என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விலை ஏற்றத்தால் தங்கத்தின் மீதான மோகம் குறையாது.
    • சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குபவர்கள் கூட வருங்காலங்களில் அதை ஒரு முதலீடாகவே கருதுவார்கள்.

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து சூப்பர் சரவணா ஸ்டோர் நிர்வாக இயக்குனர் ஆர்.சபாபதி கூறியதாவது:-

    வரலாறு காணாத தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தக கொள்கை முடிவு ஆகும். அவரது வரி விதிப்பு மாற்றத்தால் உலக அளவில் தங்க வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    அவரது செயல்பாட்டால் இந்திய முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் அமெரிக்காவில் செய்யும் முதலீட்டுக்கு பதிலாக வேறு முதலீட்டுக்கு மாறி விட்டனர்.

    அமெரிக்காவில் பல்வேறு முதலீடு செய்த இந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், தங்கத்தில் முதலீடு செய்தால் சிறப்பாக இருக்கும் என தங்கள் முதலீட்டை திருப்பி உள்ளனர். தமிழக மக்களை பொறுத்தவரையில் தங்க நகைகளை சேமிக்கும் பழக்கமும், நகைகளாக அணியும் பழக்கமும் அதிகமாக உள்ளது. இதனால் தற்போது தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது.

    இந்தியாவில் ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்தவர்கள் இப்போது தங்கத்துக்கு மாறி விட்டனர். 90 சதவீதம் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து உள்ளது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும். குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. அடுத்து வருகிற 15 முதல் 18 மாதத்திற்குள் தங்கத்தின் விலை 2 மடங்காக உயரும்.

    தற்போது பவுன் ஒரு லட்சமாக இருக்கும் தங்க நகைகள் விலை ரூ. 2 லட்சமாக உயர வாய்ப்புகள் உள்ளன. இதனால் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்த மக்கள் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்பதாலும் தங்க நாணயம், மற்றும் தங்க பிஸ்கட்டில் முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருப்பதாகவும் கருதுகிறார்கள். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாதாரண மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் பார்வை அதன் மீது திரும்பி உள்ளது. 2 கிராம் தங்கம் வாங்குபவர்கள் இந்த விலை ஏற்றத்தால் ஒரு கிராம் வாங்குவார்கள். இதனால் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. அது ஒரு முதலீடு தான்.

    இந்த விலை ஏற்றத்தால் தங்கத்தின் மீதான மோகம் குறையாது. தேவையும் குறையாது. மாறாக தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும் நிலை உள்ளது. சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குபவர்கள் கூட வருங்காலங்களில் அதை ஒரு முதலீடாகவே கருதுவார்கள். தங்க வியாபாரிகளுக்கோ, நகை கடைகளுக்கோ இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. உலக அளவில் தனி நபர் மூலதனம் அதிகரித்து உள்ளதால் தொழில்களும் பாதிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:-

    அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் பெரும்பாலானவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை மேலும் உயரும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிறைய பேர் தங்கம் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாதம் தோறும் ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை ஊதியம் கிடைத்து வந்துள்ளது.
    • 17 கூலி தொழிலாளர்களை வேண்டாம் என மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் ஏராளமான லாரி புக்கிங் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பனியன் உள்ளிட்ட பின்னலாடை பொருட்கள் இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சரக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    இதற்காக வரும் சரக்குகளை குடோன்களில் இருந்து லாரிகளில் ஏற்றவும் லாரிகளில் இருந்து குடோன்களில் இறக்கவும் சுமார் 17 சுமைப்பணி தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

    இவர்களுக்கு மாதம் தோறும் ரூ.20 முதல் 25 ஆயிரம் வரை ஊதியம் கிடைத்து வந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே வேறொரு குடோனில் பணியாற்றி வந்த 7 வட மாநில தொழிலாளர்களை 2 குடோன்களுக்கும் சேர்த்து வேலை பார்க்க அனுமதிக்க வைத்துவிட்டு 17 கூலி தொழிலாளர்களை வேண்டாம் என மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இச்சம்பவத்தை அடுத்து சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., மற்றும் ஏ.டி.பி., தொழிற்சங்கத்தினர் தமிழக தொழிலாளர்களை பணியமர்த்த நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாக தரப்பு மற்றும் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்தி சமூகத் தீர்வு காண்பது எனவும் அதுவரையில் தொழிலாளர்கள் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. 

    • வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
    • விசாரணை முடிவில், மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை:

    தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கலா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மாறாந்தை கல்லத்திகுளம் கிராமத்தில் 350 ஏக்கர் நிலத்தில் உள்ள சுமார் 8 லட்சம் அரிய வகை மரங்களையும், மான்கள் உள்ளிட்ட விலங்குகளையும் எந்திரங்கள் மூலம் அழித்து தனியார் நிறுவனம் சோலார் கம்பெனி நிறுவுவதை தடுக்க வேண்டும்.

    மேற்கண்ட 350 ஏக்கர் காடுகளை அரசே நில ஆர்ஜிதம் செய்து அருகில் உள்ள காவல் குட்டி பரம்பை பாதுகாக்கப்பட்ட காடுகளுடன் இந்த காடுகளையும் இணைக்க வேண்டும். தொல்லியல் துறையின் முன் அனுமதி இன்றியும் மாவட்ட பசுமை கமிட்டியின் அனுமதி இன்றியும் நகர்புற வளர்ச்சி துறையின் அனுமதியின்றியும் மரங்கள் அழிக்கப்பட்டு வருவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பினேகாஸ், அர்ஜுன் குமார் ஆகியோர் ஆஜராகி தனியார் நிறுவனத்திற்காக ஏராளமான மரங்களை வெட்டுவது சட்டத்துக்கு புறம்பானது என வாதாடினார். விசாரணை முடிவில், மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • வாக்காளர் பட்டியல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • விளம்பர நோக்கத்துடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வெங்கட சிவக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''2024-ம் ஆண்டு நடந்த 17-வது பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் சேர்த்து மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காமல், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்புவது ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும் என்பதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும். அனைத்து தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியல் தரவுகளை, பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பி.டி.எப். வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும். வாக்காளர் பட்டியல் மோசடி புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணைகள் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த பொது நல வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்து, வாக்காளர் பட்டியல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. விளம்பர நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.

    • தமிழ்நாடு முதலிடம் என ஏன் பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டும்?
    • ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்கள், முதலீட்டாளர் மாநாடு என்று எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது?

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    2021, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது சுமார் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்துவிட்டு, தற்போது 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம், 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று மேடைதோறும் பச்சைப் பொய் பேசி,

    மக்களின் காதுகளில் பூச்சூடி வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசு சதவீத கணக்கில் 70 சதவீதம் என்றும், 77 சதவீதம் என்றும் முதலீடுகளை ஈர்த்தது பற்றி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினும், தொழில்துறை அமைச்சரும் முதலீடு வந்துவிட்டது போலவும், வேலை வாய்ப்பு இலட்சக்கணக்கில் உருவாகிவிட்டது போலவும் (எக்ஸ் வலைதள) அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

    * 2022, மார்ச் 24 முதல் 29 வரை துபாய்க்கு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நோபல் ஸ்டீல் 1000 கோடி, லூலூ மால் 3,500 கோடி, ட்ரான்ஸ்வோல்ட், வைட்ஹவுஸ் மற்றும் ஆஸ்டர்டாம் ஹெல்த் கேர் என்று ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 6,100 கோடி ரூபாய்க்கு முதலீடு என்று அறிக்கை வெளியிட்டார்கள். இதன்படி ஆறு நிறுவனங்களும் தொழிலை ஆரம்பித்து விட்டனவா? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.

    * இரண்டாவதாக, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணம் மேற்கொண்டு 3,233 கோடி ரூபாய் முதலீடு பெற்று, 5000 வேலைவாய்ப்பை உருவாக்கப் போட்ட 13 ஒப்பந்தங்களில் எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.

    * மூன்றாவதாக, ஸ்பெயினுக்கு 2024-ஆம் ஆண்டு ஜனவரி 28 முதல் பிப்ரவரி 7 வரை சென்று 3,440 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்தோம் என்றும் கூறினார்கள். அந்த முதலீட்டில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.

    * 4-ம் முறையாக 2024, ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 12 வரை 17 நாட்கள் அமெரிக்காவுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு 11,516 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 7,618 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக போடப்பட்டு அறிக்கை வெளியிட்டார்கள். எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.

