என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போராடுபவர்களையும், கேள்வி கேட்போரையும் நசுக்கும் அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது.
- செங்கோட்டையனை பா.ஜ.க.வினர் தற்போதைக்கு சந்திக்க முடியாது.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம், செங்கோட்டையனை இயக்குவது அண்ணாமலையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* போராடுபவர்களையும், கேள்வி கேட்போரையும் நசுக்கும் அரசாக தி.மு.க. அரசு இருக்கிறது.
* தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியதைத்தான் கேட்டனர்.
* அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவிற்கு பின்னணியில் இருப்பது தி.மு.க.
* தி.மு.க.வின் தூண்டுதலில்தான் அனைத்து பிரச்சனைகளும் இங்கு நடக்கின்றன.
* செங்கோட்டையனை பா.ஜ.க.வினர் தற்போதைக்கு சந்திக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை மறுநாள் டெல்லி செல்கிறார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் டெல்லி செல்கிறார்.
- கொள்ளை சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தினர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியில் ரெயில் நிலையம் பகுதியில் இரச்சகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் பூசாரிகளாக பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது சாமிக்ககான பூஜை பொருட்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் வைத்திருக்கும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவுக்குள் இருந்த 3 ஜோடி வெள்ளி கண்மலர், நெத்திபட்டை, மூக்கு பட்டி மற்றும் பட்டுப் புடவைகள் என சுமார் 40 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
மேலும் கோவில் கதவின் பூட்டு உடைப்பதற்கு பயன்படுத்திய கடப்பாரையும், உடைக்கப்பட்ட பூட்டும் அருகிலேயே கிடந்தது. இது குறித்து விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் கேமராக்கள் எதுவும் இல்லாததால் அருகில் உள்ள விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குடிபோதையில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தல், திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களும், விபத்துகளும் அதிகரித்து விட்டன.
- ஓர் வீட்டில் 5 அறைகளும், ஓர் சமையல் அறையும் இருந்தால் அந்த இல்லத்தை ரெஸ்டோ பாராக மாற்றி விட முடியும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி செய்து தருவதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டு வருவதும், அதனால் புதுவையில் போதைக் கலாச்சாரம் பரவி குற்றங்கள் பெருகுவதும் கவலையளிக்கின்றன. கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய புதுவை அரசு, வருவாய் ஈட்டுவதற்காக மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் வணிகத்தை ஊக்குவிப்பது கண்டிக்கத்தக்கது.
ஏராளமான வரலாற்றுச் சிறப்புகளையும், கலாச்சாரப் பெருமைகளையும் கொண்ட புதுச்சேரி இப்போது அதற்காக புகழ் பெறாமல், மது மற்றும் கஞ்சா போதைக் கொண்டாட்டங்களுக்காக பெயர் பெற்று வருவது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மது அருந்துவதற்காக புதுச்சேரி செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இன்னொருபுறம் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்களும் மது அருந்த தூண்டப்படுகின்றனர். இவை அனைத்துக்கும் காரணம் புதுச்சேரியில் தெருவுக்கு 4 மதுக்கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டிருப்பது தான். அதிலும் குறிப்பாக ரெஸ்டோ பார்கள் என்ற பெயரில் குடிப்பகத்துடன் கூடிய மதுக்கடைகள் மூலைக்கு மூலை திறக்கப்பட்டுள்ளன. இதனால் குற்றச்செயல்கள் பெருகி விட்டன.
சில வாரங்களுக்கு முன் சென்னையில் உள்ள கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக குழுவாக புதுச்சேரி சென்றுள்ளனர். அங்குள்ள ஓ.எம்.ஜி என்ற ரெஸ்டோ பாரில் மது அருந்திக் கொண்டிருந்த போது, அவர்களுக்கும், குடிப்பகப் பணியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சண்முகப்பிரியன் என்ற மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஷாஜன் என்ற மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
இதையொத்த நிகழ்வுகள் புதுவையில் அடிக்கடி நிகழத் தொடங்கி விட்டன. குடிபோதையில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தல், திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களும், விபத்துகளும் அதிகரித்து விட்டன. இதனால் புதுவை அதன் இயல்பிலிருந்து மாறி பெரும் கலாச்சாரச் சீரழிவை சந்தித்து வருகிறது. புதுச்சேரி படிப்படியாக கோவாவைப் போல மாறி வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் புதுவை இந்தியாவின் போதை தலைநகராக மாறிவிடும்.
