என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுற்றுச்சூழல் உறுதிமொழியை வெளியிட்டார்.
திருத்தணி:
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம் என்ற தலைப்பில் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் மாநாடு நடைபெறும் இடத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த நிலையில் அருங்குளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் இன்று மரங்களின் மாநாடு நடந்தது. மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நம்மாழ்வார், சுந்தர்லால் பகுகுணா, மிரா அல்பாசா, வங்காரி மாத்தாய், நடிகர் விவேக் ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவர்களின் நினைவாக மரக்கன்றுகளை நட்டார்.
மேலும் சுற்றுச்சூழல் உறுதிமொழியை வெளியிட்டார். மாநாட்டு ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு புத்தகங்கள் கொடுத்து சீமான் பாராட்டினார். மரங்கள் தொடர்பான கவிதை புத்தகங்களை சீமான் வெளியிட்டார். பின்னர் மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காக பேசுவோம் என்ற தலைப்பில் பேசினார்.
- சென்னையில் சமீபத்தில் இரவில் கனமழை, பகலில் வெயில் என தட்பவெப்ப நிலை மாறி மாறி நிலவுகிறது.
- பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த காய்ச்சல்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சமீப காலமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தினமும் 1,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு, டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவி வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் சமீபத்தில் இரவில் கனமழை, பகலில் வெயில் என தட்பவெப்ப நிலை மாறி மாறி நிலவுகிறது. இதன் காரணமாக காய்ச்சல் பரவி பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உடல் சோர்வு, வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. சிகிச்சை பெற்றாலும் உடனடியாக குணமாவதில்லை. சிலருக்கு 2 வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி பாதிப்பு தொடர்கிறது. இந்த காய்ச்சலால் நடுத்தர வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த காய்ச்சல்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெறாவிட்டால் டெங்கு, நிமோனியா போன்ற இணை காய்ச்சல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:-
சென்னையில் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக இருமல், சளியுடன் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது 70 சதவீதத்துக்கு மேல் 'இன்புளூயன்ஸா' காய்ச்சல் பாதிப்பு தான் உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
மழை விட்டு விட்டு பெய்வதால் நன்னீரில் வளரக்கூடிய 'ஏடிஸ்' கொசுக்கள் அதிகளவில் இனப்பெருக்கமாக வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும்.
எனவே திறந்தவெளி இடங்கள், வீடு சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்து, முககவசம் அணிவதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.
- வரும் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத்தான் சீமானும் விஜய்யும் போட்டியிடுகிறார்கள்.
முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. எல்லா மாநில முதல்வர்களும் தங்கள் மாநில மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை. இதன் மூலம் அவர் எந்த அளவுக்கு வாக்கு வங்கி அரசியல் எண்ணத்தோடு செயல்படுகிறார் என்பது தெரியும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் தான் போட்டி. தமிழகத்தில் அ.தி.மு.க.வு டன் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.
பா.ஜனதா பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடுகளை நடத்தி அடிமட்டத்தில் பா.ஜ.க.வின் வலிமையினை வெளிப்படுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வரும் அவலநிலையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ கருத்து திணிப்புகளை புகுத்தி தி.மு.க. தான் முன்னிலையில் இருப்பது போல் கூறி வருகிறார்கள்.
ஆனால் கள நிலவரம் தி.மு.க.வுக்கு எதிராகவே உள்ளது. அதை மறைக்கவே நாடகம் போடுகிறார்கள். தி.மு.க.வின் செல்வாக்கு மிகப்பெரிய அளவு சரிந்து இருக்கிறது. இன்னும் 8 மாதத்தில் மேலும் குறையும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதியானது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் சித்தாந்தமும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி வருகிறது. தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் அதை மக்கள் நேரிலேயே பார்த்தார்கள்.
இந்த அவல ஆட்சி மாற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை தேர்தல் மூலம் மக்கள் கொண்டு வருவார்கள். மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து வரும் திமுக கூட்டணிக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
நடிகர் விஜய் அடுத்த முதலமைச்சர் நான் தான் என்பது போல் பேசி வருகிறார். ஆனால் மூன்றாவது இடத்துக்குத்தான் சீமானும் விஜய்யும் போட்டியிடுகிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்தபோது மாற்றத்தை தருவார் என்று மக்கள் நம்பினார்கள். ஆரம்பத்தில் காமராஜர், அஞ்சலை அம்மாள் போன்றோரின் படத்தை போட்டு மக்கள் மத்தியில் வலம் வந்தார்.
