search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bank Management"

    • 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    • இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களிடம் நகைகளை வாங்கிக் கொண்டு அவர்களது சிட்டா,ஆதார் கார்டு ஆகியவற்றை ஜெராக்ஸ் எடுத்து வர அனுப்பி விட்டுள்ளார்.

    அந்தச் சமயத்தில் விவசாயிகள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து வருவது அவரது வழக்கமாக இருந்துள்ளது.இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேகரிடமிருந்து 145 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.இந்தநிலையில் வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்துகேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    நேற்று கேத்தனூரில் வங்கி முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கி நிர்வாகம் தரப்பில் மாலை பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளனர் என தெரிவித்ததை அடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்குவந்தது. இதையடுத்து நேற்று மாலை கேத்தனூர் வங்கிக் கிளையில், பாரத் ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் புவனேஸ்வரி, பல்லடம் தாசில்தார் நந்தகோபால், காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, உள்ளிட்ட அதிகாரிகள், வங்கி நகை மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், நகை மீட்பு இயக்கத்தினர், விவசாயிகள்பாதுகாப்பு சங்கத்தினர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் நகை மோசடியால் பாதிக்கப்பட்ட 584 பேருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என வங்கி தரப்பில் அறிவிக்கப்பட்டது. வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்களின் கணக்கில் இழப்பீடு தொகை வரவு வைக்கப்படும் என்றும், வங்கியில் இருந்து நகை திருப்பி எடுத்தவர்களுக்கு, அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும் மேலும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க இன்று முதல் டோக்கன் வழங்கப்படும். 31ந் தேதி திங்கள்கிழமை முதல் டோக்கன் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இத்தொகையை பெற ஆதார் கார்டு, இரண்டு போட்டோ, வங்கி ரசீது நகல் கொண்டு வர வேண்டும் என்று வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துரித நடவடிக்கை எடுத்த எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்திற்கும், பல்லடம் வருவாய் துறைக்கும், காவல் துறைக்கும் கேத்தனூர் வங்கி நகை மீட்பு இயக்கம் நன்றியை தெரிவித்துள்ளது.

    ×