என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம்.
    • திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

    கன்னியாகுமரி:

    இந்துக்களின்முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்தநாளில் இந்துக்கள் அதிகாலையிலேயேஎழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அதே போல இந்த ஆண்டும் தை அமாவாசை நாளான இன்று அதிகாலை 4 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியா குமரியில் குவியத் தொடங்கினார்கள். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள்.

     அதன் பிறகு ஈரத்துணியுடன் கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேத மந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

    தை அமாவாசையை யொட்டி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனையும் உஷ பூஜை, ஸ்ரீ பலி பூஜை, நிவேத்ய பூஜை உச்சிகால பூஜை உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அதன்பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். தை அமாவாசையை யொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக கோவிலில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் தே.மு.தி.க.வுக்கு அத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.
    • பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளோடு கைகோர்த்து செயல்பட முடியும் என்று அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் நம்புகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படாத நிலையில் ரகசிய பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தரும் கட்சியுடனேயே கூட்டணி என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் தே.மு.தி.க.வுக்கு அத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது. அதே நேரத்தில் பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணியில் இல்லாத நிலையில் குறிப்பிடத்தக்க இடங்கள் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க அ.தி.மு.க. தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க திட்டமிட்டு உள்ளார்.

    தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க காய் நகர்த்தி வரும் எடப்பாடி பழனிசாமி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது விட்டுக்கொடுத்து போகவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    அப்போதுதான் பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளோடு கைகோர்த்து செயல்பட முடியும் என்றும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் நம்புகிறார்கள். கூட்டணி கட்சிகள் விரும்பும் தொகுதிகளை விட்டுக்கொடுத்து கூட்டணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதில் அ.தி.மு.க. உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ராமேஸ்வரம் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது.
    • கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோயில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளாய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    இந்நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான காலபூஜைகள் நடைபெற்றது.

    காலை 10.25 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருந்தது.

    மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாராதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறுகிறது.

     தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ராமேசுவரத்திற்கு நள்ளிரவில் இருந்து ஆயிரக்கனக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துக்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர். அதிகாலையில் அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் அமர்ந்து தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதனைதொடர்ந்து, மீண்டும் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து புனித நீராடி ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    தை அமாவாசையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஷ் உத்தரவின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகளவில் கானப்படும் அக்னி தீர்த்த கடல், கோவில் பகுதிகளை சுற்றிலும் சீருடை மற்றும் சீருடை இல்லாத போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மேலும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். அதிகளவில் வாகனங்கள் வந்ததால் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    கோவில் நிர்வாகம் சார் பில் பக்தர்கள் சிரமமின்றி நீராடவும், நெரிசல் இன்றி தரிசனம் செய்திடவும் தடுப்புகள் மூலம் வழித்தடம் அமைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்ட னர்.

    கன்னியாகுமரியில் தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை பகுதியில் கடலில் இறங்கி புனித நீராடினர். தொடர்ந்து முன்னோர்க ளுக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தொடங்கி, நெல்லை மாவட்டம் பாபநாசம் வரையிலான 64 தீர்த்த கட்டிங்கள், தாமிரபரணி பாயும் கரையோர பகுதிள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் தை அமாவாசை தினத்தை யொட்டி புனித நீராடி, தங்களது முன்னோர் கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

     திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபத்தில் இன்று காலை திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் அங்கு தனித்தனியாகவும், 100-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அமர்ந்தும் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    மேலும் கரூர் மாவட்டத் தில் காவிரி கரையோர பகுதிகள், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோவில், அறந்தாங்கியை அடுத்த கடற்கரை பகுதிகளில் திரளானோர் குவிந்து புனித நீராடினர்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரை, சீர்காழியை அடுத்த பூம்புகார் கடற்கரை, மயிலாடு துறை மாவட்டம் காவிரி துலாக்கட்டம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் காவிரி கரையோர பகுதிகளில் அதிகாலை முதலே திரண்ட பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

