என் மலர்
நீங்கள் தேடியது "நகை மோசடி"
- லிவின் குறித்து நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- நாகஅட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் நகை தொடர்பாக லிவினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகசெந்தில், விசைத்தறிகூட அதிபர். இவரது மகள் நாக அட்சயா (வயது 19). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவார் என கூறப்படுகிறது.
அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அவருக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிவின் (22) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. வழக்கம்போல் நட்புடன் தொடங்கிய இவர்களின் பழக்கம் முதலில் நண்பர்களாக தொடங்கி, காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. நாக அட்சயாவை மனதார காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் லிவின் வலைதள பதிவில் கூறியுள்ளார்.
வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து முதலில் தயங்கிய அவர் பின்னர் ஏற்பட்ட மனமாற்றத்தால் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கர்நாடக மாநிலத்திற்கு செல்ல நாக அட்சயா முடிவு செய்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்.
இதற்கிடையே நாகஅட்சயாவிடம், அவரது வலைதள காதலன் லிவின், தற்போது நீ இங்கு வந்தால் நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் தங்குவதற்கு வீடு எதுவும் தனியாக இல்லை என்பதால் வீடு பார்த்து விட்டு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். மேலும் வீடு பார்ப்பதற்கு பணம் தருமாறும் கேட்டுள்ளார். இதை நம்பிய நாகஅட்சயா காதலன் லிவினை கர்நாடகாவில் இருந்து ராஜபாளையம் வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார்.
அதை பெற்றுக்கொண்டு கர்நாடகா திரும்பிய லிவின், தனக்கு பணம் போதவில்லை எனவே மேலும் ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என நாகஅட்சயாவிடம் கேட்டுள்ளார். இதற்கிடையே காதலன் லிவினின் பேச்சு, நடவடிக்கையில் சந்தேகமடைந்த நாகஅட்சயா மீண்டும் ராஜபாளையத்திற்கு வந்து அந்த பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனிடையே, லிவின் குறித்து நாக அட்சயா ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், லிவின் வருகைக்காக காத்திருந்த வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அசோக்பாபு தலைமையிலான போலீசார் திட்டமிட்டபடி அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும் நாகஅட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் நகை தொடர்பாக லிவினிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் 25 பவுன் நகை மோசடி செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் அதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், அது போன்ற நடவடிக்கைகளில் ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்கள் என்று பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்த போதிலும், தொடர்ந்து பலர் பணத்தையும், பொருளையும் இழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களிடம் நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா,ஆதார் கார்டு ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்து வர அனுப்பி விட்டுள்ளார்.
அந்தச் சமயத்தில் விவசாயிகள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து வருவது அவரது வழக்கமாக இருந்துள்ளது.இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேகரிடமிருந்து 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.இந்தநிலையில் வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்துகேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
நேற்று கேத்தனூரில் வங்கி முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கி நிர்வாகம் தரப்பில் மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளனர் என தெரிவித்ததை அடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்குவந்தது. இதையடுத்து நேற்று மாலை கேத்தனூர் வங்கிக் கிளையில், பாரத் ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் புவனேஸ்வரி, பல்லடம் தாசில்தார் நந்தகோபால், காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, உள்ளிட்ட அதிகாரிகள், வங்கி நகை மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், நகை மீட்பு இயக்கத்தினர், விவசாயிகள்பாதுகாப்பு சங்கத்தினர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகை மோசடியால் பாதிக்கப்பட்ட 584 பேருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டது. வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்களின் கணக்கில் இழப்பீடு தொகை வரவு வைக்கப்படும் என்றும், வங்கியில் இருந்து நகை திருப்பி எடுத்தவர்களுக்கு, அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் மேலும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க இன்று முதல் டோக்கன் வழங்கப்படும். 31ந் தேதி திங்கள்கிழமை முதல் டோக்கன் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இத்தொகையை பெற ஆதார் கார்டு, இரண்டு போட்டோ, வங்கி ரசீது நகல் கொண்டு வர வேண்டும் என்று வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துரித நடவடிக்கை எடுத்த எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்திற்கும், பல்லடம் வருவாய் துறைக்கும், காவல் துறைக்கும் கேத்தனூர் வங்கி நகை மீட்பு இயக்கம் நன்றியை தெரிவித்துள்ளது.
