என் மலர்
நீங்கள் தேடியது "வெளிநாட்டு பயணம்"
- தமிழ்நாடு முதலிடம் என ஏன் பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டும்?
- ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்கள், முதலீட்டாளர் மாநாடு என்று எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது?
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2021, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது சுமார் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்துவிட்டு, தற்போது 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம், 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று மேடைதோறும் பச்சைப் பொய் பேசி,
மக்களின் காதுகளில் பூச்சூடி வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசு சதவீத கணக்கில் 70 சதவீதம் என்றும், 77 சதவீதம் என்றும் முதலீடுகளை ஈர்த்தது பற்றி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினும், தொழில்துறை அமைச்சரும் முதலீடு வந்துவிட்டது போலவும், வேலை வாய்ப்பு இலட்சக்கணக்கில் உருவாகிவிட்டது போலவும் (எக்ஸ் வலைதள) அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
* 2022, மார்ச் 24 முதல் 29 வரை துபாய்க்கு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நோபல் ஸ்டீல் 1000 கோடி, லூலூ மால் 3,500 கோடி, ட்ரான்ஸ்வோல்ட், வைட்ஹவுஸ் மற்றும் ஆஸ்டர்டாம் ஹெல்த் கேர் என்று ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 6,100 கோடி ரூபாய்க்கு முதலீடு என்று அறிக்கை வெளியிட்டார்கள். இதன்படி ஆறு நிறுவனங்களும் தொழிலை ஆரம்பித்து விட்டனவா? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.
* இரண்டாவதாக, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணம் மேற்கொண்டு 3,233 கோடி ரூபாய் முதலீடு பெற்று, 5000 வேலைவாய்ப்பை உருவாக்கப் போட்ட 13 ஒப்பந்தங்களில் எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.
* மூன்றாவதாக, ஸ்பெயினுக்கு 2024-ஆம் ஆண்டு ஜனவரி 28 முதல் பிப்ரவரி 7 வரை சென்று 3,440 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்தோம் என்றும் கூறினார்கள். அந்த முதலீட்டில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.
* 4-ம் முறையாக 2024, ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 12 வரை 17 நாட்கள் அமெரிக்காவுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு 11,516 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 7,618 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக போடப்பட்டு அறிக்கை வெளியிட்டார்கள். எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.
* தற்போது ஸ்டாலின், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஐந்தாவது முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு 15,516 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 17,613 வேலைவாய்ப்பை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இவைகளெல்லாம், இவர்களின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் விவரங்கள்தான்.
* இதைத் தவிர, உலக முதலீட்டாளர் மாநாடு 2024, ஜனவரி 7, 8 தேதிகளில் நடத்தப்பட்டு 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அதன்மூலம் 14.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
* விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி, திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் 9.74 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து 27 தொழிற்சாலைகள் தொடங்கி 31 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளதாகக் கூறினார்.
* தொழில் துறை அமைச்சரோ, 2025, மே மாதம் 12-ஆம் தேதி தனது அறிக்கையில் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10 லட்சத்து 27 ஆயிரத்து 547 கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்த்து, 32.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி 70 சதவீதம் முதலீட்டைப் பெற்றுவிட்டதாகக் கூறினார்.
* கடைசியாக ஸ்டாலின் 30.8.2025 அன்று வெளிநாடு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 922 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, 32.81 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி 77 சதவீதம் செயல்முறைப்படுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
* இவர்கள் கூறுவதைப் போல் 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள், 922 ஒப்பந்தங்கள் யாருடன் போடப்பட்டது? 32.81 லட்சம் நபர்களுக்கு யார் வேலைவாய்ப்பு தந்தார்கள்? இவற்றில் உண்மையாக நடைமுறைக்கு வந்த ஒப்பந்தங்கள், செயல்பாட்டிற்கு வந்த தொழிற்சாலைகள், உண்மையில் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை என்ன என்று யாருக்கும் தெரியாது. எக்ஸ் தளத்தின் மூலமே விளம்பரம் தேடும் விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு, இந்த விவரங்களை ஏன் முழுமையாக வலைதளத்தில் வெளியிடுவதில்லை.
