search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறி முன்னாள் வணிகவரித்துறை அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடி
    X

    குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறி முன்னாள் வணிகவரித்துறை அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடி

    • நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
    • மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைசாமிபுரம் செங்குட்வடுவன் தெருவைச் சேர்ந்தவர் பாலையா (வயது 64). தமிழக அரசின் வணிகவரித்துறை உதவி ஆணையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் இவரிடம் ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு தேவதானத்தை சேர்ந்த கணவன், மனைவியான எமர்சன் என்ற எலிமேசன் (42), சாந்தகுமாரி (38) ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.

    அவர்கள் தாங்கள் ராஜபாளையத்தில் பி.எஸ். என்ற பெயரில் நகை அடகுக்கடை நடத்தி வருவதாகவும், குறைந்த வட்டியில் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய பாலையா தன்னிடம் இருந்த 440.850 கிராம் (55 பவுன்) தங்க நகைகளை தம்பதியினர் நடத்தி வந்த கடையில் அடகு வைத்தார். இந்த நகைகளை பாலையா தனது பெயரிலும், தனது மகன் அமர்நாத் பெயரிலும் அடகு வைத்திருந்தார்.

    குறிப்பிட்ட கால இடைவெளியில் முதல் தவணையாக வட்டித்தொகையை செலுத்திய பாலையா தனது நகைகளை திருப்பி கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆனால் நகைகளை திருப்பித்தர மறுத்த தம்பதியினர் பாலையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்பின்னரே அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து பாலையா விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். மேலும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் முன்னாள் அரசு அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட எமர்சன் என்ற எலிமேசன், சாந்தகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×