- விசாரணை நடத்திய போலீசார் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
- அவர் கூறிய பெயர், ஊர் உண்மை தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். அவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி, மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்துச் செல்வதுண்டு.
நேற்று ஒரு ஜோடியினர், கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். காலையில் அறையில் இருந்து வெளியே சென்ற அவர்கள் மாலையில் மீண்டும் விடுதி அறைக்குத் திரும்பினர்.
இரவு உணவுக்குப் பிறகு அவர்கள் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை அறையில் இருந்து ஆண் மட்டும் அரக்கப்பரக்க வெளியே ஓடி வந்தார். அவர் தன்னுடன் இருந்த பெண் எங்காவது நிற்கிறாரா? என தேடியதால் விடுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
அவரது பரபரப்பை பார்த்த விடுதி நிர்வாகிகள், அவரிடம் விசாரித்த போது கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது அறையில் இருந்த 9 பவுன் நகை மாயமாகி விட்டதாக முதலில் அவர் கூறினார்.
2 பேர் மட்டும் அறையில் இருந்த நிலையில் நகை மாயமானது எப்படி? என கேட்டபோது தன்னுடன் வந்த பெண்ணையும் காணவில்லை என அவர் கூறினார். எனவே அந்தப் பெண் தான் நகையை எடுத்துச் சென்றிருக்கலாம் என கருதப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது நகையை இழந்தவர் பெயர் ஆல்பர்ட் (வயது 52) என்பதும் நெல்லை டவுணைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவர் போலீசாரிடம் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கார் புரோக்கரான நான், தொழில் விஷயமாக சமூக வலைதளங்களில் எப்போதும் செயல்பாட்டில் இருப்பேன். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் என்னுடன் தங்கிய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் தனது பெயர் சத்யா (29) என்றும் சொந்த ஊர் மதுரை என்றும் தெரிவித்தார்.
கடந்த 3 மாதங்களாக அவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தேன். இந்த நிலையில் நேரில் சந்திக்கும் ஆவலுடன் அவரை கன்னியாகுமரி அழைத்து வந்தேன். இங்கு நேற்று பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தோம். படங்களும் எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு இரவில் விடுதியில் வந்து தங்கினோம்.
இந்த நிலையில் இன்று காலை சத்யாவை காணவில்லை. அறையில் எனது கைப்பையில் வைத்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, 2 பவுன் மதிப்புள்ள 2 தங்க மோதிரங்கள் ஆகியவையும் மாயமாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சத்யாவுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவையும் போலீசாரிடம் ஆல்பர்ட் கொடுத்துள்ளார். அதனை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்தப் பெண் இரவே விடுதியில் இருந்து சென்று விட்டாரா? அல்லது அதிகாலையில் தான் சென்றாரா? என்பது மர்மமாக உள்ளது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி மாயமான பெண்ணை தேடி வருகின்றனர். அவர் கூறிய பெயர், ஊர் உண்மை தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்தாலும் சிலர் அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர் என்பது வேதனையான ஒன்றுதான்.
- சென்னை பிராட்வே ஆச்சாரப்பன் தெருவை சேர்ந்த பெரோஸ் அப்பகுதியில் நகை வியாபாரம் செய்து வருகிறார்.
- பெரோஸ் கடையில் இருந்த சுமார் 1 கிலோ பழைய நகையை தங்கமாக உருக்கி இருவரிடம் கொடுத்துள்ளார்.
