என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
- தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
அந்த வகையில் கடந்த செவ்வாய்கிழமை இதுவரை இல்லாத உச்சமாக சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,240-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 142 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480
07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-09-2025- ஒரு கிராம் ரூ.140
10-09-2025- ஒரு கிராம் ரூ.140
09-09-2025- ஒரு கிராம் ரூ.140
08-09-2025- ஒரு கிராம் ரூ.140
07-09-2025- ஒரு கிராம் ரூ.138
- தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 6 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டு இருக்கிறது.
- முந்தைய ஆண்டு (2013) 6 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
சென்னை:
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியக் கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-1 தேர்விலும், பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-2 தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்து முடிந்து இருக்கிறது.
அந்த வகையில் டெட் தேர்வுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 6 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டு இருக்கிறது. இதில் கடந்த 2014-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வை எழுத சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் முதல் 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்து இருந்தார்கள். அதற்கு முந்தைய ஆண்டு (2013) 6 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
மற்ற ஆண்டுகளில் நடந்த 4 தேர்வுகளிலும் விண்ணப்பப் பதிவு 4 லட்சத்தை தாண்டவில்லை. ஆனால் இந்த ஆண்டு இதற்கு முன்பு நடந்த 4 டெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவை காட்டிலும் அதிகம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து ஏற்கனவே பணியில் இருந்து, டெட் தேர்வை எழுதாதவர்களும் அதை எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தது. இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள இந்த டெட் தேர்வை எழுதுவதற்கு இந்த ஆசிரியர்களும் போட்டி போட்டு விண்ணப்பித்ததால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கான தேர்வு வருகிற நவம்பர் மாதம் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தனது கொள்கை தலைவர்கள் பற்றி 10 நிமிடம் விஜய் உரையாற்றுவாரா?
- த.வெ.க. தலைவர் விஜய்க்கு அடிப்படையே தெரியவில்லை.
பேச்சை மனப்பாடம் செய்வதற்காகவே சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் சுற்றுப்பயணம் செய்கிறார் என்று த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
* தனது கொள்கை தலைவர்கள் பற்றி 10 நிமிடம் விஜய் உரையாற்றுவாரா?
* மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தில் 15 நிமிடங்கள் தான் உரையாற்ற அனுமதி கேட்டுள்ளனர்.
* சங்கி என்றால் நண்பன் என பொருள் வருகிறது, திராவிடம் என்றால் திருடன் என்றே வருகிறது.
* த.வெ.க. தலைவர் விஜய்க்கு அடிப்படையே தெரியவில்லை.
* ஆண் சிங்கம் வேட்டைக்கு செல்லாது என்ற அடிப்படை கூட விஜய்க்கு தெரியவில்லை.
* விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வந்த சிங்கம்.
* தி.மு.க அரசியல் எதிரி என்றால் அ.திமு.க. அரசியல் எதிரி இல்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.
- பல சிக்கல்கள் நிறைந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.
- பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை.
சென்னை:
தமிழ்நாட்டில், தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணங்களில் உயிரிழப்பவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், ஆஸ்பத்திரியில் இருந்து கோர்ட்டுக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை மூடிய நிலையில் 'சீல்' வைத்து அனுப்பப்படுகிறது. போலீசார் நேராக வந்து அறிக்கையை பெற்றுக்கொள்வார்கள். இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசாருக்கும், கோர்ட்டுக்கும் அனுப்புவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
அறிக்கையில், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் தான் கையொப்பமிட வேண்டும். ஒருவேளை அந்த டாக்டர் வேறு மாவட்டத்திற்கோ அல்லது வேறு ஆஸ்பத்திரிக்கோ பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டாலும் அவர் அறிக்கையில் கையொப்பமிட்டு பார்சல் மூலம் போலீசாருக்கு அனுப்பும் சூழல் ஏற்படுகிறது. மேலும், ஆஸ்பத்திரி தரப்பில் இந்த பிரேத பரிசோதனை அறிக்கை 24 மணி நேரத்தில் தயார் செய்யப்படுகிறது. ஆனால், போலீசார் தங்கள் பணிகளுக்கு இடையில் இந்த அறிக்கையை சென்று வாங்கி வர காலதாமதம் ஆகிறது என கூறப்படுகிறது.
இவ்வாறு பல சிக்கல்கள் நிறைந்த இந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.
அதன்படி, கோர்ட்டு உத்தரவின் பேரில், தமிழக அரசு ஒரு புதிய வசதியை கொண்டு வர உள்ளது. அதன்படி, ஆஸ்பத்திரி சார்பில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அறிக்கைகளை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், தாமதம், ஊழல், சட்டவிரோத செயல்கள் என அனைத்தும் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:-
பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சோதனை முறையில் நடைபெற்று வருகிறது. இதற்காக, ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். விரைவில் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யும் வசதி பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் 24 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கப்படும். இந்த அறிக்கையை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்.
பிரேத பரிசோதனை அறிக்கை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவைப்பட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று தங்கள் சான்றிதழ்களை காண்பித்து அறிக்கையை பெற்றுக்கொள்ளலாம்.
பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. இந்த புதிய வசதியின் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதில் உள்ள தாமதம் முற்றிலும் தவிர்க்கப்படும். இந்த வசதி நடைமுறைக்கு வந்த பிறகு தற்போது போலீசார் நேரில் வந்து பிரேத பரிசோதனை அறிக்கை வாங்கும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
- அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.
