search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கேலோ இந்தியா விளையாட்டு: 100 பதக்கங்களை வெல்ல தமிழ்நாடு அணி இலக்கு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கேலோ இந்தியா விளையாட்டு: 100 பதக்கங்களை வெல்ல தமிழ்நாடு அணி இலக்கு

    • 18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகள் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
    • சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

    இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட 26 போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

    18 வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    போட்டியை நடத்தும் தமிழகத்தில் இருந்து 522 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 266 வீரர்கள், 256 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தில் இருந்து அதிகபட்சமாக 47 பேரும், அதற்கு அடுத்தபடியாக கால்பந்தில் 40 பேரும், ஆக்கியில் 36 பேரும், நீச்சல், வாள் வீச்சில் தலா 34 பேரும் பங்கேற்கின்றனர்.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் தமிழக அணி அதிகபட்சமாக புனேவில் நடந்த (2019) போட்டியில் 88 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது.

    சொந்த மண்ணில் நடைபெறுவதால் தமிழகத்தில் இந்த முறை கூடுதல் பதக்கங்களை குவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    100 பதக்கங்களை வெல்வதை இலக்காக கொண்டுள்ளது. இது குறித்து தமிழக அணியின் தலைமை அதிகாரியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளருமான மெர்சி ரெஜினா கூறியதாவது:-

    கேலோ இந்தியா விளையாட்டில் இந்த முறை 100 பதக்கங்கள் வரை வெல்வதை இலக்காக கொண்டுள்ளோம். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தேசிய தரவரிசை அடிப்படையில் நாங்கள் களமிறக்க கூடிய வீரர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது.

    போட்டியை நடத்துவதில் பெரிய குழு பங்கேற்கிறது. பதக்க பட்டியலில் முதல் 3 இடங்களில் வர முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தடகளம், வாள்வீச்சு, நீச்சல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் பெரும்பாலான பதக்கங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்குவாஷ் விளையாட்டு புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் அதிக பதக்க வாய்ப்பு இருக்கலாம்.

    Next Story
    ×