புதுவையில் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெற்றோரும் தங்களது பிள்ளைகள் மதுவுக்கு மிகவும் மோசமாக அடிமையாகி வருவதை எண்ணி மிகுந்த வருத்தத்திலும், வேதனையிலும் வாடுகின்றனர். புதுவையில் சாலைவிபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டன. மதுவால் புதுவை மிக மோசமான கலாச்சார சீரழிவை எதிர்கொண்டு வருவது கவலையளிக்கிறது.
புதுச்சேரியின் இந்த சீரழிவுகளுக்கு காரணம் அங்கு அளவில்லாமல் திறக்கப்படும் மதுக்கடைகள் தான். எஃப்.எல் 1, எஃப்.எல் 2 ஆகிய பெயர்களில் மதுக்கடைகளுக்கான உரிமங்கள் வழங்கப்படுகின்றன. எஃப்.எல் 1 என்பது மொத்த வணிகத்திற்கான உரிமம் ஆகும். எஃப்.எல் 2 சில்லறை வணிகத்திற்கான உரிமம். இதில் ரெஸ்டோ பார் எனப்படும் குடிப்பகங்களுக்கும் உரிமம் வழங்கப்படுகிறது. ரெஸ்டோபார் உரிமம் பெறுவதற்காக நிபந்தனைகளும், கட்டணமும் மிகவும் குறைவு என்பதால் அதிக எண்ணிக்கையில் அவை திறக்கப்பட்டு வருகின்றன.
ஓர் வீட்டில் 5 அறைகளும், ஓர் சமையல் அறையும் இருந்தால் அந்த இல்லத்தை ரெஸ்டோ பாராக மாற்றி விட முடியும். அதாவது அந்த அறைகளில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு சில்லறையில் மது வழங்குவது தான் ரெஸ்டோபார்களின் நோக்கம். ஆனால், விதிகளை மீறி கட்டுப்பாடு இல்லாமல் ரெஸ்டோ பார்களில் அனைவருக்கும் கட்டுப்பாடின்றி மது வணிகம் செய்யப் படுகிறது. அதனால், புதுவையில் மது வெள்ளமாக ஓடுகிறது; சீரழிவுகள் பூகம்பமாக வெடிக்கின்றன.
புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் இன்றைய நிலையில், 86 மொத்த வணிகக் கடைகள், 240 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 476 சில்லறை வணிகக் கடைகள், 107 சாராயக் கடைகள், 81 கள்ளுக்கடைகள் என மொத்தம் 750 போதை பானக்கடைகள் உள்ளன. புதுவையின் மக்கள்தொகையான 13.94 லட்சத்துடன் ஒப்பிடும்போது 1859 பேருக்கு ஒரு போதைபானக் கடைகள் உள்ளன. புதுச்சேரி நகரத்தில் மட்டும் 536 போதைபானக்கடைகள் உள்ளன. இது 1772 பேருக்கு ஒரு கடையாகும். காரைக்காலில் இன்னும் குறைவாக 1516 பேருக்கு ஓர் போதைபானக் கடை உள்ளது. கோவாவில் 250 பேருக்கு ஒரு மதுக்கடை இருக்கும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக அதிக மதுக்கடைகள் உள்ள மாநிலமாக புதுவை தான் திகழ்கிறது.
புதுவையில் இப்போது இருக்கும் மதுக்கடைகளே மிகவும் அதிகம் என்று கூறப்படும் நிலையில், இன்னும் 100 ரெஸ்டோபார்களுக்கு அனுமதி அளிக்க புதுவை அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் நடந்து விட்டால், புதுவையில் மதுக்கடைகள் உள்ளன என்று கூறுவதற்கு பதிலாக மதுக்கடைகளுக்குள் புதுவை உள்ளது என்று கூற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அதேபோல், புதுவையில் ஏற்கனவே 3 மது ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 6 மது ஆலைகளுக்கு புதுவை அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. ஆனால், ஆளுனர் தலையிட்டு அந்த ஆலைகளுக்கு உரிமம் அளிப்பதை தடுத்து நிறுத்தியிருக்கிறார். இல்லாவிட்டால் புதுவை மாநிலத்தில் மது சுனாமியாக ஓடிக் கொண்டிருந்திருக்கும்.