* மேலும் ஸ்டாலின், ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக தற்போது அறிவித்துள்ள நிறுவனங்களில் பல ஏற்கெனவே தமிழகத்தில் தங்களது தொழில்களை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இங்கே நடைபெற்று வரும் தொழில்களை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தங்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று கையொப்பம் வாங்கியதற்கு பதிலாக, இங்கேயே ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கலாமே என்று தொழில் துறையினர் கூறுகின்றனர்.
* இதில் 2021-க்கு முன்பு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட முதலீடுகளையும், திமுக தனது சாதனையாகக் கூறிக்கொள்வதுதான் விந்தை. எனவேதான், நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.
* திமுக ஆட்சியின் முதலீடுகளின் நிலை பற்றி ஏன் அறிக்கையாக வெளியிடுவதில்லை? குறைந்தபட்சம் சட்டமன்றத்தில்கூட இதுபற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில்லையே ஏன்? இந்த மொத்த விவரங்கள்கூட இவர்கள் எக்ஸ் வலைதளத்தில் வெளியிடும் செய்தியில் இருந்துதான் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
* மத்திய அரசு வெளிநாட்டு மூலதனம் பற்றிய ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் 2022-23-ல் தமிழ்நாடு பெற்ற அந்நிய முதலீடு வெறும் 17,247 கோடி ரூபாய் என்றும், 2023-24ல் 20,157 கோடி ரூபாய் என்றும், 2024-25-ல் 31,103 கோடி ரூபாய் தான் என்றும், ஆகமொத்தம் 3 ஆண்டுகளில் 2025 மார்ச் மாதம் வரை 68,507 கோடி ரூபாய் மட்டுமே மூலதனமாகப் பெற்று, ஐந்தாவது இடத்தில்தான் உள்ளது. தமிழ்நாட்டை விட பல மடங்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்கள் எல்லாம் பெற்றுள்ளன. டெல்லியும், தமிழகத்தை விட அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலிடம் என ஏன் பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டும்?
* அப்படியென்றால், திமுக அரசு கொடுக்கும் புள்ளி விபரம் ஒரு கற்பனையான புள்ளி விவரமா? என்று பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பதில், விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் உருவாக்கப்பட்ட 32.81 லட்சம் வேலைவாய்ப்புகள் எங்கே உருவாக்கப்பட்டுள்ளது என்று படித்து முடித்து வேலை தேடி அலைந்துகொண்டிருக்கும் வேலையில்லா இளைஞர் பட்டாளம் எழுப்பும் கேள்வியிலேயே அந்த பதில் உள்ளது.
ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்கள், முதலீட்டாளர் மாநாடு என்று எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது? எவ்வளவு முதலீடு பெற்றுள்ளோம்? எவ்வளவு தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன? எவ்வளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன? என்பதை தைரியமாக தமிழக தொழில் துறை இணையதளத்திலோ, அல்லது தமிழ்நாடு முதலீட்டு வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்திலோ வெளிப்படையாக ஏன் வெளியிடுவதில்லை? அதை விட்டுவிட்டு எக்ஸ் தனி வலைதளத்தில் தொழில்துறை மந்திரியும், பொம்மை முதலமைச்சரும் தொடர்ந்து வெற்று விளம்பரம் தேடுவது, இந்த அரசு ஒரு பொய், பித்தலாட்ட அரசு என்பதையே உறுதி செய்கிறது.
எனவேதான் ஸ்டாலினிடம், உங்கள் ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்தும், துவங்கப்பட்ட தொழில்கள் குறித்தும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக வெள்ளை அறிக்கை கேட்கிறேன். இனியும் எக்ஸ் வலைதளத்தில் பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்றும், தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், வெற்று விளம்பர முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு?
- இது முதலீடு எனும் பெயரில், மக்கள் பணத்தில் திமுக நடத்தும் மோசடி விளையாட்டல்லவா?