பிராட்வே:
சென்னை பிராட்வே ஆச்சாரப்பன் தெருவை சேர்ந்தவர் பெரோஸ் (வயது 40). இவர் இதே பகுதியில் நகை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழக்கரையைச் சேர்ந்த சதாம் உசேன் (30), மற்றும் அவரது நண்பர் ஷாஜகான் ஆகிய 2 பேர் அறிமுகமாகி உள்ளனர். அப்போது அவர்கள் சென்னை வேளச்சேரியில் தங்கி இருக்கும் தாங்கள் நகை வியாபாரம் செய்து வருவதாகவும், பழைய நகையை வாங்கி அதிக விலைக்கு விற்று தருவதாகவும் கூறி உள்ளனர்.
இதனால் ஏற்பட்ட பேராசையில் அவர்கள் கூறியதை உண்மையென நம்பிய பெரோஸ் அவர் கடையில் இருந்த சுமார் 1 கிலோ பழைய நகையை தங்கமாக உருக்கி இருவரிடம் கொடுத்துள்ளார்.
இதைப் பெற்றுக்கொண்ட சதாம் உசேன் மற்றும் ஷாஜகான் ஆகிய 2 பேரும் என்.எஸ்.சி போஸ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என கூறி தங்கத்துடன் தப்பி சென்றனர்.
இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெரோஸ் இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட தலைமறைவாக இருந்த சதாம் உசேனை நேற்று கைது செய்தனர். இவரது கூட்டாளியான ஷாஜகானை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையடுத்து பிடிபட்ட சதாம் உசேன் வீட்டிலிருந்து ரூ.20 லட்சம் மற்றும் 4 பவுன் தங்க நகையையும் போலீசார் கைப்பற்றினர்.
- கொள்ளையடித்த நகைகளை அனுராதா வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- நகை, பணத்தை சொத்துகளாக முதலீடு செய்திருக்கும் திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது.
திருச்சி:
திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் துரைசாமி. இவரது தம்பி சோமசுந்தரம். ரவுடிகளான இவர்கள் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சுமார் இரண்டரை ஆண்டுகள் போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த அவர்கள் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் நேற்று முன்தினம் உய்யக் கொண்டான் திருமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் கொள்ளையடித்த நகை மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக குழு மாயி அம்மன் கோவில் அருகே ரவுடிகளை அழைத்துக் கொண்டு சென்றபோது அவர்கள் போலீசாரை அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து துரைசாமி, சோமசுந்தரம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் ரவிச்சந்திரன் மனைவி அனுராதா (43) என்பவரது வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உறையூர் போலீசார் அனுராதாவை நேற்று கைது செய்தனர்.
மேலும் இதில் அனுராதாவின் மகன் ஹரிகரன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கடந்த 2022 ஜூன் மாதத்தில் உறையூர் சீனிவாசா நகர் பகுதியில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் அறிவழகன் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த சகோதர ரவுடிகள் துரைசாமி, ஆகியோருடன் ஹரிஹரன், வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் சென்றுள்ளனர். பின்னர் கொள்ளையடித்த நகைகளை அனுராதா வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட 30 பவுன் நகைகளில் 20 பவுன் நகை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 பவுன் நகையை கொள்ளையர்கள் விற்பனை செய்து செலவழித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே கைதான அனுராதாவுக்கும், ரவுடி துரைசாமிக்கும் இடையிலான தொடர்பு குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, 2009-ம் ஆண்டு காலகட்டங்களில் பாதி விலைக்கு நகைகளை வாங்கித் தருவதாக பல பேரிடம் அனுராதா பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
பின்னர் பணம் கொடுத்தவர்கள் அவரை துரத்தியபோது ரவுடி துரைசாமியிடம் அடைக்கலம் புகுந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கொள்ளையடித்த நகை, பணத்தை சொத்துகளாக முதலீடு செய்திருக்கும் திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது.
சிகிச்சையில் இருக்கும் ரவுடிகள் குணமடைந்து போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, மேலும் பல விடை தெரியாத வழக்குகளுக்கு விடை கிடைக்கும் என போலீசார் நம்புகின்றனர்.
