என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரெயில் பயணிகள் கவனத்திற்கு... உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்
- வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை தஞ்சாவூாில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும்.
- கொல்லத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 5.20 மணிக்கு வந்தடையும்.
சென்னை:
எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக எழும்பூர்-தஞ்சாவூர், எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16865), வரும் 17-ந்தேதி முதல் நவம்பர் 9-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும். மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16866), வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை தஞ்சாவூாில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும். மறுமார்க்கமாக, தஞ்சாவூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்தடையும்.
எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), வரும் 17-ந்தேதியில் இருந்து நவம்பர் 9-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), வரும் 18-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரையில் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 5.20 மணிக்கு வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






