என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சொன்னீங்களே செஞ்சீங்களா..! பெட்ரோல், டீசல் விலை குறித்து நயினார் நாகேந்திரன் கேள்வி
- விலைவாசியை மட்டும் உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா?
- திமுகவின் ஆட்சிக் கனவு இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 -ம் குறைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
மக்களுக்கு போலி நம்பிக்கைகள் கொடுத்து எப்படியெல்லாம் வித விதமாக ஏமாற்றலாம் என ஒரு போட்டி வைத்தால் அதில் திமுக மட்டும் தான் தனித்து வெற்றி பெறும். அந்தளவிற்கு நாள்தோறும் பொய்களிலும் புரளிகளிலும் புரண்டு கொண்டிருக்கும் தில்லுமுல்லு திமுகவின் அடுத்த போலி தேர்தல் வாக்குறுதி தான், வாக்குறுதி எண் 504.
அதாவது, மக்கள் நலனுக்காக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 -ம் குறைக்கப்படும் என வாய்க்கூசாமல் வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் கடந்தும் அதைப்பற்றி வாயைத் திறக்காமல் தப்பித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்காமல் விலைவாசியை மட்டும் உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா? இந்த லட்சணத்தில் நாடு போற்றும் நான்காண்டு என வெற்று விளம்பரங்கள் வேறு.
கொடுத்த வாக்கின்படி பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டின் விலையையும் இன்று வரை குறைக்காத திமுக
அரசு, இனியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை என்பதும், வரும் சட்டமன்றத் தேர்தலில் இதற்கு என்ன எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். திமுகவின் ஆட்சிக் கனவு இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