புதுவையில் ஏராளமான மது ஆலைகள், மதுக் கடைகள், குடிப்பகங்கள் இருப்பதை யாராலும் நியாயப் படுத்த முடியாது. அண்மைக்காலங்களில் பள்ளி மாணவர்கள் மது அருந்தி விட்டு வகுப்புகளுக்கு வருவது அதிகரித்து வருகிறது. மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு மதுக்கடைகளுக்கும், குடிப்பகங்களுக்கும் தாராளமாக அனுமதி அளிப்பதை ஏற்க முடியாது. பணம் ஈட்டுவது மட்டுமே அரசின் நோக்கமாக இருக்கக் கூடாது. பணத்திற்காக மது வணிகத்தை ஊக்குவித்தால், எதிர்காலத்தில் இம்மண்ணில் திடமான இளைஞர்களே இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.
இதை உணர்ந்து புதுவை மாநிலத்தை மதுவின் பிடியிலிருந்து மீட்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக புதுவையில் இனி புதிய மது ஆலைகளுக்கோ, மதுக்கடைகளுக்கோ அனுமதி அளிக்கப்படாது என்று புதுவை அரசு அறிவிக்க வேண்டும். அதன்பின் இப்போது இருக்கும் மதுக்கடைகள், குடிப்பகங்கள் ஆகியவற்றை படிப்படியாக மூட வேண்டும். புதுவையிலும் மது விலக்கு என்ற இலக்கை நோக்கியப் பயணத்தை அம்மாநில அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.85 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அணைக்கு வரும் நீர் அளவு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழுக்கள் வருகை தருவது வழக்கம் அதன்படி கடந்த மார்ச் 22-ந் தேதி மத்திய கண்காணிப்பு குழுவும் ஜூன் 3-ந் தேதி துணை கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நாளை மறுதினம் (11-ந்தேதி) துணை கண்காணிப்பு குழு ஆய்வு நடத்த வருகை தருகின்றனர். இதன் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின், பெரியாறு அணை கம்பம் சிறப்பு கோட்ட பிரிவின் நிர்வாக பொறியாளர் செல்வம் ஆகியோர் உள்ளனர்.
கேரள அரசின் பிரதிநிதிகளாக அம்மாநில நீர்பாசன துறையின் கண்காணிப்பு பொறியாளர் லெவின்ஸ் பாபு, செயற்பொறியாளர் சிஜூ உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்த உள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்த நிலையில் ரூல் கர்வ் நடைமுறை பின்பற்றப்படுவதால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் உபரி நீர் வீணாக கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்டது. எனவே ரூல் கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.85 அடியாக உள்ளது. வரத்து 478 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1020 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5597 மி.கன அடியாக உள்ளது.
துணை கண்காணிப்பு குழு ஆய்வு என்பது சம்பிரதாயத்துக்காக நடப்பதாகவும், இதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், முல்லைப்பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில் இதுவரை மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வுகளால் பேபி அணையை பலப்படுத்தி விட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை இன்று வரை நடைமுறைக்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் ஆண்டு தோறும் தமிழக பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டிய எந்தவித பராமரிப்பு பணியையும் செய்வதற்கு கேரள அரசு சம்மதிக்காமல் இடையூறு செய்து வருகிறது.
எனவே இந்த குழுவின் ஆய்வுகள் என்பது வெறும் சம்பிரதாயம் என்றே தெரிகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் அளித்த பல்வேறு வழிகாட்டுதலையும், உத்தரவுகளையும் கேரள அரசு பின்பற்றுவது இல்லை. தமிழகத்தின் சார்பில் படகு விடுவதற்கும் அனுமதி அளிக்கவில்லை. எனவே எவ்வித அதிகாரமும் இல்லாத இந்த குழுக்களாலும், ஆய்வறிக்கையை வைத்துக் கொண்டு எந்தவித முனைப்பும் காட்டாத மத்திய நீர்வளத்துறையின் செயல்பாடுகளும், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கண்துடைப்புக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.
