலீசார் உதவியுடன் வருவாய் துறையினர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பசும்பொன்நகர் பகுதியில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன் கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அருகில் தாயில்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பட்டாசு சேகரித்து வைத்திருந்த குடோனையும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இரண்டு இடத்திலும் சிவகாசி மணி நகரை சேர்ந்த மோகன் என்பவர் வாடகைக்கு எடுத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததும், சேகரித்தும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அனுமதி பெறாத கட்டிடத்தில் பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் சுமார் 20 பேர் வரை பணியாற்றியது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஒரு கட்டிடத்தில் பட்டாசுகள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து பொக்லைன் எந்திரம் மூலம் அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் புதைத்தனர். இந்த சோதனையில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக கட்டிட உரிமையாளர்கள் ராஜசேகர், பால முருகன் மற்றும் வாடகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்த சிவகாசியை சேர்ந்த மோகன் ஆகிய 3 பேர் மீது மூன்று பிரிவுகளில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வழக்கறிஞர் அமர போடப்பட்டிருந்த நாற்காலியில் அருணாச்சலம் அமர்ந்துள்ளார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அருணாச்சலத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில்:

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சென்னல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 36). இவர் நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக உள்ளார்.

    இவர் மீது கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் வன்கொடுமை பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்குக்காக அருணாச்சலம் நாகர்கோவில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஐந்தாவது மாடியில் செயல்படும் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை சட்டம்) சிறப்பு அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது வழக்கறிஞர் அமர போடப்பட்டிருந்த நாற்காலியில் அருணாச்சலம் அமர்ந்துள்ளார். அங்கிருந்த வழக்கறிஞர்கள் அங்கு அமரக்கூடாது எனக் கூறினார்கள். இதையடுத்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

    அப்போது நீதிமன்ற அலுவலர், அருணாச்சலத்திடம் அமைதி காக்க கூறினார். அவரிடமும் அருணாச்சலம் வாக்குவாதம் செய்தார். அங்கு வந்த கோட்டார் போலீசார் அருணாச்சலத்தை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து சிறப்பு நீதிமன்ற சிரஸ்தார் சிபு, கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் அருணாச்சலத்தின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அருணாச்சலத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அருணாச்சலத்தை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என போட்டு விட்டார்கள்.
    • மக்கள் நலன் சார்ந்த முகாமை முதல்வர் தொடங்கி உள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பு திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த விவரம் வருமாறு:-

    கேள்வி: பிரேமலதா, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை சந்தித்தனர். இது கூட்டணியாக மாற வாய்ப்பு உள்ளதா? இதன் பின்னணி ஏதேனும் உள்ளதா?

    பதில்: பின்னணியும் இல்லை, முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்தார்கள் அவ்வளவுதான்.

    கேள்வி: பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதே?

    அவர்களுக்கு எல்லாம் அவர்கள் ஊரிலேயே வேலை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் நம்ம ஊருக்கு வந்திருக்க மாட்டார்கள். இங்க வந்திருக்கிறார்கள் இப்போது என்ன செய்வது என்பது மிகப்பெரிய பிரச்சனை. ஏனென்றால் பீகாரில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இல்லை என போட்டு விட்டார்கள். அந்த மாதிரி நம் ஊரில் போட முடியாது. இதை தலைவர்கள் தான் அணுக வேண்டும். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது வரும் காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மேடையில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு முகாம்களை முதல்வர் நடத்தி வருகிறார். இப்போதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது, அது முடிவதற்குள்ளேயே இன்னொரு மக்கள் நலன் சார்ந்த முகாமை முதல்வர் தொடங்கி உள்ளார். என்னால் இப்போதைக்கு அதிகமாக பேச முடியாது ஏனென்றால் எனக்கு சற்று உடல் நலம் சரியில்லை என பேசினார்.

    • அன்புமணி ராமதாஸ் வருகிற 9-ந்தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்டியுள்ளார்.
    • பா.ம.க. பொதுக்குழு ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி மாதம் கூட்டப்படுவது வழக்கம்.

    சென்னை:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும்-அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தையும் இருவரும் தனித்தனியாக கூட்டியுள்ளார்கள். டாக்டர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் 17-ந்தேதி சிறப்பு பொதுக்குழு நடக்கிறது.

    அன்புமணி ராமதாஸ் வருகிற 9-ந்தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்டியுள்ளார். அதனால் அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 'கான்ப்ளுயன்ஸ்' அரங்கில் கூட்டப்படும் பொதுக்குழுவிற்கு தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3300 பேர் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்படுகிறது. அந்த 3300 பேருக்கும் டாக்டர் அன்புமணி சார்பில் அழைப்பு அனுப்பப்படுகிறது.