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சற்று முன்பு ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களோடு ரூ. 3200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார் என்று வெளியாகியுள்ள செய்தி பெருத்த ஏமாற்றத்தையும் வலுவான சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களும், தமிழகத்தில் ஏற்கனவே பல வருடங்களாக இயங்கி வரும் நிலையில், மாநில முதல்வரே இங்கிருக்கும் பணிகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று ஒரு படாடோப நாடகம் நடத்தவேண்டிய தேவை என்ன? ஒரே நாளில், முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு?
அதிலும், தமிழகம் போன்ற ஒரு அதிகப்படியான GDP கொண்ட மாநிலத்திற்கு, ரூ. 3200 கோடி முதலீடெல்லாம் யானை பசிக்கு சோளப்பொரியே! கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை வெளிநாட்டிற்கு பயணம் செய்து, மாண்புமிகு மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள் ரூ. 15 லட்சம் கோடி முதலீட்டை தனது மாநிலத்திற்கு கொண்டு வந்தார். அதே போல, தான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாமலேயே, அமைச்சர்களை மட்டும் அனுப்பி, சுமார் ரூ. 7 லட்சம் கோடி முதலீடுகளை மாண்புமிகு உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள் ஈர்த்தார்.
நமது தமிழக முதல்வரோ ஆறு முறை உலகத்தை சுற்றி வந்து, சொற்பத் தொகையான ரூ. 18,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை மட்டுமே ஈர்த்துள்ளார். அவற்றிலும் இன்றுவரை 95% ஒப்பந்தங்கள் வெறும் காகித அளவிலேயே நின்றுவிட்டன!
ஆக, இது முதலீடு எனும் பெயரில், மக்கள் பணத்தில் திமுக நடத்தும் மோசடி விளையாட்டல்லவா? இப்பொழுதாவது வாயைத் திறக்குமா விளம்பர மாடல் அரசு?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தகுதிவாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட திமுக அரசு கேட்கவில்லை.
- ஸ்டாலின் இப்போது வெளிநாடு போயிருக்கிறார், இந்த முறையும் சைக்கிள் ஓட்டாமல் இருந்தால் சரி.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' முதல் கட்ட எழுச்சிப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கினார்.
இந்த எழுச்சிப்பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான இன்று திருப்பரங்குன்றம், திருமங்கலம், திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மக்களைச் சந்திக்கிறார்.
முதலில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட 16 கால் மண்டபம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் உரைரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்திருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை. அரசு நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது, அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேயரின் ஒத்துழைப்பு இல்லாமல் முறைகேடு நடந்திருக்க முடியாது. எனவே, மதுரை மேயர் கைது செய்யப்பட வேண்டும். மதுரை மேயரைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது. அதிமுக அரசு வந்தவுடன் முழு விசாரணை நடத்தி, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள். காஞ்சிபுரம், நெல்லை, கோவையிலும் இவ்வாறு நடந்துள்ளது. மற்ற நகர்ப்புற பகுதிகளிலும் ஊழல்கள் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெற்றுவிட்டார். 3 மாதத்துக்கு முன்பாக புதிய டிஜிபிக்கள் பட்டியல் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அந்த பட்டியலில் இருந்து மூன்று பேரை பரிந்துரைப்பார்கள். அந்த மூவரில் இருந்து ஒருவரை மாநில அரசு தேர்வுசெய்து டிஜிபியாக அறிவிக்க வேண்டும். இதுதான் சட்டம். இந்த பதவியைக் கூட உரிய நேரத்தில் நியமிக்க முடியாத, கையாலாகாத அரசு திமுக அரசு. புதிய டிஜிபி தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. 8 டிஜிபிக்கு பிறகு 9வது டிஜிபியாக இருப்பவர் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. இந்த நிலையில் குறித்த காலத்தில் டிஜிபி நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஓய்வுபெறும் நாள் இந்த அரசுக்கு முன்பே தெரிந்தும், திட்டமிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக சட்டப்படி நடந்துகொள்ளவில்லை. இதனால், தகுதியுள்ள 8 டிஜிபிக்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு ஒரு டிஜிபி, தீயணைப்புத் துறைக்கு ஒரு டிஜிபி என 8 டிஜிபிக்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பு உள்ளது. அப்படி பொறுப்புமிக்க 8 டிஜிபிக்கள் விழாவில் பங்கேற்கவில்லை என்றால் இந்த அரசு எப்படி நடக்கும்? காவல் துறையிலேயே சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டை ராணுவம் பாதுகாக்கிறது, மக்களை காவல்துறை பாதுகாக்கிறது. மக்களைக் காக்கிற காவல்துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்றுவிட்டது. தகுதிவாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட திமுக அரசு கேட்கவில்லை.