- கோமதி நாயகம் அடகு வைத்த நகைகளை திருப்பி வைத்துக்கொண்டு ரமேஷ்குமாருக்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
- மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை காய்கறி தோட்டம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 42). இவர் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவுக்கு முன்பு தனக்கு சொந்தமான 246 பவுன் தங்கநகைகளை பாளையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்துள்ளார். ஆனால் அதன்பின்னர் கொரோனா பரவலால் வியாபாரம் சரியாக நடக்கவில்லை.
இதனால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் திணறி வந்துள்ளார். உடனே அவர் பாளை கே.டி.சி.நகர் பாலீன் தோட்டத்தை சேர்ந்த கோமதிநாயகம்(41) என்பவரிடம் சென்று, நகைகளை திருப்புவதற்கு பண உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
உடனே கோமதி நாயகம் அடகு வைத்த நகைகளை திருப்பி வைத்துக்கொண்டு ரமேஷ்குமாருக்கு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஆனாலும் ரமேஷ்குமார் நகைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதற்கான பணத்தை தந்துவிடுவதாகவும் கூறி உள்ளார்.
ஆனால் கோமதிநாயகம் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் தனது சகோதரரான செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கண்ணையாவிடம் அவர் தெரிவித்துள்ளார். உடனே அவர் ரமேஷ்குமாரை அழைத்து, கொடுத்த பணத்தை வாங்கி கொள்ளவேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் ஐகிரவுண்டு போலீசார் நடத்திய விசாரணையில், 246 பவுன் நகையை வங்கியில் இருந்து திருப்பி வைத்துக்கொண்டு அடகு வைத்த தொகையை மட்டும் திருப்பி தருவோம் என்று சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது சகோதரர் மிரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை மோசடி செய்து அபகரித்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- அடகு கடைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை அடமானம் வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
- மோசடி வழக்கில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து புதுவை மாநில போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார்லால் உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள ஒரு நகைக் கடையில் கவரிங் நகையை விற்க முயன்ற காரைக்காலை சேர்ந்த பரசுராமன் (வயது 30) என்பவரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில் (35), ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் (38), அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி உள்பட 7 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.
இவர்கள் கூட்டாக சேர்ந்து காரைக்கால், தமிழகத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதியில் உள்ள அரசு, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள், அடகு கடைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை அடமானம் வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே மோசடி வழக்கில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து புதுவை மாநில போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார்லால் உத்தரவிட்டார்.
- 3 பேர் கொண்ட கும்பல் முத்துராமலிங்கத்தை கட்டிப்போட்டு விட்டு ரூ.8 லட்சம் பணத்தை பறித்து சென்றது தெரியவந்துள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதியம்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள தெற்கு திட்டங்குளம் முத்துநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 48).
இந்நிலையில் முத்துராமலிங்கம் ரூ. 8 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் என்ற கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து போகவே குறுக்குச்சாலையில் உள்ள தனது நண்பர் ஜேக்கப் என்பவரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக ஜேக்கப் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது முத்து ராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து ஜேக்கப் ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் கழுத்து மற்றும் கை, கால்களில் துணியால் கட்டப்பட்ட நிலையில் முத்துராமலிங்கம் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், 3 பேர் கொண்ட கும்பல் முத்துராமலிங்கத்தை கட்டிப்போட்டு விட்டு ரூ.8 லட்சம் பணத்தை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? எந்த ஊரை சோந்தவர்கள்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துராமலிங்கம் மீது கோவில்பட்டி, கயத்தார், ஓட்டப்பிடாரம், நாரைகினறு ஆகிய போலீஸ் நிலையங்களில் நகை மோசடி செய்ததாக வழக்கு உள்ளது. இவர் குண்டாசில் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார். தன்னிடம் நகைகளை கொடுத்த நபர்களுக்கு பணத்தை திருப்பி தருவதற்காக ரூ. 8 லட்சத்தை எடுத்து கொண்டு சென்ற போது தான் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
- மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைசாமிபுரம் செங்குட்வடுவன் தெருவைச் சேர்ந்தவர் பாலையா (வயது 64). தமிழக அரசின் வணிகவரித்துறை உதவி ஆணையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரிடம் ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு தேவதானத்தை சேர்ந்த கணவன், மனைவியான எமர்சன் என்ற எலிமேசன் (42), சாந்தகுமாரி (38) ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.
