என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உபரிநீர் வெளியேற்றப்படுவது தொடர்ந்து குறைக்கப்பட்டு உள்ளது.
- ஒருசில பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கிறது.
ஒகேனக்கல்:
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 4-வது நாளாக இன்று வினாடிக்கு 300 கன அடியாக நீடித்து வருகிறது . காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் பாறைகளாக தென்படுகின்றன.
கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியாற்றின் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது தொடர்ந்து குறைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கர்நாடகா தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்துக் கொண்டே வந்தது.
இதனால் கடந்த 4 தினங்களாக வினாடிக்கு 300 கனஅடியாக நீடித்து வருகிறது.
மேலும் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒருசில பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் வெறும் பாறைகளாகவே காட்சியளிக்கிறது. ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி சாக்கடையாக உள்ளது.
- எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே தி.மு.க. அரசு நிறைவேற்றுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆரை இழிவாக பேசியதாக தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.
* நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாக பேசுவதை கைவிட வேண்டும்.
* அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
* கூட்டு குடிநீர் திட்டங்களை திட்டமிட்டு நிறைவேற்றியது அ.தி.மு.க.
* அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே தி.மு.க. அரசு நிறைவேற்றுகிறது.
* தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது என்று கூறினார்.
- அண்ணாமலையின் நடைபயணத்தையொட்டி கும்மிடிப்பூண்டியில் பாரதிய ஜனதா தொண்டர்கள் குவிந்தனர்.
- ஆவடி மற்றும் மீஞ்சூரில் அண்ணாமலை மீண்டும் நடைபயணத்தை தொடங்குகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை தொடங்கிய அவர் சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அண்ணாமலை நடைபயணம் செல்லும் இடங்களில் பாரதிய ஜனதா தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள்.
சட்டமன்ற தொகுதி வாரியாக ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட இடத்தில் நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை அங்கு திரளும் மக்கள் மத்தியில் பேசி வருகிறார். அப்போது பாரதிய ஜனதா அரசின் சாதனைகளை விளக்கி பேசும் அவர் தி.மு.க. அரசுக்கு எதிரான கருத்துக்களையும் கூறி வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அண்ணாமலையின் நடைபயணம் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார களமாகவும் மாறி இருக்கிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்து விட்டு அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தனது பயணத்தை தொடங்கினார்.
திருத்தணியில் காலையில் நடைபயணத்தை மேற் கொண்ட அவர் மாலையில் திருவள்ளூரிலும் இரவில் ஸ்ரீபெரும்புதூரிலும் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக அவரது நடைபயணம் நடைபெற்றது. இன்று காலையில் அண்ணாமலை கும்மிடிப்பூண்டியில் நடைபயணம் மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி ரெட்டைமேடு சந்திப்பில் இருந்து தொடங்கிய நடைபயணம் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
அண்ணாமலையின் நடைபயணத்தையொட்டி கும்மிடிப்பூண்டியில் இன்று பாரதிய ஜனதா தொண்டர்கள் குவிந்தனர். மாவட்ட நிர்வாகிகளும், பாரதிய ஜனதா கட்சியினரும் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கும்மிடிப்பூண்டி நடைபயணத்தை முடித்து விட்டு அண்ணாமலை அங்கேயே ஓட்டலில் தங்கினார்.
பின்னர் மாலையில் ஆவடி மற்றும் மீஞ்சூரில் அண்ணாமலை மீண்டும் நடைபயணத்தை தொடங்குகிறார். பொன்னேரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் பச்சையம்மன் கோவில் ஆர்ச் பகுதியில் இருந்து மாலை 5 மணி அளவில் தொடங்கும் நடைபயணம் மீஞ்சூர் முப்பாத்தம்மன் கோவில் பகுதியில் நிறைவடைகிறது.

இதன் பின்னர் இரவு 7 மணி அளவில் ஆவடி சட்ட மன்ற தொகுதியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். ஆவடி காமராஜர் சிலை அருகில் இருந்து தொடங்கும் நடைபயணம் அங்குள்ள 'டிரெண்ட்ஸ்' ஷோரூம் பகுதி வரை சென்று முடிவடைகிறது.
இதன் பின்னர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் அண்ணாமலை நடைபயணத்தை மேற்கொள்கிறார் இதன் முடிவில் சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி திடலில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இந்த பொதுக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாக நடைபெற உள்ளது.