    * தற்போது ஸ்டாலின், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஐந்தாவது முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு 15,516 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 17,613 வேலைவாய்ப்பை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இவைகளெல்லாம், இவர்களின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் விவரங்கள்தான்.

    * இதைத் தவிர, உலக முதலீட்டாளர் மாநாடு 2024, ஜனவரி 7, 8 தேதிகளில் நடத்தப்பட்டு 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அதன்மூலம் 14.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

    * விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி, திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் 9.74 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து 27 தொழிற்சாலைகள் தொடங்கி 31 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளதாகக் கூறினார்.

    * தொழில் துறை அமைச்சரோ, 2025, மே மாதம் 12-ஆம் தேதி தனது அறிக்கையில் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10 லட்சத்து 27 ஆயிரத்து 547 கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்த்து, 32.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி 70 சதவீதம் முதலீட்டைப் பெற்றுவிட்டதாகக் கூறினார்.

    * கடைசியாக ஸ்டாலின் 30.8.2025 அன்று வெளிநாடு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 922 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, 32.81 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி 77 சதவீதம் செயல்முறைப்படுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    * இவர்கள் கூறுவதைப் போல் 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள், 922 ஒப்பந்தங்கள் யாருடன் போடப்பட்டது? 32.81 லட்சம் நபர்களுக்கு யார் வேலைவாய்ப்பு தந்தார்கள்? இவற்றில் உண்மையாக நடைமுறைக்கு வந்த ஒப்பந்தங்கள், செயல்பாட்டிற்கு வந்த தொழிற்சாலைகள், உண்மையில் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை என்ன என்று யாருக்கும் தெரியாது. எக்ஸ் தளத்தின் மூலமே விளம்பரம் தேடும் விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு, இந்த விவரங்களை ஏன் முழுமையாக வலைதளத்தில் வெளியிடுவதில்லை.

    * மேலும் ஸ்டாலின், ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக தற்போது அறிவித்துள்ள நிறுவனங்களில் பல ஏற்கெனவே தமிழகத்தில் தங்களது தொழில்களை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இங்கே நடைபெற்று வரும் தொழில்களை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தங்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று கையொப்பம் வாங்கியதற்கு பதிலாக, இங்கேயே ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கலாமே என்று தொழில் துறையினர் கூறுகின்றனர்.

    * இதில் 2021-க்கு முன்பு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட முதலீடுகளையும், திமுக தனது சாதனையாகக் கூறிக்கொள்வதுதான் விந்தை. எனவேதான், நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.

    * திமுக ஆட்சியின் முதலீடுகளின் நிலை பற்றி ஏன் அறிக்கையாக வெளியிடுவதில்லை? குறைந்தபட்சம் சட்டமன்றத்தில்கூட இதுபற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில்லையே ஏன்? இந்த மொத்த விவரங்கள்கூட இவர்கள் எக்ஸ் வலைதளத்தில் வெளியிடும் செய்தியில் இருந்துதான் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

    * மத்திய அரசு வெளிநாட்டு மூலதனம் பற்றிய ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் 2022-23-ல் தமிழ்நாடு பெற்ற அந்நிய முதலீடு வெறும் 17,247 கோடி ரூபாய் என்றும், 2023-24ல் 20,157 கோடி ரூபாய் என்றும், 2024-25-ல் 31,103 கோடி ரூபாய் தான் என்றும், ஆகமொத்தம் 3 ஆண்டுகளில் 2025 மார்ச் மாதம் வரை 68,507 கோடி ரூபாய் மட்டுமே மூலதனமாகப் பெற்று, ஐந்தாவது இடத்தில்தான் உள்ளது. தமிழ்நாட்டை விட பல மடங்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்கள் எல்லாம் பெற்றுள்ளன. டெல்லியும், தமிழகத்தை விட அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலிடம் என ஏன் பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டும்?

    * அப்படியென்றால், திமுக அரசு கொடுக்கும் புள்ளி விபரம் ஒரு கற்பனையான புள்ளி விவரமா? என்று பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பதில், விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் உருவாக்கப்பட்ட 32.81 லட்சம் வேலைவாய்ப்புகள் எங்கே உருவாக்கப்பட்டுள்ளது என்று படித்து முடித்து வேலை தேடி அலைந்துகொண்டிருக்கும் வேலையில்லா இளைஞர் பட்டாளம் எழுப்பும் கேள்வியிலேயே அந்த பதில் உள்ளது.

    ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்கள், முதலீட்டாளர் மாநாடு என்று எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது? எவ்வளவு முதலீடு பெற்றுள்ளோம்? எவ்வளவு தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன? எவ்வளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன? என்பதை தைரியமாக தமிழக தொழில் துறை இணையதளத்திலோ, அல்லது தமிழ்நாடு முதலீட்டு வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்திலோ வெளிப்படையாக ஏன் வெளியிடுவதில்லை? அதை விட்டுவிட்டு எக்ஸ் தனி வலைதளத்தில் தொழில்துறை மந்திரியும், பொம்மை முதலமைச்சரும் தொடர்ந்து வெற்று விளம்பரம் தேடுவது, இந்த அரசு ஒரு பொய், பித்தலாட்ட அரசு என்பதையே உறுதி செய்கிறது.

    எனவேதான் ஸ்டாலினிடம், உங்கள் ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்தும், துவங்கப்பட்ட தொழில்கள் குறித்தும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக வெள்ளை அறிக்கை கேட்கிறேன். இனியும் எக்ஸ் வலைதளத்தில் பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்றும், தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், வெற்று விளம்பர முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.  

    • பா.ஜ.க. கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
    • 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

    கோவை:

    துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில், கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். விழாவில் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று. துணை குடியரசு தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் நிச்சயமாக வெற்றி பெறுவார். அவர் தான் துணை குடியரசு தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

    இதற்காக இன்று கோவை பா.ஜ.க. சார்பில் பல்வேறு கோவில்களில் சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றிக்காகவும், பிரதமர் நரேந்திர மோடி நலனுக்காகவும் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. கோவையில் மட்டும் 25 கோவில்களில் இந்த பூஜை நடக்கிறது.

    பா.ஜ.க. கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன். இந்திய தேசத்தின் துணை குடியரசு தலைவராக, தமிழராக அவரது பணி சிறக்க வேண்டும். மக்கள் சார்ந்த பணி பா.ஜ.க தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.

    அதே நேரத்தில் தமிழ், தமிழர் என்று பேசுகின்ற தி.மு.க துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள். முன்பு ஜனாதிபதியாக பிரதிபா பாட்டில் தேர்வு செய்யப்பட்டபோது மும்பையை சேர்ந்த மாநில கட்சிகளும், தற்போது ஜனாதிபதியாக இருக்கக்கூடிய திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது ஒடிசா மாநில கட்சிகளும் ஒற்றுமையாக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்காமல், தி.மு.க. தனது செயலினால் சிறுமைப்படுத்துகிறது.

    தேசிய ஜனநாயககூட்டணியில் பல்வேறு கட்சிகள் இருக்கிறார்கள். கூட்டணியை பலப்படுத்த வேண்டும். அதற்காக அனைவரையும் ஓரணியில் சேர்க்க வேண்டும். அதனை நான் பா.ஜ.கவும் நினைக்கிறது. அதற்கு ஏற்ப செயல்பட்டு கொண்டும் இருக்கிறது.

    அ.தி.மு.க.வுக்குள் நிலவும் பிரச்சனை கூட்டணியின் வெற்றியை பாதிக்காது. அந்தந்த கட்சி பிரச்சனைகளை அந்தந்த கட்சி தலைவர்களே சரி செய்து விடுவார்கள்.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். கூட்டணிக் கட்சி எண்ணிக்கையையும் தாண்டி ஒரு கணக்கு இருக்கிறது. அந்த கணக்கு தேர்தல் வெற்றி தரும். கூட்டணி குழப்பங்களும் சரி செய்யப்படும்.

    கே.ஏ.செங்கோட்டையன், ஹரித்துவார் புனிதமான இடம் என்பதால் அங்கு சென்று உள்ளார். அ.தி.முகவில் பிரச்சனை என்றால் டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களை சந்திப்பதாக கேட்பது தவறு. செங்கோட்டையன் அமித்ஷாவை பார்த்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் சுதாகர், வேலுமயில், ராஜன், அர்ஜூனன், மணிகண்டன், கிருஷ்ண பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • சோதனை நடந்து வரும் தொழில் அதிபர் ராமச்சந்திரன் அண்மையில் தி.மு.க.வில் இணைந்ததாக கூறப்படுகிறது.