அவர்கள் தாங்கள் ராஜபாளையத்தில் பி.எஸ். என்ற பெயரில் நகை அடகுக்கடை நடத்தி வருவதாகவும், குறைந்த வட்டியில் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
இதனை நம்பிய பாலையா தன்னிடம் இருந்த 440.850 கிராம் (55 பவுன்) தங்க நகைகளை தம்பதியினர் நடத்தி வந்த கடையில் அடகு வைத்தார். இந்த நகைகளை பாலையா தனது பெயரிலும், தனது மகன் அமர்நாத் பெயரிலும் அடகு வைத்திருந்தார்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் முதல் தவணையாக வட்டித்தொகையை செலுத்திய பாலையா தனது நகைகளை திருப்பி கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் நகைகளை திருப்பித்தர மறுத்த தம்பதியினர் பாலையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்பின்னரே அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பாலையா விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். மேலும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் அரசு அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வங்கி நிர்வாகித்தனர் நகைகளை ஆய்வு செய்த போது 10 பேரிடம் இருந்து பெறப்பட்ட நகைகள் அனைத்தும் போலி நகைகள் என தெரிய வந்தது.
- நகை மதிப்பீட்டாளர், போலி நகைகள் வைத்து பண மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி-ஈரோடு ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தற்காலிக நகை மதிப்பீட்டாளராக கோபி காளியண்ணன் தெருவை சேர்ந்த அங்கமுத்து (36) என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அங்கமுத்து கடந்த வருடம் அவருக்கு தெரிந்த 10 நபர்களை வரவழைத்து தனக்கு குடும்ப கஷ்டம் இருப்பதாகவும், அதனால் பணம் தேவைப்படுவதாகவும், என்னிடம் தனித்தனியாக நகைகள் உள்ளது. எனது பெயரில் வங்கியில் வைக்க முடியாது. எனவே உங்கள் கணக்கில் நகைகளை வைத்து பணத்தை எடுத்து கொடுக்க சொல்லி உள்ளார்.
அதன்படி அந்த 10பேரும் அங்கமுத்துவிடம் நகைகளை வாங்கி அதனை மீண்டும் வங்கியில் அடமானம் வைப்பது போல் வைத்து பணத்தை வாங்கி அவரிடமே கொடுத்துள்ளனர். நகை மதிப்பீட்டாளராக இருந்த அங்கமுத்து அந்த நகைகளை அவர்கள் பெயரில் கணக்கு வைத்து பணத்தையும் எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் அங்கமுத்து கடந்த நவம்பர் மாதம் 25-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 5-ந் தேதி வரை உடல்நலம் சரி இல்லை என்று கூறி விடுப்பு எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த வங்கி நிர்வாகித்தனர் நகைகளை ஆய்வு செய்த போது 10 பேரிடம் இருந்து பெறப்பட்ட நகைகள் அனைத்தும் போலி நகைகள் என தெரிய வந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்த போது எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும், அங்கமுத்து தான் நகைகளை கொடுத்து அடமானம் வைத்து பணம் பெற்று கொண்டார் என்றும் கூறினர். அங்கமுத்து ரூ. 41 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து வங்கியின் துணை மேலாளர் இதுகுறித்து கவுந்தபாடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அங்கமுத்துவை தேடி வந்தனர்.
இந்நிலையில் அங்கமுத்துவை கவுந்தப்பாடி போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை மதிப்பீட்டாளர், போலி நகைகள் வைத்து பண மோசடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வானூர் போலீசாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்
- ஒவ்வொரு வீடாக சென்று நகை பாலீஷ் போட வேண்டுமாக எனக் கேட்டார்.
