என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு போன்ற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பயணிகள் பெறலாம்.
- தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரில் டிக்கெட்டுகளை பெறலாம்.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.
சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை பெற்று பயணிக்குமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளை பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
- நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரசு பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல இருந்த அரசுப் பேருந்தை மர்ம நபர் கடத்தி சென்றதால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், நடத்துநர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், தமிழ்நாட்டு பேருந்தை பிடித்து வைத்துள்ளதாக ஆந்திர மாநிலம் நெல்லூர் போலீசார் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில், நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பேருந்து நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் ஒடிசாவை சேர்ந்த ஞானராஜன் சாகு (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலரும் தங்கள் பகுதிக்கு மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- மலைப் பகுதிகள் மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட கிராம பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சென்னை:
தமிழ்நாட்டில் மக்கள் தொகை, வாகன நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளதால் அதற்கேற்ப பொது போக்குவரத்து வசதியையும் அரசு கூடுதலாக செய்து வருகிறது.
இதையொட்டி சிறிய தெருக்களிலும் பஸ்கள் செல்வதற்காக மினி பஸ் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் அரசு அறிமுகம் செய்தது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழக அரசின் திட்டத்தின்படி 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயங்கும் வகையில் குறைந்தது 5 ஆயிரம் மினி பஸ்கள் இப்போது தேவைப்படுகிறது.
இந்த சூழலில் மினி பஸ் சேவைக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பலரும் தங்கள் பகுதிக்கு மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குக்கிராம மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.
அதன்படி மினி பஸ்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனியார் வேன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை மினி பஸ்களாக இயக்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பஸ்களை போன்று இந்த வேன்களில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பஸ்களில் 200 செ.மீ. உயரமும், அமர்ந்து கொண்டு மட்டுமே பயணம் செய்யும் வாகனங்களில் 150 முதல் 200 செ.மீ உயரமும் இருக்கலாம்.
இப்போது வேன்களை மினி பஸ்களாக இயக்குவதற்காக பொதுப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச உயரம் 185 செ.மீ. என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.
இனி நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பஸ்கள் 200 செ.மீ. உயரமும், அமர்ந்து கொண்டு மட்டுமே பயணிக்கும் வாகனங்கள் 150 முதல் 200 செ.மீ. உயரமும் இருக்கலாம்.
இந்த தளர்வு மேக்சி-கேப்ஸ் போன்ற சிறிய 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் மினி பஸ் திட்டத்தில் இணைய உதவும்.
இதுபற்றி போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் ஆர்.கஜலட்சுமி கூறுகையில், 'இதன் மூலம் இம்மாத இறுதிக்குள் 2000 வேன்கள் பொதுப்போக்குவரத்து சேவையில் இணையும் என எதிர்பார்க்கிறோம். முக்கியமாக இந்த வகை வேன்களின் உயரம் குறைவாக இருக்கும் என்பதால் நின்று கொண்டு பயணிக்க அனுமதி கிடையாது.
இது மலைப் பகுதிகள் மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட கிராம பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த புதிய திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், வேன்களை மினி பேருந்துகளாக மாற்றி பயன்படுத்தும் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்யுங்கள். இதுபற்றி விரிவான அறிக்கையை அடுத்த ஒரு மாதத்தில் சமர்பிக்க வேண்டும். எந்தெந்த பகுதிகளில் மினி பஸ் வசதிகள் தேவைப்படுகின்றன என்பது பற்றி விவரங்கள் சேகரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். வேன்களை மினி பஸ்களாக மாற்றும் திட்டத்தின் மூலம் பள்ளி வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவை பொதுப் போக்குவரத்து வசதிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகப்படியானோரை ஏற்றி செல்லக் கூடாது. தொங்கி கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
- நம்மை ஜாதி மத உணர்வுகள் தான் பிரித்து வருகிறது.
- நாட்டின் தொன்மையான மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று கூறியவர் காயிதே மில்லத்.
கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ் தேசிய இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-
நான் எளிய பின்னணியில் இருந்து வந்தவன். கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதலாக தேர்தலை சந்தித்தேன். என்னை சமாளிக்க முடியாமல் அதிகாரத்தில் இருந்த தி.மு.க. ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். இலங்கையில் தமிழின அழிப்புக்கு காங்கிரஸ் முக்கிய காரணம். அதற்கு துணையாக இருந்தது தி.மு.க. பலமுறை எனது குரலை நசுக்க சிறையில் அடைத்தார்கள்.
