என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் தொடர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும்.
- நடப்பு ஆண்டுக்கான ‘டெட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
சென்னை:
இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் தொடர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த தேர்வை எழுத விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க நேற்று முன்தினம் அவகாசம் முடிந்த நிலையில், இன்று (புதன்கிழமை) வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமானோர் விண்ணப்பிப்பதாக சொல்லப்படுகிறது. என்ன திடீரென்று இவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்கள் என்று பார்த்தால், சமீபத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியதன் எதிரொலியாக, அதனால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே பணியில் இருக்கும் 'டெட்' தேர்வை எழுதாத ஆசிரியர்களும் இதற்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், டெட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், அந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், தேர்வை எழுத விரும்பாதவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் 38 ஆயிரம் பேரும் என மொத்தம் 1,76,000 ஆசிரியர்கள் பாதிப்படைகிறார்கள்.
அந்தவகையில் அடுத்தக்கட்டமாக இந்த ஆசிரியர்கள் விவகாரத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது பற்றி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. அரசு அவர்களுக்கு இதுவரை தேர்வு நடத்த முடிவெடுக்காத சூழலில், டெட் தேர்வை எழுதாமல் பணியில் இருந்துவரும் ஆசிரியர்கள், கடந்த மாதம் வெளியிடப்பட்ட டெட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவில் முண்டியடித்து போட்டிப் போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுபற்றி அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, 'சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களில் சிலர் இந்த தேர்வை எழுதிதான் பார்ப்போமே என்ற மனநிலையில் விண்ணப்பித்து இருக்கின்றனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. பெரும்பாலும் இந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கே வாய்ப்பு அதிகம் உள்ளது' என்றனர்.
- சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
- சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள ஆளுநர் சி.பி. ராதாகிருண்ஷ்ணனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திறம்படப் பணியாற்றிய அவர்தம் பொதுவாழ்விற்கும், தொடர் அர்ப்பணிப்போடு அவராற்றிய மக்கள் சேவைக்கும், இப்பதவி மிகச் சிறந்த அங்கீகாரம் ஆகும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகத் தேர்வு செய்தமைக்கு இந்தியப் பிரதமர் மோடிக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், தேசியத் தலைவர் நட்டாவிற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் சி.பி. ராதாகிருண்ஷ்ணன் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.
- ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, மருதமுத்து, (அத்தாணி பேரூராட்சிக் கழக முன்னாள் துணைச் செயலாளர்)
- ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், அம்மாபேட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ். செல்வன்.
செங்கோட்டையனுக்கு ஆதரவான சில அ.தி.மு.க. நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். இந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சிலரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு புறநகர் மேற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்
கட்சியின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, மருதமுத்து, (அத்தாணி பேரூராட்சிக் கழக முன்னாள் துணைச் செயலாளர்), கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, ரா.மா. மணிகண்டன், (மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர்) ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், அம்மாபேட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ். செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அருள் ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.வி.எம். செந்தில் (எ) கோடீஸ்வரன், சத்தியமங்கலம் நகர புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் பொறுப்பிலும், 24-ஆவது வார்டு கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் எஸ்.டி. காமேஷ் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- செயின் திருட்டில் ஈடுபட்டபோது கைது.
- தொடர்ந்து 15 வருடமாக செயின் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி வாக்குமூலம்.
திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி, பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம், நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் திரும்பியபோது, அவரின் 5 சவரன் செயினை மர்ம பெண் ஒருவர் திருடியுள்ளார். இது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, பாரதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கடந்த 15 ஆண்டுகளாகச் செயின் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், திருடிய நகையை விற்று கிடைக்கும் பணத்தில் சொந்த ஊரில் வணிக வளாகம் கட்டி வருவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், திமுக ஊராட்சி மன்ற தலைவியாக ஆன பின்னரும் திருட்டு பழக்கத்தை விட சொல்லி உறவினர்கள் அறிவுறுத்தியும், தன்னால் திருட்டை விட முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் திமுக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- வருகிற 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
- 15 சனிக்கிழமை, ஒரு ஞாயிறு என 16 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், என்டிஏ கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியது, த.வெ.க. தலைவரின் பிரசார சுற்றுப் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை அளித்த பதில் பின்வருமாறு:-
கொஞ்சம் பொறுத்திருப்போம். ஒரு முடிவு எடுத்த பிறகு கொஞ்சம் காலம் கொடுத்தீர்கள் என்றால், செட்டில் ஆவதற்கு எல்லோருக்கும் நேரம் வேண்டும். அவர்களும் வருத்தத்தில் எடுத்திருப்பார்கள். பொறுத்திருப்போம். காலம் கனிந்து வரட்டும். எல்லோரும் எங்களுடைய முயற்சியை செய்து கொண்டிருப்போம்.
ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமியின் பத்திரிகை செய்திகளை பார்த்தேன். அவர்களுடைய கருத்தை வைத்துள்ளனர். எங்கேயும் சண்டை ஏற்படுவதற்கான சூழலை நான் பார்க்கவில்லை. காலம் இருக்கிறது. பொறுத்திருப்போம். எல்லாம் சரியாகும்.
டி.டி.வி. விவகாரம் தொடர்பாக தோண்டி தோண்டி பேசுவது அழகல்ல. டிடிவி தினகரன் நல்ல தலைவர். அவருக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருக்காது.
அரசியல் என்பது 24 மணி நேரமும் செய்யக்கூடிய வேலை. நீங்கள் அதற்காக தயாராக இருக்க வேண்டும். முழு நேர வேலையாக இருக்க வேண்டும்.
த.வெ.க. ஒரு சீரியஸான கட்சி. திமுக-வுக்கு மாற்றான கட்சி எனச் சொல்கிறார்கள். அந்த வேகத்தை களத்தில் 24 மணி நேரமும் பார்க்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். திமுக எங்களுக்கு எதிரான என்றால் களத்தில் காட்டினால் மட்டுமே மக்கள் நம்புவார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி திமுக-வுக்கு மாற்று என மக்கள் நம்புவதற்கு காரணம், அதன் தலைவர்களை எப்போதும் சந்திக்கக் கூடிய அளவில் இருக்கிறார்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மக்களை பார்ப்பேன் என்றால், அவர்கள் அரசியலை எந்த அளவிற்கு சீரியஸாக எடுக்கிறார்கள் என மக்கள் பார்க்கிறார்கள்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் வருகிற 13ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமை மற்றும் ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிரசாரம் மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
- வருகிற 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
- சனிக்கிழமை மற்றும் ஒரேயொரு ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழகம் முழுவதும் வரும் 13-ந்தேதி சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப் பயணத்தை தொடங்க மீண்டும் மனு அளிக்கப்பட்டது. இன்று காலை மனு அளித்த நிலையில், மாலை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
ஆனால், ரோடு ஷோ நடத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.
வருகிற 13-ந்தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் விஜய், 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை அமித் ஷாவிடம் முன்வைத்தேன் என்றார் செங்கோட்டையன்.
- அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது செங்கோட்டையனின் எண்ணம்.
அதிமுக எம்.எல்.ஏ.-வும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்ததாக தகவல் வெளியானது. அதை செங்கோட்டையன் உறுதிப்படுத்தினார். மேலும், "எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை அமித் ஷாவிடம் முன்வைத்தேன். தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினே். எங்களை பொறுத்தவரை அதிமுக என்ற இயக்கம் வலுப்பெற வேண்டும் என்பதுதான் நோக்கம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமித் ஷாவிடம், எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை செங்கோட்டையன் முன்வைத்ததாக தெரிவித்தது குறித்து ஓ. பன்னீர் செல்வத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முன்னாள் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் "செங்கோட்டையின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்" என்றார்.
மேலும், தம்பிதுரை கருத்துக்கு பதில் சொல்ல முடியாது. நயினார் நாகேந்திரனிடம் எனது போன் எண் உள்ளது. அவர் என்னை தொடர்பு கொள்ளட்டும் எனத் தெரிவித்தார்.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
- ஆண்டவர் நகர், விமான நிலையம் குடியிருப்பு, ஸ்ரீராம்நகர்.