விழுப்புரம்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிந்துராம் (வயது 40). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் தங்கியுள்ளார். வீடு வீடாக சென்று நகை பாலீஷ் போடும் தொழில் செய்கிறார். இவர் வானூரை அடுத்த எடப்பாளையம் கிராமத்திற்கு நேற்று சென்றார். அங்கு ஒவ்வொரு வீடாக சென்று நகை பாலீஷ் போட வேண்டுமாக எனக் கேட்டார்.
அப்போது அக்கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி தனலட்சுமி (வயது 36), கைகளில் அணியும் தங்க வளையலுக்கு பாலீஷ் போட்டு தரும்படி கொடுத்தார். இதனை வாங்கிய பிந்துராம், தான் வைத்திருந்த ஒரு திரவத்தில் தங்க வளையலை போட்டு எடுத்தார்.வெளியில் எடுத்தபோது தங்க வளையல் 3 துண்டுகளாக வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி, பிந்துராமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பயந்து போன பிந்துராம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை பொதுமக்களிடம் கூறினார்.
சந்தேகமடைந்த பொதுமக்கள் பிந்துராமை பிடித்து சென்று வானூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிந்துராம், நகை பாலீஷ் போடுவது போல நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிந்துராமை கைது செய்த வானூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வடமாநில வாலிபர் தங்க நகையை பாலீஷ் போடுவது போல நடித்து மோசடி செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நகையை பரிசோதித்து பார்த்தபோது அது கவரிங் நகை என்று தெரியவந்தது.
- தங்க நகை எனக்கூறி கவரிங் நகையை விற்க முயன்ற 3 பேர் பிடிபட்ட சம்பவம் சூளகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் நாரூரான் (வயது29). இவர் சூளகிரி பஸ் நிறுத்தம் அருகே கமிஷனுக்காக பணபரிவர்த்தனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த5-ந் தேதி நாரூரான் கடையில் இருந்தபோது பெண் உள்பட 3 பேர் வந்தனர்.
அப்போது தங்களிடம் அரை பவுன் தங்க நகை உள்ளது என்றும், அதனை அடமானமாக வைத்துக் கொண்டு பணம் தருவீர்களா? என்று கேட்டனர். இதனை நம்பிய அவர் அந்த நகையை வாங்கி கொண்டு அவர்களுக்கு ரூ.2500-யை கொடுத்துள்ளார்.
அவர்கள் சென்றபிறகு அந்த நகையை பரிசோதித்து பார்த்தபோது அது கவரிங் நகை என்று தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் செய்வதறியாது திணறினார்.
இந்த நிலையில் அதே 3 பேர் மீண்டும் நேற்று நாரூரான் கடைக்கு வந்துள்ளனர். அப்போது தங்களிடம் 1900 கிராம் தங்க நகைகள் உள்ளதாகவும், அதனை எடுத்துக்கொண்டு பணம் தருமாறு கேட்டுள்ளனர்.
இதனை கேட்ட நாரூரான் மர்ம நபர்கள் தன்னை அவர்கள் ஏமாற்றிய விவரம் ஏதும் அறியாதவர்போல் நடித்து அந்த நகைகளை பெற்றுக்கொள்வதாகவும், அதற்குண்டான பணம் தன்னிடம் இல்லை என்றும், சிறிது நேரத்தில் நண்பர்கள் எடுத்து கொண்டு வந்து விடுவார்கள் என்று கூறி 3 பேரையும் கடையில் அமர வைத்துள்ளார்.
இதனை நம்பிய அந்த 3 பேரும் கடையில் இருந்தனர். அதற்குள் நாரூரான் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல்களை தெரிவித்தார். அவர்கள் உடனே சூளகிரி போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த கிஷோர் (25), ராஜூ (35), மீனா (30) ஆகிய 3 பேர், தங்க நகை விற்பது போல் நடித்து கவரிங் நகையை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பெண் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தங்க நகை எனக்கூறி கவரிங் நகையை விற்க முயன்ற 3 பேர் பிடிபட்ட சம்பவம் சூளகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






