என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி.யுடன் மகாராஜன் எம்.எல்.ஏ. மோதல்- பயனாளிகள் அதிர்ச்சி
    X

    நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி.யுடன் மகாராஜன் எம்.எல்.ஏ. மோதல்- பயனாளிகள் அதிர்ச்சி

    • வரவேற்பு பேனரில் தனது படம் இடம்பெறாமல் இருந்ததை பார்த்து தங்கத்தமிழ்ச்செல்வன் கோவத்துடன் உள்ளே வந்தார்.
    • கலெக்டர் உள்பட அதிகாரிகள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆண்டிபட்டி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் பொதுமக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக 1256 நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டார்.

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒரு முகாம் வீதம் ஒவ்வொரு வட்டாரத்திலும் சுழற்சி முறையில் நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இம்முகாமில் ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படும். மேலும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், இந்திய மருத்துவம் (ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா, ஹோமியோபதி) ஆகிய 17 வகையான துறை சிறப்பு மருத்துவர்கள் மூலமாக மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளியில் இந்த முகாமிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், எஸ்.பி. சினேகாபிரியா, தங்கத்தமிழச்செல்வன் எம்.பி., மகாராஜன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வந்திருந்தனர். வரவேற்பு பேனரில் தனது படம் இடம்பெறாமல் இருந்ததை பார்த்து தங்கத்தமிழ்ச்செல்வன் கோவத்துடன் உள்ளே வந்தார்.

    அதன் பிறகு பயனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இதனை கலெக்டர் முன்னிலையில் மகாராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார். அப்போது தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. அவரிடம் இருந்து அடையாள அட்டையை பறித்து தான் வழங்க முயன்றார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருமையில் தரக்குறைவான வார்த்தைகளில் பேசிக் கொண்டதால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் உள்பட அதிகாரிகள் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் அதைக் கேட்காமல் தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. பாதியிலேயே மேடையில் இருந்து வெளியேறி கூட்டத்தை புறக்கணித்தார். அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பாராளுமன்ற உறுப்பினருக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம் விழாவில் தனக்கு வழங்கப்படவில்லை என தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. தெரிவித்து வெளியேறினார். இதனால் முகாமிற்கு வந்த பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் பேசிக்கொண்ட வீடியோ சமூக வளைதலங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×