மதுரை:
அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (10-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பைபாஸ்ரோடு முழுவதும், அவனியாபுரம் பஸ்டாண்ட், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், சந்தோஸ் நகர், வள்ளலானந்தாபுரம் ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார்நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமிநகர் முழுவதும், குருதேவ் வீடுகள், திருப்பதி நகர் முழுவதும்,
அண்ணாநகர், ஜே.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசி தோட்டம பெரியரதவீதி குடியிருப்பு பகுதிகள், பாம்பன் நகர். பாப்பாகுடி, டிமார்ட் அருகில், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி அன்பழகன் நகர், மண்டேலா நகர், போஸ்டர் டிரைனிங் காலேஜ், காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவர் நகர், விமான நிலையம் குடியிருப்பு, ஸ்ரீராம்நகர் ஆகிய பகுதிகிளல் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தவகலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
- வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்கு கண்டனம்.
- சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.
வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்கு கண்டனம் தெரிவித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல், காஞ்சீபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதில் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீதான வழக்கு விசாரணைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா பூசிவாக்கம் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருபவர் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் பொருட்கள் வாங்க வந்த நிலையில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
வாய் தகராறு முற்றிய நிலையில் கடையில் இருந்த சிவாவின் மருமகன் லோகேஷ் மற்றும் ஊழியர்கள் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முருகனின் புகாரின் பேரில் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
பேக்கரி கடை உரிமையாளர் சிவா அளித்த புகாரின் பேரில், முருகன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் பேக்கரி உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படாமல் இருந்தனர்.
இதுகுறித்து முருகன் தரப்பினர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ள தவறியதாக நேற்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேசுக்கு நீதிபதி ப.உ.செம்மல் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் நேற்று மாலை 5 மணிக்குள் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாவிட்டால் டி.எஸ்.பி. கணேஷ் சங்கரை சிறையில் அடைக்க உத்தரவிடப்போவதாக எச்சரித்தார்.
இந்த நிலையில் மாலை 5 மணி வரையில் போலீசார் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரை கைது செய்யாததால், நீதிமன்றத்தில் சீருடையில் காத்திருந்த டி.எஸ்.பி. சங்கர் கணேசை காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்க நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் நீதிபதியின் காரிலேயே வழக்கில் ஆஜராக வந்த டி.எஸ்.பி.சங்கர் கணேசை காஞ்சிபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்க அழைத்து வந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டி.எஸ்.பி. சிறையில் அடைக்கப்பட உள்ளார் என்பதை அறிந்து காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து ஏராளமான போலீசார் கிளை சிறை சாலை அருகே குவிந்தனர். டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறைக்குச் அழைத்து செல்ல அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் அவரது அலுவலகத்திற்கு சென்று வர ஜீப்பில் ஏறி சென்றார். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக வதந்தி பரவியது. இதுகுறித்து அறிந்த டி.எஸ்.பி.சங்கர் கணேஷ் உடனடியாக கிளை சிறைச்சாலை வளாகத்திற்கு வந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து அறிந்து ஏராளமான போலீசாரும், வக்கீல்களும் கிளை சிறைச்சாலை அருகில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் அழைத்து செல்லப்பட்டார்.
காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பில் முறையிடப்பட்டது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மாவட்ட நீதிபதிக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கும் ஏற்கனவே முன்பகை உள்ளது. அதில்தான் இப்படி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என்றார்.
அதற்கு நீதிபதி, அப்படியென்ன போலீஸ் அதிகாரிக்கும், நீதிபதிக்கும் முன்பகை இருக்கப்போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு வக்கீல், ''துணை போலீஸ் சூப்பிரண்டு நீதிபதிக்கு எதிராக சில புகார்களை தெரிவித்தார். அதற்காக பழிவாங்கும் விதமாக நீதிபதி செயல்பட்டுள்ளார். பேக்கரியில் மோதல் சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்துள்ளது. கடந்த 4-ந்தேதி ஏன் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை புகார் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். உடனே போலீசார் அந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் ஏன் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி, நேற்று (திங்கட்கிழமை) காலை முதல் மாலை வரை துணை போலீஸ் சூப்பிரண்டை கோர்ட்டில் அமரவைத்து, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 4-ன் கீழ் துணை போலீஸ் சூப்பிரண்டை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. எனவே, மாவட்ட நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்படும் வழக்கை அவசர வழக்காக கருதி இன்று பிற்பகலில் விசாரிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
அதேபோல, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தரப்பிலும் வக்கீல் ஒருவர் ஆஜராகி வழக்கு தொடரப்போவதாக கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தாக்கல் செய்தால், இன்று பிற்பகலில் விசாரிப்பதாக கூறினார். மேலும், ''இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏதோ வழக்கத்துக்கு மாறான சம்பவம் நடந்துள்ளது'' என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றம் டி.எஸ்.பி.யை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
- அடுத்து நமது இலக்கு ஒன்றுதான், அது, 2026-இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே.
