என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிப்.13-ந்தேதி சென்னை வருகிறார்.
- இரு தலைவர்கள் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாராளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்) சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் பிரமாண்ட காங்கிரஸ் கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்டார மற்றும் பூத் கமிட்டிகள் வரையிலான நிர்வாகிகள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றும் கார்கே தேர்தலுக்காக காங்கிரசாரை முடுக்கி விடுவார் என்று கூறப்படுகிறது.
சென்னை வரும் கார்கே தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் முதல்கட்டமாக பேசி உள்ளது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடன் பேசிய பிறகு மீண்டும் காங்கிரஸ்-தி.மு.க. பேச்சுவார்த்தை நடைபெறும்.
கார்கே வருவதற்குள் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டால் கார்கே முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 3 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
- வெள்ள நீர் வராமல் பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17,18-ந் தேதிகளில் பெய்த அதிகனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது.
இந்நிலையில் உடன்குடி அருகே உள்ள சடையநேரி குளத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக லெட்சுமிபுரம், மாணிக்கபுரம் பகுதி சாலைகளில் கடந்து பத்தாங்கரை வழியாக செட்டிவிளை, வட்டன்விளை, வெள்ளான்விளை, பரமன்குறிச்சி கஸ்பா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.
கடந்த 45 நாட்களாக குடியிருப்பு பகுதிகளையும், சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து வெள்ளாளன்விளை, வட்டன்விளை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
24 மணிநேரமும் ஜெனரேட்டர் உதவியுடன் இரவு, பகலாக தொழிலாளர்கள் பரமன்குறிச்சி வெள்ளாளன்விளை சாலையில் சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ள நீரை சீயோன்நகர் தேரிப்பகுதியில் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றி வந்த நிலையில் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சி தோல்வியடைந்தது.
மேலும் பரமன்குறிச்சி-வெள்ளாளன்விளை, சீயோன்நகர், தண்டுபத்து, உடன்குடிக்கு நேரடியாக செல்ல முடியாமல் சுற்றி சென்று வந்தனர்.

இதனையடுத்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்ற முடியாமல் தற்காலிகமாக அந்த திட்டம் கைவிடப்பட்டு பல ஆயிரம் டன் ராட்சத கற்களை கொண்டு சாலையை சீரமைத்தனர்.
இதனால் போக்குவரத்து மட்டுமே நடந்து வருகிறது. எனினும் வெள்ளான்விளை, வட்டன்விளை பகுதியில் இன்றளவும் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளான்விளையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்கள் உறவினர்கள் வீடுகளிலும், ஆலயத்தின் பகுதியிலும் தங்கியிருந்து வருகின்றனர்.
விவசாயிகள் தென்னை, பனை, வாழை போன்ற தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர், விவசாய பணியை தொடங்க முடியாமலும் உள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து அந்த வெள்ளாளன்விளை, வட்டன்விளை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் அளித்து வந்தனர். இச்சூழ்நிலையில் முதல்வரின் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடங்கப்பட்டு திருச்செந்தூர் பகுதியில் மாவட்ட கலெக்டர் லெட்சுமிபதி தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் ஒருபகுதியாக வெள்ளாளன்விளை பகுதியில் அவர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொது மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் வெள்ள நீர் வராமல் பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.
அப்போது அவருடன் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உலகநாதன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., குருச்சந்திரன், வெள்ளாளன்விளை ஊராட்சி மன்றதலைவர் ராஜரெத்தினம் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- அரசியல் பயணமாக இல்லாமல் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றார்.
- தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து வருகிறது.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கான பணிகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் மேற்பார்வையில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதன்படி பா.ஜனதா அரசு கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்துள்ள சாதனைகள், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் மூலம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக முக்கிய இடங்களில் நடைபயணம் சென்று மக்களை சந்தித்து வரும் அவர், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசி வருகிறார்.