ஆனால் இப்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் படத்தை போட்டு மக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். ஆக இவருக்கு நிலையான கொள்கை எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர். அரசியல் பின்புலம் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கவர்ந்து ஆட்சிக்கு வந்தவர். விஜயகாந்தும் அரசியல் அனுபவத்தோடு தான் அரசியலுக்கு வந்தார். ஆனால் விஜய் ஒவ்வொரு மாநாட்டை நடத்தும் போதும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்.
அவர் அரசியலில் வெற்றிக்கு பக்கம் கூட நெருங்கவில்லை. தொண்டர்கள் கூட நெருங்க முடியாத தலைவராக தான் விஜய் இருக்கிறார். எந்த கட்சியிலும் கேள்விப்படாத பவுன்சர் கலாச்சாரம் அந்த கட்சியில் தான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்திலிருந்தும், அரசியல் களத்திலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும்.
- எனக்கு எந்த சுயநலமும் கிடையாது மக்கள் நலத்தை மட்டுமே எப்பொழுதும் நான் சிந்திக்கின்றேன்.
"அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும். ஆட்சியமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுகதான் ஒரே தீர்வு, ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்" என்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் நம் இருபெரும் தலைவர்களின் தலைமையில் சிறப்புடன் செயலாற்றி வந்துள்ளது. கழகத்தை தோற்றுவித்து தொடர் வெற்றிகளைப் பெற்று, 10 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தமிழ் மண்ணில், மக்களுக்கான மகத்தான நல்லாட்சியை நடத்தியவர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு மாற்றார் பலரும் இனி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இயக்கமே இருக்காது. அது சிதறுண்டு விடும் என கனவு கண்டு கொண்டிருந்த நேரத்தில், இதோ தாயாக நான் இருக்கிறேன்.
கழகத்தையும் தொண்டர்களையும், தமிழக மக்களையும் காப்பேன் என சூளுரைத்து, விரோதிகளின் சதிச்செயல்களையெல்லாம் துணிச்சலுடன் முறியடித்து, சுமார் 35 ஆண்டுகளாக கழகத்தை கட்டி காப்பாற்றி, சேதாரமின்றி வளர்த்தெடுத்து, 6 முறை தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்று அனைத்துத் தரப்பு மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்று நல்லதொரு ஆட்சியை வழங்கியவர் நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா.
இவற்றிற்கெல்லாம் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருக்கிறது என்று எண்ணிப்பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். "ஆண்டுகளை கடந்தும் அனைத்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நின்று நிலைத்திருக்கும், அண்ணாவின் உருவம் பொறிந்த கொடி என்றும், எங்கும், எப்பொழுதும் பட்டொளி வீசி பறக்கும்" என்று புரட்சித்தலைவர் கூறினார். "இன்னும் 100 ஆண்டுகளையும் கடந்து மக்களுக்காகவே நம் இயக்கம் இயங்கும்" என்று தம் புரட்சித்தலைவி சட்டப்பேரவையிலேயே குளுரைத்தார்.
ஆனால் இன்று நிலைமை வேறாக உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கம், இன்றைக்கு ஏலனமாக பேசும் அளவுக்கு இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
நம் இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் இன்று கழகம் பெரும் சோதனைக்கு ஆளாகி உள்ளது. புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோரால் அடையாளம் காட்டப்பட்ட, அவர்கள் இருவரது வழியிலும் நடைபோட்ட நம்மில் சிலர் பிரிந்து கிடக்கிறோம்.
கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள், விலகி இருப்பவர்கள் என அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து நம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் மனமாச்சர்யங்களை மறந்து, கருந்து வேறுபாடுகளை கடந்து கட்சி முக்கியம் கட்சியின் நலன் முக்கியம், கட்சியின் எதிர்காலம் முக்கியம் கட்சியின் வெற்றி முக்கியம் அந்த வெற்றி தி.மு.க. என்ற தீய சக்தியை வரும் சட்டமன்ற தேர்தலில் வீழ்த்துவதாக அமைவது மிக முக்கியம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டிய முக்கிய தருணம் இது.
எந்த தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்திலிருந்தும், அரசியல் களத்திலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என்று புரட்சித்தலைவரும். புரட்சித்தலைவியும் பாடுபட்டார்களோ, அந்த தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக் கூடிய சூழலை நாம் உருவாக்கி விடக்கூடாது. அதனால்தான் கழகம் ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். எனக்கு எந்த சுயநலமும் கிடையாது மக்கள் நலத்தை மட்டுமே எப்பொழுதும் நான் சிந்திக்கின்றேன்.