ஸ்டாலின் இப்போது வெளிநாடு போயிருக்கிறார், இந்த முறையும் சைக்கிள் ஓட்டாமல் இருந்தால் சரி. அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை முதலீட்டாளர் மாநாடு நடத்தி பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு, லட்சக்கணக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 10 லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
திமுக அரசும் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது, அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டோம், இதுவரை கொடுக்கவில்லை. தொழிற்துறை அமைச்சர் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன என்கிறார், பிறகு ஏன் வெள்ளை அறிக்கை கொடுக்கவில்லை..?
எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாக நினைக்கிறார் என்று அமைச்சர் ராஜா பேசுகிறார். ஆம் நான் ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாகத்தான் நினைக்கிறேன்.
ஏனென்றால் நானெல்லாம் ஒரு விவசாயி. உங்கள் அப்பா மத்திய அமைச்சர் என்பதால் நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்கிறீர்கள். உங்கள் தலைவரின் அப்பா முதல்வராக இருந்தவர். அதனால் நீங்கள் எல்லாம் தங்க ஸ்பூனிலும், வெள்ளித் தட்டிலும் சாப்பிடலாம். நான் மக்களோடு மக்களாக இருந்து வந்தவன், எனக்கு கையில் எடுத்து சாப்பிடத்தான் தெரியும்.
எவ்வளவு திமிர் இருந்தால் இப்படிப் பேசுவார்..? நாம் எல்லோரும் ஸ்பூனிலா சாப்பிடுகிறோம்? கையில் சாப்பிடுவதற்கே சாப்பாடு கிடைக்காமல் மக்கள் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள், அதற்காகத்தான் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. மக்களுடைய பிரச்னை தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் உங்களுக்கு அடுத்தாண்டு தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.
மக்கள் வேலைக்காக, உணவுக்காகப் ராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அம்மா உணவகத்தை கூட மூடப்பார்க்கிறார்கள். முழுமையாக பொருட்கள் கொடுப்பதில்லை, ஊழியர் எண்ணிக்கை குறைத்தனர். இவர்களா ஏழை மக்களைக் காப்பாற்றுவார்கள்?
2011க்கு முன்பு திமுக ஆட்சியையும், 2011க்கு பின் அதிமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். இன்று போதை பொருள் விற்காத இடமே இல்லை. போதை பொருள் தாராளமாகக் கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள், நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் போதை மாநிலமாக உருவாகிவிட்டது.
மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். உதயநிதி போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கிறார். எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின் இப்படி பேசுவதான் மூலம் என்ன பயன்? ஆனால், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டனர் என்பதை முதல்வர் ஸ்டாலினே ஒப்புக்கொண்டுவிட்டார். நாங்கள் சொல்லும்போதே தடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
இப்போது எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். கூடுதலாகப் பெறும் தொகை முழுக்க மேலிடம் செல்வதாக டாஸ்மாக் பணியாளரே சொல்கிறார், அந்த மேலிடம் யார் என்பது உங்களுக்கே தெரியும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விசாரித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியே வசூலிக்கிறார்கள். அப்போதும் மின்சார வாரியம் கடனில்தான் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான்.
விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம்.