இதற்கு வேறு வழியில்லை என்ற பட்சத்தில் அரசியல் கட்சி தொடங்கினேன். அரசியல் விடுதலை ஒன்றே இதற்கான தீர்வாகும்.
நம்மை ஜாதி மத உணர்வுகள் தான் பிரித்து வருகிறது. இந்து தமிழன் இஸ்லாமியருக்கும், இஸ்லாமிய தமிழன் இந்துவுக்கும் வாக்களிப்பதில்லை இவர்கள் 2 பேருக்கும் கிறிஸ்தவ தமிழன் வாக்களிப்பது இல்லை. இதனால் தான் இங்கு எந்த தமிழனும் எழுவதில்லை, வெல்வதில்லை, வாழ்வதில்லை. இதேபோல் ஜாதி உணர்வாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
நாட்டின் தொன்மையான மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று கூறியவர் காயிதே மில்லத். அதுவரை இஸ்லாம் என்றால் உருது என்று நினைத்துக் கொண்டிருந்த நேருவிடம் இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழே எங்கள் மொழி என காயிதே மில்லத் கூறினார்.
சாதி, மதமாக இணைந்து இருந்தீர்கள் என்றால் நீங்கள் அச்சுறுத்தப்படுவீர்கள். மொழி இனமாக நீங்கள் இணைந்திருந்தால் வலிமை பெறுவீர்கள்.
சீமான் பி.ஜே.பி.யின் பி டீம் என்று கூறினார்கள். எனவே சீமானுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால் யாரும் பா.ஜ.க.விற்கு ஓட்டு போடாதீர்கள் என கூறவில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த நாகலாந்து ஆளுநர் இல கணேசன் அண்மையில் காலமானார். அவருக்கு பிரதமர் சார்பில் முதலமைச்சர் சென்று அஞ்சலி செலுத்தினார். இப்பொழுது யார் பா.ஜ.க.வின் பி டீம் என்பது தெரியவரும்.
பா.ஜ.க. மனித குலத்தின் பகைவன், திராவிட கட்சிகள் என் நிலத்தின் தீய சக்திகள். கேடுகெட்ட கேவலமிக்க ஊழல் லஞ்சத்தின் ஊறிப்போனவை திராவிட கட்சிகள். அண்ணா மறைவிற்கு பின் நெடுஞ்செழியன் வந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக வந்தவர்களால் தான் தமிழகம் பாதிக்கப்பட்டது. கச்சத்தீவு பிரச்சனையால் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் தாக்கி அழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆன்றோர்களும், சான்றோர்களும் இருந்த அரசியல் செய்த நிலத்தில், உலகத்திற்கு பொதுமறை தந்த மக்கள், சிறந்த பேரறிஞர்கள் வாழ்ந்த இந்த நிலத்தில் திராவிட சூழ்ச்சிகளால் தான் வீழ்த்தப்பட்டு அடிமைகளாக கிடக்கிறது தமிழ் சமூகம். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுடன் அரசியல் செய்து 1 1/2 ஆண்டுகள் மேலாக சிறையில் இருந்தவர் நான். 220 வழக்குகள் போடப்பட்டு ஏராத நீதிமன்ற படிக்கட்டு இல்லை. தொழில் செய்ய முடியாது. கடவுச்சீட்டு இல்லை. ஒரு நாட்டிற்கு செல்ல முடியாது. எல்லாத்தையும் விட்டு என் மொழி, என் இனம், என் மக்கள், அவர்களின் எதிர்காலம், பாதுகாப்பு, நல்வாழ்வு என நின்று வாக்குக்கு காசு கொடுக்காமல் ஒருத்தருடைய ஆதரவும் இல்லாமல் திரள்நிதி திரட்டி கட்சி நடத்தி போராடி போராடி 4 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்று 1.1 சதவீதத்தில் இருந்து 8.50 விழுக்காடு வாக்குகளை பெற்று தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற கட்சி நாம் தமிழர் கட்சி. மக்களின் கவனத்தை பெற்று திராவிட கட்சிகளை வீழ்த்தி தமிழ் தேசியத்தின் அரசியலை கட்டி வருகிறோம். கூட்டணி சேராத ஒரே கட்சி நாம் தமிழர் தான். மக்கள் ஓட்டு போடுவதற்காக தேர்தலில் நாங்கள் நிற்கவில்லை.