இதன் காரணமாகவே கடந்த ஆண்டு குழுவில் இடம்பெற்றிருந்த தமிழக அதிகாரிகள் ஆய்வை புறக்கணித்து வெளியேறினர். எனவே முல்லைப்பெரியாறு அணையில் பறிக்கப்பட்ட தமிழகத்தின் உரிமையை இந்த குழுக்கள் தங்களின் ஆய்வுகள் மூலமும், அதன் அறிக்கைகள் மூலமும் பெற்றுத் தருமேயானால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம் என்று தெரிவித்தார்.
- ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட தி.மு.க. தொண்டர்களை துணை முதலமைச்சர் உதயநிதி கவுரவிக்க உள்ளார்.
- தி.மு.க. ஒன்றிய, நகர, கிளைக்கழக மற்றும் பாக முகவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு அவர் தி.மு.க.வினரை சந்தித்து ஊக்கப்படுத்த உள்ளார்.
மேலும் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட தி.மு.க. தொண்டர்களை துணை முதலமைச்சர் உதயநிதி கவுரவிக்க உள்ளார்.
சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. ஒன்றிய, நகர, கிளைக்கழக மற்றும் பாக முகவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார். காஞ்சிபுரத்தில் இருந்து உதயநிதி இன்று தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
- பெண் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த நரசிங்க நல்லூர் பொன்விழா நகரை சேர்ந்தவர் அப்துல் வகாப் (வயது 37).
இவர் கராத்தேவில் டிப்ளமோ முடித்துள்ள நிலையில் டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் கராத்தே வகுப்பு நடத்தி வருகிறார். இதேபோல் பாளை கே.டி.சி. நகர் பகுதியிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.
இந்த 2 பயிற்சி வகுப்புகளிலும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்துல் வகாப்பின் மையத்திற்கு சுத்தமல்லி பகுதியை சேர்ந்த ஒருவரின் 13 வயது மகள் சென்று கராத்தே படித்து வருகிறார்.
இவரது தாய் தினமும் காலையில் அந்த சிறுமியை பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளார். அப்போது அப்துல் வகாப் அந்த பெண்ணிடம் தவறான நோக்கத்தில் பழகிட, செல்போன் எண்ணை அவரிடம் இருந்து பெற்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் நைசாக பேசி ஆசை வார்த்தை கூறி தனிமையில் பழகி உள்ளார்.
தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் சமீப காலமாக அந்த பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற அப்துல் வகாப், போன் செய்தபோது எதற்காக எடுக்கவில்லை என்று கூறி அவரை தாக்கியதோடு, தான் அழைக்கும்போது தன்னுடன் வந்து தனிமையில் இருக்க வேண்டும் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.
இதனால் அப்துல் வகாப் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். உடனடியாக அந்த பெண் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அப்துல் வகாப் தினமும் தனது பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களின் தாயாரை நோட்டமிட்டு அதில் சில பெண்களிடம் நைசாக பேசி அவர்களது செல்போன் எண்களை வாங்கி பேச்சு கொடுத்துள்ளார்.
தொடர்ந்து அவர்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி தனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அவரது மன்மத லீலையின் வலையில் சுமார் 8 பெண்கள் வரை ஏமாந்து இருப்பதும், சில பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையை இழந்திருப்பதும் தெரிய வந்தது.
மேலும் இதனை வெளியே தெரிவித்தால் தங்களுக்கு அவமானம், வெளியில் நடமாட முடியாது என்று கருதி அந்த பெண்கள் எதையும் வெளியே சொல்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கராத்தே மாஸ்டரின் இந்த மோசமான நடவடிக்கைகளை அறிந்தே அவரிடம் இருந்து விலகியதாகவும், அதனால் தான் அப்துல் வகாப் வீட்டிற்கு சென்று பிரச்சினை செய்ததாகவும் தகவல் தெரியவந்தது.
இதையடுத்து சுத்தமல்லி போலீசார் நேற்று இரவு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அப்துல் வகாபை கைது செய்தனர். அவரால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்கள் தைரியமாக புகார் அளித்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.
