என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்த 2 சிறுவர்கள்: உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண்ணுக்கு குவியும் பாராட்டு
- படிக்கட்டில் அமர்ந்து குளித்த கவியரசன் திடீரென கால் தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார்.
- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் மாங்கனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே திருநாட்டியாத்தங்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாங்கனி (வயது 39). இவரது கணவர் கலியபெருமாள். இவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
மாங்கனி சம்பவத்தன்று தனது வீட்டிற்கு எதிரில் உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் வழக்கம் போல் காலை குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன்-சத்தியகலா தம்பதியின் மகன் ஹேம்சரண் (10), பெரும்புகலூர் பகுதியை சேர்ந்த கலியபெருமாளின் மகன் கவியரசன் (11) ஆகியோர் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்துள்ளனர்.
இதில் படிக்கட்டில் அமர்ந்து குளித்த கவியரசன் திடீரென கால் தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார். அப்போது அவர் அருகில் இருந்த ஹேம்சரணின் கையைப் பிடித்துள்ளார். இதனால் ஹேம்சரணும் ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். இதில் 2 பேரும் ஆற்று நீரில் சிக்கி தத்தளித்தனர். இதனை கண்ட மாங்கனி உடனடியாக ஆற்றில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தார்.
ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இருவரையும் அவரால் கரைக்கு கொண்டு வர முடியவில்லை. இருப்பினும் அவர் தனது உயிரை பணயம் வைத்து சிறுவர்கள் இருவரையும் மேடான பகுதிக்கு இழுத்து வந்து கூச்சலிட்டார்.
அப்போது அவ்வழியாக சென்ற சிலர் இவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் கவியரசன் ஆற்றுநீரை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருக்கிறார்.
இதையடுத்து துணிச்சலாக செயல்பட்டு ஆற்றில் குதித்து தனது உயிரை பணயம் வைத்து 2 சிறுவர்களையும் காப்பாற்றிய மாங்கனியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். மேலும் அவரது செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து அறிந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளபக்கத்தில் மாங்கனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், "பிறருக்கொரு துயரெனில் முன்னின்று காப்பது தமிழர்களின் இயல்பு, பண்பு. அப்பண்பின் தைரியமிகு இலக்கணமாய் திகழும் சகோதரி மாங்கனிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்" என பதிவிட்டுள்ளார்.