    சூலூர்:

    சூலூர் அருகே உள்ள செலக்கரச்சல் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். தொழில் அதிபரான இவர் நூற்பாலை மற்றும் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு இவரது வீட்டிற்கு 6-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.

    பின்னர் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே வராதவாறும், உள்ளே இருந்து யாரும் வெளியில் செல்ல முடியாதவாறும் பூட்டினர்.

    மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர். அதனை தொடர்ந்து வீடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும், அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகளுடன், வங்கி அதிகாரிகளும் வந்திருந்தனர். வீட்டில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    அமலாக்கத்துறை சோதனையை முன்னிட்டு தொழில் அதிபர் ராமச்சந்திரனின் வீட்டின் முன்பு 30-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தொழில் அதிபர் ராமச்சந்திரன் தனியார் வங்கி ஒன்றில் தனது தொழிலுக்காக கோடி கணக்கில் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை ஒரே நேரத்தில் மொத்தமாக அடைத்து விட்டதாகவும் தெரிகிறது.

    இவ்வளவு பெரிய தொகையை எப்படி ஒரே நேரத்தில் கட்ட முடிந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் தொழில் அதிபரின் வீட்டில் வங்கி அதிகாரிகள் உதவியுடன் சோதனை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    சோதனை நடந்து வரும் தொழில் அதிபர் ராமச்சந்திரன் அண்மையில் தி.மு.க.வில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.

    கோவையில் தொழில் அதிபரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் அவரது உறவினர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

    • பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
    • கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக தனியாகவே ஒரு கணக்கெடுப்பை 63 நாள்களில் அம்மாநில அரசு நடத்தி முடித்துள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கர்நாடகத்தில் இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் மேற்கொள்ளவிருக்கும் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதற்கான பயிற்சிகளை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. கர்நாடக மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு காட்டும் அக்கறையும், தீவிரமும் பாராட்டத்தக்கவை.

    கர்நாடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அண்மைக்கால தரவுகளைத் திரட்டும் நோக்குடன் இரண்டாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் கர்நாடக அரசு மேற்கொள்ளவுள்ளது. 7 கோடி மக்கள் தொகை கொண்ட கர்நாடகத்தில் மொத்தம் 15 நாள்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படவுள்ளது.

    இதற்காக அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், கணக்கெடுப்புப் பணியில் மொத்தம் 1.60 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொத்தம் 2 கோடி குடும்பங்களிடம் நடத்தப்படவுள்ள இந்தக் கணக்கெடுப்பில் 60 வினாக்கள் கேட்கப்படவுள்ளன. கர்நாடக மக்களுக்கு அனைத்து வகையான சமூகநீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

    ஆனால், இங்கு தமிழ்நாட்டில்....?

    பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இல்லாத அதிகாரத்தைக் கூட போராடிப் பெற்று செயல்படுத்த வேண்டியது தான் மக்கள் நல அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இருக்கும் அதிகாரத்தைக் கூட பயன்படுத்த மறுக்கிறது. இதற்குக் காரணம்... தமிழகத்தில் யாருக்கும் சமூகநீதி கிடைத்துவிடக் கூடாது என்ற தீய எண்ணம் தான்.

    கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக தனியாகவே ஒரு கணக்கெடுப்பை 63 நாள்களில் அம்மாநில அரசு நடத்தி முடித்துள்ளது. இவ்வளவையும் சுட்டிக்காட்டியும் கூட, மு.க.ஸ்டாலின் அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததை விட பெரிய கொடுமை என்னவென்றால், சமூகநீதியில் அக்கறை இருப்பதைப் போல நடிப்பது தான்.

    தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. முதல் இரு வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கும். ஆனால், மூன்று வாய்ப்புகளையும் சிதைத்து சமூகநீதியை குழிதோண்டி புதைத்தது திமுக அரசு தான். அத்தகைய சமூகநீதி பாவங்களை செய்த திமுக, இனியாவது சமூகநீதி துரோகத்தையும், தூக்கத்தையும் களைந்து விட்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
    • பல இடங்களில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3,347 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் 106 புதிய வழித்தடங்களை கண்டறிந்து அதில் 409 மாநகர பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 74 வழித்தடங்களில் 123 பஸ்களுடன் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் தினமும் 32 லட்சம் பயணிகள் மாநகர பஸ் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 4,400 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டவை ஆகும்.