    பொதுக்குழுவில் தற்போதைய அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம், கட்சியில் ஏற்பட்டு உள்ள குழப்பம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படுகிறது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயல்படும் பா.ம.க.விற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த பொதுக்குழு கூட இருக்கிறது.

    பா.ம.க. பொதுக்குழு ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி மாதம் கூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது 2-வது முறையாக பொதுக்குழுவை கூட்டி தொண்டர்கள், நிர்வாகிகளை வரவழைத்து பேசி கட்சியை வலுப்படுத்த அன்புமணி திட்டமிட்டு உள்ளார்.

    • த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 23 நாட்கள் உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • தற்போது பிரமாண்டமாக மேடை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மதுரை:

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. விக்கிரவாண்டியில் முதலாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், பூத் கமிட்டி மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகம் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.

    தமிழகத்தில் கோலோச்சிய அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மாநில மாநாடுகளை நடத்துவது வழக்கமான ஒன்று. தொண்டர்களின் பலத்தை காட்டுவதற்கும், மெகா கூட்டணி அமைக்கும் வகையிலும் இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்டி நடைபெறும் இதுபோன்ற மாநாடுகள் தேர்தல்களில் திருப்புமுனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    அந்த வகையில் முதல் தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற (ஆகஸ்டு) 25-ந்தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் நடைபெறும் என த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். எத்தனையோ அரசியல் கட்சிகள் மாநில மாநாடுகளை நடத்தியிருந்தபோதிலும், இப்படியொரு மாநாட்டை யாரும் பார்த்திராத வகையில் மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனைகளை விஜய் வழங்கியிருக்கிறார்.



    இந்த மாநாட்டிற்காக கடந்த மாதம் 16-ந்தேதி கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் பூமி பூஜை பந்தக்கால் நடப்பது, அன்றைய தினமே இதற்கு போலீசார் பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்தை சந்தித்து மனு அளித்தார்.

    இதையடுத்து மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் ஜோரூராக தொடங்கியது. வெளியூர்களில் இருந்து மாநாட்டு பந்தல், மேடை, ஆர்ச்சுகள் அமைப்பதற்கான உபகரணங்கள், பொருட்கள் லாரிகள் மற்றும் கண்டெய்னர்களில் வந்து இறங்கின. த.வெ.க. மாநாட்டிற்கு இன்னும் 23 நாட்கள் உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிரமாண்டமாக மேடை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    20 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநாட்டிற்காக 506 ஏக்கர் பரப்பளவிலான இடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலம் செம்மைப்படுத்தப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. அதில் தற்போது மாநாடு மேடை மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது. அதேபோல் மாநாட்டிற்கு தலைமை தாங்கும் விஜய், நடந்து வந்து தொண்டர்களை சந்திக்கும் வகையிலும் மேடை உருவாகுகிறது.

    இந்த பணிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் தற்காலி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்து செய்து தரப்பட்டுள்ளது. இந்த பணிகளை உள்ளூர் நிர்வாகிகள் கண்காணித்து வருகிறார்கள். அடுத்த வாரம் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்க இருக்கிறார்.

    இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் த.வெ.க. மாநாட்டிற்கான தேதியை மாற்ற பரிசீலிக்குமாறு மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காரணமாக கொண்டு தெரிவித்துள்ளபோதிலும், திட்டமிட்டபடி 25-ந்தேதி மாநாட்டை நடத்துவதில் த.வெ.க.வினர் உறுதியாக உள்ளனர்.

    சமீப காலமாக தென் மாவட்டங்களை குறிவைத்து மதுரையில் அரசியல் மற்றும் ஆன்மிக மாநாடுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதே தென் மாவட்டங்களில் விஜய் தலைமையில் த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மூலம் கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    • வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
    • கொடூர தாக்குதலில் மீனவர்கள் செல்வராஜ், மூர்த்தி, தனபால் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 4 படகில் இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். திடீரென அவர்கள் 3 படகையும் வழிமறித்து மீனவர்களை சரமாரியாக தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் செல்வராஜ், மூர்த்தி, தனபால் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை உடன் வந்த சக மீனவர்கள் மீட்டு கரைக்கு திரும்பி நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். உடனே இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வரவேற்பு பேனரில் தனது படம் இடம்பெறாமல் இருந்ததை பார்த்து தங்கத்தமிழ்ச்செல்வன் கோவத்துடன் உள்ளே வந்தார்.
    • கலெக்டர் உள்பட அதிகாரிகள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆண்டிபட்டி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் பொதுமக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 1256 நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டார்.