- தேர்தல் நாள் வரைக்கும் பசி, தூக்கம், ஓய்வை மறந்து, உழைப்பை கொடுங்கள். ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம். 2026-லும் நாமே உதிப்போம்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-
கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், படுபாதாளத்துக்குப் போன தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, 11.19 விழுக்காட்டு வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் திராவிட மாடல் ஆட்சியில் உயர்த்தியிருக்கிறோம். இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமிடுவதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றேன். இந்தப் பயணத்தை தொடங்குவதற்கு முன், இது 'ஹிட்' அடிக்கும் என்று சொன்னேன். சொன்ன மாதிரியே, 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து 'சூப்பர் ஹிட்'அடித்துள்ளது.
தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை நாம் விரைந்து அடைய வேண்டும் என்றால் இந்தப் பயணங்களில் வெற்றியடைந்தால் மட்டும் போதாது. வரவிருக்கும் 2026 தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறவேண்டும். இதற்கான அடித்தளமாகத்தான், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பைக் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் நாள் தொடங்கினோம்.
சர்வாதிகார மனப்பான்மையோடு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க, தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்க நீங்கள் எல்லோரும் களத்தில் சிறப்பாகப் பணியாற்றினீர்கள். மக்களின் நம்பிக்கையைப் பெறக் களத்தில் பணியாற்றிய அத்தனை நிர்வாகிகளிடமும், நான் பாராட்டினேன் என்று சொல்லுங்கள். ஏனென்றால், நான் மகிழ்ச்சியோடு சொல்றேன்… ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைத்துள்ளோம்.
உங்கள் எல்லாருக்கும்– ஏன், உங்கள் மூலமாக கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சொல்கிறேன்… தேர்தல் முடியும் வரைக்கும் "ஓய்வு" என்ற சொல்லையே மறந்துவிடுங்கள்! ஏனென்றால், 2026-ல் நாம் பெறப்போகும் வெற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான வெற்றி.
எப்படிப்பட்ட ஆபத்துகள் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கிறதென்று சாதாரணமாக டீக்கடையில் பேப்பர் படிப்போர் கூட உணர்ந்திருக்கிறார்கள். ஃபேக் நியூஸ் - டைவர்ஷன் பாலிட்டிக்ஸ் என்று மக்களைக் குழப்ப எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதுதான் அவர்களால் முடியும். மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் துணையோடு தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க நம்மால்தான் முடியும். அதற்கான வலிமையை நாம் பெறப்போகும் நாள்தான் வரும் செப்டம்பர் 17 முப்பெரும் விழா.
அதற்கு முன், நம்மையெல்லாம் ஆளாக்கிய அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் நாள், 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும், அந்தந்த வாக்குச்சாவடிகளில் இணைந்த குடும்பங்களை அழைத்து, BLA, BDA, BLC-களின் கூட்டங்களை நடத்த வேண்டும். இது நிறைவு விழா கூட்டம் இல்லை. இதுதான் தொடக்கவிழா கூட்டம்.
தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் நம்மோடு இணைந்திருக்கும் எல்லோரையும் தேர்தல் வரைக்கும் நம்முடனே இணைத்துக்கொண்டு களப்பணியாற்ற வேண்டும். அதற்கான உறுதிமொழியை அந்தக் கூட்டங்களில் எல்லோரும் எடுக்க வேண்டும்.