     மதுரையில் வைகை கரையோர பகுதிகள், சோழ வந்தான் அருகேயுள்ள திருவேடகத்தில் வைகை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி, ஏடகநாதர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் மதுரை இம் மையிலும் நன்மை தருவார் கோவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியாத சுவாமி கோவில், திருமுக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் தை அமாவாசையை முன்னிட்டு திரளானோர் குவிந்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று முன்தினம் முதல் 4 நாட்களுக்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இன்று தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வனத்துறை யினரின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மலையேறி சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை வழிபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
    • தமிழ்நாடு செலுத்தும் 1 ரூபாய் வரிக்கு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னால் மோடி அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

    ஆனால் 5 ஆண்டு காலம் முடிந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எய்ம்ஸ் கல்லூரிக்காக பிரதமர் மோடி நாட்டிய ஒற்றை செங்கல்லை வைத்து இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது.

    ஆனாலும் இன்னும் எய்ம்ஸ் கல்லூரி கட்டப்படவில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். ஆனாலும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வுக்கு வந்து சென்ற பிறகும் நிவாரணத்துக்காக சல்லி பைசா கூட தரவில்லை.

    எங்களிடம் இருந்து பறித்து வைத்துள்ள நிதியில் 71 சதவீதத்தில் இருந்து 10 சதவீதத்தை கொடுங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம். தமிழ்நாடு செலுத்தும் 1 ரூபாய் வரிக்கு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது.

    தமிழகத்துக்கு நிதி வழங்காமல் ஒன்றிய அரசு அல்வா கொடுப்பதால் அதற்கு பதில் சொல்லும் விதமாக இந்த தேர்தலில் மக்கள் அவர்களுக்கு அல்வா கொடுக்கப்போகிறார்கள். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட பா.ஜனதா கட்சிக்கு கிடைக்காது.

    இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    • திருநங்கையாக பிறந்து விட்டோம் என்ன செய்வது என்று சோர்ந்து போய்விடவில்லை.
    • திருநங்கைகள் தங்களுக்கு தான் பிரச்சனை என்று நினைத்து மனம் தளர்ந்து விடக்கூடாது.

    திண்டுக்கல்:

    விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்கள் சாதித்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் தடம்பதித்த நிலையிலும், ஆணுக்கு நிகராக சமத்துவம் கிடைப்பதற்கு சிலநேரம் போராட வேண்டி இருக்கிறது. இந்த சூழலில் ஆணும், பெண்ணும் சேர்ந்து பிறந்த திருநங்கைகளின் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது.

    திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதேநேரம் திருநங்கைகளுக்கு வேலை கிடைக்குமா? என்ற கேள்வியை தகர்த்து ஒருசில திருநங்கைகள் திறமையால் சாதித்து விடை எழுதி வருகின்றனர். சுயதொழில் மட்டுமின்றி மத்திய, மாநில அரசு பணிகளிலும் திருநங்கைகள் அசத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பதவி ஏற்றார். இதன்மூலம் தெற்கு ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

    அவருக்கு ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், முதன்மை வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி, எஸ்.ஆர்.எம். தொழிற்சங்க கோட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் ரபீக் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக திகழும் சிந்து கூறுகையில், எனது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நான் பி.லிட் தமிழ் இலக்கியம் படித்துள்ளேன். கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியில் சேர்ந்தேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந்தேன். ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினேன்.

    இதற்கிடையே சிறு விபத்தில் எனக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மின்சார பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப்பட்டேன். டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்து, இன்று (நேற்று) பதவி ஏற்றுள்ளேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். திருநங்கையாக பிறந்து விட்டோம் என்ன செய்வது என்று சோர்ந்து போய்விடவில்லை.

    மனம் தளராமல் நன்றாக படித்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். எல்லோருடைய வாழ்விலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. எனவே திருநங்கைகள் தங்களுக்கு தான் பிரச்சனை என்று நினைத்து மனம் தளர்ந்து விடக்கூடாது. கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங்கைகள் முன்னேற வேண்டும் என்றார்.

    • வாகனத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டனர்.
    • வாகனத்தில் சீட் பின் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ராசிபுரம் பிரிவு ரோட்டில் ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது வாகனத்தை எடுக்க வந்தார்.