ஆனால், முதல்வருக்கு அவரது குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்தனை. அவர் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. 51 மாத காலத்தில் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா, புயல், வறட்சி ஆகியவற்றிலும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டது அதிமுக அரசு. எம்ஜிஆர், அம்மா ஏழைகளை நேசித்தார்கள், எப்போதெல்லாம் துன்பம் ஏற்படுகிறதோ, அதிலிருந்து விடுபடும் அளவுக்கு ஆட்சி செய்தார்கள்.
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. தினமும் கொலை நிலவரம்தான் செய்திகளில் வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். 46 பிரச்னைகள் மக்களுக்கு இருப்பதையே முதல்வர் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். இன்னும் 7 மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது. அதற்குள் நிறைவேற்ற முடியுமா?
நான்கு ஆண்டுகள் தூங்கிவிட்டு தேர்தல் வருவதால் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு வாங்கப்பட்ட மனுக்கள் திருப்புனவத்தில் ஆற்றில் வீசி எறியப்பட்டுள்ளது. எந்தளவுக்கு மக்களை மதிக்கிறார்கள் என்று பாருங்கள். இவர்களா மக்களை காப்பாற்றுவார்கள்?
கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். மாணவர்கள், தொழிலாளர்கள், மக்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் அதிமுக ஆட்சியில்தான் நன்மைகள் கிடைக்கப்பெற்றது.
ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில், 24 மணிநேரம் அரசு மருத்துவமனை, பள்ளிகள் தரம் உயர்த்துதல், முல்லைப் பெரியாறு திட்டம், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு, பொறியியல் கல்லூரி, மருத்துவ ஆராய்ச்சி நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் என்று நிறைய திட்டங்கள் கொடுத்திருக்கிறோம்.
திருப்பரங்குன்றம் மலைக்கு ரோப் கார் வசதி செய்வதாக திமுகவினர் சொன்னார்கள். அதை செய்யவில்லை, கிரிவலப்பாதை மேம்படுத்தப்படும் என்றார்கள், செய்யவில்லை. அவனியாபுரம் பைபாஸ் முதல் நெல்பேட்டை வரை உயர்மட்ட பைபாஸ் பாலம் கட்டப்படும் என்றார்கள், செய்யவில்லை. விரகனூர் ரவுண்டானா உயர்மட்ட பாலம் கட்டுவோம் என்று சொன்னார்கள், செய்யவில்லை. திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைவுபடுத்தி முடித்துக்கொடுக்கப்படும்.
இந்த பகுதியில் மல்லிகைப் பூ சாகுபடி அதிகம் நடக்கிறது. சில காலகட்டத்தில் மல்லிகைப் பூ விலை வீழ்ச்சி அடைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த விலை வீழ்ச்சியை சரிக்கட்ட உங்கள் ஆதரவுடன் அடுத்தாண்டு அதிமுக அரசு அமைந்ததும், இப்பகுதியில் மல்லிகை சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்.
இவ்வாறு கூறினார்.
- உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் சுமார் ரூ.37.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்,.
- மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஐரோப்பிய பயணத்திற்கு முதலில் எனது வாழ்த்துகள். தமிழகத்தின் முதலீடுகளை அதிகரிக்கும் எந்த முயற்சியையும் தமிழக பாஜக சார்பாக முழு மனதுடன் வரவேற்கத் தயாராக உள்ளோம்.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி ஒவ்வொரு வருடமும் பல வெளிநாடுகளுக்குப் பயணித்த தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், தனது பயணத்தின் பலன் என்ன என்பதையும், ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கையையும் வெளியிடாமல் அடுத்த வெளிநாட்டுப் பயணத்திற்கு ஆயத்தமாகியிருப்பது தான் மக்களைக் குழப்பமடையச் செய்துள்ளது.