இந்த நிலையில் திடீரென்று வந்து திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று தான் என்று கூறி, மறுபடியும் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். என்றால் கோபம் வருமா? வராதா? தமிழர் அல்லாதவர்கள் வசதியாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டு வந்த கோட்பாடு தான் திராவிடம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் அல்லாதவர் பாதுகாப்பாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் கொண்டு வரப்பட்டது தான் திராவிடம். திராவிடம் என்ற ஒன்றே கிடையாது. சங்கி என்றால் கூட நண்பன் என்று பொருள் வரும். திராவிடம் என்றால் எப்படி பார்த்தாலும் திருடன் என்று தான் பொருள் வரும். அந்த சொல்லே தமிழ் சொல் கிடையாது. எதையாவது தெரிந்து கொண்டு அரசியலுக்கு வர வேண்டும். காமராஜரை பற்றி 10 நிமிடம் பேசுங்கள். வேலு நாச்சியாரை பற்றி பேசுங்கள். ஆனால் நீங்கள் மொத்தமாக பேச அனுமதிக்கும் நேரம் 10 நிமிடம் தான்.
திருச்சியில் பிரசாரம் செய்வதற்கு 15 நிமிடம் தான் கேட்கிறார்கள். சனிக்கிழமை மட்டும் மக்களை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்கள். இதில் பேசவும் அவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டும். வேட்டையாடும் சிங்கமாக இல்லை. வேடிக்கை பார்க்க வரும் சிங்கமாகவும் இல்லை. வேடிக்கை காட்ட வரும் சிங்கமாக உள்ளது. கோட்பாட்டளவில் எதிர்க்கிறேன். உனக்கு நண்பா, நண்பி. எனக்கு தம்பி, தங்கைகள். அவன் எதிர்காலத்திற்கும் நான் போராடி வருகிறேன். பா.ஜ.க. முன் கொள்கை எதிரி. முதலில் உங்கள் கொள்கையை சொல்லுங்கள். தி.மு.க. அரசியல் எதிரி. அப்போ அ.தி.மு.க. அரசியல் உனக்கு எதிரி அல்ல. காங்கிரசும் எதிரி அல்ல. பா.ஜ.க., காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவற்றின் வர்ணம் மாறும். ஆனால் அவர்களின் கொள்கை மாறாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பா.ம.க.வின் தாய் அமைப்பு வன்னியர் சங்கம்.
- அரசியல் ரீதியாக அன்புமணியை ஒரு கைபார்த்து விடுவது என்ற ரீதியில் ராமதாஸ் களம் இறங்கி உள்ளார்.
சென்னை:
பா.ம.க.வில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவித்ததோடு பிரச்சனை முடிந்து விடவில்லை. கட்சி தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது.
அடுத்த கட்டமாக அன்புமணியை எதிர்கொள்ள அதிரடி வியூகங்களை ராமதாஸ் வகுத்துள்ளார். அரசியல் ரீதியாக அன்புமணிக்கு ஆதரவு இருப்பதாக கூறப்பட்டாலும் கள நிலவரத்தை ராமதாஸ் ரகசியமாக ஆய்வு செய்து வருகிறார்.
பா.ம.க.வின் தாய் அமைப்பு வன்னியர் சங்கம். அதில் இருந்துதான் அரசியல் இயக்கமாக பா.ம.க. உருவானது. எனவே வன்னியர்கள் ஆதரவை பெற ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். வன்னியர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் ராமதாஸ். இதனால் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு ராமதாசுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம் இளைய தலைமுறையினரும் புதிதாக அரசியலுக்கு வந்தவர்களும் அடுத்தகட்டமாக பா.ம.க.வை அன்புமணி தான் வழி நடத்த முடியும் என்று கருதுகிறார்கள். எனவே அவர்கள் மத்தியில் அன்புமணிக்கு ஆதரவு இருக்கிறது.
இந்த சூழலில் அரசியல் ரீதியாக அன்புமணியை ஒரு கைபார்த்து விடுவது என்ற ரீதியில் ராமதாஸ் களம் இறங்கி உள்ளார். வருகிற 14-ந்தேதி முதல் வன்னியர்கள் பகுதியில் கிராமம் கிராமமாக செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக வடதமிழக மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.
