என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • உடலுறுப்புகளை ஈந்து, பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள்.
    • உடலுறுப்புகளைக் கொடையளிப்போருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு!

    அதனால்தான், துணை முதலமைச்சராக இருந்தபோது, எனது உடலுறுப்புகளைக் கொடையளித்தேன்; முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், உடலுறுப்புகளைக் கொடையளிப்போருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும் என்று அறிவித்தேன்.

    2023 செப்டம்பர் 23-இல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல், இதுவரையில் 479 பேர் (கடந்த ஆண்டு மட்டும் 268 பேர்) தங்களது உடலுறுப்புகளை ஈந்து, பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள்! அவர்களுக்கு எனது வணக்கம்!

    #OrganDonation-இல் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நயினார் நாகேந்திரன் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை.
    • பாரதப் பிரதமர் அவர்களை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன்.

    "தன்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்ததில் எள்ளளவும் உண்மை இல்லை என்று NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள்,"தன்னிடம் சொல்லியிருந்தால் மாண்புமிகு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்"என்று தெரிவித்துள்ளார்.

    இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை.

    நயினார் நாகேந்திரன் அவர்களை ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், நயினார் நாகேந்திரன் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை.

    எனவே, நயினார் நாகேந்திரன் அவர்களிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும், நயினார் நாகேந்திரன் அவர்கள் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.

    இதனைத் தொடர்ந்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா. வைத்திலிங்கம் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பாரதப் பிரதமர் அவர்களை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன்.

    அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.

    உண்மையிலேயே, நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பிரதமர் அவர்களை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் கைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம்.

    அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை.

    இதிலிருந்து, நான் பிரதமர் அவர்களை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பிரதமர் அவர்களைச் சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரன் அவர்களிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது.

    நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் வீடு திரும்பினார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.

    மாநிலங்களவையில் புதிதாக தேர்வான எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி நடைபெற்றது.

    அப்போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேல்சபையின் எம்.பியாக, தமிழில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.

    இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலை சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர், சிகிச்சைகள் முடிந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் வீடு திரும்பினார்.

    இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் எம்.பி. சந்தித்துள்ளார்.

    அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

    • ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்கு அதிமுக குரல் கொடுக்கும்.
    • மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அதிமுக ஆட்சியில் தொடர்வோம்.

    திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அங்கு அவர் பேசியதாவது:-

    அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்திற்கு நலம் காக்கும் ஸ்டாலின் என பெயர்.

    அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் வைக்கிறது திமுக அரசு.

    அம்மா மினி கிளினிக்குகளை திறந்தாலே பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும்.

    மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அதிமுக ஆட்சியில் தொடர்வோம்.

    அதிமுக ஆட்சி அமைந்ததும் இரும்புக் கரம் கொண்டு போதைப் பொருட்கள் புழக்கத்தை ஒழிப்போம்.

    ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்கு அதிமுக குரல் கொடுக்கும்.

    திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால் மக்களின் வருமானம் உயரவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டிஜஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
    • நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தனக்கு எதிராக ஆதாரமில்லாத அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வருண் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    அப்போது, டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

    • சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
    • வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெறும் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தேசிய திரைப்பட விருதுகளை வென்ற திரைக்கஞைர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழிப் படங்களில் இருந்து,

    சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் படக்குழுவினருக்கும்,

    சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும்,

    பார்க்கிங் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெறும் அன்புச் சகோதரர் M. S. பாஸ்கர் அவர்களுக்கும்,

    வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெறும் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும்,

    லிட்டில் விங்க்ஸ் ஆவணப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பெறும் சரவணமருது சௌந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும்,

    மேலும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளைச் சார்ந்த படக்குழுவினருக்கும், திரைக் கலைஞர்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தங்களின் தொடர் கலைப் படைப்புகள் வாயிலாக, மக்களை மென்மேலும் மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் செய்திட வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராஜேசா ஒரு கிரானைட் கம்பெனியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • கஞ்சா கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அச்ச மங்கலத்தில், 100-க்கும் மேற்பட்ட கிரானைட் கம்பெனிகள் உள்ளன. இங்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கிரானைட் கற்களை அறுத்து, பாலிஷ் செய்து விற்பனை நடந்து வருகிறது.