காரணம், உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே சுமார் 37.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்! மகாராஷ்டிரா முதல்வர் திரு. தேவேந்திர ஃபட்நாவிஸ் அவர்கள், டாவோஸ் பயணத்தில் ₹15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை அவரது மாநிலத்திற்குக் குவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலீட்டுக் கதையோ கற்பனையாகவே இன்றளவும் நீள்கிறது. 2022-ல் துபாய் பயணத்தின் போது வெறும் ₹6,100 கோடி மதிப்பிலான உடன்படிக்கைகள் கையெழுத்தானது எனத் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. மூன்று வருடங்கள் கடந்தும், அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை! சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணித்த போது கையெழுத்தானவை வெறும் காகித உடன்படிக்கைகளாகவே இன்றும் நிலுவையில் உள்ளன.
மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஸ்பெயின் பயணம் மூன்று உடன்படிக்கைகளோடு சொற்பமாக முடிந்து விட்டது. அதிலும் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை! 2024-இன் அமெரிக்கப் பயணத்தில் ₹7.500 கோடி மதிப்பிலான 19 உடன்படிக்கைகள் கையெழுத்தானதாக அரசு கூறினாலும், இதுவரை ஒரு தொழிற்சாலையின் கட்டுமானம் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருடாவருடம் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசின் தொழில் துறையின் ஆற்றலின்மையை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மேலும், செலவை சுருக்கி வரவைப் பெருக்குவதில் பிற மாநில அரசுகளும் முதல்வர்களும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, இதுநாள் வரை தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் பின்னணி என்ன என்பது மக்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.
அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான சூழலை உருவாக்கி, சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கை செம்மைப்படுத்தினாலே நமது தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். ஊழல், லஞ்சம். முறைகேடு ஆகியவற்றால் துருப்பிடித்துக் கிடக்கும் அரசு இயந்திரத்தைப் பழுது பார்த்தாலே, தொழில் துவங்க விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திற்குப் படையெடுக்கும்.
இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக வெற்று விளம்பரங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதால் யாருக்கு என்ன பயன்?" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
இதற்காக ரூ.1484 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக பாராளுமன்ற மேல்-சபையில் வெளியுறவுத் துறை இணை மந்திரி வி.கே.சிங் தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந்தேதி வரையிலான கால கட்டத்தில் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விமானத்தை பராமரிக்க மொத்தம் ரூ.1088.42 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
அதே கால கட்டத்தில் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போது பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு ரூ.387.26 கோடி செலவிடப்பட்டுள்ளது.
பிரதமராக மோடி பதவி ஏற்றது முதல் 42 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது 84 வெளிநாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.
கடந்த 2015-16-ம் ஆண்டில் அதிகபட்சமாக 24 நாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். 2016-17-ம் ஆண்டில் 18 நாடுகளுக்கும், 2017-18-ம் ஆண்டில் 19 நாடுகளுக்கும் மோடி சென்றுள்ளார்.
பிரதமர் மோடியின் பயணத்துக்காக கடந்த 2014- 15-ம் ஆண்டில் தனியார் விமானங்களுக்கு ரூ.93.76 கோடியும், 2015-16-ம் ஆண்டில் ரூ.117 கோடியும், 2016-17-ம் ஆண்டில் ரூ.76.27 கோடியும், 2017-18-ம் ஆண்டில் ரூ.99.32 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2018-19-ம் ஆண்டு கால கட்டத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து அதில் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பிரதமர் மோடியின் தொலைபேசி அழைப்புகளுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்தும் விரிவாக குறிப்பிடப்படவில்லை.
வெளிநாட்டு பயணங்களின் போது பிரதமர் மோடியின் தொலைபேசி அழைப்புகளுக்கு மொத்தம் ரூ.9.12 கோடி செலவிடப்பட்டுள்ளது. #PMModi
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார்.
அதோடு வெளிநாட்டு முதலீடுகளையும் இந்தியாவுக்கு பெற நடவடிக்கை மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் கிண்டல் செய்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பது பற்றிய தகவல்களை தர வேண்டும் என்று பீமப்பா என்பவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார்.