இந்த மாவட்டங்களில் செல்லும்போது வன்னியர்களுக்கான தனது உழைப்பை எடுத்து சொல்லி அனுதாப அலையை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
- சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 114 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 119.00 அடியாகும். தற்போது அணையின் நீர் இருப்பு 113.55 அடியாக உள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று மதியம் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 114 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக சாத்தனூர் அணைக்கு வரும் உபரி நீரை அணையின் நீர் மின் நிலையத்தின் வழியாக வினாடிக்கு 1000 கன அடி வீதம் வெளியேற்றப்பட உள்ளது.
சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கலெக்டர் தர்ப்பகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
வருவாய் துறை, நீர் வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பணியாளர்கள் இணைந்து வெள்ள அபாயம் ஏற்படும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி விழாத் தலைமை உரை ஆற்றுகிறார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், அன்புமிளிர இசைஞானி என அழைத்துப் போற்றப்பட்டவர் இளையராஜா. தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்னும் பழைமையான கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து ஞானதேசிகன் எனும் இயற்பெயர் பெற்றவர்.
இவர் இசை மீது கொண்ட இயல்பான ஆர்வம் இவரை கருணாநிதி போற்றியது போல், இசைஞானி என உலகிற்கு உயர்த்தியுள்ளது. இவர் பிறந்து வளர்ந்த கிராமிய சூழ்நிலைகளோடு கிராமப்புறப் பாடல்களைப் பாடி, புகழ் பெறத் தொடங்கியவர்.
முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசையமைத்து, பதிவு செய்து, நேரடியாக நிகழ்த்திய முதல் ஆசியர், முதல் இந்தியர், முதல் தமிழர் ஆவார் . அவர் சிம்பொனியில் திருவாசகத்தையும் இயற்றிய பெருமைக்குரியவர்.
இசைஞானி இளையராஜா தமது இசைவாழ்வில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 2012-ம் ஆண்டில், இசைத்துறையில் அவரது படைப்பு மற்றும் சோதனைப் பணிகளுக்காக, இயல் இசை நாடக விருதைப் பெற்றுள்ளார்.
2010-ம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும், 2018 ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதையும் பெற்றவர்.
ஒரு குக்கிராமத்தில் பிறந்து இசைத்திறனால் உலகப் புகழ் குவித்துள்ள இளையராஜாவின் இல்லத்திற்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, 8.3.2025 அன்று லண்டன் மாநகரில் முதல் நேரடி சிம்பொனி இசைநிகழ்ச்சி நடத்தவிருந்த நிலையில் அவரைப் பாராட்டி, அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, லண்டன் மாநகர் சென்று சிம்பொனி சாதனை நிகழ்த்தி வெற்றியுடன் சென்னை திரும்பிய நிலையில் 13.3.2025 அன்று இளையராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று நன்றி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பிய இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை தமிழக அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்." ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி நாளை (சனிக்கிழமை)மாலை 5.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்தப் பாராட்டு விழாவின் தொடக்கத்தில் இளையராஜாவின் சிம்பொனி-இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி விழாத் தலைமை உரை ஆற்றுகிறார்.
நடிகர்கள் கமல்ஹாசன் எம்.பி., ரஜினிகாந்த் வாழ்த்துரை வழங்குகிறார்கள். இதில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள், திரைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ்த் திரையுலக முக்கிய பிரமுகர்கள் முதலானோரும் பங்கேற்கிறார்கள்.
நிறைவாக இசைஞானி இளையராஜா எம்.பி., ஏற்புரை வழங்குகிறார். இறுதியில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நன்றி கூறுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக சிம்பொனி கலைஞர்கள் 86 பேர் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்று சென்னை வந்துள்ளனர்.
- ஒரு சில கிராமங்களில் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
- திருமணமான புதுமண தம்பதியினர் ஒன்றாக மாட்டு வண்டியில் பயணம் செய்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 35 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாட்டு வண்டிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன.
பொருட்கள் ஏற்றி செல்வது, எங்காவது ஊருக்கு செல்வது என எல்லா பணிகளுக்கும் மாட்டு வண்டிகளே பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதுமட்டுமின்றி அந்த காலத்தில் திருமணம் முடிந்தவுடன், மணமக்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து ஊர்வலமாக தங்களது வீட்டிற்கு செல்வர். இப்படி அனைத்து பயன்பாட்டிலும் மாட்டு வண்டிகள் முக்கியத்துவம் பெற்று இருந்தது.