    கிரானைட் கம்பெனிகளில் பெரும்பாலும், வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களை வேலைக்கு அழைத்து வரும் ஏஜென்டாக பீகார் மாநிலம், ஜாம்ஷெட்பூர், வாரிஸ் நகரை சேர்ந்த ராஜேசா (வயது31), என்பவர் இருந்துள்ளார்.

    கடந்த வாரம் பர்கூர் அருகே 4 கிலோ கஞ்சா கடத்த முயன்ற மகேஷ் குமார் (25), மதன்குமார் (23), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராஜேசா, கஞ்சா கடத்துவதில் மூளையாக செயல்பட்டதும், கிரானைட் கம்பெனிகளுக்கு ஆட்களை அழைத்து வரும்போது, கஞ்சாவை கிலோ கணக்கில் கடத்தி வருவதும் தெரிந்தது.

    அச்சமங்கலத்தில் ராஜேசா ஒரு கிரானைட் கம்பெனியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனையிட்ட போது அவரது பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, கஞ்சா கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.

    • லிவின் குறித்து நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • நாகஅட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் நகை தொடர்பாக லிவினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகசெந்தில், விசைத்தறிகூட அதிபர். இவரது மகள் நாக அட்சயா (வயது 19). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவார் என கூறப்படுகிறது.

    அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிவின் (22) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. வழக்கம்போல் நட்புடன் தொடங்கிய இவர்களின் பழக்கம் முதலில் நண்பர்களாக தொடங்கி, காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. நாக அட்சயாவை மனதார காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் லிவின் வலைதள பதிவில் கூறியுள்ளார்.

    வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து முதலில் தயங்கிய அவர் பின்னர் ஏற்பட்ட மனமாற்றத்தால் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கர்நாடக மாநிலத்திற்கு செல்ல நாக அட்சயா முடிவு செய்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்.

    இதற்கிடையே நாகஅட்சயாவிடம், அவரது வலைதள காதலன் லிவின், தற்போது நீ இங்கு வந்தால் நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் தங்குவதற்கு வீடு எதுவும் தனியாக இல்லை என்பதால் வீடு பார்த்து விட்டு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். மேலும் வீடு பார்ப்பதற்கு பணம் தருமாறும் கேட்டுள்ளார். இதை நம்பிய நாகஅட்சயா காதலன் லிவினை கர்நாடகாவில் இருந்து ராஜபாளையம் வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார்.

    அதை பெற்றுக்கொண்டு கர்நாடகா திரும்பிய லிவின், தனக்கு பணம் போதவில்லை எனவே மேலும் ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என நாகஅட்சயாவிடம் கேட்டுள்ளார். இதற்கிடையே காதலன் லிவினின் பேச்சு, நடவடிக்கையில் சந்தேகமடைந்த நாகஅட்சயா மீண்டும் ராஜபாளையத்திற்கு வந்து அந்த பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

    இதனிடையே, லிவின் குறித்து நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், லிவின் வருகைக்காக காத்திருந்த வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அசோக்பாபு தலைமையிலான போலீசார் திட்டமிட்டபடி அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மேலும் நாகஅட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் நகை தொடர்பாக லிவினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் 25 பவுன் நகை மோசடி செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் அதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், அது போன்ற நடவடிக்கைகளில் ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்கள் என்று பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்த போதிலும், தொடர்ந்து பலர் பணத்தையும், பொருளையும் இழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நமக்கு ஒரே தலைவர் த.வெ.க. தலைவர் விஜய் தான்.
    • நம் ஒரே தலைவரான விஜயுடன் கைகோர்த்து தீவிரமாக களப் பணியாற்ற உறுதி ஏற்போம்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பணிகளை கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தீவிரமாக செய்து வருகிறார்.

    இதைத் தொடர்ந்து த.வெ.க. நிகழ்ச்சிகளிலும், பேனர்களிலும் கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் புகைப்படங்களை த.வெ.க.வினர் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் த.வெ.க. நிகழ்ச்சிகளில் தலைவர் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது என த.வெ.க. வினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

    இது தொடர்பாக த.வெ.க.வினருக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், நமக்கு ஒரே தலைவர் த.வெ.க. தலைவர் விஜய் தான். வருகிற 2026 தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து தலைவர் விஜயை தமிழக முதலமைச்சர் அரியாசனத்தில் அமர வைப்பதே நமது குறிக்கோள்.