கழகம்தான் எனது ஒரே குடும்பம். யாராலும் என்னை ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது. நான் எப்பொழுதும் சுயமாக சிந்தித்து அதன்படி செயல்படுகிறேன். எனக்கு நம் கழகத்தினர் யார் மீதும் எந்தவித கோபமோ, வருத்தமோ இல்லை. நான் இதைவிட கடினமான சூழ்நிலைகளையெல்லாம் எனது சிறு வயதிலேயே கடந்து வந்துவிட்டேன். நம் இருபெரும் தலைவர்களிடம் நான் பெற்ற பயிற்சி என்னை பக்குவப்படுத்தி இருக்கிறது.
கழகத்தின் நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜி.ஆரின் அணுகுமுறை எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. உங்களில் ஒருத்தியாக உங்களின் சகோதரியாக இருந்து அனைவருடன் ஒன்றிணைந்து கழகப் பணியாற்றவே நான் விரும்புகிறேன். கட்சியின் நலன் கருதியும். தமிழக மக்களின் நலன் கருதியும் தான் இதுநாள் வரை ஒவ்வொரு முடிவுகளையும் நாள் மேற்கொண்டு இருக்கிறேன்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூட கழகம் வெற்றிபெற என்னால் எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணிதான் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கியிருந்து அமைதி காத்தேன் ஆனால் கழகம் வெற்றியை பெற முடியவில்லை. அதன்பிறகு நடந்த எந்த தேர்தலிலும் கழகம் இன்றுவரை வெற்றி பெறமுடியாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
ஆனால், இதை இப்படியே இனியும் வேடிக்கை பார்ப்பது நம் இருபெரும் தலைவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகிவிடும். மேலும், தமிழக மக்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய அநீதியாகிவிடும். எனவே "நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இவி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" என்ற மனதுடன் அனைவரும் ஒன்றிணைவதுதான், தமிழக மக்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய உதவியாக அமையும். தம் இருபெரும் தலைவர்களின் எண்ணங்களையும் அது ஈடேற்றிடும்.
இது தொண்டர்களின் இயக்கம், தொண்டர்களின் முடிவே இறுதியானது, உறுதியானது. அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கழகத்தை வழிநடத்தி செல்வோம். ஆடுகள் மோதிக்கொள்ளட்டும் என இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் காத்துக்கிடக்கின்றன. அதற்கு நாம் ஒருபோதும் இடம் தந்து விடக்கூடாது.
"ஊரு ரெண்டுபட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற பழமொழிக்கேற்ப தி.மு.க. இப்போது குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழ்நாட்டின் ஆகப்பெரிய கட்சி என்பதை நம் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். அந்த வலிமையை மீண்டும் நாம் பெற்றாக வேண்டும்.
ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தான் தமிழக மக்களும் கழகத்தொண்டர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். பல்வேறு கூட்டணி கட்சியினரும் இதைத்தான் விரும்புகின்றனர். அனைவரது விருப்பத்திற்கேற்ப ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அசுர பலத்துடன் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை நாம் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். மீண்டும் கழக ஆட்சி அமைவது உறுதி. எனவே கட்சியில் உள்ள முன்னோடிகள் முதல் கடைக்கோடி தொண்டார்கள் வரை ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். வெற்றிக்கான பாதையில் பயணித்திடுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார்.
- மயிலாடி தியாக சுடர் காமராஜர் பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைவாணர் படத்திற்கு மரியாதை.
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி அவர் இயற்கை எய்தினார்.
இந்நிலையில், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடி தியாக சுடர் காமராஜர் பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைவாணர் என்.எஸ்.கே திருவுருவ படத்திற்கு கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் நாகர்கோவில் காங்கிரஸ் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், வட்டார தலைவர் தங்கம், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன், மாவட்ட செயல் தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணை தலைவர் கிங்ஸ்டன், வட்டார பொருளாளர் ஏ. நாகராஜன், வட்டார செயலாளர் ஏசுதாஸ், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் அருண், முத்துகுட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பொறுத்த வரை அரசினுடைய அடக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
- ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை வைப்பது என்பது பெரும்பாடாக உள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் கோ-ஆப்ரேடிவ் காலனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி இந்து முன்னணி சார்பில் சிறப்பு பொது கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியதாவது:-
தமிழகத்தில் 25 ஆயிரம் ஊராட்சிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். வீடுகள் தோறும் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதனை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பொறுத்த வரை அரசினுடைய அடக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை வைப்பது என்பது பெரும்பாடாக உள்ளது.