ஆனால் காலப்போக்கில் அவை எல்லாம் மறைந்து வருகிறது. இருப்பினும் இப்போது ஒரு சில கிராமங்களில் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் காளை மாடுகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில இளைஞர்கள் தங்கள் திருமணத்தின் போது பழமையை மறக்காமல் மாட்டு வண்டியில் பயணம் செய்வதை இப்போதும் விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபர் தனது திருமணம் முடிந்தவுடன் புது மனைவியுடன் மாட்டு வண்டியில் அமர வைத்து தனது வீட்டிற்கு கூட்டி சென்றுள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவருக்கும், கோவையை சேர்ந்த காவியா என்பவருக்கும் நேற்று பொள்ளாச்சி அடுத்த கரட்டு மடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்தவுடன் மணமகன், தனது புதுமனைவியை தனது பூர்வீக வீடான அர்த்தநாரிபாளையத்திற்கு மாட்டு வண்டியிலேயே பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி திருமணமான கையோடு, தனது மனைவி காவியாவை மாட்டு வண்டியிலேயே அமர வைத்து கூட்டி சென்றார். கரட்டு மடத்தில் இருந்து அர்த்தநாரிபாளையம் வரையிலும் 5 கி.மீட்டர் தூரத்துக்கு மணமகனே மாட்டு வண்டியை ஓட்டி சென்றார். திருமணமான புதுமண தம்பதியினர் ஒன்றாக மாட்டு வண்டியில் பயணம் செய்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
- படிக்கட்டில் அமர்ந்து குளித்த கவியரசன் திடீரென கால் தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார்.
- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் மாங்கனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே திருநாட்டியாத்தங்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாங்கனி (வயது 39). இவரது கணவர் கலியபெருமாள். இவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
மாங்கனி சம்பவத்தன்று தனது வீட்டிற்கு எதிரில் உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் வழக்கம் போல் காலை குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன்-சத்தியகலா தம்பதியின் மகன் ஹேம்சரண் (10), பெரும்புகலூர் பகுதியை சேர்ந்த கலியபெருமாளின் மகன் கவியரசன் (11) ஆகியோர் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்துள்ளனர்.
இதில் படிக்கட்டில் அமர்ந்து குளித்த கவியரசன் திடீரென கால் தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார். அப்போது அவர் அருகில் இருந்த ஹேம்சரணின் கையைப் பிடித்துள்ளார். இதனால் ஹேம்சரணும் ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். இதில் 2 பேரும் ஆற்று நீரில் சிக்கி தத்தளித்தனர். இதனை கண்ட மாங்கனி உடனடியாக ஆற்றில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தார்.
ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இருவரையும் அவரால் கரைக்கு கொண்டு வர முடியவில்லை. இருப்பினும் அவர் தனது உயிரை பணயம் வைத்து சிறுவர்கள் இருவரையும் மேடான பகுதிக்கு இழுத்து வந்து கூச்சலிட்டார்.
அப்போது அவ்வழியாக சென்ற சிலர் இவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் கவியரசன் ஆற்றுநீரை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருக்கிறார்.
இதையடுத்து துணிச்சலாக செயல்பட்டு ஆற்றில் குதித்து தனது உயிரை பணயம் வைத்து 2 சிறுவர்களையும் காப்பாற்றிய மாங்கனியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். மேலும் அவரது செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளபக்கத்தில் மாங்கனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், "பிறருக்கொரு துயரெனில் முன்னின்று காப்பது தமிழர்களின் இயல்பு, பண்பு. அப்பண்பின் தைரியமிகு இலக்கணமாய் திகழும் சகோதரி மாங்கனிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்" என பதிவிட்டுள்ளார்.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 92.86 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 11 ஆயிரத்து 717 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 13 ஆயிரத்து 862 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
இதே போல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடியும் தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது அணையில் 92.86 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு நேற்று 12 ஆயிரம் கனஅடியாக வந்தது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இன்றுகாலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
- தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
அந்த வகையில் கடந்த செவ்வாய்கிழமை இதுவரை இல்லாத உச்சமாக சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,240-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 142 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480
07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-09-2025- ஒரு கிராம் ரூ.140
10-09-2025- ஒரு கிராம் ரூ.140
09-09-2025- ஒரு கிராம் ரூ.140
08-09-2025- ஒரு கிராம் ரூ.140
07-09-2025- ஒரு கிராம் ரூ.138






