என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
    • ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

    தேமுதிகவும் தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தொகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை பிரேமலதா தொடங்கி உள்ளார்.

    தொடர்ந்து ஆகஸ்ட் 4ல் ஆவடி, ஆகஸ்ட் 5ல் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 6ல் வேலூர், ஆகஸ்ட் 7ல் திருப்பத்தூர், ஆகஸ்ட் 8ல் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 9ல் தருமபுரி, ஆகஸ்ட் 11ல் சேலம், ஆகஸ்ட் 13ல் கள்ளக்குறிச்சி, ஆகஸ்ட் 14ல் நாமக்கல், ஆகஸ்ட் 16ல் கரூர், ஆகஸ்ட் 17ல் பெரம்பலூர், ஆகஸ்ட் 18ல் அரியலூர், ஆகஸ்ட் 19ல் மயிலாடுதுறை, ஆகஸ்ட் 20ல் கடலூர் மற்றும் ஆகஸ்ட் 22ல் விழுப்புரம் பகுதிகளில் பிரசார பயணத்தை மேற்கொள்கிறார்.

    ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

    அதன்படி, தேமுதிக சார்பில் 'இல்லம் தேடி.. உள்ளம் நாடி..' என்ற பெயரில் பிரசார சுற்றுப் பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார்.

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுடன் விஜய பிரபாகரனும் பிரசாரப் பயணத்தில் பங்கேற்றுள்ளார்.

    • பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம், சரவணப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    பழனி:

    பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (4-ந் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்கரைப்பட்டி, கீரனூர், கொழுமம்கொண்டான், ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, நால்ரோடு, சந்தன்செட்டிவலசு, சங்கம்பாளையம், பெரிச்சிபாளையம், சரவணப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பழனி மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    • திரைப்பிரபலங்கள் பலர் மதன் பாப் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.
    • மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    சினிமா குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.

    புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.

    அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அங்கு, திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், இன்று பிற்பகலில் மதன் பாப்பின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    இந்நிலையில், மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் மதன் பாப் உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    • அலுவலகத்தில் பல அதிகாரிகள் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டனர்.
    • விரைவில் புதிய நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

    சென்னை:

    டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி மோசடி புகார் தொடர்பாக அதன் தலைமையகம் மற்றும் எழும்பூரில் உள்ள நிர்வாக இயக்குனர் விசாகனின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர்.

    நிர்வாக இயக்குனர் விசாகன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அலுவலகத்தில் பல அதிகாரிகள் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டனர்.

    இந்த சோதனைக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் முறையிட்ட பிறகு மேற்கொண்டு விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் டாஸ்மாக் அதிகாரிகள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகினார்கள்.

    இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வேறு துறைக்கு இடமாற்றம் கேட்டுள்ளதாகவும் அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. எனவே விரைவில் புதிய நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

    • வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.
    • தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

    சென்னை:

    தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.

    வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில், தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    இந்த தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். இப்போது முதல் கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், வி.எப்.6, வி.எப்.7 வகை கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யப்பட்டுள்ளன.

    வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா நாளை (4-ந்தேதி) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நாளை காலை தூத்துக்குடி செல்கிறார்.

    அங்கிருந்து கார் மூலம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் ஆலையை திறந்து வைத்து கார் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.

    இதை தொடர்ந்து தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். மாநாட்டில் பல்வேறு தொழில் முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்படுகிறது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

    நிகழ்ச்சி முடிந்ததும் மதியம் 12.45 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் சென்று தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    • அவரது ஆதங்கம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.
    • நான் அவரோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.

    சென்னை:

    சென்னையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவரது ஆதங்கம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அவரை எங்கள் கூட்டணிக்கு மீண்டும் கொண்டு வர டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

    நான் அவரோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். ஓ.பன்னீர் செல்வம் தன் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் என்றார். பேட்டியின் போது, முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மற்றும் கரிகாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
    • சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும், செல்போன் டவர்களையும் ஆய்வு செய்து வந்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ள புதுபிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் ராஜா (45). இவர் விழுப்புரத்தில் வாடகை வீட்டில் தங்கி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 158 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இது குறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், பண்ருட்டி டி.எஸ்.பி. ராஜா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், பண்ருட்டி குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும், செல்போன் டவர்களையும் ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்தது வேலூரை சேர்ந்த சுரேஷ்குமார் (35) மற்றும் அவரது கூட்டாளிகளாக தர்மபுரியை சேர்ந்த முருகன், அசோக்குமார், தினேஷ்குமார், ஜெகதீசன் என 5 பேர் கும்பல் என தெரியவந்தது. இதில் சுரேஷ் இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதனையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இது குறித்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் இருக்கும்.
    • ஆடு, மாடுகளுக்கும் ஓட்டுரிமை வேண்டும்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி மேய்ச்சலுக்காக தனது மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற போது வனத்துறையினர் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வனத்துறையினர் சமரசம் பேசி முடிவுக்கு கொண்டு வந்தனர்.

    இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது போல் சிலர் அரியவகை மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனை கண்டித்து தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அடவுபாறையில் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதன்படி இன்று அவர் அடவுப்பாறையில் கால்நடைகளுடன் வனப்பகுதிக்குள் நுழைய முயன்றார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் என ஏராளமானோர் சென்றனர்.



    ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அனுமதியில்லை என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சீமான் கூறுகையில்,

    மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் இருக்கும். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    எனவே ஆடு, மாடுகளுக்கும் ஓட்டுரிமை வேண்டும். இலங்கையில் நடந்தது மட்டும் இனப்படுகொலை அல்ல. தமிழகத்தில் மது பழக்கத்தை பழக்கி சாமானிய மக்களை கொல்வதும் இனப்படுகொலைதான். வெளி மாநிலத்தவர்களுக்கு இங்கு அனுமதி கொடுத்தால் விரைவில் அவர்கள் நம்மை வெளியே அனுப்பி விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து மலையேறி மாடு மேய்க்கும் சீமானின் போராட்டத்தை தடுத்து வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் வனத்துறையினரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர் வனப்பகுதிக்குள் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் விதித்த தடையை மீறி சீமான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏறபட்டுள்ளது.

    • பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.
    • கவினின் தந்தை சந்திரசேகரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் தெரிவித்து வந்தனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர்.

    கவின் கடந்த 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ணகுமாரியின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அவர்களும் விசாரணையை தொடங்கினர்.

    இந்நிலையில் கவினின் தந்தை சந்திரசேகரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் கவின் தந்தை சந்திரசேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கவின் தந்தை சந்திர சேகருடன் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பீடி இலைகள் இலங்கைக்கு படகுமூலம் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கடற்கரைபகுதி வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை வழியாக பீடி இலை, மஞ்சள் உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான ஏராளமான பொருட்கள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதில் ஈடுபடக் கூடியவர்களை கைது செயயப்படுவதும், பொருட்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதனை தடுக்க காவல்துறையும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் குலசேகரப்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதி வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு படகுமூலம் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது,

    இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், மற்றும் குலசேகரப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது மனப்பாடு வடக்கு கடற்கரைபகுதி வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 35 கிலோ எடை கொண்ட பீடி இலை பண்டல்கள் 85 மூட்டைகளில் இருந்தது தெரிய வந்தது இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. அதனை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.
    • செல்போனில் காட்ட வேண்டாம், ஆதாரமாக கொடுங்கள் என்றார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் 3 முறை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகா நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக 6 முறை அழைத்தும் நயினார் நாகேந்திரன் அழைப்பை ஏற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருந்தார்.

    இதற்கு நயினார் நாகேந்திரன், ஓ பன்னீர்செல்வம் என்னை அழைக்கவில்லை, நான் தான் அவரை செல்போனில் அழைத்தேன். ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர அவரிடம் ஆதாரம் ஏதும் இருக்காது. அவர் என்னை குறை கூறுகிறார். நான் அவரைப்பற்றி குறை கூற மாட்டேன். ஏற்கனவே ஏற்பட்ட தொடர்பை அடுத்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். ஒரு முடிவு எடுத்துவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் ஒரு காரணத்தை கூறுகிறார் என்றார்.

    இதனை தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்திப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் காண்பித்தார். அதில் கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி மற்றும் ஏப்.12 ஆகிய தேதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.

    இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் காட்டிய குறுஞ்செய்தி தொடர்பாக நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, செல்போனில் காட்ட வேண்டாம், ஆதாரமாக கொடுங்கள் என்று கூறி மேலும் பேச முற்பட்டபோது பிறகு பேசலாம் என கூறி நயினார் நாகேந்திரனை அண்ணாமலை அழைத்து சென்றார். 

    • அணையில் நீர்வரத்து மற்றும் திறப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.45 அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

    முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினாலும் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.14 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1578 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5355 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    ஏற்கனவே 66 அடியை எட்டிய போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 68.50 அடியில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டும்போது 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படும். இதனால் அணையில் நீர்வரத்து மற்றும் திறப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.45 அடியாக உள்ளது.1398 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1867 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5737 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    பெரியாறு அணை 10.4, தேக்கடி 4.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    ×