என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விலைவாசியை மட்டும் உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா?
    • திமுகவின் ஆட்சிக் கனவு இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.

    பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 -ம் குறைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?

    மக்களுக்கு போலி நம்பிக்கைகள் கொடுத்து எப்படியெல்லாம் வித விதமாக ஏமாற்றலாம் என ஒரு போட்டி வைத்தால் அதில் திமுக மட்டும் தான் தனித்து வெற்றி பெறும். அந்தளவிற்கு நாள்தோறும் பொய்களிலும் புரளிகளிலும் புரண்டு கொண்டிருக்கும் தில்லுமுல்லு திமுகவின் அடுத்த போலி தேர்தல் வாக்குறுதி தான், வாக்குறுதி எண் 504.

    அதாவது, மக்கள் நலனுக்காக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 -ம் குறைக்கப்படும் என வாய்க்கூசாமல் வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் கடந்தும் அதைப்பற்றி வாயைத் திறக்காமல் தப்பித்துக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்காமல் விலைவாசியை மட்டும் உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா? இந்த லட்சணத்தில் நாடு போற்றும் நான்காண்டு என வெற்று விளம்பரங்கள் வேறு.

    கொடுத்த வாக்கின்படி பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டின் விலையையும் இன்று வரை குறைக்காத திமுக

    அரசு, இனியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை என்பதும், வரும் சட்டமன்றத் தேர்தலில் இதற்கு என்ன எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். திமுகவின் ஆட்சிக் கனவு இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அமித் ஷா- செங்கோட்டையனின் ரகசிய சந்திப்பு தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.
    • இபிஸ் முதல் செங்கோட்டையன் வரை பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டனர்.

    அதிமுகவில் எந்த பிரச்னை என்றாலும் அமித்ஷாவை சந்திக்கிறார்கள்; அதிமுக டெல்லியில் இருந்து நடத்தப்படுகிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆ.ராசா கூறியதாவது:-

    மத்திய அமைச்சர் அமித் ஷாவும், செங்கோட்டையனும் சந்தித்தது ஒரு மறைமுகமான செயல்.

    செங்கோட்டையன் அதிமுகவில் இருக்கக்கூடியவர். பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்திருக்கிறார்.

    ஆனால், இருவரும் மவுனமாக உள்ளனர். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த ரகசிய சந்திப்பு தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.

    பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் அதிமுக எப்போதோ சென்றுவிட்டது. இபிஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் தற்போது செங்கோட்டையன் என பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டனர்.

    அதனால், இபிஎஸ்., அல்லது தமிழ்நாடோ அதிமுகவை இயக்கவில்லை. டெல்லியில் இருந்து அதிமுக இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எதிர்கால நியமனங்களுக்கு டெட் கட்டாய தேர்வாக இருக்க வேண்டும் என்பதை அரசு ஆதரிக்கும்.
    • தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

    ஆசிரியர்கள் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதைதொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும்,"எதிர்கால நியமனங்களுக்கு டெட் கட்டாய தேர்வாக இருக்க வேண்டும் என்பதை அரசு ஆதரிக்கும்" என்றார்.

    இதுகுறித்த அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பதிவில்," TET தேர்வு! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • இரண்டு வருடத்திற்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
    • இல்லையென்றால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.

    இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும்.

    தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011-12 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

    ஆனால் 2012-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற கேள்வி இருந்தது. அதற்கு விடையளிக்கும் வகையில்தான் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதாவது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

    இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது என கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தை சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    • ஊட்டிக்குப் பிறகு நீலகிரி மலைகளில் இரண்டாவது பெரிய மலைப்பிரதேசம் ஆகும்.
    • 1550 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டால்பினோஸ் ஒத்த வடிவமுள்ள அசாதாரண பாறை இது.

    நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப் பிரதேசம் குன்னூர். ஊட்டிக்குப் பிறகு நீலகிரி மலைகளில் இரண்டாவது பெரிய மலைப்பிரதேசம் ஆகும்.

    சிம்ஸ் பார்க், டால்பின்ஸ் நோஸ் மற்றும் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களும் இங்கு அமைந்துள்ளது.

    1550 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டால்பினோஸ் ஒத்த வடிவமுள்ள அசாதாரண பாறை இதுவாகும்.

    இந்நிலையில், குன்னூர் டால்பினோஸ் காட்சி முனை மேம்பாட்டு பணிகள் காரணமாக நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் நலன் கருதி சாலை, கழிவளை, வண்ண விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • யார் மீதும் விருப்பு, வெறுப்பு இன்றி செயல்படுகின்ற கட்சி அமமுக.
    • 2026-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, உணர்வு ரீதியாக விஜய் ஏற்படுத்துவார்.

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது, தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரம் மேலும் கூறியதாவது:-

    யூகங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம். நான் எப்போதும் எதார்த்தமாக, நம்புவதை பேசக்கூடியவன். யார் மீதும் விருப்பு, வெறுப்பு இன்றி செயல்படுகின்ற கட்சி அமமுக. யாரை பார்த்தும் எங்களுக்கு பொறாமை இல்லை.

    இன்றைக்கு கட்சி ஆரம்பிக்கும்போது ஒருவரை அண்ணன், தம்பி என்று சொல்வது, அதற்கு பிறகு அவர்களை ரோட்டில் நின்று திட்டுவதெல்லாம் எங்களுக்கு தெரியாது.

    எங்களை விமர்சிப்பவர்களுக்கு பதில் விமர்சனம் கொடுப்போம். மற்றபடி, எங்களுக்கு யாரை பார்த்தும் பொறாமை கிடையாது.