    அதன் பிறகு சென்னை நகரம் எவ்வளவோ மாற்றம் கண்டுள்ளது. சென்னையில் தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் 3 வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன. பல சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருக்கும் சில பஸ் நிறுத்தங்களில் சாலைகள் குறுகலாக மாறி விட்டன. இதனால் அந்த இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சென்னையில் பல இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் ஒருபுறம் அல்லது இருபுறமும் தோண்டப்பட்டு பணிகள் நடப்பதால் அந்த இடங்களிலும் சாலைகள் சுருங்கி விட்டன.

    சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த இடங்களில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதும், பஸ்சுக்காக காத்திருப்பதும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற இடங்களில் இருக்கும் பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்த இடமில்லாமல் டிரைவர்கள் சற்று தூரம் தள்ளி சென்று நிறுத்துகிறார்கள். இதனால் பயணிகள் பஸ்சை பிடிக்க ஓடிச்சென்று ஏற வேண்டிய நிலை உள்ளது. மேலும் பல இடங்களில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதுவும் பயணிகளுக்கு பஸ் ஏறுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

    இதையடுத்து சென்னையில் நெரிசலான பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களை 50 முதல் 100 மீட்டர் தூரம் வரை மாற்றுவதற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக பயணிகள் மத்தியில் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் பஸ் நிறுத்தத்தை மாற்ற வேண்டும் என்பதை அறிய தனியார் நிறுவனம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் பயணிகள் கூறும் கருத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள பல இடங்களிலும் பஸ் நிறுத்தங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • நாங்கள் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்கம் துணை நிற்போம்.
    • அ.தி.மு.க. என்னும் மாபெரும் கட்சி தனி நபரை சார்ந்து இல்லை.

    மேட்டுப்பாளையம்:

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடுவிதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன.

    இதையடுத்து செங்கோட்டையன் வகித்து வந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அவருக்கு எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

    இந்தநிலையில் கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் நகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் நேற்று மேட்டுப்பாளையம் வந்து ஏ.கே.செல்வராஜை சந்தித்து பேசினர். அவருக்கு சால்வை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அவர்களுடன் செங்கோட்டையனின் ஆதரவாளர் என கூறப்படும் பவானிசாகர் தொகுதி எம்.எல்.எ. பண்ணாரியும் நேற்று ஏ.கே.செல்வராஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரமணிதரன், சரஸ்வதி, முன்னாள் எம்.பி. காளியப்பன் உள்ளிட்ட ஈரோட்டின் முக்கிய நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.

    பின்னர் பண்ணாரி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்கம் துணை நிற்போம். அதனால் தான் இன்று ஈரோடு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் திரண்டு வந்துள்ளனர் என்றார்.

    ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ. கூறுகையில், அ.தி.மு.க. என்னும் மாபெரும் கட்சி தனி நபரை சார்ந்து இல்லை. இயக்கம் தான் பெரிது. தனி நபர் அல்ல என இங்கு வந்துள்ள இயக்க நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியின் உத்தரவுக்கு இணங்க வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற ஒருங்கிணைந்து இயங்குவோம் என்றார்.

    செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் பலர் கட்சி பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையத்தில் குவிந்த ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினரால் பரபரப்பு ஏற்பட்டது.

    பண்ணாரி எம்.எல்.ஏ. செங்கோட்டையனின் ஆதரவாளராக அறியப்பட்டவர். செங்கோட்டையன் கூட்டங்களில் அவரும் பங்கேற்று வந்தார். இந்தநிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பியது ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினரையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    • கரூரில் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
    • காணொலி காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

    சென்னை:

    தி.மு.க. சார்பில் கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம், அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாள் ஆகியவை முப்பெரும் விழாவாக வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் கரூரில் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்தும், 'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்தும் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்நிலையில் காணொலி காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    • ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
    • 3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்ற சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். அதேபோல், 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். காஞ்சிபுரத்தில் இருந்து உதயநிதி இன்று தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வருகிற 13-ந்தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த தினங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி, ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் விஜய், 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×