அதற்கு பிரதமர் அலுவல கம்பதில் அளித்துள்ளது. அந்த பதிலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 4 அண்டுகளில் பிரதமர் மோடி 41 தடவை வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த 41 தடவை பயணத்தின்போது பிரதமர் மோடி 52 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். 2014-ம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி தொடங்கி சமீபத்தில் இந்தோனேசியா சென்று வந்தது வரை அவரது சுற்றுப்பயணத்தில் இடம் பெற்ற 52 நாடுகள் விபரம் வருமாறு:-
1. பூடான், 2. பிரேசில், 3. நேபாளம், 4. ஜப்பான், 5. இலங்கை, 6. ஜெர்மனி, 7. ஸ்பெயின், 8 ரஷ்யா, 9. பிரான்சு, 10. கஜகஸ்தான், 11. போர்ச்சுக்கல், 12. அமெரிக்கா, 13. நெதர்லாந்து, 14. இஸ்ரேல், 15. சீனா, 16. மியான்மர், 17. பிலிப்பைன்ஸ், 18. சுவிட்சர்லாந்து, 19. ஜோர்டன், 20. பாலஸ்தீனம், 21. ஐக்கிய அரபு எமிரேட், 22. ஓமன், 23. சுவீடன், 24. இங்கிலாந்து, 25. ஆஸ்திரேலியா, 26. பிஜு தீவு.
27. செசல்ஸ், 28. மொரி சீயஸ், 29. கனடா, 30. மங்கோலியா, 31. தென்கொரியா, 32. வங்கதேசம், 33. துர்க் மெனிஸ்தான், 34. கிர்கிஸ்தான், 35. தஜிகிஸ்தான், 36. அயர்லாந்து, 37. மலேசியா, 38. சிங்கப்பூர், 39. ஆப்கானிஸ்தான், 40. பாகிஸ்தான், 41. பெல்ஜியம், 42. சவுதிஅரேபியா, 43. ஈரான், 44. கத்தார், 45. மெக்சிகோ, 46. குமாசாம்பிக், 47. தென்ஆப்பிரிக்கா, 48. தான்சானியா, 49. கென்யா, 50. வியட்நாம், 51. லாவோல், 52. இந்தோனேசியா.
இந்த 52 நாடுகளுக்கும் பிரதமர் மோடி சென்று வந்த வகைக்கு 355 கோடியே 30 லட்சத்து 38 ஆயிரத்து 465 ரூபாய் அரசுப் பணம் செலவாகியுள்ளது. இதில் மோடியின் 5 பயணங்களுக்கான செலவு சேர்க்கப்படவில்லை. இந்தியா விமான படைக்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்ததால், அந்த செலவு சேர்க்கப்படவில்லை.
அந்த 5 விமான பயணச் செலவையும் சேர்த்தால் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு மேலும் அதிகமாக உயர்ந்திருக்கும். மோடி மேற்கொண்ட 41 வெளிநாட்டு பயணங்களில் 2015-ம் ஆண்டு பிரான்சு, ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாட்டு பயணம்தான் அதிக செலவு ஏற்படுத்தியது. அந்த ஒரு பயணத்துக்கு மட்டும் 31 கோடியே 25 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவானது.
பிரதமர் மோடியின் 41 வெளிநாட்டு பயணங்களில் பூடானுக்கு சென்று வந்தது தான் மிக, மிக குறைந்த செலவை கொடுத்தது. பூடான் பயணத்துக்கு 2 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரத்து 465 ரூபாய் செலவிடப்பட்டது.
பிரதமர் மோடியின் வெளிநாடுகள் பயணம் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டப்படி கிடைத்துள்ளது. மோடியின் உள்நாட்டு சுற்றுப்பயணத்துக்கு எவ்வளவு செலவானது என்ற விபரத்தை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை.
அதுபோல பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்ற விபரமும் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு செலவு விபரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிந்து கொள்ள விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே மோடியின் பாதுகாப்புக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்ற விபரத்தை யாரும் தெரிந்துகொள்ள இயலாது. #Modi #PMModi