- கொலை, கொள்ளை நடைபெற்ற கொடநாடு பங்களாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
- தொழில்நுட்ப நிபுணர் குழு மீண்டும் வர இருப்பதால் கூடுதல் கால அவகாசம் தேவை என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இந்த வழக்கில் தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
அப்போது, கொலை, கொள்ளை நடைபெற்ற கொடநாடு பங்களாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கொடநாடு பங்களாவில் நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தொழில் நுட்ப நிபுணர் குழு சேகரித்த தகவல் குறித்த அறிக்கை இன்னும் வரவில்லை. தொழில்நுட்ப நிபுணர் குழு மீண்டும் வர இருப்பதால் கூடுதல் கால அவகாசம் தேவை என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை பிப்.23-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.
- சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஒகேனக்கல்:
தை அமாவாசை நாளில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். வருடத்தின் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் முக்கிய அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இதைத்தொடர்ந்து தை அமாவாசையான இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முதலைப் பண்ணை பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட வற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.
பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.
இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் ஒகேனக்கல்லுக்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.
இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இன்றும் வினாடிக்கு 300 கனஅடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மெயினருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டுகிறது.
இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் அருவியிலும், காவிரி ஆற்றில் தேங்கிய உள்ள நீரிலும் குளித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.
- மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது.
- அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிப்பது தமிழகத்தில் வேறெங்கும் காணமுடியாது.
இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் நாள்தோறும் திருமூர்த்தி மலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னிகள் மற்றும் நவகிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. மேலும் இங்குள்ள பஞ்சலிங்க அருவி வனப்பகுதியில் உள்ள ஆறுகளின் உதவியுடன் மூலிகை தண்ணீரை அளித்து வருகிறது.
இயற்கை சூழலில் அமைந்துள்ள அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் உற்சாகத்தோடு வருகின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கார்த்திகை, பிரதோஷம், மகா சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. குறிப்பாக ஆடி மற்றும் தை மாதங்களில் வருகின்ற அமாவாசை நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற தை அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் முதல் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் குதிரைகள் மற்றும் மாடுகள் பூட்டிய வண்டியில் வந்தனர்.
பின்னர் அவர்கள் இரவு முழுவதும் பெருமாள் கோவில் மற்றும் அணைப் பகுதியில் தங்கினர்.இன்று அதிகாலையில் எழுந்து பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்துவிட்டு மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர்.ஒரு சிலர் தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர்.
இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தாராபுரம் அமராவதி ஆற்றில் தை அமாவாசையை யொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தினர். இதனால் காலை முதலே அமராவதி ஆற்றில் பொதுமக்கள் குவிந்தனர்.
இதேபோன்று அமராவதி ஆற்றங்கரையோர பல்வேறு இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில்,அங்காளம்மன் கோவில், தண்டபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தை அமாவாசை தினமான இன்று திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி கோவில்களில், சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நடந்தது. திருப்பூர் ஈஸ்வரன் கோவில், வீரராகவ பெருமாள் கோவில், பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், வாலிபாளையம் சுப்ரமணியர் கோவில், நல்லூர் ஈஸ்வரன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், மங்கலம் ரோடு பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். கோவில்களுக்கு குடும்பத்துடன் வந்த பக்தர்கள், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பக்தர்களுக்கு வெண்பொங்கல், தயிர்சாதம், தக்காளிசாதம், சுண்டல், துளசி உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், நல்லா ற்றங்கரை மண்டபத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
- வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மலையடி வாரத்தில் கடந்த 3 மாதமாக ஒற்றை யானை முகாமிட்டு, விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன.
காட்டு பத்து, மேலகாடு விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, நெல், தென்னை, பனை மரங்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலையில் ஒற்றை யானை மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்தது. வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் சுதாரித்து கொண்டு விவசாயிகள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதைக்கண்ட யானையும் சற்று பின்வாங்கியது. உடனடியாக விவசாயிகள் உயிரை பணயம் வைத்து பட்டாசுகள் வெடித்தும், சத்தங்கள் எழுப்பியும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து யானை அங்கிருந்து சென்றது.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ஒற்றை யானை தினசரி விளைநிலங்களில் நுழைகிறது. எங்கள் பயிரை காப்பாற்ற உயிரை பணயம் வைத்துள்ளோம். யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யானையிடமிருந்து பயிர்களையும், உடமைகளையும் காப்பாற்ற முடியாமல் திணறி வருகிறோம்.எனவே அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது.
