என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று மாலையிலும் பரவலாக மழை பெய்தது.
    • தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பரவலாக நேற்று மாலையில் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலை மிஞ்சும் வகையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் திடீர் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று மாலையிலும் பரவலாக மழை பெய்தது. டவுன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் தெருக்களில் மழைநீர் ஓடியது.

    மாநகரை பொறுத்தவரை அதிகபட்சமாக நெல்லையில் 13 மில்லிமீட்டரும், பாளையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டி சுற்று வட்டாரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வானில் கருமேகம் திரண்டு காணப்பட்டது. குளிர்ச்சியான காற்று வீசியதோடு, பலத்த இடி-மின்னலும் ஏற்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கார் சாகுபடியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் சுற்றுவட்டாரங்களில் நெற்கதிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நேற்று பெய்த மழையால் பல இடங்களில் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்தன.

    மேலும் மழை காரணமாக கார் சாகுபடிக்கான அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அறுவடை செய்து மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் மழையில் நனைந்து சேதமாகியுள்ளது.

    குறிப்பாக மணிமுத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கார் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை பணிகள் சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென பெய்த மழை காரணமாக நெல் அறுவடை பணிகள் அங்கு முழுமையாக பாதிக்கப்பட்டது.

    ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும், கொள்முதல் செய்வதற்காக குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளும் மழையில் நனைந்து நாசமாகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு அணையில் 17 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியதோடு, விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பரவலாக நேற்று மாலையில் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிவகிரி சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. அங்கு 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை, சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்துமலை அருகே பலபத்திரராம புரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருவேங்கடத்தில் 6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் நடுவக்குறிச்சி, பழங்கோட்டை பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளது.

    • த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் புதிய பாதையில் தனது பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
    • திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற உள்ள விஜய் பிரசாரத்திற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை த.வெ.க. ஏற்றுக்கொண்டது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 13-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து அவர் தனது பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதில் 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் விஜய் முதலில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் புதிய பாதையில் தனது பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

    முதலில் டி.வி.எஸ் டோல்கேட் தொடங்கி தலைமை தபால் நிலையம், பாரதியார் சாலை, மரக்கடை வழியாக சத்திரம் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

    சத்திரம் பேருந்து நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் தற்போது பிரசார பயண பாதையை மாற்றி உள்ள விஜய், டி.வி.எஸ் டோல்கேட்டில் பிரசாரத்தை தொடங்கி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே பேச உள்ளார். சத்திரம் பேருந்து நிலையம் செல்லாமல் காந்தி மார்க்கெட் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து விஜய் அரியலூர் செல்கிறார்.

    திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற உள்ள விஜய் பிரசாரத்திற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை த.வெ.க. ஏற்றுக்கொண்டது. ஸ்டார் தியேட்டர், தமிழ்ச்சங்கம் மற்றும் காந்தி மார்க்கெட் ஆகிய 3 இடங்களில் தற்காலிக பார்க்கிங் அமைக்க த.வெ.க. ஒப்புக்கொண்டது.

    • காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள, கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் திறந்து விடப்படும் உபரிநீர் வெளியேற்றத்தின் அளவு கூடுவதும், குறைவதுமாக உள்ளது.

    இந்த நிலையில் கா்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் குறைந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இருப்பினும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க இன்று குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வேளச்சேரியில் தொழில் அதிபர் அமித் பிஸ்நாத் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.
    • மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணி என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.

    சென்னை:

    சென்னையில் இன்று 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அடையாறு காந்தி நகர் 3-வது தெருவில் வசித்து வரும் இந்திரா என்ற டாக்டர் வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

    இதே போன்று வேளச்சேரியில் தொழில் அதிபர் அமித் பிஸ்நாத் என்பவரது வீட்டிலும், மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற புகாரின் பேரில் சோதனையை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் எது தொடர்பாக சோதனை நடைபெற்று உள்ளது என்பது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.

    சோதனை முடிவில்தான் அது பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
    • புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.

    கிருஷ்ணகிரி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (வியாழக்கிழமை) கிருஷ்ணகரி மாவட்டத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓசூர் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனேஜா விமான ஓடு தளத்தை வந்தடைகிறார்.

    அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து ஓசூரில் தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் சென்றடைகிறார். அங்கு 11.30 மணிக்கு நடைபெற கூடிய தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் அங்கிருந்து 12.50 மணிக்கு எல்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு செல்கிறார். அங்கு அமைய உள்ள நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் மதிய உணவை தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஓசூரில் இருந்து புறப்படுகிறார். மாலை 4.30 மணி அளவில் சூளகிரி பஸ் நிலையத்தை அடைகிறார்.

    அங்கு பஸ் நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மாலை 4.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்தை வந்தடைகிறார். அங்கு 5 மணிக்கு புதிய தொழிற்சாலை தொடங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 6 மணிக்கு கிருஷ்ணகிரியை வந்தடைகிறார். அங்கு சுங்கச்சாவடி அருகில் கட்சியினர் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து ரோடு ஷோவில் பங்கேற்கும் அவர் இரவு கிருஷ்ணகிரியில் தங்குகிறார்.

    12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்கிறார். அங்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் அவர், விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்.

    பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து விழா மேடைக்கு வரும் முதலமைச்சர் கல்லில் உறைந்த வரலாறு கிருஷ்ணகிரியின் தொன்மையும் வரலாறும் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட புத்தகத்தை வெளியிடுகிறார்.

    பின்னர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் திட்டப்பணிகள் குறித்த குறும்படத்தை திரையிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    பின்னர் கார் மூலமாக ஓசூர் புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் முதலமைச்சர் சென்னை செல்கிறார்.

    • தாமிரபரணி ஆற்றில், கழிவுநீரைக் கலக்கவிட்டு, அதன் தன்மையையும் மக்களின் அடிப்படைத் தேவையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது.
    • தி.மு.க. ஆட்சியில் தெற்கு தேய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    "தமிழ் கண்டதோர் வையை, பொருநை நதி" என மகாகவி பாரதியார் பாட்டெடுத்த தாமிரபரணி ஆறு, @arivalayam அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலுமாக சீரழிந்து போயுள்ளது. நெல்லையின் வற்றாத ஜீவநதியாகவும், சுற்றியுள்ள 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையின் உயிர்நாடியாகவும் பெருக்கெடுத்த தாமிரபரணி ஆற்றில், கழிவுநீரைக் கலக்கவிட்டு, அதன் தன்மையையும் மக்களின் அடிப்படைத் தேவையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது ஆளும் அரசு.

    தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருவது, அவற்றின் கரைகளைப் பலப்படுத்துவது, கால்வாய்களை மறுசீரமைப்பது, நீர்நிலைகளில் கலக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மையின் அடிப்படை வேலைகளைக் கூட செய்ய முடியாத தி.மு.க. அரசு, எதற்காக நீர்வளத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியது? அனைத்து உயிர்களின் வாழ்வாதாரமான நீராதாரத்தைத் தி.மு.க. அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

    தென் தமிழக மக்களின் அடிப்படைத் தேவை இப்படி அந்தரத்தில் ஊசலாடுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தக் கவலையுமில்லையா? ஒருவேளை, தண்ணீருக்காக தென் மாவட்ட மக்களைத் திக்குமுக்காட வைப்பதும் திராவிட மாடல் கொள்கைகளில் ஒன்றாக இருக்குமோ? தி.மு.க. ஆட்சியில் தெற்கு தேய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • தனது ஜனநாயகக் கடமைகளில் சிறந்து விளங்கிட அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

    சென்னை:

    துணை ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசமான நமது இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக தேர்வாகி இருக்கும் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நமது அரசியலமைப்பின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், தனது ஜனநாயகக் கடமைகளில் சிறந்து விளங்கிட அவரை வாழ்த்தி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார். 

    • நேற்று கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது.
    • ஒரு கிராம் வெள்ளி 140 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது.

    இந்தநிலையில் அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.

    இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.10,005 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. இது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

    வார தொடக்க நாளான திங்கட்கிழமை காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்று மாலையே தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.இதனை தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,150-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.10,150-க்கும் சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



    தங்கத்தை போலவே உயர்ந்து வரும் வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 140 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480

    07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    06-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    05-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,920

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-09-2025- ஒரு கிராம் ரூ.140

    08-09-2025- ஒரு கிராம் ரூ.140

    07-09-2025- ஒரு கிராம் ரூ.138

    06-09-2025- ஒரு கிராம் ரூ.138

    05-09-2025- ஒரு கிராம் ரூ.136

    • அண்ணாமலை கட்சியை அரவணைத்து செல்கிறார்.
    • நண்பராக நயினார் நாகேந்திரன் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்.

    விருதுநகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது தமிழ்நாட்டிற்கு பெருமையும் மகிழ்ச்சியும் சேர்க்கின்ற விஷயம். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் மட்டும் அல்ல, அவர் ஒரு நேர்மையான நல்ல மனிதர். அவர் வெற்றி பெற்றது உண்மையிலேயே மகிழ்ச்சி.

    தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் நயினார் நாகேந்திரன். கூட்டணியில் இருந்து நான் வெளியேறும்போது எல்லா காரணங்களையும் சொன்னேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் எந்தவிதமான மனவருத்தமும் கோபமும் கிடையாது. ஒரு நண்பராக அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்.

    அண்ணாமலை கட்சியை அரவணைத்து செல்கிறார். செங்கோட்டையனின் நல்ல முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பது அம்மாவின் தொண்டர்கள் அனைவரின் விருப்பம். அவரது முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்து பேசுவதற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.
    • பேசும் இடங்களை தவிர மற்ற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தின் வெளியே வரக்கூடாது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 13-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து அவர் தனது பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதில் 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் விஜய் முதலில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கடந்த 6-ந் தேதி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து சத்திரம் பஸ் நிலையம் அருகே உரையாற்ற அனுமதி அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் போலீசார், பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி, 'ரோடு ஷோ' நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி கொள்ளுமாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, த.வெ.க. திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு அளிக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் த.வெ.க.வினர் அனுமதி கேட்கும் கடிதத்துடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

    மேலும் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனரை சந்தித்து, பிரசார பயணத்திற்கு அனுமதி கடிதம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் நீண்ட நேரமாக த.வெ.க.வினர் கமிஷனர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் துணை கமிஷனரை சந்திக்க புறப்பட்டனர்.

    அதன்படி அவர்கள் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் எஸ்.ஆர்.சி. கல்லூரி அருகில் உள்ள திருச்சி மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சிபினை சந்தித்து, விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரி மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்து பேசுவதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி மரக்கடை பகுதியில் த.வெ.க. தலைவர் பிரசாரம் செய்வது உறுதியாகி உள்ளது.

    இந்நிலையில் விஜய் சுற்றுப்பயணத்திற்காக போலீசார் விதித்த நிபந்தனைகள் ஏற்க முடியாதது என த.வெ.க.வினர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, 'ரோடு ஷோ' நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விஜய் வாகனத்தின் பின்னால் அதிக அளவில் வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேசும் இடங்களை தவிர மற்ற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தின் வெளியே வரக்கூடாது எனவும் போலீசார் நிபந்தனை விதித்தனர்.

    காவல்துறையின் குறிப்பிட்ட நிபந்தனைகளை ஏற்க த.வெ.க.வினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு மீண்டும் காவல் துணை கமிஷனர் அலுலவகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    • 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
    • 11, 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறும் நிலையில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு நடைபெறும் பள்ளுகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் முடிவெடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    11, 12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
    • கூடுதல் பெட்டிகள் இணைப்புக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்துக்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி முதல் நிரந்தர ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

    அதாவது, சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாராகும் பெட்டிகளை கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரெயிலாக வந்தே பாரத் ரெயில் உள்ளது. பிற ரெயில்களை விட வந்தே பாரத் ரெயிலில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வந்தே பாரத் ரெயில்களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் வந்தே பாரத் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.

    மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரெயிலில் 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், ஒரு எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டு இருந்தன. இந்த ரெயில் மதுரையில் இருந்து தினமும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. வாரந்தோறும் பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.

    இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரெயிலில் தற்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. அதாவது, நாளை (வியாழக்கிழமை) முதல் 14 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 2 எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் கூடிய ரெயிலாக இயக்கப்பட உள்ளது. இதற்கான ரெயில் பெட்டிகள் நேற்று கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டன.

    கூடுதல் பெட்டிகள் இணைப்புக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

    ×