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒரு முகாம் வீதம் ஒவ்வொரு வட்டாரத்திலும் சுழற்சி முறையில் நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இம்முகாமில் ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படும். மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், இந்திய மருத்துவம் (ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா, ஹோமியோபதி) ஆகிய 17 வகையான துறை சிறப்பு மருத்துவர்கள் மூலமாக மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளியில் இந்த முகாமிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், எஸ்.பி. சினேகாபிரியா, தங்கத்தமிழச்செல்வன் எம்.பி., மகாராஜன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வந்திருந்தனர். வரவேற்பு பேனரில் தனது படம் இடம்பெறாமல் இருந்ததை பார்த்து தங்கத்தமிழ்ச்செல்வன் கோவத்துடன் உள்ளே வந்தார்.

    அதன் பிறகு பயனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இதனை கலெக்டர் முன்னிலையில் மகாராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. அவரிடம் இருந்து அடையாள அட்டையை பறித்து தான் வழங்க முயன்றார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருமையில் தரக்குறைவான வார்த்தைகளில் பேசிக் கொண்டதால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் உள்பட அதிகாரிகள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் அதைக் கேட்காமல் தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. பாதியிலேயே மேடையில் இருந்து வெளியேறி கூட்டத்தை புறக்கணித்தார். அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பாராளுமன்ற உறுப்பினருக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம் விழாவில் தனக்கு வழங்கப்படவில்லை என தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. தெரிவித்து வெளியேறினார். இதனால் முகாமிற்கு வந்த பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் பேசிக்கொண்ட வீடியோ சமூக வளைதலங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியவில்லை.
    • 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழன்னை படகுக்கு அனுமதி கிடைக்காமல் தேக்கடி ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம். பேபி அணையை பலப்பத்திவிட்டு முல்லை பெரியாறு அணையில் முழு கொள்ளளவான 152 அடிவரை நீர் தேக்கிக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    142 அடியாக நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து பேபி அணையை பலப்படுத்த விடாமல் கேரளா பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியவில்லை. மேலும் தமிழக பகுதியில் விவசாய நிலங்களில் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. அணையில் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக கொண்டு செல்லப்படும் தளவாடப் பொருட்களை கேரளா தடுத்து வருவதாகவும், அணைக்கு செல்லும் வல்லக்கடவு வனப்பகுதியை சீரமைக்காமல் உள்ளதாகவும், பேபி அணையை பலப்படுத்த இடையூறாக உள்ள 13 மரங்களை வெட்டுவதற்கு கேரளா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு விசாரணையில் உள்ளது.

    விசாரணையின்போது அணையில் பராமரிப்பு பணி செய்யவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்த மரங்களை வெட்டுவதற்கும் வல்லக்கடவு பகுதியில் இருந்து அணைக்கு தளவாடப் பொருட்களை கொண்டு வரும் வனப்பகுதி பாதையை சீரமைக்கவும் சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரத்தில் வழங்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழக அரசுக்கு சாதகமாக இருந்த போதிலும் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க விடாமல் கேரளா பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் என்பதால் 4 வாரத்திற்குள் அனுமதியை பெறும் வகையில் தமிழக அரசு தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில்,

    தமிழக அரசு அணையை பராமரிக்க சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது ஏற்கனவே கூறப்பட்டதுதான். தற்போது 4 வார காலகெடு வைத்துள்ளனர். கண்டிப்பாக இதற்கு கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும். 2014ம் ஆண்டு மிகவும் தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ஆனால் முழுமையாக அமல்படுத்தவில்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழன்னை படகுக்கு அனுமதி கிடைக்காமல் தேக்கடி ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கே அனுமதி பெற முடியாத நிலையில் மரத்தை வெட்ட எப்படி அனுமதி கிடைக்கும். இருந்த போதிலும் தமிழக அரசு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

    • உளுந்தூர்பேட்டையில் மழைக்கு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசம்மாள் (98). இவர் மண் சுவரால் ஆன ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டரா பகுதியில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. பின்னர் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்நிலையில் இரவு 12 மணியளவில் வீட்டில் தூக்கி கொண்டிருந்த மூதாட்டி கேசம்மாள் மீது வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். மேலும் இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டையில் மழைக்கு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×