- பதிவாளர் தங்கவேல் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்திட துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தணிக்கை குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கணிப்பொறி, உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்தது நிரூபணமானது. தேவைக்கு அதிகமாக கணினிகளை கொள்முதல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பதிவாளர் தங்கவேல் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்திட துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
- அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
- விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து 8.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
தை, ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்று ஆண்டு முழுவதும் தங்கள் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தை அமாவாசையான இன்று சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு எள், அன்னம், தர்ப்பபுள், பிண்டம் வைத்து வேத மந்திரங்கள் ஓதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
- தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டி தர்பார் மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
- பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவன மாணவர்களுக்கு களப்பயிற்சி நடந்து வருகிறது.
இந்த பயிற்சியை தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் பார்வையிட்டார். பின்னர் தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டி தர்பார் மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-மதுரை திருமலை நாயக்கர் மகால், தரங்கம்பாடி கோட்டை, கவர்னர் மாளிகை என தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் ரூ. 25 கோடி மதிப்பில் புராதன கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சை அரண்மனை வளாக மராட்டா தர்பார் மண்டபம், சர்ஜா மாடி ஆகிய இடங்களில் பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலம் அருகே சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பவானி கூடுதுறை தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது.
- பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
பவானி:
தை அமாவாசையை முன்னிட்டு பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கிவருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.
இதனால் கூடுதுறை தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனால் கூடுதுறைக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மேலும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.
இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுவார்கள். மேலும் திருமண தடை தோஷம், செவ்வாய் தோஷம் உள்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் தை அமாவாசையை யொட்டி இன்று ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
இதையொ ட்டி கூடுதுறையில் உள்ள 2 பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக பரிகார மண்டபம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர். மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷ்னி தலைமையில் பவானி, சித்தோடு, அந்தியர், அம்மாபேட்டை, பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நகரின் முக்கிய 50 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிகரை பகுதியில் அதிகாலை முதலே பொது மக்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் மற்றும் திதி கொடுத்தனர். இதனால் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தொடர்ந்து பொதுமக்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோல் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும் ஏராளமானோர் வந்து புனித நீராடி பரிகாரம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் பலர் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் காலை முதலே பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதி களில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநில பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும் கோபி சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், சென்னிமலை முருகன் கோவில் உள்பட மாவட்ட த்தின் அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
- மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- மெட்ரோ ரெயில் பயணிகளை மற்ற பொது போக்குவரத்துடன் இணைக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னையில், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.
மெட்ரோ ரெயில் பயணிகளை மற்ற பொது போக்குவரத்துடன் இணைக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் இடையூறு இல்லாமல் ரெயில் நிலையங்களுக்கு செல்லவும் தடையின்றி மற்ற போக்குவரத்துகளுக்கு மாறவும் அதிகளவு பயணிகளை கையாளும் 22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அண்ணா நகர், சின்னமலை, வண்ணாரப்பேட்டை, அரசு எஸ்டேட், ஈக்காட்டு தாங்கல், தேனாம்பேட்டை, ஐகோர்ட்டு, ஆயிரம் விளக்கு, மண்ணடி, பரங்கி மலை, தண்டையார்பேட்டை நிலையங்களில் தலா ஒரு நகரும் படிக்கட்டும், நேரு பூங்கா, எழும்பூர், நங்கநல்லூர் சாலை, கிண்டி, ஏ.ஜி.-டி.எம்.எஸ்., தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனம் ரெயில் நிலையங்களில் கூடுதலாக 2 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.
அண்ணாநகர் பூங்கா, நிலையத்தில் 3 நகரும் படிக்கட்டுகளும், வடபழனி மற்றும் மீனம்பாக்கத்தில் 4 நகரும் படிக்கட்டுகளும் திருமங்கலத்தில் 5 எஸ்க லேட்டர்களும் அமைக்கப்பட உள்ளன.
இந்த மாதத்தில் பணிகள் தொடங்கி ஒரு வருடத்தில் நிறைவடையும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்புக்கு முன்பு மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை 1.16 லட்சமாக இருந்தது. இப்போது 2.73 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயணித்து வருவதால் இந்த வசதிகள் செய்யப்படுகின்றன. அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் முதலில் கான்கோர்ஸ் மற்றும் தெரு நிலைகளை இணைக்கும் வகையில் மேல் நோக்கி மற்றும் கீழ்நோக்கி நகரும் படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டன. ஆனால் திட்டச் செலவை மிச்சப்படுத்த கட்டடிடம்-1 கட்டும்போது அவை நிறுவப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