3 கட்டங்களாக நடைபெறும் நடைபயணத்தில் முதல் கட்ட நடை பயணத்தை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். இதில் 2 கட்ட நடைபயணம் முடிந்துள்ள நிலையில் 3-ம் கட்டமாக பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 நாட்கள் என திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட இந்த நடைபயணம் வருகிற 18-ந்தேதி நிறைவடைய உள்ளது.
இந்த மாத இறுதியில் சென்னையில் பாத யாத்திரையை நிறைவு செய்ய இருந்ததுடன், அங்கு நிறைவு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதற்கேற்ப நடைபயண நிகழ்ச்சிக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் திடீரென அதில் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி திருப்பூரில் நடைபயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த போதிய இடம் இல்லாததால் திருப்பூரில் கடந்த 28-ந்தேதி நடைபெற இருந்த நடைபயணத்தை ஒத்தி வைத்த அண்ணாமலை, அதற்கு பதிலாக திருப்பூரில் பாதயாத்திரை நிறைவு விழாவை பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததுடன், அதில் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க செய்யவும் ஏற்பாடுகளை செய்து வந்தார்.
பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதியான நிலையில் தேதி முடிவு செய்யப்படாமல் உள்ளது. வருகிற 25-ந்தேதி நடத்த வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பொதுக்கூட்டம் நடத்துவதற்காக திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் எதிரில் 400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள முட்செடிகள் , புதர்களை அகற்றி மண் சமநிலைப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணி நிறைவடையும்.

பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா மற்றும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள்(எஸ்.பி.ஜி.) விரைவில் திருப்பூர் வருகை தர உள்ளனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ள இடத்தை சுற்றி பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேரை பங்கேற்க செய்ய பா.ஜ.க. நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து பா.ஜ.க. வினர் கூறுகையில், மாதப்பூரில் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்ட மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் எப்போது தேதி கொடுத்தாலும் அன்றைய தினம் பொதுக்கூட்டத்தை நடத்தும் வகையில் கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
கடந்த மாதம் ஜனவரி 2-ந்தேதி திருச்சி வந்த பிரதமர் மோடி திருச்சியில் புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைத்ததுடன், பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பிறகு ஆன்மீக பயணமாக கடந்த மாதம் 19-ந்தேதி மீண்டும் தமிழகம் வந்த பிரதமர் மோடி அன்று மாலை சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்ததுடன், மறுநாள் 20-ந்தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
பின்னர் அங்கிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டு சென்ற அவர், அங்கு கடலில் புனித நீராடியதுடன், ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார். பின்னர் இரவு ராமேஸ்வரத்திலுள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கிய மோடி மறுநாள் 21-ந்தேதி தனுஷ்கோடி அரிச்சல் முனையில் புனித நீராடியதுடன், கோதண்ட ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக புனித நீரை சேகரித்து சென்றார்.
இவ்வாறு 3 நாட்கள் அரசியல் பயணமாக இல்லாமல் ஆன்மீக பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றார். தற்போது அரசியல் பயணமாக மீண்டும் அவர் தமிழகம் வர உள்ளதால் பா.ஜ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்து வருகிறது. அ.தி.மு.க. சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு இந்த மாநாடு நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. இளைஞரணி 2-ம் மாநாடு சேலத்தில் கடந்த மாதம் 21-ந்தேதி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த 2 மாநாடுகளும் தமிழக அரசியல் களத்தில் பெரும் முத்திரைபதித்தது.
அதேப்போல் பாதயாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தை பிரம்மாண்ட மாநாடு போல் திருப்பூரில் நடத்தி காட்ட அண்ணாமலை மற்றும் தமிழக பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிர ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், கூட்டணி , தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். அதேப்போல் தமிழக பா.ஜ.க.வினரும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வர உள்ளது தமிழக பாராளுமன்ற தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் போது, ராமேஸ்வரம் பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
- கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
- மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்கிற எந்தவித தகவலும் வெளியாகாமலேயே உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்கிற எந்தவித தகவலும் வெளியாகாமலேயே உள்ளது.
