search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelry Scam"

    • கொள்ளையடித்த நகைகளை அனுராதா வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    • நகை, பணத்தை சொத்துகளாக முதலீடு செய்திருக்கும் திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது.

    திருச்சி:

    திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் துரைசாமி. இவரது தம்பி சோமசுந்தரம். ரவுடிகளான இவர்கள் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சுமார் இரண்டரை ஆண்டுகள் போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த அவர்கள் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் நேற்று முன்தினம் உய்யக் கொண்டான் திருமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் கொள்ளையடித்த நகை மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக குழு மாயி அம்மன் கோவில் அருகே ரவுடிகளை அழைத்துக் கொண்டு சென்றபோது அவர்கள் போலீசாரை அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.

    இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து துரைசாமி, சோமசுந்தரம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் ரவிச்சந்திரன் மனைவி அனுராதா (43) என்பவரது வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உறையூர் போலீசார் அனுராதாவை நேற்று கைது செய்தனர்.

    மேலும் இதில் அனுராதாவின் மகன் ஹரிகரன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கடந்த 2022 ஜூன் மாதத்தில் உறையூர் சீனிவாசா நகர் பகுதியில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் அறிவழகன் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த கொள்ளை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த சகோதர ரவுடிகள் துரைசாமி, ஆகியோருடன் ஹரிஹரன், வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் சென்றுள்ளனர். பின்னர் கொள்ளையடித்த நகைகளை அனுராதா வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    கொள்ளையடிக்கப்பட்ட 30 பவுன் நகைகளில் 20 பவுன் நகை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 பவுன் நகையை கொள்ளையர்கள் விற்பனை செய்து செலவழித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே கைதான அனுராதாவுக்கும், ரவுடி துரைசாமிக்கும் இடையிலான தொடர்பு குறித்து போலீஸ் தரப்பில் கூறும் போது, 2009-ம் ஆண்டு காலகட்டங்களில் பாதி விலைக்கு நகைகளை வாங்கித் தருவதாக பல பேரிடம் அனுராதா பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.

    பின்னர் பணம் கொடுத்தவர்கள் அவரை துரத்தியபோது ரவுடி துரைசாமியிடம் அடைக்கலம் புகுந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கொள்ளையடித்த நகை, பணத்தை சொத்துகளாக முதலீடு செய்திருக்கும் திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது.

    சிகிச்சையில் இருக்கும் ரவுடிகள் குணமடைந்து போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, மேலும் பல விடை தெரியாத வழக்குகளுக்கு விடை கிடைக்கும் என போலீசார் நம்புகின்றனர்.

    ×