முப்பெரும் விழாவில்– திமுக உடன்பிறப்புகள் அனைவரையும் ஒருசேர ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன். லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் கரூர் நோக்கி திரண்டு வருவார்கள். எல்லோரும் பாதுகாப்பாக வந்து போவதை உறுதிசெய்யுங்கள். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும். மேற்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும்- மாவட்டக் கழகச் செயலாளருமான செந்தில் பாலாஜி, விழாவுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். அத்தனை மாவட்டக் கழகச் செயலாளர்களும் செந்தில் பாலாஜிக்கு துணையாக இருக்கவேண்டும்.
முப்பெரும் விழா முடிந்த பிறகு, செப்டம்பர் 20-ஆம் நாள், ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களை திமுக மாவட்டங்கள் வாரியாக நடத்த வேண்டும்.
நமது அரசின் திட்டங்களால், மக்களிடையே நமக்கு இருக்கும் ஆதரவு உணர்வை அப்படியே தேர்தல் வரைக்கும் எடுத்துச் சென்று அறுவடை செய்ய ஒவ்வொருவரும் களத்தில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். அடுத்து நமது இலக்கு ஒன்றுதான், அது, 2026-இல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே.
அதற்கு நான் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான், தேர்தல் நாள் வரைக்கும் பசி, தூக்கம், ஓய்வை மறந்து, உழைப்பை கொடுங்கள். ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம். 2026-லும் நாமே உதிப்போம்.
- ரிப்பன் மாளிகை அருகே போராட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
- சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் கூட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
சென்னை ராயபுரத்தில் அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தூய்மைப் பணியாளர்கள் தொடர்பான கேள்விக்கு காது கேட்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் சென்னையில் தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அந்த இடத்தில இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
இன்று ரிப்பன் மாளிகை அருகே போராட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு பதில் கூற முடியாது என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் செய்தியாளர்கள் அந்த கேள்வியை மீண்டும் கேட்க, காது கேட்கவில்லை என்று அவர் பதில் அளித்தார்.
மேலும், ராயபுரம் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு தொந்தரவாக சிலர் மது அருந்துவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் சரக்கு அடிப்பதில்லை" என்று சேகர்பாபு பதில் அளித்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- மத்திய பா.ஜ.க. அரசு கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
- காங்கிரஸ் நாட்டை துண்டாட நினைக்கிறது.
தூத்துக்குடி:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூய்மைப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். அதன்படி பணி நிரந்தரம் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். பா.ஜ.க.வை சேர்ந்த வேலூர் இப்ராகிம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்த நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அவர் போராட்டம் நடத்தவில்லை.
ஆனால் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளர். போராடுபவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் நசுக்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு முன்னர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்தபோது அதுகுறித்து வெள்ளை அறிக்கை கேட்டோம். ஆனால் அவர்கள் அதனை வெளியிடவில்லை.
தற்போது முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்தது குறித்து இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. ஆளுங்கட்சியால் தொடர்ந்து மிரட்டல்கள் நடந்து வருகிறது.
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தமிழரான தற்போது மகாராஷ்டிர கவர்னராக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார்.
மத்திய பா.ஜ.க. அரசு கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் காங்கிரஸ் நாட்டை துண்டாட நினைக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது பல மாநிலங்களில் ஆட்சியை கலைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நீங்கள் செங்கோட்டையனை சந்திப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், செங்கோட்டையன் எங்களது கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வை சேர்ந்தவர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிப்பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி உத்தரவிட்டுள்ளார். எங்களது விருப்பம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான்.
ஆனாலும் அ.தி.மு.க. பொறுப்பில் இருந்து நீக்கியவர்களை நாங்கள் உடனடியாக சந்திக்க முடியாது என்றார்.
தொடர்ந்து, நீங்கள் டெல்லி செல்வீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக 11-ந் தேதி டெல்லி செல்வேன் என்றார். அப்போது செங்கோட்டையனை சந்திப்பீர்களா? என்ற கேட்டபோது, அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றார்.
பின்னர் செங்கோட்டையனை பின்னால் இருந்து தூண்டுவது பா.ஜ.க.தான் என்றும், அ.தி.மு.க.வை உடைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, தி.மு.க.வின் தூண்டுதலின் பேரிலேயே எல்லா பிரச்சனைகளும் நடக்கிறது. எல்லா பின்னணிக்கும் தி.மு.க. அரசாங்கம்தான் காரணம் என்றார்.