இதையெல்லாம் தமிழக மக்கள் படிப்படியாக எதிர்த்து தமிழக அரசுக்கு பாடம் புகட்ட தயாராகிவிட்டனர். இதற்காக 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஆர்வமுடன் மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.
மகாராஷ்டிராவில் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. 9 நாட்களில், அங்கு போலீசாரின் அடக்குமுறை இல்லை.
இவ்வாறு பேசினார்.
- 4-வது கட்ட பிரசாரத்தை மதுரையில் இருந்து தொடங்குகிறார்.
- கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகளுடன் 85 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.
இதற்காக கோவையில் கடந்த மாதம் சுற்றுப் பயணத்தை தொடங்கிய அவர் இதுவரை 3 கட்டங்களாக பிரசாரம் செய்து உள்ளார். 118 சட்டமன்ற தொகுதிகளில் 60 லட்சம் பேரை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாளில் (1-ந்தேதி) இருந்து 4-வது கட்ட பிரசாரத்தை மதுரையில் இருந்து தொடங்குகிறார். இந்த பிரசாரம் 13-ந்தேதி கோவையில் முடிவடைகிறது.
இப்படி தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வரும் அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்பது போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள். இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகளுடன் 85 மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
பூத் கமிட்டியை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி இன்றைய கூட்டத்திலும் அது தொடர்பான கருத்துக்களை கேட்டார். இதில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முழுமையாக முடித்திருப்பது தெரியவந்தது.
இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைவரும் முழுவீச்சில் தயாராக வேண்டும் என்றும், நிச்சயம் நமது உழைப்பு அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
- திம்பம் மலைப்பகுதி தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.
- திம்பம் மலைப்பகுதியில் 20-வது கொண்டை ஊசி வளைவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலை தொடங்குகிறது.
திம்பம் மலைப்பகுதி தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.
அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து திம்பம் மலைப்பாதையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் ஒரே நேரத்தில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை விடுமுறையை ஒட்டி திம்பம் மலைப்பகுதி சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர்.
இன்று காலை 6 மணி முதல் திம்பம் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், கரும்பு ஏற்றி சென்ற லாரிகள் என ஒரே நேரத்தில் வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திம்பம் மலைப்பகுதியில் 20-வது கொண்டை ஊசி வளைவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் திம்பம் மலைப்பகுதியில் இரு புறங்களிலும் பல கிலோமீட்டர் தூரம் வாகனம் வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடர்ந்த வனப்பகுதியில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்தடுத்து வாகனங்கள் இருப்பதால் மேற்கொண்டு நகராமல் வாகனங்கள் அனைத்தும் வரிசையில் நிற்கின்றன. இதன் காரணமாக தமிழகம் -கர்நாடக இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். திம்பம் மலைப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தருமபுரி:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை 15 நாட்கள் முன்கூட்டியே அதாவது மே மாதத்தின் மத்தியில் தொடங்கி பெய்து வருகிறது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்வதால் ஏரி, குளங்கள், நீர்நிலைகள், அணைகள் நிரம்பி வழிகின்றன.
கடந்த ஒரு வாரமாக மழை குறைந்திருந்த நிலையில் தற்போது மழை மீண்டும் வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 8 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.
மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை ரூ.1720 உயர்வு.
- தங்கம் விலை சவரனுக்கு ரூ.76,960க்கு விற்பனையாகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமை முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து உயரந்துக் கொண்டே வருகிறது.
கடந்த திங்கள் அன்று சவரனுக்கு ரூ. 80, செவ்வாய்கிழமை அன்று சவரனுக்கு ரூ. 400, புதன்கிழமை ரூ. 280, வியாழக்கிழமை அன்று ரூ.120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து, நேற்று தங்கம் விலை இருமுறை உயர்ந்தது. அதாவது, காலையில் ரூ.520-ம், மாலையில் ரூ.520-ம் என சவரனுக்கு ரூ.1040 அதிரடியாக உயர்ந்து ரூ. 76,280-க்கும் விற்பனையானது
இந்தநிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85, சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. இதன்மூலம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.76,960க்கு விற்பனையாகிறது.