    இதற்காக நம் ஒரே தலைவரான விஜயுடன் கைகோர்த்து தீவிரமாக களப் பணியாற்ற உறுதி ஏற்போம்.

    த.வெ.க. நிகழ்ச்சிகளிலோ, விளம்பர பேனர்களிலோ எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்சி தலைவர் விஜய் புகைப்படம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்னுடைய படத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது.

    இதை ஏற்கனவே நான் நிர்வாகிகளிடம் வலியுறுத்தி இருக்கிறேன். மீண்டும் தற்போது நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இந்த கடிதத்தின் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

    மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் நான் சொல்லிக் கொள்வது மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்பதை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவோம் என்பதுதான்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இது மட்டுமின்றி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் படத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

    • முதலமைச்சருக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடன் பிறப்பே வா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
    • தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும்.

    2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வரும் அவர் தி.மு.க. நிர்வாகிகளையும், தொகுதி வாரியாக அழைத்து பேசி வருகிறார்.

    உடன் பிறப்பே வா என்ற தலைப்பில் 234 தொகுதிகளிலும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக தி.மு.க. நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இதுவரை 42 தொகுதி நிர்வாகிகளை அவர் சந்தித்து உள்ளார்.

    இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடன் பிறப்பே வா நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    தற்போது 12 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் உடன் பிறப்பே வா சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இன்று நடந்த சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரமேரூர் தொகுதியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு நிர்வாகியிடமும் அவர் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    தி.மு.க. நிர்வாகிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தகவல்கள் சேகரித்து வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவர் நிர்வாகிகளிடம் கேள்விகளை எழுப்பி தொகுதி நிலவரம் பற்றி ஆய்வு செய்தார்.

    தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு ஏற்ப தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    • காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.
    • கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பில்லாலி தொட்டி கிராமத்தில் ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் செடல் உற்சவம் கடந்த 29-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சக்தி கரகம் மற்றும் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் விழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.

    தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு உடலில் செடல் போட்டுக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும் கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

     

    பின்னர் சட்டி வைத்து கொதிக்கும் எண்ணெயில் வடையை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பரவசத்துடன் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கொடி இறக்கும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • ராமஜெயம் கொலை வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அதில் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை.
    • சுமார் 3 மணி நேரமாக விசாரணை நடைபெற்ற நிலையில் அந்த குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

    நெல்லை:

    தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி தனது வீட்டிலிருந்து அதிகாலையில் நடைபயிற்சி செல்வதற்காக வெளியே சென்றார்.

    அப்போது மர்மநபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இதனால் சி.பி.ஐ. வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

    தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப்பட்டார். இதனால் திருச்சி டி.ஐ.ஜி. வருண் குமார் மற்றும் தஞ்சாவூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோரை விசாரணை அதிகாரியாக ஐகோர்ட்டு நியமித்தது. தொடர்ந்து விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் டி.ஐ.ஜி. வருண்குமார் தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு வந்து திடீர் விசாரணை மேற்கொண்டனர். அங்கு கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் சுடலைமுத்து என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    தண்டனை கைதியான சுடலை முத்து திருச்சி ராமஜெயத்தின் கொலை நடந்த காலகட்டத்தில் தொழிற் பயிற்சிக்காக திருச்சி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தன்னுடன் இருந்த மற்றொரு கைதியுடன் ராமஜெயம் வழக்கு தொடர்பாக செல்போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் அந்த செல்போனை அப்போதே ஜெயிலராகவும் தற்போது பாளையங்கோட்டை சிறைச்சாலையின் கண்காணிப்பாளராக இருப்பவருமான செந்தாமரை கண்ணன் பறிமுதல் செய்து உடைத்து விட்ட நிலையில் இன்று டி.ஐ.ஜி. தலைமையில் போலீசார் வந்து அவரிடம் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமஜெயம் கொலை வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அதில் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள சிறை கைதிக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 3 மணி நேரமாக விசாரணை நடைபெற்ற நிலையில் அந்த குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

    இன்று நாங்குநேரியில் அவர்கள் தங்கி உள்ள நிலையில் 2-வது நாளாக மீண்டும் விசாரணை நடத்தப்படலாம் எனவும், தேவைப்பட்டால் கைதி சுடலைமுத்து திருச்சிக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×