சென்னை:
நமது நாட்டில் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களின் வினியோகத்தை தணிக்கை செய்து சான்றளிக்கும் பணியை ஏ.பி.சி. என்று அழைக்கப்படும் பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு செய்துவருகிறது.
அந்தவகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்துக்கான தணிக்கை அறிக்கையை பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பின் பொதுச்செயலாளர் ஆதில் கசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாளிதழ்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 2 கோடியே 89 லட்சத்து 41 ஆயிரத்து 876 பிரதிகள் விற்பனையாகி இருந்தது.
நடப்பு ஆண்டின் முதல் பாதியான கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையுள்ள காலக்கட்டத்தில் 2 கோடியே 97 லட்சத்து 44 ஆயிரத்து 148 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. இது முந்தைய 6 மாதத்தோடு ஒப்பிடுகையில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 272 பிரதிகள் அதிகம்.
மேலும் கடந்த ஆண்டின் 2-ம் பாதியை விட 2.77 சதவீதம் உயர்வு ஆகும். இது அச்சு ஊடகத்தின் மேல்நோக்கிய வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது.
நாளிதழ்களின் விற்பனை அதிகரித்திருப்பது நம்பகமான, உறுதிப்படுத்தப்பட்ட, ஆழமான தகவல்களுக்காக வாசகர்கள் செய்தித்தாள்களை தொடர்ந்து நம்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. நாளிதழ்களின் விற்பனை எழுச்சியடைந்திருப்பது அச்சு ஊடகத்தின் வலுவான செயல்திறனை குறிப்பதோடு, செய்தி பயன்பாடு மற்றும் விளம்பர ஈடுபாட்டுக்கான வலிமையான ஊடகமாக அதன் நிலையையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும்.
- பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெற உள்ளது.
மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு உள்ளிட்ட 10 வார்டுகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறும்.
பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
- கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்கிறது.
- நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
சென்னை:
யு.பி.ஐ. மூலம் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்யலாம் என அமலில் இருந்த விதிமுறையை மாற்றி ஏற்கனவே இருந்து வரும் பணபரிவர்த்தனை தொகையை உயர்த்தி இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்.பி.சி.ஐ.) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமீயம், கடன் மற்றும் கடன் தவணை, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை போன்ற நிறுவனங்களுக்கான பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் யு.பி.ஐ. மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என இருந்ததை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் ஏற்கனவே அமலில் இருப்பது போன்று ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது. கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், ஐ.பி.ஓ. (முதல் பங்கு வெளியீடு) போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடர்கிறது.
இந்த உயர்த்தப்பட்ட பரிவர்த்தனை வரம்பு வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை தஞ்சாவூாில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும்.
- கொல்லத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 5.20 மணிக்கு வந்தடையும்.
சென்னை:
எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக எழும்பூர்-தஞ்சாவூர், எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16865), வரும் 17-ந்தேதி முதல் நவம்பர் 9-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும். மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16866), வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை தஞ்சாவூாில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும். மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்தடையும்.
எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), வரும் 17-ந்தேதியில் இருந்து நவம்பர் 9-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரையில் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 5.20 மணிக்கு வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது. சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா, தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 13-ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த விழா நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடக்கிறது. இதில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், தனது சினிமா பயணம் அரை நூற்றாண்டை எட்டியுள்ளதை ஒட்டி கொல்லூர் மூகாம்பிகா தேவிக்கும், வீரபத்ர சுவாமிக்கும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாள் காணிக்கையாக செலுத்தினார் இளையராஜா.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்கு உட்பட்ட கொல்லூருக்கு வந்த இளையராஜா கோவிலுக்குச் சென்று வழிபட்ட பின், நகைகளை காணிக்கையாக செலுத்தினார். நகைகளைச் சமர்ப்பிக்கும் முன், கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்களுடன் இளையராஜா ஊர்வலத்தில் கலந்துகொண்டார். நன்கொடைகளை வழங்கிய இளையராஜாவுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
பிரபல இசையமைப்பாளரிடமிருந்து கோவிலுக்கு இவ்வளவு பெரிய நன்கொடை கிடைத்தது பக்தர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லூர் தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர் இளையராஜா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பை திரும்பப் பெற்றது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் அமைத்தல், அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது.
இதனால், சென்னை எழும்பூர்-திருச்சி ராக்போர்ட், எழும்பூர்-மதுரை பாண்டியன், எழும்பூர் - திருச்சி சோழன் ஆகிய 3 விரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை.
- 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வட தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- கோயம்பேடு - அசோக் நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை இருக்காது.
- சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் கோயம்பேடு வரை மட்டுமே செல்லும்.
சென்னை வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மேல் 2ம் கட்ட வழித்தட கட்டுமானப் பணிகளால் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதிகள் வரை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 நாட்களில், காலை 5 மணி முதல் 6 மணி வரை கோயம்பேடு - அசோக் நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை இருக்காது.
மேற்குறிப்பிட்ட நேரத்தில், விமான நிலையம்/ செயிண்ட் தாமஸ் மவுண்டில் இருந்து புறப்படும் ரயில்கள் அசோக் நகர் வரை மட்டுமே இயங்கும்.
அதேபோல, சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் கோயம்பேடு வரை மட்டுமே செல்லும். பயணிகள் வசதிக்காக அந்த நேரத்தில் மட்டும் கோயம்பேடு - அசோக்நகர் இடையே 10 நிமிட இடைவேளையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மற்ற நேரங்களில் வழக்கமான ரெயில் சேவை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