    விஜய் அவர்களை பார்த்து அந்த கருத்தைதான் சொன்னேன். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பிரபலமான நடிகர் உச்சத்தில் இருக்குமபோதே அரசியலுக்கு வந்திருக்கிறார். மக்கள் மத்தியில் அதனால் ஏற்படுகின்ற தாக்கம் தேர்தலில் ஏற்படும்.

    2026-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, உணர்வு ரீதியாக விஜய் ஏற்படுத்துவார் என்று சொல்வது எனது அனுபவத்தில் சொல்வது.

    அதற்காக, நீங்கள் விஜயுடன் கூட்டணிக்கு போவீர்களா என்றால், அதைப்பற்றி எல்லாம் நான் முடிவு செய்யவில்லை.

    நாங்கள் அமமுக இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். உறுதியாக வெற்றிப்பெறக் கூடிய கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோம். இது தான் எங்கள் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    • செம்மாண்டக்குப்பம், நாயக்கனஅள்ளி, தருமபுரி நேதாஜி பைபாஸ் ரோடு மற்றும் தருமபுரி ரெயில் நிலையம்.

    தருமபுரி:

    தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக மதிகோன்பாளையம், கோட்டை, தருமபுரி பஸ் நிலையம், கடைவீதி அன்னசாகரம், விருப்பாட்சிபுரம், பழைய தருமபுரி, கடகத்தூர், கொளகத்தூர், குண்டல்பட்டி, ஏ.ரெட்டிஅள்ளி, ஏ. ரெட்டிஅள்ளி, வி.ஜி. பாளையம், செட்டிக்கரை,

    நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, ஏ. கொல்லஅள்ளி, குளியனூர், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூர், சோலைசக்கொட்டாய், மூக்கனூர், கொட்டாவூர், மாரவாடி, செம்மாண்டக்குப்பம், நாயக்கனஅள்ளி, தருமபுரி நேதாஜி பைபாஸ் ரோடு மற்றும் தருமபுரி ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்வதற்காக ஆபத்தான முறையில் இளைஞர்கள் பயணம்
    • ஓடும் காரின் உள்ளே இருந்துகொண்டு, காரின் மேற்கூறையில் இளைஞர் ஒருவர் ஏற முயன்றார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு செல்வதற்காக பார்த்திபனூர் பகுதியில் ஆபத்தான முறையில் பேருந்து மற்றும் கார்களில் பயணித்த இளைஞர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதில் பார்த்திபனூர் அருகே ஓடும் காரின் உள்ளே இருந்துகொண்டு, காரின் மேற்கூறையில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர், தவறி சாலையில் விழுந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக, பின்னே வந்த வாகனம் உடனடியாக பிரேக் அடித்ததால், அந்த இளைஞர் நூலிழையில் உயிர்தப்பினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • மோட்டார் சைக்கிளில் இது போன்று ஆபத்தான முறையில் கல்லூரிக்கு தினமும் செல்வது தொடர்கதையாக உள்ளது.
    • கல்லூரி நேரங்களில் இந்த பகுதியில் போலீசாரை அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் 6 பேர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு சுரண்டை புதுமார்கெட் பகுதியில் இருந்து கல்லூரி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பஸ்சில் இருக்கைகள் இருந்தாலும் பஸ்சின் படியிலே தொங்கியபடியும் மோட்டார் சைக்கிளில் இது போன்று ஆபத்தான முறையில் கல்லூரிக்கு தினமும் செல்வது தொடர்கதையாக உள்ளது எனவும். இதனால் கல்லூரி நேரங்களில் இந்த பகுதியில் போலீசாரை அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன்.
    • மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், விஜயின் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர்," விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" என்று கூறினார்.

    மேலும் சீமான் கூறியதாவது:- நான் இப்போது மக்களை சந்திக்கிறேன். எந்த போராட்டத்தில் நான் பங்கேற்காமல் இருந்திருக்கிறேன்.

    மக்களோடு மக்களாக நிற்கிறவன்தான் மக்களுக்காக மக்களிடம் இருந்து வந்தவன்.

    மக்களை சந்திக்கிறது என்பது ரோடு ஷோ நடத்துறது இல்ல. கூட்டி வெச்சு பேசிட்டு போறது. மக்களை சந்திக்கிறது என்றால் மக்களின் பிரச்சனைகளை மக்களுக்காக மக்களோடு நிக்கிறது தான் மக்களை சந்திக்கிறது.

    அப்படி சந்திக்கிறீர்களா? மக்கள் என்னை பார்க்கிறதற்காக நான் வரேன் என்று தான் கூற வேண்டும்.

    இது வேட்டையாட வர சிங்கம் அல்ல.. வேடிக்கை காட்ட வரும் சிங்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
    • உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன்.

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இமானுவேல் சேகரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

    சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை.

    தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியக் குடியாக துணைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்கு எனது பாராட்டுகள்.
    • C.P.ராதாகிருஷ்ணன் அவர்களின் பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள்.

    இந்திய குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான நாடாளுமன்றக் குழு, பொது நிறுவனங்கள் குழு நிதிக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் உடையவரும், அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக பணியாற்றிய பெருமைக்குரியவரும், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர், மகாராஷ்டிர பாநில ஆளுநர் போன்ற பதவிகளை சிறப்புற வசித்தவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான C.P. ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்தியக் குடியாக துணைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்கு எனது பாராட்டுகள்.

    நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியக் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    C.P.ராதாகிருஷ்ணன் அவர்களின் பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×