    அப்போது அங்கு இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சீட் பகுதியில் பாம்பு சென்றதை பார்த்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இருசக்கர வாகனத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டனர். பாம்பை மீட்டவுடன் இருசக்கர வாகன ஓட்டி நிம்மதி அடைந்தார். பின்னர் உயிருடன் பிடித்த பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இருசக்கர வாகனத்தில் சீட் பின் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தேர்வு மையத்துக்கு நியமிக்கப்படும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் ஒரே பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது.
    • அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யவேண்டும்.

    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்க உள்ளது. இதில் பிளஸ்-2 வகுப்புக்கு அடுத்த மாதம் 1-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு அடுத்த மாதம் 4-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி.க்கு அடுத்த மாதம் 26-ந்தேதியும் தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் தேர்வுகள் முடிக்கப்பட உள்ளன.

    தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு தேர்வுத்துறை சார்பில் பொதுத்தேர்வு பணிகள் தொடர்பாக சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பு மையங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்க வேண்டும். பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையோ, தனியார் பள்ளிகளின் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்களையோ முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது. தேர்வு மையத்துக்கு நியமிக்கப்படும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் ஒரே பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் தினத்தன்று சம்பந்தப்பட்ட பாடத்தை போதிக்கும் ஆசிரியராக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர கடந்த ஆண்டு (2023) பொதுத்தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணியில் சரியாக பணியாற்றாத 1,000 ஆசிரியர்களை அடையாளம் கண்டு அரசு தேர்வுத்துறை அவர்கள் மீது றை ரீதியாக நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறைக்கு பரிந்துரைத்து இருந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும், அவர்களை இந்த ஆண்டுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பஞ்சு மிட்டாய் விற்றவர்களிடம் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
    • ரசாயனம் கலந்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தால் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு, புற்றுநோயாக மாறும் அபாயம் இருக்கிறது.

    சென்னை:

    புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமின் பி' என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ரசாயனம் மனிதர்கள் சாப்பிட உகந்தது இல்லை என்பதும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடியது என்றும் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள் பொதுமக்களை கலவரப்படுத்தி இருக்கிறது.

    பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் சதாசிவம், செல்வம், அழகுபாண்டி, கண்ணன் உள்ளடங்கிய அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு, கடற்கரையில் பஞ்சு மிட்டாய் விற்ற அனைவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

    இதன் மாதிரிகள் கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வு நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் வாங்கிய பஞ்சு மிட்டாய்களை உடனடியாக விற்பனையாளரிடமே கொடுத்து காசு வாங்கி சென்ற சம்பவங்களும் அரங்கேறின. இந்த ஆய்வு மெரினாவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது:-

    புதுச்சேரி விவகாரத்தை தொடர்ந்து மெரினாவில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளோம். இதில் கைப்பற்றப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமின் பி என்ற உயிர்க்கொல்லி ரசாயனம் இருப்பது தெரியவந்தால், அதை விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகளை சப்ளை செய்தவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். பரிசோதனை முடிவு ஓரிரு நாளில் வெளிவரும்.

    இந்த ரசாயனம் கலந்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தால் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு, பின்னர் புற்றுநோயாக மாறும் அபாயமும் இருக்கிறது. சிறுநீரக பிரச்சனைகளை தாண்டி மூளை செயலிழக்கும் அபாயமும் இருக்கிறது. சட்டை, தோல் பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த வகை ரசாயன பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. இயற்கைக்கு மாறான நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் சந்திப்பு, பொது கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்.
    • தமிழகத்தில் பா.ஜனதா மேற்கொள்ளும் தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம் ஜே.பி.நட்டா கேட்டறிய உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பணிகளை வேகப்படுத்தி உள்ளன. தமிழக பா.ஜனதா சார்பில், 'பூத்' கமிட்டி அமைக்கப்பட்டு, அவற்றை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டுகிறது.