கடந்த 2 நாட்களில் ரூ.1720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77,000 நெருங்கி வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.134க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1,34,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,280
28-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,240
27-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,120
26-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,840
25-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-08-2025- ஒரு கிராம் ரூ.134
28-08-2025- ஒரு கிராம் ரூ.130
27-08-2025- ஒரு கிராம் ரூ.130
26-08-2025- ஒரு கிராம் ரூ.130
25-08-2025- ஒரு கிராம் ரூ.131
- கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மணப்பெண்ணை ஒரு இளம்பெண் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
- மணமேடையில் மணமகன் அமர்ந்திருந்தபோது, மணப்பெண் ஒருவித குழப்பத்துடனேயே அருகில் வந்து அமர்ந்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கும் ராதாபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது கார் டிரைவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நேற்று இவர்களது திருமணம் மணமகள் வீட்டில் வைத்து நடைபெற இருந்தது. இருதரப்பினரும் தடல்புடலாக திருமண ஏற்பாடுகளை நடத்தி வந்தனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மணப்பெண்ணை ஒரு இளம்பெண் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது மணமகனுக்கும், தனக்கும் நீண்டகாலம் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் உடனே மணமகனை செல்போனில் தொடர்புகொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் தனக்கு தங்கை மாதிரி. அவளுடன் அப்படித்தான் பழகினேன் என்றார்.
இதை ஏற்க மறுத்த மணமகள், அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டிக்குமாறு கூறினார். ஆனால் மணமகன், அந்த பெண்தான் தனக்கு மிகவும் முக்கியம், அவளுடன் தொடர்பை கைவிடமுடியாது என்றார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள் செய்வதறியாமல் திகைத்தார். இந்த திருமணத்தில் விருப்பமில்லை என மணமகள் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்களும் இதைக்கேட்டு செய்வதறியாமல் புலம்பினர்.
இந்த குழப்பத்திலேயே திருமணம் நடைபெற இருந்த நாளும் வந்தது. நேற்று காலையிலேயே மணமகன் வீட்டில் இருந்து அனைவரும் வந்தனர். மணமேடையில் மணமகன் அமர்ந்திருந்தபோது, மணப்பெண் ஒருவித குழப்பத்துடனேயே அருகில் வந்து அமர்ந்தார்.
அப்போது மணமகன் தாலியை கையில் எடுத்த நேரத்தில், திடீரென இளம்பெண் தனக்கு இந்த மணமகனை பிடிக்கவில்லை. திருமணத்தை நிறுத்துங்கள் என்றார்.
இதைக்கேட்டு மணமகன் உள்பட அனைவரும் ஒரு நிமிடம் நிலைகுலைந்தனர். என்ன நடந்தது? ஏன் திருமணத்தை நிறுத்துகிறாய்? என மணமகளிடம் கேட்டனர்.
அப்போது, அவர் மணமகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. எனவே, நான் இவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என மணமகள் கூறினார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அங்கிருந்தவர்கள் திசையன்விளை போலீசாருக்கு தகவலளித்தனர். போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மணமகனை திருமணம் செய்ய மாட்டேன் என்பதில் மணமகள் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி திருமணம் நிறுத்தப்பட்டது.
இதனால் மணமகன் வீட்டார் கடும் ஆவேசத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
- அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து புறப்பட்டார் முதலமைச்சர் மு க. ஸ்டாலின்.
- திமுக ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதல்வர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 5வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு வார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் நான் செப்டம்பர் 8ம் தேதி நாடு திரும்புகிறேன். 4 ஆண்டுகால திமுக ஆட்சியில்10.62 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்களுடன் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 922 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
புதிய தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதன் காரணமாக, 32.81 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தமிழகம் வளர்ந்துள்ளதா என கேட்பவர்களுக்கு மத்திய அரசின் புள்ளி விபரங்களே பதிலாக உள்ளது.
திமுகவை நோக்கி புதிய கட்சிகள் வருகின்றனவோ இல்லையோ. புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள். யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும், அதை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டிற்கு உண்டு.
விஜயின் அரசியல் வருகை குறித்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் அதிகம் பேசமாட்டேன், சொல்வதைவிட செயலில் காட்டுவேன்.
எந்த கருத்துக்கணிப்பு இருந்தாலும் கருத்துக்கணிப்புகளை மிஞ்சி திமுக அமோக வெற்றி பெறும்.
முதல்வராக இருந்தபோது இபிஎஸ் சென்ற வெளிநாட்டு பயணங்களை போல் எனது பயணத்தையும் நினைத்து அவர் விமர்சனம் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