- கோவில் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- சிறுவனின் தாயாரையும் போலீசார் விசாரணை செய்ததிலும் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறியுள்ளார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று இரவு 8 மணி அளவில் சிறுவன் ஒருவன் தான் கையில் வைத்திருந்த 'சில்லி ஸ்பிரே'யை அருகில் இருந்தவர்கள் முகத்தில் அடித்துள்ளான். இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
உடனே அவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கோவில் பணியாளர்கள் அந்த சிறுவனை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது சிறுவன் தனது சொந்த ஊர் திருப்பூர் எனவும், தனது உறவினர்களுடன் கோவிலுக்கு வந்ததாக கூறியுள்ளான்.
அப்போது அவனுடன் இருந்த மற்ற சிறுவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவலை கூறினர்.
உடனே கோவில் நிர்வாகம் கோவில் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுவர்கள் தாங்கள் பயன்படுத்திய 'சில்லி ஸ்பிரே' அங்கு நின்ற ஒரு காருக்கு அடியில் இருந்து எடுத்ததாக கூறியுள்ளனர். அதில் ஒரு சிறுவனின் தாய் கோவிலில் பக்தர்களிடம் யாசகம் பெற்று வருகிறார் என்பதும் தெரியவந்தது.
சிறுவனின் தாயாரையும் போலீசார் விசாரணை செய்ததிலும் முன்னுக்குப்பின் முரணான தகவலை கூறியுள்ளார். உடனே போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
காருக்கு அடியில் கிடந்து எடுத்ததாக கூறிய அந்த 'சில்லி ஸ்பிரே' கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை ஏமாற்றி நகை, பணத்தை பறிப்பதற்காக யாரேனும் மர்மநபர்கள் கொண்டு வந்தார்களா? அல்லது பெண்கள் தற்காப்புக்காக கொண்டு வந்ததை யாரேனும் விட்டுச் சென்றார்களா? அது சிறுவனின் கைக்கு வந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் தூத்துக்குடி வந்து முஸ்பிக் ஆலம் மற்றும் அவருடன் தங்கியிருந்த 7 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தினார்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் முஸ்பிக் ஆலம் உள்பட 4 பேரையும் தாளமுத்துநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி:
சென்னை அருகே பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முஸ்பிக் ஆலம் என்பவருடன் அவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
மேலும் முஸ்பிக் ஆலம் தற்போது தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள சிலுவைப்பட்டி பகுதியில் தங்கி அங்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வருவதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று தூத்துக்குடி வந்து முஸ்பிக் ஆலம் மற்றும் அவருடன் தங்கியிருந்த 7 பேரிடம் அதிரடி விசாரணை நடத்தினார். அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை செய்தனர். முஸ்பிக் ஆலமின் செல்போனை வாங்கி அதில் இருந்த தகவல்களை ஆய்வு செய்தனர். அவர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதிகள் முழுவதும் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் அவருடன் நெருங்கி பழகிய 3 பீகார் வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் முஸ்பிக் ஆலம் உள்பட 4 பேரையும் தாளமுத்துநகர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் 4 பேரிடமும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மாநில உளவுப்பிரிவு அதிகாரிகள் உள்பட பல்வேறு அதிகாரிகளும் தொடர்ந்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 4 பேரிடமும் போலீஸ் கண்காணிப்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 10-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள, கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் திறந்து விடப்படும் உபரிநீர் வெளியேற்றம் அளவு கூடுவதும், குறைவதுமாக உள்ளது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து குறைந்து நேற்று காலை மேலும் குறைந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
தொடர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
இருப்பினும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தடை 10-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.
- ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.
தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.
தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என்.ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- 234 தொகுதிகளிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும்.
- தை மாதத்திற்குள் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்த இருக்கிறோம்.
சென்னை:
மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் புனரமைப்பு பணியை பார்வையிட்டபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
* 210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார். 234 தொகுதிகளிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும்.
* அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது.
* தி.மு.க.வை வசைபாடிய அண்ணாமலையே தி.மு.க. வலுவாக இருக்கிறது என பேசியிருக்கிறார்.
* தை மாதத்திற்குள் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
- 2 மாத காலம் தடை உத்தரவு அமலில் இருக்கும்.
ராமநாதபுரம்:
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் 2 மாத காலம் தடை உத்தரவு அமலில் இருக்கும். மேலும் தடை உத்தரவு அமலில் உள்ள நாட்களில் இன்று முதல் 15-ந்தேதி வரை மற்றும் அக்டோபர் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பிறப்பித்துள்ளார்.