    இந்த நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். அவரின் இந்த பயணம், அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது, தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் சந்திப்பு, பொது கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

    முதலாவதாக, சென்னை அடுத்த காட்டாங்குளத்தூர் அருகே பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மேலும் தமிழக பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, சமூகவலைதள பிரசார பிரிவு, மகளிர் அணி, இளைஞரணி, சட்டம் பிரிவு உள்பட 38 குழுக்களையும் ஜே.பி.நட்டா சந்தித்து ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

    தமிழகத்தில் பா.ஜனதா மேற்கொள்ளும் தேர்தல் பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கேட்டறிய உள்ளார். மேலும், தேர்தல் வியூகங்கள் வகுப்பதற்கான வழிகாட்டுதல்களையும் மாநில நிர்வாகிகள் மற்றும் சிறப்பு குழுக்களுக்கு அவர் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பின்போது, கூட்டணி குறித்தும் விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு, சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ஜே.பி.நட்டா பங்கேற்று பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார்.

    • வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை தீவிரமாக ‘சைபர் கிரைம்' போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் ஐ.பி. முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது. இந்த தகவல் சென்னை முழுவதும் பரவியது. அதிர்ச்சி அடைந்து பெற்றோர்கள் பள்ளிகளுக்கு விரைந்து வந்து தங்கள் பிள்ளைகளை பதற்றத்துடன் அழைத்து வெளியேறினார்கள். சென்னை முழுவதும் இதே பேச்சாக இருந்தது.

    இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை தீவிரமாக 'சைபர் கிரைம்' போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் போலீஸ் உதவியை நாட சென்னை காவல் துறை முடிவு செய்துள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் ஐ.பி. முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இன்டர்போல் போலீஸ் உதவியை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் முழுமையாக சோதனை நடத்தி உள்ளதால் அச்சமின்றி பள்ளிகளை நடத்தவும் அந்தந்த காவல் நிலைய போலீசார் உரிய பாதுகாப்பை வழங்கவும் சென்னை காவல் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் ஈர்ப்பு.
    • வெளிநாட்டு பயணங்கள் மூலம் ரூ.7,441 கோடி முதலீடுகள் ஈர்ப்பு.

    தமிழ்நாட்டில் 33 மாத திமுக ஆட்சியில், பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஏறத்தாழ 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:-

    2021க்கு பிறகு 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல், 27 தொழிற்சாலைகள் திறப்பு காரணமாகவும் 74,757 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    ஒரு மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. 2030க்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்திய பொருளாதாரத்திற்கு மிக முக்கிய பங்களிக்கும் மாநிலமாக தமிழகத்தை உயர்த்த, திமுக அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

    முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்று மாநாடு மூலம், ரூ.1,90,803 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

    சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாட்டு பயணங்கள் மூலம் ரூ.7,441 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

    ஜனவரி 7,8-ம் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

    ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணம் மூலம் ரூ.3,440 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நிதி பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாடு.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதி பங்கீடு தொர்பாக கருத்து.

    மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதியில் பாரபட்சம் காட்டுவதாக தென்னிந்திய மாநிலங்களில் இருந்து குரல் ஓங்கி ஒலிக்கிறது. நிதி பங்கீட்டில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இந்த நிலையில், நிதி பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு ரூ.6 லட்சம் கோடி வரி கொடுத்துள்ள போதும், ரூ.1.58 லட்சம் கோடியை மட்டுமே வரிப்பகிர்வாக ஒன்றிய அரசு திருப்பிக் கொடுத்துள்ளது."

    "ஆனால், ரூ.3.41 லட்சம் கோடி வரி கட்டிய உத்தர பிரதேசத்துக்கு கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி வரிப்பகிர்வை வாரி வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள்."

    "மாண்புமிகு, மரியாதைக்குரிய, பிரதமர் அவர்களே, ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே இப்போதாவது சொல்லுங்கள் நாங்கள் யாருடைய மரியாதைக்குரிய தகப்பனார் வீட்டு பணத்தை கேட்டோம்?"

    "உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது, எங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய நிதிப்பகிர்வை தந்திடுங்கள்," என்று தெரிவித்தார்.

    ×