இதனால் கமல் கட்சி கூட்டணியில் இடம் பெறுமா? இல்லையா? என்கிற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தென்சென்னை தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அப்படி ஒதுக்கப்படும் பட்சத்தில் கமல்ஹாசன் அங்கு போட்டியிடுவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 2019-ம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.
- எந்த தரப்பு சார்ந்த மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதுமில்லை.
தஞ்சாவூர்:
தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதில் பா.ஜனதா தடுமாறி போய் இருக்கிறது. அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகி இருக்கிறது என்பதை உணர முடிகிறது. தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த பேச்சுவார்த்தையில் விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்குபெறும். 10-க்கும் அதிகமான கட்சிகளை கொண்ட ஒரு கட்டுக்கோப்பான கூட்டணியாக இந்தியா கூட்டணி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.
பா.ஜனதா, அ.தி.மு.க கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என்பதால்தான் இடையிலேயே சிதறி போய்விட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர், பா.ஜனதா கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர் என உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. வழக்கம்போல பா.ம.க தன்னை தனித்து அடையாளப்படுத்தி கொண்டு எந்த கூட்டணியில் சேரப்போகிறோம் என்பதை ஒரு சூசகமாக வைத்துள்ளனர். தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளதுடன் தமிழக மக்களின் ஆதரவை பெற்று 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
குடியரசு தலைவர் உரையில் என்ன சொல்லப்பட்டிருந்ததோ, அதே கருத்துகள் அடங்கிய ஒன்றாகத்தான் மத்திய அரசின் பட்ஜெட் உரையும் அமைந்துள்ளது. எந்த தரப்பு சார்ந்த மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதுமில்லை. ஒரு வெற்று அறிக்கைபோல இந்த பட்ஜெட் அறிக்கை உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு பிறகு நேரடியாக தேர்தலை சந்திக்க இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் உள்ள இந்த பட்ஜெட் பா.ஜனதாவினருக்கே அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.
- வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பில் இருப்பவர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக என்.ஐ.ஏ. என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கு முன்பு இது தொடர்பாக சென்னை உள்பட அனைத்து மாவட் டங்களிலும் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. இதில் தடை செய்யப்பட்ட அமைப்பினரோடு தொடர்பில் இருப் பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையிலும் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 6 இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீரென்று சோத னையில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில் சீமான் தலை மையிலான நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் களத்தில் தனியாகவே நின்று ஒவ்வொரு தேர்தலையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும், அந்த இயக்கத்தை பற்றியும் நாம் தமிழர் கட்சியினர் பெருமைப்பட பேசி வருகிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே நீடித்து வருகிறது.
இதுபோன்ற சூழலில் இலங்கை போரின்போது தப்பி ஓடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளிலும், வெளியிடங்களிலும் தலைமறைவாகவே இருந்து வருகிறார்கள். இதுபோன்ற நபர்கள் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள்? அவர்களுக்கு நிதி உதவி செய்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை கொளத்தூர் பாலாஜி நகர் 2-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தற்போது பெங்களூரில் தங்கி இருந்து பணி புரிந்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கும் இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பாலாஜியின் மனைவியிடம் விசாரித்து விட்டு அதிகாரிகள் சென்றுள்ளனர்.
திருச்சி, வயலூர் ரோடு சண்முகா நகரில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பிரபல யூடியூபர் சாட்டை துரைமுருகன் வீடு உள்ளது. இங்கு இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சாட்டை துரைமுருகன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது மனைவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் மற்றும் சிம் கார்டுகளை கைப்பற்றி உள்ளனர்.
சாட்டை துரைமுருகன் தனது சாட்டை வலைதளம் மூலமாக மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
அந்த வகையில் தமிழக காவல்துறையினர் அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
2 மணி நேர சோதனைக்கு பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரி கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது பழ. நெடுமாறன் எழுதிய விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் மற்றும் திருப்பி அடிப்பேன் என்ற இன்னொரு புத்தகம் ஆகிய 2 புத்தகங்களை கைப்பற்றி சென்றனர்.
