search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்படுத்தி கார் புரோக்கரை மயக்கி 9 பவுன் நகையை அபேஸ் செய்த இளம்பெண்
    X

    இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்படுத்தி கார் புரோக்கரை மயக்கி 9 பவுன் நகையை அபேஸ் செய்த இளம்பெண்

    • விசாரணை நடத்திய போலீசார் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
    • அவர் கூறிய பெயர், ஊர் உண்மை தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். அவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி, மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்துச் செல்வதுண்டு.

    நேற்று ஒரு ஜோடியினர், கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். காலையில் அறையில் இருந்து வெளியே சென்ற அவர்கள் மாலையில் மீண்டும் விடுதி அறைக்குத் திரும்பினர்.

    இரவு உணவுக்குப் பிறகு அவர்கள் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை அறையில் இருந்து ஆண் மட்டும் அரக்கப்பரக்க வெளியே ஓடி வந்தார். அவர் தன்னுடன் இருந்த பெண் எங்காவது நிற்கிறாரா? என தேடியதால் விடுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    அவரது பரபரப்பை பார்த்த விடுதி நிர்வாகிகள், அவரிடம் விசாரித்த போது கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது அறையில் இருந்த 9 பவுன் நகை மாயமாகி விட்டதாக முதலில் அவர் கூறினார்.

    2 பேர் மட்டும் அறையில் இருந்த நிலையில் நகை மாயமானது எப்படி? என கேட்டபோது தன்னுடன் வந்த பெண்ணையும் காணவில்லை என அவர் கூறினார். எனவே அந்தப் பெண் தான் நகையை எடுத்துச் சென்றிருக்கலாம் என கருதப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நகையை இழந்தவர் பெயர் ஆல்பர்ட் (வயது 52) என்பதும் நெல்லை டவுணைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அவர் போலீசாரிடம் கொடுத்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கார் புரோக்கரான நான், தொழில் விஷயமாக சமூக வலைதளங்களில் எப்போதும் செயல்பாட்டில் இருப்பேன். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் என்னுடன் தங்கிய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண் தனது பெயர் சத்யா (29) என்றும் சொந்த ஊர் மதுரை என்றும் தெரிவித்தார்.

    கடந்த 3 மாதங்களாக அவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தேன். இந்த நிலையில் நேரில் சந்திக்கும் ஆவலுடன் அவரை கன்னியாகுமரி அழைத்து வந்தேன். இங்கு நேற்று பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தோம். படங்களும் எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு இரவில் விடுதியில் வந்து தங்கினோம்.

    இந்த நிலையில் இன்று காலை சத்யாவை காணவில்லை. அறையில் எனது கைப்பையில் வைத்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, 2 பவுன் மதிப்புள்ள 2 தங்க மோதிரங்கள் ஆகியவையும் மாயமாகி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் சத்யாவுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவையும் போலீசாரிடம் ஆல்பர்ட் கொடுத்துள்ளார். அதனை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்தப் பெண் இரவே விடுதியில் இருந்து சென்று விட்டாரா? அல்லது அதிகாலையில் தான் சென்றாரா? என்பது மர்மமாக உள்ளது.

    இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி மாயமான பெண்ணை தேடி வருகின்றனர். அவர் கூறிய பெயர், ஊர் உண்மை தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்தாலும் சிலர் அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர் என்பது வேதனையான ஒன்றுதான்.

    Next Story
    ×