என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதி- தமிழக அரசு திட்டம்
- பல சிக்கல்கள் நிறைந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.
- பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை.
சென்னை:
தமிழ்நாட்டில், தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணங்களில் உயிரிழப்பவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், ஆஸ்பத்திரியில் இருந்து கோர்ட்டுக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை மூடிய நிலையில் 'சீல்' வைத்து அனுப்பப்படுகிறது. போலீசார் நேராக வந்து அறிக்கையை பெற்றுக்கொள்வார்கள். இந்த பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசாருக்கும், கோர்ட்டுக்கும் அனுப்புவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
அறிக்கையில், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் தான் கையொப்பமிட வேண்டும். ஒருவேளை அந்த டாக்டர் வேறு மாவட்டத்திற்கோ அல்லது வேறு ஆஸ்பத்திரிக்கோ பணி மாறுதல் பெற்று சென்றுவிட்டாலும் அவர் அறிக்கையில் கையொப்பமிட்டு பார்சல் மூலம் போலீசாருக்கு அனுப்பும் சூழல் ஏற்படுகிறது. மேலும், ஆஸ்பத்திரி தரப்பில் இந்த பிரேத பரிசோதனை அறிக்கை 24 மணி நேரத்தில் தயார் செய்யப்படுகிறது. ஆனால், போலீசார் தங்கள் பணிகளுக்கு இடையில் இந்த அறிக்கையை சென்று வாங்கி வர காலதாமதம் ஆகிறது என கூறப்படுகிறது.
இவ்வாறு பல சிக்கல்கள் நிறைந்த இந்த நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது.
அதன்படி, கோர்ட்டு உத்தரவின் பேரில், தமிழக அரசு ஒரு புதிய வசதியை கொண்டு வர உள்ளது. அதன்படி, ஆஸ்பத்திரி சார்பில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அறிக்கைகளை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டும் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், தாமதம், ஊழல், சட்டவிரோத செயல்கள் என அனைத்தும் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:-
பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சோதனை முறையில் நடைபெற்று வருகிறது. இதற்காக, ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். விரைவில் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யும் வசதி பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் 24 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கப்படும். இந்த அறிக்கையை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்.
பிரேத பரிசோதனை அறிக்கை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவைப்பட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று தங்கள் சான்றிதழ்களை காண்பித்து அறிக்கையை பெற்றுக்கொள்ளலாம்.
பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. இந்த புதிய வசதியின் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதில் உள்ள தாமதம் முற்றிலும் தவிர்க்கப்படும். இந்த வசதி நடைமுறைக்கு வந்த பிறகு தற்போது போலீசார் நேரில் வந்து பிரேத பரிசோதனை அறிக்கை வாங்கும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