வருகிற 7-ந்தேதி சாட்டை துரைமுருகன் சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கினர். அந்த சம்மனை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.
கடந்த 2022-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூரில் துப்பாக்கி தயாரிப்பது குறித்து வெளியான காணொளி குறித்து சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 7 நாம் தமிழர் கட்சியினர் மீது அப்போது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படை யில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆலாந்துறை ஆர்.ஜி.நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். யூடியூபரான இவர் நாம் தமிழர் கட்சியின் தொழில் நுட்ப பாசறை பிரிவு உறுப்பினராக சில ஆண்டு கள் பணியாற்றி உள்ளார். அதன்பின்னர் அந்த கட்சி யில் இருந்து விலகிவிட்டார். பின்னர் வீட்டில் இருந்த படியே விளம்பர பேனர்கள் தயாரித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். அதில் பல்வேறு கருத்துக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு 12 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் காரில் வந்து இறங்கினர். பின்னர் அவர்கள் ரஞ்சித்குமாரின் வீட்டிற்குள் சென்றனர்.
வேறு யாரும் உள்ளே வராதபடி வாயில் கதவை அவர்கள் அடைத்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி கொண்ட னர். பின்னர் அவரது வீட்டில் உள்ள அறைகள் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது வீட்டில் சில ஆவணங்கள் இருந்ததாகவும், அதனை அதிகாரிகள் கைப்பற்றி கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த அவரிடமும் விசாரித்தனர்.
இவரது வங்கி கணக்கில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த சிலருக்கு பணம் அனுப்பி உள்ளதாக புகார் எழுந்து உள்ளது. அதன்பேரி லேயே இவரது வீட்டில் சோதனை நடப்ப தாக கூறப்படுகிறது.
கோவை காளப்பட்டி சரஸ்வதி கார்டனை சேர்ந்தவர் முருகன். இவருடைய வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் போது பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி அது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதபேரியை சேர்ந்தவர் மதிவாணன். இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். அப்பகுதி யில் ஸ்டூடியோவும், இ-சேவை மையமும் நடத்தி வருகிறார்.
இவரது ஸ்டூடியோவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட ஒரு குழுவினர் 2 கார்களில் வந்தனர். அவர்கள் மதிவாணனின் ஸ்டூடியோவிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள பகைவரை வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலை யொட்டி கட்சி பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந் தார்.
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு தேசிய புலனாய்வுக்குழு அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அதிரடியாக விஷ்ணு வீட்டில் சோதனை நடத்தினர்.
மேலும் யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச் சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சோதனையில் 50-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகா ரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், பேச்சாளருமான இடும்பாவனம் கார்த்திக் நேரில் ஆஜராக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த சம்மனை பெற்றுக் கொண்ட இடும்பாவனம் கார்த்திக் வருகிற 5-ந்தேதி விசாரணைக்கு ஆஜராவதாக பதில் அனுப்பி உள்ளார்.
சீமான் கட்சியினரின் வீடுகளில் இன்று நடை பெற்றுள்ள இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
- தி.மு.க எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.
சென்னை:
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாக புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையை தயாரித்து அளித்துள்ளார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பிப்.8-ந்தேதி தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்தும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிகளின் வசதிக்காக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்துதான் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று கடந்த மாதம் 24-ந்தேதி தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்து ஆணையரின் உத்தரவை சில வாரங்களுக்கு நிறுத்திவைத்தால் என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண், 'கோயம்பேட்டில் உள்ள பஸ் நிலையத்தில் மனுதாரர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது. அதில் ஆம்னி பஸ்களை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். மீண்டும் கிளாம்பாக்கத்துக்கு செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும். அதேபோல ஆந்திரா, கர்நாடகம் செல்லும் ஆம்னி பஸ்களை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதிட்டார். அவர் தன் வாதத்தில், 'பயணிகளை இறக்கி விட்டு காலியாக வரும் பஸ்களை கோயம்பேட்டில் நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படும். ஆனால் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க அரசு தயாராக இருக்கிறது. ரூ.400 கோடி செலவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பெண்களுக்கான பிரத்யேக வசதிகள், உணவகங்கள், இலவச மருந்தகங்கள், எஸ்கலேட்டர்கள் என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தூரத்தைத் தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை.
கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிகளின் வசதிக்காக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பிரச்சனையில் சுமுக தீர்வு காண இன்று (வெள்ளிக்கிழமை) பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது' என்றார்.
இதையடுத்து நீதிபதி, 'இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை அறிக்கையாக அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கை வருகிற 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்' என்று உத்தரவிட்டார். பின்னர், ''எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழ்நாடு அரசை பாராட்ட வேண்டும். எந்த ஒரு புதிய திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க இயலாது'' என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
- கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்படவில்லை.
- புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-
மடகாஸ்கர் உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கமிஷனர்கள், அதிகாரிகள், இந்தியாவுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்துள்ளோம். பாராளுமன்ற தேர்தலைப் பற்றி ஏற்கனவே, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை காணொலி வாயிலாக வழங்கியுள்ளது.
அதைத்தொடர்ந்து, தற்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 250 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் மதுரை, திருச்சி, கோவை பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுவிட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் 2 பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவினருக்கு வரும் 5 முதல் 9-ந் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை பெற்ற அலுவலர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அலுவலர்களுக்கு மாவட்டங்களில் பயிற்சி அளிப்பார்கள்.
இந்தியா முழுவதும் உள்ள தேர்தல் தொடர்பான காவல்துறை பொறுப்பு அதிகாரிகளுக்கு டெல்லியில் தேர்தல் கமிஷன் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் செலவினம் தொடர்பான முக்கியத்துவம் பெற்ற தமிழகத்தின் சார்பில் நானும், சட்டம்-ஒழுங்கு தொடர்பான முக்கியத்துவம் பெற்ற மேற்கு வங்காள தலைமை தேர்தல் அதிகாரியும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்கும் ஐ.ஜி அல்லது போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. நிலையிலான ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறோம்.
பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் முதல் கட்ட சரிபார்த்தல் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதும், அடுத்த கட்டமாக சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். தேர்தல் பணிகளுக்கு கூடுதல் அதிகாரிகள் தேவைப்படுவது குறித்து தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பிக்கும்.
கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி அ.தி.மு.க. சார்பில் சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலின்படி புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்தவர்கள் என 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் விரைவில் பதிவு தபாலில் அனுப்பப்படும்.
புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, வேட்புமனு தாக்கலுக்கான இறுதி தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள்.
- மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம்.
இந்தியாவில் வரும் ஏப்ரல்-மே மாத வாக்கில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்."
"இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த - மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்."
"ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை. இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி," என்று குறிப்பிட்டுள்ளார்.
- சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் பெற விரும்பும் மனுதாரரின் விருப்பம் பாராட்டத்தக்கது.
- எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீடு சலுகைகளை பெறுவதில் இது பாதிப்பு ஏற்படுத்தும் என்றார் நீதிபதி.
சென்னை:
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் உள்ளது. சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கிட எந்த உத்தரவும் இல்லாத நிலையில் சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது எனக்கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பள்ளி மாணவர் சேர்க்கை உள்ளிட்ட படிவங்களில் சாதி, மதம் குறித்த கேள்விகள் அடங்கியுள்ள பகுதியை பூர்த்திசெய்ய விரும்பாதவர்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை உள்ளது. எனவே சாதி, மதத்தைக் குறிப்பிட விரும்பவில்லை என்றால் அந்தப் பகுதியை விட்டுவிடலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் பெற விரும்பும் மனுதாரரின் விருப்பம் பாராட்டத்தக்கது என்றாலும்கூட, இதுபோன்ற சான்றிதழ் பெறும்போது ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும் கவனிக்க வேண்டும். அப்படி சான்றிதழ் வழங்கினால் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதில் பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
- சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை.
- வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். அதையும் வழங்கவில்லை.
