என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எட்டாக்கனியாகும் தங்கம்... சவரன் ரூ.2 லட்சத்தை எட்டும்
    X

    எட்டாக்கனியாகும் தங்கம்... சவரன் ரூ.2 லட்சத்தை எட்டும்

    • விலை ஏற்றத்தால் தங்கத்தின் மீதான மோகம் குறையாது.
    • சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குபவர்கள் கூட வருங்காலங்களில் அதை ஒரு முதலீடாகவே கருதுவார்கள்.

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து சூப்பர் சரவணா ஸ்டோர் நிர்வாக இயக்குனர் ஆர்.சபாபதி கூறியதாவது:-

    வரலாறு காணாத தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தக கொள்கை முடிவு ஆகும். அவரது வரி விதிப்பு மாற்றத்தால் உலக அளவில் தங்க வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    அவரது செயல்பாட்டால் இந்திய முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் அமெரிக்காவில் செய்யும் முதலீட்டுக்கு பதிலாக வேறு முதலீட்டுக்கு மாறி விட்டனர்.

    அமெரிக்காவில் பல்வேறு முதலீடு செய்த இந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், தங்கத்தில் முதலீடு செய்தால் சிறப்பாக இருக்கும் என தங்கள் முதலீட்டை திருப்பி உள்ளனர். தமிழக மக்களை பொறுத்தவரையில் தங்க நகைகளை சேமிக்கும் பழக்கமும், நகைகளாக அணியும் பழக்கமும் அதிகமாக உள்ளது. இதனால் தற்போது தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது.

    இந்தியாவில் ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்தவர்கள் இப்போது தங்கத்துக்கு மாறி விட்டனர். 90 சதவீதம் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து உள்ளது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும். குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. அடுத்து வருகிற 15 முதல் 18 மாதத்திற்குள் தங்கத்தின் விலை 2 மடங்காக உயரும்.

    தற்போது பவுன் ஒரு லட்சமாக இருக்கும் தங்க நகைகள் விலை ரூ. 2 லட்சமாக உயர வாய்ப்புகள் உள்ளன. இதனால் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்த மக்கள் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்பதாலும் தங்க நாணயம், மற்றும் தங்க பிஸ்கட்டில் முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருப்பதாகவும் கருதுகிறார்கள். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாதாரண மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் பார்வை அதன் மீது திரும்பி உள்ளது. 2 கிராம் தங்கம் வாங்குபவர்கள் இந்த விலை ஏற்றத்தால் ஒரு கிராம் வாங்குவார்கள். இதனால் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. அது ஒரு முதலீடு தான்.

    இந்த விலை ஏற்றத்தால் தங்கத்தின் மீதான மோகம் குறையாது. தேவையும் குறையாது. மாறாக தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும் நிலை உள்ளது. சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குபவர்கள் கூட வருங்காலங்களில் அதை ஒரு முதலீடாகவே கருதுவார்கள். தங்க வியாபாரிகளுக்கோ, நகை கடைகளுக்கோ இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. உலக அளவில் தனி நபர் மூலதனம் அதிகரித்து உள்ளதால் தொழில்களும் பாதிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:-

    அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் பெரும்பாலானவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை மேலும் உயரும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிறைய பேர் தங்கம் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×