என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீரங்கத்தில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி:
3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் 'கேலோ இந்தியா' போட்டியை தொடங்கி வைத்தார்.
நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மோடி இன்று திருச்சி செல்வதற்காக சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். இதையடுத்து அவர் ஹெலிகாப்டரில் பயணித்து பஞ்சகரை சாலையை அடைந்தார்.
இந்நிலையில், ஸ்ரீரங்கத்தில் காலை 10.50 மணிக்கு சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடி அங்கு ரோடு ஷோ நடத்தினார்.
காரில் நின்றபடி பயணம் செய்த அவர் அங்கிருந்தவர்களை நோக்கி கையசத்தார். பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- விளம்பர அரசியலுக்காக அறிவிப்புகள் வெளியிட்டுவிட்டு, பின்னர் அவற்றைப் பின்பற்ற முடியாமல் தாங்களே அவற்றை மீறுவது தி.மு.க.வின் வழக்கமாகி இருக்கிறது.
- தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்க தி.மு.க. செய்யும் மற்றுமொரு முயற்சியாகவே கருதப்படும்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநிலப் பாடலாக தி.மு.க. அரசு அறிவித்ததோடு, பாடலை 55 வினாடிகளில், முல்லைப் பாணி (மோகன) ராகத்தில் பாட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறி முறைகளையும் வெளியிட்டிருந்தது.
ஆனால் நேற்றைய தினம், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் பாடியதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடியது வன்மையான கண்டனத்துக்குரியது.
விளம்பர அரசியலுக்காக அறிவிப்புகள் வெளியிட்டுவிட்டு, பின்னர் அவற்றைப் பின்பற்ற முடியாமல் தாங்களே அவற்றை மீறுவது தி.மு.க.வின் வழக்கமாகி இருக்கிறது.
பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில், மேற்கத்திய இசை வடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, தமிழ்க் கலாச்சாரத்தை அழிக்க தி.மு.க. செய்யும் மற்றுமொரு முயற்சியாகவே கருதப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநிலப் பாடலாக திமுக அரசு அறிவித்ததோடு, பாடலை 55 வினாடிகளில், முல்லைப்பாணி (மோகன) ராகத்தில் பாட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.
— K.Annamalai (@annamalai_k) January 20, 2024
ஆனால் நேற்றைய தினம், கேலோ இந்தியா விளையாட்டுப்… pic.twitter.com/iLuWgW78DP
- ராமேசுவரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இரவில் இந்த மடத்தில் ஓய்வெடுக்கிறார்.
- பிரதமர் தங்குவதையொட்டி அந்த ராமகிருஷ்ண மடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் வாழும் ராம பக்தர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ராமரின் புகழை பஜனைகள் பாடியும், கீர்த்தனைகளாக ஒலித்தும், வழிபாடுகள் நடத்தியும் வருகிறார்கள்.
அந்த வகையில் சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி, கடவுளை வழிபடுவதற்கு நமக்குள் உள்ள தெய்வீக உணர்வை எழுப்பும் விதமாக விதிகளின் படியும், வேதங்களின் படியும் கடந்த 12-ந்தேதி முதல் 11 நாட்கள் விரதத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.
இதையடுத்து ராமாயணம் மற்றும் ராமருடன் தொடர்புடைய ஸ்தலங்களுக்கு பிரதமர் மோடி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் லெபாக்ஷியில் உள்ள வீர பத்திரர் கோவிலில் தொடங்கிய இந்த பயணம் தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேசுவரம் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் நிறைவு செய்கிறார்.
இதற்காக இரண்டு நாள் பயணமாக ராமேசுரத்திற்கு இன்று மாலை வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். பின்னர் இரவு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அருகில் மேற்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடம் எனப்படும் ராம கிருஷ்ண தபோவனத்தில் தங்குகிறார்.
இந்த மடத்தில் வழக்கமான வழிபாடுகள், பஜனைகள், 15 நாட்களுக்கு ஒரு முறை ராம்நாம சங்கீர்த்தனம், சமய சொற்பொழிவுகள், கலாச்சாரம் தொடர்பான போட்டிகள் நடத்தப்படுகிறது. எளிமையுடன் கூடிய ஆன்மீகத்தை நாடுவோர் இங்கு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
அதன்படி ராமேசுவரம் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இரவில் இந்த மடத்தில் ஓய்வெடுக்கிறார். அப்போது தரையில் படுத்து உறங்குகிறார். முன்னதாக அந்த மடத்தில் தங்கியிருக்கும் துறவிகளையும், சன்னியாசிகளையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் தங்குவதையொட்டி அந்த ராமகிருஷ்ண மடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகள் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
- சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
சென்னை:
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.
இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
போட்டியை நடத்தும் தமிழகத்தில் இருந்து 522 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 266 வீரர்கள், 256 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தில் இருந்து அதிகபட்சமாக 47 பேரும், அதற்கு அடுத்தபடியாக கால்பந்தில் 40 பேரும், ஆக்கியில் 36 பேரும், நீச்சல், வாள் வீச்சில் தலா 34 பேரும் பங்கேற்கின்றனர்.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழக அணி அதிகபட்சமாக புனேவில் நடந்த (2019) போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது.
சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
100 பதக்கங்களை வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. இது குறித்து தமிழக அணியின் தலைமை அதிகாரியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளருமான மெர்சி ரெஜினா கூறியதாவது:-
கேலோ இந்தியா விளையாட்டில் இந்த முறை 100 பதக்கங்கள் வரை வெல்வதை இலக்காக கொண்டுள்ளோம். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தேசிய தரவரிசை அடிப்படையில் நாங்கள் களமிறக்க கூடிய வீரர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது.
போட்டியை நடத்துவதில் பெரிய குழு பங்கேற்கிறது. பதக்க பட்டியலில் முதல் 3 இடங்களில் வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தடகளம், வாள்வீச்சு, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்குவாஷ் விளையாட்டு புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் அதிக பதக்க வாய்ப்பு இருக்கலாம்.
- ம.தி.மு.க. அவைத்தலைவர்-ஆடிட்டர் அர்ஜூனராஜ்.
- ம.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ம.தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-
1. ம.தி.மு.க. அவைத்தலைவர்-ஆடிட்டர் அர்ஜூனராஜ்.
2. பொருளாளர்-மு.செந்திலதிபன்.
3. அரசியல் ஆய்வு மைய செயலாளர்-ஆவடி இரா.அந்திரிதாஸ்.
4. தேர்தல் பணிச் செயலாளர்-வி.சேஷன்.
இதே போல ம.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-
1. ம.தி.முக. துணைப் பொதுச்செயலாளர்-தி.மு.இராசேந்திரன்.
2. கொள்கை விளக்க அணி செயலாளர்-ஆ.வந்தியத்தேவன்.
3. தணிக்கைக் குழு உறுப்பினர்-வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன்.
4. இளைஞரணி செயலாளர்-ப.த.ஆசைத்தம்பி.
இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.
- அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
- காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அமாவாசை மற்றும் பவுர் ணமி தினங்களை யொட்டி தலா மூன்று நாட்களும், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்களும் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த இரண்டு மாதங்களாக கனமழை பெய்ததின் காரணமாக பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடை, சங்கிலி பாறை ஓடை, எலும்பு ஓடை, மாங்கனி ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வந்தது. அதோடு பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, உள்ளிட்ட விசேஷ நாட்களின் போது மட்டும் கனமழை பெய்து வந்ததால் பக்தர்கள் நலன் கருதி கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதிக்கவில்லை.
இதில் மார்கழி 1-ந்தேதி மட்டும் நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் மழை காரணமாக அனுமதிக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.
வருகிற 23-ந்தேதி தை மாத பிரதோஷ விழா நடைபெற உள்ளது. எனவே அன்று மாலையில் சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
25-ந்தேதி தை மாத பவுர்ணமி தினத்துடன், அன்றைய தினம் தைப்பூசம் என்பதால் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. 26-ந்தேதியுடன் நான்கு நாட்கள் அனுமதி முடிவடைய உள்ளது.
தைப் பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த இரண்டு மாதங்களாக மழையின் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த 4 நாட்களிலும் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
அதோடு பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது, ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது, பாலித்தீன் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரிய சாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி:
3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் 'கேலோ இந்தியா' போட்டியை தொடங்கி வைத்தார்.
நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மோடி இன்று திருச்சி செல்வதற்காக சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் பிரதமர் மோடி திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார். திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வரவேற்றார். இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டரில் பயணித்து பஞ்சகரை சாலையை அடைகிறார்.
10.50 மணிக்கு சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர் மோடி 11.00 - 12.30 வரை சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கால் தடயங்களை வைத்து அது சிறுத்தை உடையது என வனத்துறையினர் உறுதி செய்தனர்.
- சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் பவானி சாகர் வனப்பகுதியில் இருந்து கடந்த 15-ந் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ராஜன் நகர் அருகே காந்தி நகர் கிராமத்தில் சுப்புராஜ் என்பவர் தோட்டத்தில் புகுந்து 3 ஆடுகளை கடித்துக் கொன்றது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கால் தடயங்களை வைத்து அது சிறுத்தை உடையது என வனத்துறையினர் உறுதி செய்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ராஜன் நகரில் வெள்ளியங்கிரி என்பவர் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 4 ஆடுகளை அடித்துக் கொன்றது. கிட்டத்தட்ட 2 நாட்களில் 7 ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை யினர் கூறும்போது, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் முதற்கட்டமாக தானியங்கி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. கேமிரா பதிவுகளை கண்காணித்த பின் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம். அடர்ந்த வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்க அழைத்துச் செல்ல வேண்டாம் என்ன வலியுறுத்தி உள்ளனர். மேலும் சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
- தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் அதில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தஞ்சை:
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு காரில் 11 பேர் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற கார் நேற்று இரவு தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சென்றுகொண்டிருந்தது. மனோரா என்ற பகுதியில் சென்றபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் சாலையோர தடுப்பு சுவர் மீது கார் வேகமாக மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் டிரைவர் உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேரு விளையாட்டு அரங்கில் சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
- வெள்ள நிவாரணம் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி, கேலோ போட்டியை தொடங்கி வைத்தார். விழாவின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கேலோ இந்தியா தொடக்க விழாவுக்கு பிறகு பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு நேரு விளையாட்டு அரங்கில் சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், வெள்ள நிவாரணம் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, டிடி தமிழ் என பெயரில் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.
- டிடி தமிழ் தொலைக்காட்சியை தொடங்குவதற்காக பிரசார் பாரதி சார்பில் ரூ.39.71 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பொதிகை சேனலை டிடி தமிழ் என்ற பெயரில் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமாக பிரசார் பாரதியின் கீழ் இயக்கும் தூர்தர்ஷன் பொதிகை தொலைகாட்சியில், புதிய தொடர்கள், புதிய நிகழ்ச்சிகள், புதிய வடிவமைப்பில் செய்திகள் ஆகியவற்றுடன் இன்று முதல் டிடி தமிழ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் ஒளிபரப்பை தொடங்கியது.

புதிய அம்சங்களுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியை தொடங்குவதற்காக பிரசார் பாரதி சார்பில் ரூ.39.71 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பொதிகை என்ற பெயரில் இதுவரை ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்த இந்த தொலைக்காட்சி, பாரம்பரியம் குன்றாமல் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்கிறது. இவற்றில் நான்கு பொழுது போக்கு நெடுந்தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள் ஆகியவை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- வணக்கம் சென்னை.. என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.
- வீரர்களின் திறமைகளை வெளியப்படுத்த கேலோ இந்தியா உதவும்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி, கேலோ போட்டியை தொடங்கி வைத்தார். பிறகு, வணக்கம் சென்னை.. என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் அழகு, கலாச்சாரம், மொழி உங்கள் வீடு போலவே உணர வைக்கும். இந்தியா முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்கள் இங்கு வந்துள்ளனர்.
வீரர்களின் திறமைகளை வெளியப்படுத்த கேலோ இந்தியா உதவும். 2024ல் விளையாட்டுத் துறைக்கு சிறந்த தொடக்கமாக கேலோ இந்தியா அமைந்துள்ளது.
அதிகளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறந்து விளையாட்டு வீரர்கள் உள்ளனர். தமிழ்நாடு சாம்பியன்களை உருவாக்கும் பூமி.

விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கிறேன். இளைஞர்களின் முன்னேற்றம் குறித்து திருவள்ளுவர் திருக்குறளில் குறிப்பிட்டுள்ளார்.
கேலோ இந்தியா போட்டிகளில் சிலம்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய தன்னம்பிக்கை பிறந்துள்ளது.
ஆசிய போட்டிகளில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைத்துள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு சின்னத்தில் வீர மங்கை வேலு நாச்சியார் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சி எடுத்து வருகிறோம். கடற்கரை விளையாட்டுகள், சுற்றுலா துறையில் இந்தியா புதிய சாதனை படைத்து வருகிறது. தேசிய கல்வி திட்டத்தில் விளையாட்டை முக்கிய அங்கமாக வைத்துள்ளோம்.
விளையாட்டுகள் மூலம் அது சார்ந்த தொழில்களும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. விளையாட்டு வீரர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். மிகப்பெரிய இலக்குகளை சாதிக்கும் திறன் நம்மிடம் உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