சென்னை:
மத்திய பட்ஜெட் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்த சாதனையும் செய்யாத பா.ஜ.க. அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்தகால சாதனைகளையும் இந்த பட்ஜெட் சொல்லவில்லை; நிகழ்கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை. எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை.
மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்து அளித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது.
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகைகளைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலை குறைப்பு இருக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த பட்ஜெட்.
வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என நடுத்தர மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனையும் வழங்கவில்லை.
எந்தப் பொருளுக்கும் வரி குறைப்பு வழங்கப்படவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை. சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை.
உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா? அதுவும் இல்லை.
இப்படி 'இல்லை... இல்லை...' என்று சொல்வதற்காக எதற்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவேண்டும்?
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது 'இல்லாநிலை' பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காணவில்லை. பணவீக்கம் குறையவில்லை. வறுமை ஒழிக்கப்படவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை. ஆனால் இதையெல்லாம் செய்து காட்டிவிட்டதாக பொய் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. வழங்கிவிட்டதாகத் தங்களுக்கு தாங்களே தோளைத் தட்டிக் கொள்கிறார்கள்.
மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டதைக் காரணம் காட்டி சில மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் திட்டத்தின் சூழ்ச்சியாக இக்குழு அமைக்கப்படுகிறதா என சந்தேகம் ஏற்படுகிறது. மக்கள்தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, பாராளுமன்ற தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளையில், மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனையைச் சமாளிக்க குழு அமைக்கப்படும் என ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
நாட்டில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்.
ஆனால் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய வரிகள் மீது கூடுதல் வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிரவேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.
இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே... என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள புதிய திட்டங்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அண்மையில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க இதுவரை எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களையே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவதாகும்.
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, 'தீவிர இயற்கைப் பேரிடர்' ஆக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். அது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. 31 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை கேட்டோம். அது குறித்தும் ஏதுமில்லை.

மெட்ரோ ரெயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டு காலமாக சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.
பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் நகர்ப்புறப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருந்தாலும் ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே. இதில் மாநில அரசின் பங்கு 7.50 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா பற்றி குறிப்பிட்டது மட்டுமின்றி, நாட்டில் தற்போது 80 கிராண்ட் மாஸ்டர் நிலை விளையாட்டு வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியைத் தமிழ்நாடு நடத்தியதை ஒன்றிய நிதியமைச்சர் வசதியாக மறந்தது ஏன்?
இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 'ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்' ஆகிய 4 பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றுகூறி, இந்த 4 பிரிவினர்களையும் 4 சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத்தக்க பிற்போக்குத்தனமான வருணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூக நீதிக்குப் புறம்பானது.
"சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம். சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம்" என சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையை சரிசம விகிதத்தில் 'பறிப்பதுதான்' பா.ஜ.க பின்பற்றும் சமூகநீதி ஆகும். சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பா.ஜ.க அடைந்திருப்பதைப் பார்த்து சிரிப்பு வருகிறது.
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும், சூலை மாதம் நாங்கள்தான் பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் சொல்லி இருப்பது உச்சக்கட்ட நகைச்சுவை. நிதிநிலை அறிக்கையை அரசியல் பேராசை அறிக்கையாக ஆக்கி இருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றியது போல, மக்களும் ஏமாற்றத்தை பா.ஜ.க.வுக்கு வருகிற தேர்தலில் வழங்குவார்கள்.
2047-ம் ஆண்டு புதிய இந்தியாவைப் படைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு முதன் முதலாக நரேந்திர மோடி பிரதமர் ஆனபோது புதிய இந்தியா பிறந்ததாகச் சொன்னார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோதும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என்றார்கள். 2019-ம் ஆண்டு மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் புதிய இந்தியா பிறந்தது என்றார்கள். ஆனால் 2024 வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. 2047-ம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை 'இந்தியா' கூட்டணி நிச்சயம் உருவாக்கும்.
தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.,கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.






